இறவான்: ஒரு மதிப்புரை – கோடி

இதை எப்படி சொல்லுவது, எதைக்கொண்டு புரிய வைப்பது வார்த்தைகளால் புரிய வைக்க இது சாதாரண கதை இல்லை. அப்படியே புரிய வைக்க முயற்சித்தாலும் உலகத்தில் உள்ள அனைத்து போதை பொருட்களையும் கலந்த கலவையை உண்டவனின் வார்த்தை எப்படி புரியும்படியாக இருக்கும். ஆம், நான் இப்போது இமயத்தின் உச்சியில் அமர்ந்து இருக்கும் பறவையைப்போல போதையின் உச்சியில் “ஆப்ரஹாம் ஹராரி”யின் இசையுடன் உலாவி கொண்டு இருக்கிறேன்.

இது எதைப் பற்றிய நாவல், யாரை பற்றிய நிகழ்வு.. ஒரு இசை மேதை, ஒரு யூதன்.. ஆப்ரஹாம் ஹராரி, எட்வின் ஜோசஃப், சந்தானப்ப்ரியன் என மூன்று பெயர்களைக்கொண்ட பெரும் இசை மேதையின் கதை என்று ஒற்றை வரியில் கடந்துவிடக்கூடியதல்ல. இதைக் கதை என்றுகூட சொல்ல முடியாத ஒப்பற்ற காவியம். இதுவரை யாரும் எழுதாத, இனியும் எழுத முடியாத, இதுவரை வந்தவைகளோடு ஒப்பிடமுடியாத இசை, நட்பு, காதல், காமம், கலவி எல்லாம் கலந்த ஒரு சாத்தானின் இதிகாசம். ஆம், இது கடவுளால் படைக்கப்பட்டு பிறகு கடவுளாலயே கைவிடப்பட்டு துரத்தப்பட்ட லூசிப்பர் அல்லது இப்பிலிஷை கருவாக கொண்டு இயற்றப்பட்ட நவீனகால சாத்தானின் இதிகாசம்.

கூண்டில் வாழும் புலியாக இல்லாமல் காட்டில் வாழும் வேங்கையாக இருக்க நினைத்து, தனக்குள் வரும் இசையை எந்த ஒரு விதிக்கும் கட்டுப்படாமல் தான் நினைத்தபடி கொண்டு செல்லும் ஒரு மேதையின் வாழ்க்கை பயணம் எப்படி தொடங்கி எவ்வாறு முடிகிறது.. என்பதை ஒரு புதிர் விளையாட்டைப் போல சொல்லி செல்கிறார் பா.ர. எட்வினை விட நம் மனதில் இடம் பிடித்து நமக்கு இப்படி ஒரு தோழி இல்லையே என நம்மை ஏங்க வைக்கிறாள் ஜனாவி.

பார்க்கும் அனைத்தும் இசையாக நினைக்கும் இசை மேதையை.. அசிங்கம், ஆபாசம் போன்றவற்றை கொண்டு வரையறுக்க முடியாது. அப்படி அது ஆபாசமும் இல்லை. அனைத்தும் கடவுள் என்பவருக்கு யோனி ஒரு வழிபாட்டு சிலை, துளை அனைத்தும் இசைக்கக்கூடியது என்பவருக்கு அது ஒரு இசைக்கருவி. இயற்கையாக படைக்கப்பட்ட உடல் உறுப்பை இசையாக பார்ப்பது ஆபாசம் என்றால், அதை தெய்வசிலையாக வழிபடுவதும் ஆபாசமே. ஒரு செடி முளைக்க விதையின் வீரியம் மட்டுமே முக்கியமில்லை. மண்ணின் பக்குவமும் அவசியம். அப்போதுதான், அந்த விதை மண்ணில் வேர் ஊன்ற முடியும். இங்கே விதை இந்த நாவல் மண் வாசிப்பாளனின் எண்ணத்தின் விலாசம். ஒரு குறுகிய வட்டதுக்குள் இருந்து இந்த நாவலை அணுகுவதை விட முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை. ஆபாசம் என்பது அவரவர் நினைப்பில்தான் உள்ளேதே தவிர உடல் உறுப்பில் இல்லை. “இங்கே நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. யாரையும் குறிப்பிடாமல் எவன் வாழ்க்கையும் இல்லை”.

இந்த நாவலை வாசிக்கும் போது என்னில் நிகழ்ந்தவை அதிசயமானவை. ஏதோ ஒரு ஏவலுக்கு கட்டுப்பட்டவனை போல் உணர்ந்த தருணம் அது . காலில் ஒட்டிக்கொண்ட அட்டைப்பூச்சியைப் போல என் உடல் நாற்காலியில் அப்பிக் கொண்டது. மின்சாரத்தில் மாட்டிக் கொண்டத்தைப் போல் என் கைகள் இரண்டும் புத்தகத்தோடு உறைந்து விட்டது. திடீரென்று மரணித்தவனின் கண்களைப் போல் என் கண்கள் புத்தகத்தை மட்டுமே நோக்கி நிலைகுத்தி நின்றது. இன்னும் வாசி, இன்னும் வாசி என ஒரு அசரீரி என் காதுகளில் விழுந்து கொண்டே இருந்தது அதை வாசிக்க வாசிக்க அதனுள் என்னை இழுத்து கொண்டே சென்றது. இந்த நாவலை வாசித்து முடித்தவுடன் எனக்கு தோன்றியது ஒரு சாதாரண எழுத்தாளரால் இப்படி எழுத முடியாது . அதேப்போல, ஒரு தேர்ந்த வாசிப்பாளனால் தான் இதை பொறுமையாக படிச்சு புரிந்துகொள்ள முடியும். ஆரம்ப நிலை வாசிப்பாளரால் இதை உள்வாங்குவது கடினம். கண்டிப்பாக Pa Raghavan ஒரு மனிதராக இருக்க முடியாது அவர் ஒரு சாத்தானின் மறுபிறவியாகத்தான் இருக்கக் கூடும். பரந்த எண்ணங்களைக் கொண்ட வாசிப்பாளர்களின் உள்ளத்தில் சாகாவரம் பெற்ற மிருத்யுஞ்ஜயன் இந்த “இறவான்”.

கோடி

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி