பொலிக! பொலிக! 11

 

‘என்னைத் தெரிகிறதா மகனே? நினைவிருக்கிறதா?’

நெருங்கி வந்து கரம் கூப்பிக் கேட்ட அந்தக் கிழவியைக் கண்டதும் துள்ளி எழுந்தார் ராமானுஜர்.

‘அம்மா, வரவேண்டும். நலமாயிருக்கிறீர்களா? யாதவர் நலமாக உள்ளாரா?’

அவள் பதில் சொல்லவில்லை. தன்னெதிரே தகதகவென ஆன்ம ஒளி மின்னப் புன்னகையுடன் நின்றிருந்த ராமானுஜரைத் தலைமுதல் கால் வரை விழுங்கிவிடுவது போலப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

‘என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? உட்காருங்கள்.’

‘என்னை மன்னிக்க வேண்டும். பழைய நினைவில் உங்களை மகனே என்று அழைத்துவிட்டேன். குரு ஸ்தானத்தில் இருக்கிறவர் தாங்கள். தவிரவும் சன்னியாசி. என்னை ஆசீர்வதியுங்கள்’ என்று தாள் பணியப் போனவரை ராமானுஜர் தடுத்தார்.

‘அப்படிச் சொல்லாதீர்கள் தாயே. இப்பூவுலகைத் தாங்குவதும் பெண்கள்தாம், உலகு தழைப்பதும் பெண்களால்தான். சாட்சாத் பெருந்தேவித் தாயாரேதான் இவ்வுலகில் தோன்றும் அத்தனை பெண்களாகவும் இருக்கிறவள். உமது மகனும் எனது பழைய குருவுமான யாதவரைக் கேட்டுப் பாருங்கள். அவர் நம்பும் அத்வைத சித்தாந்தத்தை வகுத்தளித்த ஆதிசங்கரர், எப்பேர்ப்பட்ட துறவி! ஆனாலும் தமது தாயார் காலமானபோது அவருக்குச் செய்யவேண்டிய அத்தனைச் சடங்குகளையும் சிரத்தையாகச் செய்து முடித்தவர். தாயாரைத் துறக்கத் திருமாலாலும் முடியாது; திருமால் அடியார்களாலும் முடியாது!’

சிலிர்த்துவிட்டது அந்தக் கிழவிக்கு. பேச்செழவில்லை. திருப்புட்குழியில் இருந்து கிளம்பி காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்திருந்தாள் அவள். கோயிலுக்கு வந்ததாகச் சொன்னது ஒரு பாவனைதான். உண்மையான நோக்கம் ராமானுஜரைச் சந்திப்பதுதான். அவளது மகனுக்கு இருந்ததோ என்னவோ. அவளுக்குக் குற்ற உணர்ச்சி நிறையவே இருந்தது.
ராமானுஜருக்குத் தனது மகன் செய்த கொடுமைகள். சொல்லிக்கொடுக்கிற இடத்தில் இருந்துகொண்டு, எந்த விவாதத்துக்கும் இடம் தர மறுத்த ஏகாதிபத்தியம். சுயமாகச் சிந்திக்கத் தெரிந்த மாணாக்கனைத் தட்டி வைக்க நினைத்த சிறுமை. அது முடியாதபோது கொல்லவே நினைத்த கொடூரம்.

ஆனால் விந்திய மலைக் காட்டில் இருந்து ராமானுஜர் காஞ்சிக்கு வந்து சேர்ந்த கதையை ஊரே வியந்து பேசியபோது அந்தக் கிழவி தன் மகனிடம் எடுத்துச் சொன்னாள். ‘மகனே, நீ செய்தது தவறு. செய்ய நினைத்தது மிகப் பெரிய தவறு. நாள் முழுதும் வேதம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறவன் இப்படியொரு ஈனச் செயலை மனத்தாலும் நினைப்பது பெரும் பாவம். நீ நினைத்தது மட்டுமின்றி செயல்படுத்தவும் பார்த்திருக்கிறாய். இப்போது இளையாழ்வான் உனக்குப் பல மாதங்கள் முன்னதாகக் காஞ்சிக்கு வந்து சேர்ந்துவிட்டான். பேரருளாளனின் பெருங்கருணைக்குப் பாத்திரமானவன் அவன் என்பது நிரூபணமாகிவிட்டது. எப்படியாவது சென்று மன்னிப்புக் கேட்டுவிடு.’

யாதவர் ஒன்றும் சொல்லவில்லை. கண்மூடி அமைதியாக யோசித்தபடி இருந்தார். நடந்ததை அவரால் நம்பவும் முடியவில்லை; ஜீரணிக்கவும் முடியவில்லை. தமது சீடர்களுடன் அவர் யாத்திரை முடித்து ஊர் திரும்பிக்கொண்டிருந்த அன்றே – ஊர் எல்லையிலேயே ராமானுஜரை அவர் சந்தித்திருந்தார். தன் தாயிடம் அதைப் பற்றி அவர் சொல்லியிருக்கவில்லை.

மறக்கமுடியாத தினம். சாகிற வரை மட்டுமல்ல. எத்தனை பிறப்பெடுத்தாலும் மறக்கக்கூடாத தினமும் கூட.

ராமானுஜர் அப்போது சாலைக் கிணற்றில் இருந்து நீர் எடுத்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தார். அதே சமயம் யாதவரின் குழு காஞ்சி எல்லையை நெருங்கியிருந்தது.

‘அதோ, அங்கே வருவது யார்? ராமானுஜன் மாதிரி தெரிகிறதே?’ யாதவர் பரபரப்பானார்.

‘ஆம் குருவே. ராமானுஜனேதான். விந்தியக் காட்டில் இறந்துபோனவன் இங்கு எப்படி வந்திருக்க முடியும்? நம்பவே முடியவில்லை.’ மாணவர்கள் வாய் பிளந்தார்கள்.

மேற்கொண்டு ஓரடி எடுத்து வைக்கவும் யாதவரால் முடியவில்லை. கால்கள் உதறின. உதடு உலர்ந்து போனது. நெஞ்சுக்குள் நடுக்கப் பந்தொன்று துள்ளிக் குதித்தது. பேயடித்த மாதிரி நின்றவரை ராமானுஜர் நெருங்கினார்.

ஒரு கணம்தான். சட்டென்று குடத்து நீரைக் கீழே வைத்துவிட்டு அப்படியே தாள் பணிந்தார். ‘குருவே வணக்கம். யாத்திரை முடிந்து நலமாகத் திரும்பினீர்களா?’

‘ராமானுஜா, நீ.. நீயா?!’

ராமானுஜர் எதையும் மறைக்கவில்லை. பேரருளாளனின் கருணையால் தாம் ஊர் திரும்பிய கதையை அவரிடம் அப்படியே விவரித்தார். ‘காட்டில் வழி தவறிய என்னை அருளாளன் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்திருந்தால் நானும் காசிக்கு வந்திருப்பேன். எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது.’

மறந்தும் அவரது கொலைத் திட்டம் தனக்குத் தெரிந்துபோனதைப் பற்றி அவர் வாய் திறக்கவில்லை.

யாதவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அழுகையும் வெட்கமும் அவரைப் பிடுங்கித் தின்றன. மொழி கைவிட்டு நிராயுதபாணியாக நின்றவர் அப்படியே ராமானுஜரைக் கட்டியணைத்துக்கொண்டார். ‘நீ காட்டு மிருகங்களால் வேட்டையாடப் பட்டிருப்பாய் என்று நினைத்துவிட்டோம். நல்லவேளை, நீ சாகவில்லை. உனக்கு மரணமில்லை ராமானுஜா!’

யாதவரின் சீடர்களால் நம்பவே முடியவில்லை. அவர்கள் உண்மையில் பயந்திருந்தார்கள். பேரருளாளனே வேடமிட்டு வந்து காத்திருக்கிறான் என்றால் இவன் சாதாரணமானவனாக இருக்க முடியாது.

ஊர் திரும்பியதும் பிராந்தியம் முழுதும் இதே பேச்சாக இருப்பதை அவர்கள் கவனித்தார்கள். விந்திய மலையில் ராமானுஜர் காணாமல் போனதற்குச் சரியாக மூன்று தினங்களுக்குள் அவர் காஞ்சிக்கு வந்து சேர்ந்த விவரம். எப்படி முடியும், எப்படி முடியும் என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு, ராமானுஜர் சொன்னதே உண்மை என்ற முடிவுக்கு வந்தார்கள்.

‘நல்லதப்பா! நாளை முதல் நீ மறுபடியும் பாடசாலைக்கு வந்துவிடு. நீ இருந்தால்தான் வகுப்பு களை கட்டுகிறது’ என்றார் யாதவர்.

‘நீ எப்படி அதை அன்று ஏற்றுக்கொண்டு மீண்டும் வகுப்புக்கு வந்தாய் என்பது இப்போதும் எனக்கு வியப்புத்தான்’ என்றாள் யாதவரின் தாயார்.

ராமானுஜர் புன்னகை செய்தார். அது திருக்கச்சி நம்பியின் உத்தரவு.

அன்றைக்கு வீட்டுக்குப் போனதும் நடந்ததை ராமானுஜர் தனது தாயிடம் சொன்னார். ‘என்னிடம் கேட்காதே; திருக்கச்சி நம்பியிடம் கேள்’ என்று அவள்தான் திருப்பிவிட்டது.

‘ராமானுஜரே! உமக்கான பாதை போடப்படும்வரை நீர் எங்காவது வாசித்துக்கொண்டிருப்பதுதான் நல்லது. யாதவர் வேதம்தானே சொல்கிறார்? போய்ப் பாடம் கேளும். அர்த்தம் தவறாகத் தோன்றுமானால் அதை உமக்குள் குறித்துக்கொண்டு வாரும். அவரிடம் விவாதிக்கவேண்டாம்!’

திருக்கச்சி நம்பி சொன்னதை யாதவரின் தாயாரிடம் எப்படிச் சொல்ல முடியும்?

எனவே அவர் புன்னகை செய்தார்.

(தொடரும்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி