‘மனம்’ கூறுகெட்டது. நாம் எவர் மீது மீக்கூர்ந்த அன்பைச் செலுத்துகிறோமோ அவர் நம்மைச் செயல்வழியும் சொல்வழியும் புறக்கணித்தாலும்கூட, ‘அவருடைய மொழியையும் அன்பினையும் திரும்பப் பெற்றுவிட மாட்டோமா?’ என்று அலைந்து திரியும் இந்தக் கூறுகெட்ட மனம்.
சாகரிகா நீல நகரத்திற்குச் சென்று விட்ட பின்னர் அவளைத் தன்னிடமிருந்து பிரித்தெறிய மனமில்லாமல் அவளைத் தேடி அலைகிறான் கோவிந்தசாமி. அவன் மனதும் கூறுகெட்டதுதான். அதில் ஐயமே இல்லை.
கோவிந்தசாமியின் இந்த மனநிலையைச் சூனியன் தனதாக்கிக் கொள்கிறான். தன் நிழலையும் தன்னிடமிருந்து பிரித்தெறிய கோவிந்தசாமி ஒப்புக்கொள்வதற்கான காரணம் அன்பு. அது மட்டும்தான். அதைத் தவிர வேறொன்றும் இல்லை. நாம் எண்ணுவதுபோன்று அவன் அறிவற்றவன் அல்லன். தன் மூடத்தனங்களில் இருந்து விடுபடத் தெரியாதவன்.
மீக்கூர்ந்த அன்பினை ஒருவரிடம் நாம் செலுத்திவிட்டால் அவரிடம் சினம் கொள்ள இயலாது. வார்த்தையால் வசை பாட இயலாது. உண்மைச் சினம் அங்கே இருக்காது. வதைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாது. ஆகவேதான் கோவிந்தசாமி தன்னை வதைக்கிறானே தவிர, அவளை வதைக்கவில்லை.
இத்தகைய மனிதனை அவள் இவ்வாறெல்லாம் துன்புறுத்தலாமா என்று எண்ணும் நமக்கு பா. ராகவன் அவர்கள், ‘கோவிந்தசாமி அவளது இயல்பை அறிந்தவன்’ என்பதைச் சொல்லிச் சென்றுள்ளார்.
அவளது அன்பைப் பெற சூனியன் செய்ய உள்ள உதவி, கைக்கூடுமா? அல்லது கைநழுவிச் செல்லுமா? என்று தெரியவில்லை.