சுகம் பிரம்மாஸ்மி – 4

என்ன காரணம் என்று இப்போது சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் படித்ததிலிருந்து, சன்னியாசி ஆகிவிடவேண்டும் என்கிற எண்ணம் மிகத் தீவிரமாக ஏற்பட்டுவிட்டது.

படிப்பில் எனக்கு நாட்டமில்லாமல் இருந்தது, என்னைவிட என்னுடைய தம்பிகள் கெட்டிக்காரர்களாக வளர்ந்துகொண்டிருந்தது, வாத்தியார் பிள்ளை மக்கு என்கிற பழமொழிக்குப் பொருத்தமானவனாக நான் என்னை வடிவமைத்துக்கொண்டது, சிறு பொறுக்கித்தனங்களில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது போன்ற பல்வேறு சில்லறைக் காரணங்கள் என்னுடைய இந்த எண்ணத்துக்கு அடிப்படைக் காரணமாக இருந்திருக்கலாம் என்று பிற்பாடு நினைத்தேன்.

ஒரு நாள் தேவதாஸ் என்னும் நண்பன் வீட்டில் ஏழெட்டுப்பேர் கூடி, ஒரு மலையாள நிர்வாணப் படத்தைப் பார்த்தோம். [நிர்வாணத்துக்கு ஏது மொழி? ஆனாலும் அது மலையாள நிர்வாணம்தான்.] படம் பார்க்கும்வரை வேறு சிந்தனை இல்லை. நன்கு ரசித்து, அனுபவித்துத்தான் பார்த்தேன். ஆனால் பார்த்து முடித்து வீடு திரும்பும் வழியில் சுய இரக்கமும் அவமானமும் பயமும் ஒரு மாதிரி அருவருப்புணர்வும் ஏற்பட்டுவிட்டது. நான் ஒரு கெட்ட பையன் என்பதை முழு மனத்துடன் நானே ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக உணர்ந்தேன். கடவுளே, ராமகிருஷ்ண பரமஹம்சரைப் படிக்கும்போது பக்திப் பெருக்குடன் படிக்க முடிகிற என்னால் எப்படி இந்தக் கழிசடையையும் அதே மன ஓர்மையுடன் ரசிக்க முடிகிறது? இரண்டில் ஏதாவது ஒன்று நிச்சயம் போலியாக இருந்தாக வேண்டும். அது எது?

எனக்குத் தெரியவில்லை. நிஜமாகவே தெரியவில்லை. என் பக்தி அப்பழுக்கற்றது. பரமஹம்சரை ஒரு டவுன்லோட் மேனேஜராக வைத்துக்கொண்டு எப்படியாவது என் கடவுளை நான் எட்டிப்பிடித்துவிடுவது என்ற உறுதியுடன் செயல்பட்டுக்கொண்டிருந்த காலம் அது. நள்ளிரவுப் பொழுதுகளில் யாருக்கும் தெரியாமல் எழுந்து சென்று தனியே அமர்ந்து மிக உக்கிரமாகத் தவம் செய்வேன். இதோ வந்துவிடுவார், இந்தக் கணம் தரிசனம் ஆகிவிடும், மஞ்சளாக ஒரு ஒளி வரும், அதற்குள்ளிருந்து என் இறைவன் புன்னகை செய்வான், என்னைத் தொடப்போகிறான், தலையில் கைவைத்து ஆசீர்வதிக்கப்போகிறான், பாடப்புத்தகங்களில் எனக்குப் புரியாத பக்கங்கள் எல்லாம் விரைவில் விளங்கிவிடும், தேர்வுகளில் நான் நூற்றுக்கு நூறு வாங்கிவிடுவேன், மார்க் ஷீட்டை வாங்கி வீட்டில் நீட்டிவிட்டு நாம் கம்பி நீட்டிவிடவேண்டியதுதான். இமயமலைக்குப் போய்விடலாம். பிறகு நிம்மதியாகத் தவம் செய்து அங்கிருந்து நேரே சொர்க்கம் சென்றுவிடலாம்.

அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். அப்போதே புரிந்தது. ஒரு மக்குப்பையனின் எளிய தப்பித்தல் முயற்சியே அது. ஒரு மகானாகிவிட்டால் மார்க் குறித்து யாரும் விசனப்படப்போவதில்லை என்று கிரிமினலாகக் கணக்குப் போட்டுத்தான் ஒருவேளை ஆன்மிகத்தில் இறங்கியிருப்பேனோ?

தெரியவில்லை. ஆனால் இப்போதும் சொல்வேன், என் நம்பிக்கையும் பக்தியும் அப்பழுக்கற்றது. எப்படி என் அயோக்கியத்தனங்கள் அப்பழுக்கற்றவையாக இருந்தனவோ, அதே மாதிரி.

என்ன பிரச்னை என்றால், குற்ற உணர்ச்சி. அந்த மலையாள நிர்வாணப்படம் பார்த்ததற்கு மறுநாள் காலை குளித்து முடித்து சுவாமி படங்களின் எதிரே நின்று ஒரு வீர சபதம் செய்தேன். இனிமேல் இந்த ரகப் படங்கள் பார்க்க மாட்டேன். இது என் பரமகுரு பரமஹம்சரின்மீது சத்தியம்.

மயிலாப்பூரில் ராமகிருஷ்ண மடம் உள்ளது என்கிற விவரம் எனக்கு வெகு தாமதமாகத்தான் தெரியவந்தது. தெரிந்ததும் துள்ளிக் குதித்தேன். அப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். தாம்பரம் – மயிலை வழி செல்லும் 21ஜி பேருந்து அப்போது கிடையாது. எனவே சைதாப்பேட்டைக்குப் போய் அங்கிருந்து 5பி பிடித்து மயிலைக் குளக்கரையில் இறங்கி, மடத்துக்கு வழி கேட்டுச் சென்றேன்.

அமைதியாக, அழகாக இருந்தது. சுத்தமாக வைத்திருந்தார்கள். காவியுடுத்திய துறவிகளையும் வெள்ளுடை உடுத்திய பிரம்மச்சாரிகளையும் அருகே கண்டபோது பரவசமாக இருந்தது. அனைவரும் ஏதோ ஒரு பணியில் தீவிரமாக இருந்தார்கள். நிறுத்தி விசாரித்தால், அன்பாக பதில் சொன்னார்கள். ஒரு சில பக்தர்கள் தியான மண்டபத்தினுள்ளே அமர்ந்து கண்மூடி தியானம் செய்துகொண்டிருப்பதைக் கண்டேன். என் முடிவைச் செயல்படுத்துமுன் எனக்கும் தியானம் அவசியம் என்று நினைத்தபடியால், நானும் உள்ளே சென்று சில நிமிடங்கள் கண்மூடி அமர்ந்தேன்.

பொதுவாக இன்றுவரை எனக்கு இந்த தியானம் என்கிற சமாசாரத்தின்மீது சில சந்தேகங்கள் உண்டு. தினசரி ஒரு மணி தியானம் செய்கிறேன் என்று யாராவது சொன்னால் ஏனோ பொருட்படுத்தத் தோன்றுவதே இல்லை. காரணம் என்னால் அரை வினாடி கூட மனம் குவிக்க முடிந்ததில்லை என்பதுதான். எதையும் நினைக்கக்கூடாது என்று நினைப்பதே ஒரு நினைப்பல்லவா? ஏதாவது ஒரு பொருளின்மீது கவனத்தைக் குவிப்பது என்பதும் எனக்குச் சிரமமானதே. என் புத்தி குரங்கு கூட அல்ல. கோட்டான். கூவிக்கொண்டேதான் இருக்கும் எப்போதும். பின்னாளில், ‘மனத்தைத் தடுக்காதே. அது போகும் வழியைப் பார்த்துக்கொண்டே இரு, அதுதான் தியானம்’ என்று ரஜனீஷ் சொன்னதைப் படித்தபோது, அடடே நம்மாளு என்று துள்ளிக் குதித்ததும் அதனால்தான். அந்த அயோக்கிய சிகாமணி மட்டும் ஒரு நாத்திகராக இல்லாதிருந்தால் நான் ராமகிருஷ்ணருக்கு அடுத்தபடி அவரை குருவாக்கிக்கொண்டிருந்திருப்பேன். என் துரதிருஷ்டம்.

இருக்கட்டும், அதைப் பிறகு பார்க்கலாம். இப்போது மடம். தியானத்தில் அமர்ந்தேன். என் குருவே, பரம்பொருளே, ஆண்டவனே. ஒரு நம்பிக்கையுடன், ஒரு முடிவுடன் இங்கே வந்திருக்கிறேன். என்னை மடத்தில் சேர்த்து்க்கொள்ளச் சொல்லிக் கேட்கப்போகிறேன். அட்மிஷன் கிடைத்துவிட நீதான் அருள் புரியவேண்டும். என் பக்தி அப்பழுக்கற்றது. என் நோக்கம் புனிதமானது. நான் துறவியாகிவிடுவதுதான் உலகுக்கு நல்லது. என்னைக் காட்டிலும் பரமஹம்சரை அறிந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அமுத மொழிகள் முழுக்கப் படித்தவனல்லவா? ஆகவே சேர்த்துக்கொள்ளச் செய்துவிடு.

