இந்த வருடம் என்ன செய்தேன்? – 2015

தமிழில் கிடைக்கும் வைக்கம் முகம்மது பஷீரின் அனைத்துக் கதைகளையும் இந்த ஆண்டு வாசித்து முடித்தேன். இங்கொன்றும் அங்கொன்றுமாகப் படித்திருந்தாலும் இப்படி மொத்தமாகப் படித்தது மகத்தான அனுபவம். பல கதைகளை வாசிக்கும்போது உணர்ச்சி வசமாகிக் கண்ணீர் வந்தது. நீயெல்லாம் ஏண்டா எழுதற என்று திரும்பத் திரும்ப என்னை நானே கேட்டுக்கொள்ள நேர்ந்தது. இந்த உலகில் உண்மையைக் காட்டிலும் அழகானது வேறில்லை. அதை அப்பட்டமாக வெளிப்படுத்துவதினும் பெரிது வேறில்லை. என்னை பஷீர் பக்கம் திருப்பிவிட்ட மாமல்லனுக்கு நன்றி.

இந்த வருடத்துக்குள் படித்து முடிக்கவேண்டும் என்று போன வருடம் எண்ணி ஆரம்பித்த மகாத்மா காந்தி நூல் வரிசையில் மூன்றைத்தான் முடிக்க முடிந்தது. காந்தியைப் படிக்கவும் பயிலவும் தியானம் கூடவேண்டியிருக்கிறது. சும்மா எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தால் ஓட்டிவிட முடிவதில்லை. 2016ல் இன்னொரு மூன்று நூல்களை வாசித்து யோசிக்க முடிந்தாலே பெரிய விஷயம் என்று தோன்றுகிறது.

போன வருஷம் வரை ரத்தக் கொதிப்பு, சர்க்கரை என்று பூச்சாண்டி வியாதிகள் ஏதும் இல்லை. இந்த வருடம் பிபி வந்துவிட்டது. செயல்வேகத்தை இந்தப் பிரச்னை எத்தனை பாதிக்கிறது என்பதை அனுபவபூர்வமாக உணர்கிறேன். முன்னளவு இரவு நேரத்தில் கண் விழிக்க முடிவதில்லை. அதிக நேரம் படிக்க, எழுத சிரமமாக உள்ளது. கட்டிப் பிடித்து உட்கார வைக்கும் ஸ்கிரிப்டாக இல்லாத பட்சத்தில் எந்தப் படத்தையும் பத்து நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடிவதில்லை. இந்த வருடம் நான் முழுதாகப் பார்த்த ஒரே படம் தனி ஒருவன். பத்து பத்து நிமிடங்கள் பார்த்த படங்கள் இருபதுக்குமேல் இருக்கும் (பாபநாசம், தூங்காவனம் உள்பட).

2012 டிசம்பரில் தொடங்கிய வாணி ராணி மூன்றாண்டுகளைக் கடந்து நான்காமாண்டில் அடியெடுத்து வைக்கிறது. இரண்டு வருடங்களாகக் கல்யாணப் பரிசும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த இரண்டைத் தவிர இந்த வருடம் வேறு எந்த சீரியலும் ஒப்புக்கொள்ளவில்லை. நிறைய எழுதுவதன் மீதிருந்த மோகம் குறைந்து வருவதை உணர்கிறேன். செய்வன திருந்தச் செய்.

இயக்குநர் பத்ரிக்காக ஒரு திரைப்பட ஸ்கிரிப்ட் எழுதிக்கொண்டிருக்கிறேன். அநேகமாக ஜனவரி முதல் வாரத்தில் முடிப்பேன். இன்னொரு படத்துக்கு அழைப்பு வந்திருக்கிறது. ஏப்ரலில் தொடங்கலாம்.

இந்த வருடம் பயணம் அதிகமில்லை. பள்ளிக்கால நண்பர்கள் பாபு, பன்னீருடன் ஷீர்டிக்குச் சென்று வந்தது மிகுந்த மன நிறைவை அளித்தது. வேறொரு சுற்றுலாவுக்குத் திட்டமிட்டு அது முடியாமல் போய்விட்டதில் சற்று வருத்தம்.

புத்தகங்களோ பத்திரிகைத் தொடர்களோ இல்லாத வருடம். எந்தப் பத்திரிகையையும் படிக்காத வருடமும்கூட. செய்தித்தாள்களைத் தவிர பிற வாராந்திரிகள் எதுவுமே பிடிக்காது போய்விட்டது. வாரப் பத்திரிகைகள் செய்யவேண்டிய பல காரியங்களை தி ஹிந்துவே செய்துவிடுவதால் அது ஓர் இழப்பாகவும் தெரியவில்லை.

ஆண்டிறுதிப் பேய் மழையும் வெள்ளம் அளித்த அதிர்ச்சியும் மறக்கமுடியாதவை. அள்ளிக் கொடுப்பதிலும் சரி; அள்ளி எடுத்துச் செல்வதிலும் சரி, இயற்கை ஒன்றுதான் பாரபட்சமின்றி நடந்துகொள்கிறது. அத்தனை பெரிய இடருக்குப் பிறகு பத்தே நாளில் நகரம் மீண்டதை விழிப்புணர்வுடன் கவனித்தேன். விவரிக்க முடியாத மன எழுச்சி தந்த இந்தத் தருணத்துக்குள் ஒரு நாவல் இருப்பதாகப் பட்டது. எழுதிப் பார்க்கலாமென்று நினைத்திருக்கிறேன்.

நண்பர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter