பிரம்மனுக்கு இணைவைக்க முடியாத தன் யோக நித்திரை குறித்து சூனியன் விளக்குகிறான். அவனின் விளக்கமே அரூப ரூபத்தை நமக்குள் ரூபமாய் காட்சிப்படுத்துகிறது. யோக நித்திரையில் பிரதி பிம்பங்களைப் படைத்துத் தள்ளுகிறான். பூமி பந்தில் உலாவித் திரியும் அத்தனை அடையாளங்களோடும் உலாவித் திரியும் சூனியனின் பிரதி பிம்பங்களின் செயல்பாட்டு வேகம் மட்டும் ”எந்திரன் சிட்டி” அளவுக்கு இருக்கிறது! தன் படைப்பின் அம்சத்தை ”தோன்றிற் புகழோடு தோன்றுபவர்கள்” என்ற ஒற்றை வரியில் சொல்லி விடுகிறான்.
கண்ணை பறவையாக்கி தன் கண்ணிகளை பார்வையிட ஆரம்பிக்கிறான். தன்னை ஒரு ”கொலைகாரன்” என்று குற்றஞ்சாட்டும் கதையை வெண்பலகையில் படிக்கும் கோவிந்தசாமி கதறி அழுகிறான். அவனின் அழுகை எப்பவும் எடுபடாதது போல இப்பவும் எடுபடாமலே போகிறது. முதல் கண்ணிக்கு இப்படி கன்னி வைக்கும் சூனியனின் கண் பார்வை தன் அடுத்த கண்ணியான சாகரிகா மீது படுகிறது. அவளின் போலி திராவிடத்தை ஒட்டியும், வெட்டியும் வெண்பலகையில் வரும் பதிவில் அவள் மனதிற்குள் நினைத்த ஒரு விசயம் அம்பலமாகிறது. எப்படி இது சாத்தியம்? என சாகரிகா குழம்புகிறாள். சூனியனின் பிள்ளைகள் பல முனைகளில் இருந்தும் அஸ்திரங்களை ஏவ ஆரம்பிக்கின்றனர்.
பா.ரா.வை மீறி நற்குணசீலனை முன் மாதிரியாகக் கொண்டதற்காக சாகரிகாவை ஷில்பா கடிந்து கொள்கிறாள். சூனியனின் பார்வை கோவிந்தசாமியின் நிழல் இருக்கும் பகுதிக்கு நகர்கிறது. பா.ரா. ”பராக், பராக்” – கும், உச்சகட்ட யுத்தத்திற்கான ஆரம்பமும் இங்கிருந்தே தொடங்குமென நினைக்கிறேன்.
குழி பறிக்கத் தோதான இட, வலது சிந்தனைச் சிற்பிகள், இலக்கிய அடிதடிகள், திரைபிரபலம் மூலம் தன்னை பிரபலப் படுத்திக் கொள்ளும் விந்தைகள் என இந்த அத்தியாயம் அவைகளை அறிந்த வாசகர்களுக்கு கடந்த கால நினைவுகளை மீட்டுத் தரும் என்று நம்பலாம்.