இந்த மாதிரி ஏழெட்டு முறை திரும்பத் திரும்பப் பிரார்த்தனை செய்து என் ‘தியானத்தை’ ஒரு மாதிரி முடித்துக்கொண்டு எழுந்து வெளியே வந்தேன். ஒரு துறவி அகப்பட்டார். போய் அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

முதல் வரியில் விஷயத்தைச் சொல் என்கிற ஜர்னலிசத்தின் முதல் ஃபார்முலாவை அங்கேயே பிரயோகித்துவிட்டேன். ஐயா, என் பெயர் ராகவன். நான் துறவியாக விரும்புகிறேன். ராமகிருஷ்ணரின் தீவிர பக்தன். என்னை மடத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

நிச்சயமாக கம்யூனிடி சர்டிபிகேட், மார்க் ஷீட் எல்லாம் கேட்கமாட்டார்கள் என்று தெரியும். ஆனால் அவர் புன்னகையுடன் ‘சரி, உன் அப்பாவைக் கூப்பிட்டுக்கொண்டு வா, பேசுவோம்’ என்றதை நான் எதிர்பார்க்கவில்லை.

அவர் பெயர் சுவாமி யதாத்மானந்தா. இப்போது மதுரை கிளையில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அப்போது சென்னை கிளையின் நூலகப் பொறுப்பாளராக இருந்தார். கண்ணாடி போட்டிருப்பார். ஒல்லியாக, குள்ளமாக, நறுக்கி வைத்த மரக்கிளை போலிருந்தார். ரொம்பக் கூர்மையாக நம்மைப் பார்ப்பார். பேசுவதை உன்னிப்பாக கவனிப்பார். எண்ணி எண்ணித்தான் பேசுவார்.

‘என்ன பதில் சொல்லமாட்டேங்கறே? உங்கப்பா விடமாட்டாரோ?’ என்னை அவர் பேசத் தூண்டினார்.

‘உங்கப்பா உங்களை சந்தோஷமாத்தான் துறவியாக அனுப்பினாரா?’ என்று கேட்க நினைத்தேன். ஏனோ கேட்க வாய் வரவில்லை. மாறாக, பரமஹம்சர் மீது எனக்குள்ள பக்தி, ஈடுபாடு குறித்தும், மெய்ஞானத் தேடல் மிகுந்து நான் இரவெல்லாம் உறக்கம் வராமல் அவதிப்படுவது குறித்தும், என் கடவுளைப் பார்த்துவிடத் துடிப்பது பற்றியும் இன்னபிறவற்றையும் விவரமாகச் சொன்னேன். கணக்கிலும் அறிவியலிலும் பாஸ் மார்க் கிடைக்குமா என்கிற சந்தேகம் இருந்ததை மட்டும் சொல்லவில்லை.

அவர் சிறிதுநேரம் என்னை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு, வா என்று அழைத்துக்கொண்டு நூலகத்துக்குச் சென்றார். சில புத்தகங்களைக் கொடுத்து படிக்கச் சொன்னார். மதிய நேரம் என்பதால் சாப்பிட அழைத்தார். அதுவே பெரிய அங்கீகாரமாகத் தோன்றியது. சந்தோஷமாகப் போய்ச் சாப்பிட்டேன். நல்ல அருமையான சாப்பாடு. குழம்பு, ரசம், கூட்டு, பொறியல், தயிர், பச்சடி, சாலட் எல்லாம் இருந்தது. சாப்பிட்டதும் வாழைப்பழம் கூடக் கொடுத்தார்கள். சன்னியாசியாக இருப்பதற்கும் நல்ல சாப்பாடு சாப்பிடுவதற்கும் தொடர்பில்லை போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

அடிக்கடி மடத்துக்கு வந்து போய்க்கொண்டிரு என்று மட்டும் சொல்லி விடைகொடுத்துவிட்டார். எனக்கு ஏமாற்றம்தான். ஆனாலும் முதல் நாளே நான் எதிர்பார்த்தது அதிகமல்லவா?

பிறகு வாரம் மும்முறையாவது ராமகிருஷ்ண மடத்துக்குச் செல்ல ஆரம்பித்தேன். நூலகத்தில் அவர் இருப்பார். போய் வணக்கம் சொல்வேன். சிரிப்பார். படி என்பார். உட்கார்ந்து படிப்பேன். மயிலாப்பூர் மடத்து நூலகம் மிக அருமையானது. ஏராளமான புத்தகங்கள் அங்கே உண்டு. எளிதில் கிடைக்காத பழங்காலப் பிரதிகள் பலவற்றை அங்கே கண்டிருக்கிறேன். என்ன பிரயோஜனம்? யதாத்மானந்தா என்னைத் துறவியாக்க நாள் கடத்திக்கொண்டே இருக்கிறாரே?

ஒருநாள் திரும்பவும் கேட்டேன். என்னை நம்புங்கள். நான் இதில் தீவிரமாக இருக்கிறேன். எனக்குத் துறவியாகியே தீரவேண்டும். என்னால் வேறு எதுவாகவும் ஆகமுடியாது.

சரி ஒருநாள் உன்னை மகராஜிடம் அறிமுகப்படுத்திவைக்கிறேன். அவரிடம் பேசு என்று சொன்னார். மகராஜ் என்று அவர் சொன்னது, மடத்தின் அன்றைய தலைவரை. சுவாமி தபஸ்யானந்தா என்று பெயர். அவரிடமும் பேசினேன். ஒன்றும் பிரயோஜனமில்லை. பதிலே சொல்லாமல் சிரித்துவிடுவதில் ராமகிருஷ்ண மடத்துத் துறவிகள் சமர்த்தர்கள் என்று நினைத்துக்கொண்டேன்.

ஒருநாள் யதாத்மானந்தாவிடம் சற்றுத் தீவிரமாகவே கேட்டேன். என்னிடம் என்ன குறை? எனக்குத் துறவு சரிப்படாது என்று ஏன் கருதுகிறீர்கள்?

அவர் வெகுநேரம் யோசித்துவிட்டுச் சொன்னார். நான் அப்படி நினைக்கவில்லையே?

பிறகு ஏன் அங்கீகரிக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டேன். பதிலில்லை. கொஞ்சம் போரடித்துவிட்டது. தவிரவும் பொதுத்தேர்வு நெருங்கிவிட்டது. இயல்பான அச்சத்தில், பிடிக்காத பாடங்களை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்துவிட்டேன். தாற்காலிகமாகப் பரமஹம்சரிடம் கூட விடைபெற்றிருந்தேன்.

தேர்வுக்குப் பிந்தைய விடுமுறை நாள்களில் ஏனோ எனக்குப் பழைய ஆன்மிக வேகம் இல்லாமல் போய்விட்டது. திடீரென்று கதை படிக்கும் வேகம் வந்து கண்டபடிக்குக் கிடைத்த அனைத்தையும் படித்துத் தீர்க்கத் தொடங்கினேன். நான் சற்றும் எதிர்பாராத மிக உயர்ந்த மதிப்பெண்கள் வேறு வந்துவிட, அடடே எனக்குத் தெரியாமல் நானும் ஒரு கெட்டிக்காரப் பையன் ஆகிவிட்டேன் போலிருக்கிறதே என்று எண்ணிக்கொண்டேன்.

கொஞ்சநாள்தான். அப்பா என்னை பாலிடெக்னிக்கில் கொண்டுபோய்ப் போட்டார். ஒரு மூன்று வருட காலத்துக்கு என்னைப் பார்த்தாலே பிரின்சிபாலும் ப்ரொபசர்களும் சக மாணவர்களும் கடவுளும்கூட அஞ்சி நடுங்கி ஓடத்தொடங்கினார்கள். யதாத்மானந்தா ஏன் கடைசிவரை எனக்குப் பிடிகொடுக்கவில்லை என்பதற்கான காரணத்தை நான் தரமணி மத்திய தொழில்நுட்பக் கல்லூரியில் கண்டுபிடித்துவிட்டேன்.

Share

13 comments

  • //அந்த அயோக்கிய சிகாமணி மட்டும் ஒரு நாத்திகராக இல்லாதிருந்தால் நான் ராமகிருஷ்ணருக்கு அடுத்தபடி அவரை குருவாக்கிக்கொண்டிருந்திருப்பேன். என் துரதிருஷ்டம்.//

    உங்களுக்கு மாவா தான் கடவுள் மாதிரி என்று ஒரு சமயம் சொல்லி இருந்தீர்கள். அப்படி இருக்கும் போது உங்கள் குரு ஏன் ஆத்திகராக இருக்க வேண்டும்?

    அவர் ஆத்திகராக இருந்தால் மட்டும் எப்படி ஒரு அயோக்கியரை குருவாக ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருந்தீர்கள்?

  • சன்னியாசியாக இருப்பதற்கும் நல்ல சாப்பாடு சாப்பிடுவதற்கும் தொடர்பில்லை போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.
    சரியான குசும்பனய்யா நீர்.அருமையான பதிவு.

  • தொடர்ந்து படிக்கிறேன். மிகவும் நகைச்சுவையாக அழகாக எழுதுகிறீர்கள். மற்றவர்கள் வெளியே சொல்ல தயங்கக்கூடிய விசயங்களைகூட அப்பட்டமாக பேசுகிறீர்கள். கடவுளை தேடி எதை அடைந்தீர்கள் என்பதை அறிய மிகவும் ஆவலாக உள்ளது. தயவுசெய்து நிறுத்தாமல் தொடர்ந்து எழுதுங்கள்.

    உங்கள் வாசகன்,
    வினாயகமூர்த்தி

  • சூப்பர். படிக்க படிக்க போதையே ஏறுகிறது. ஆன்மிகத்தைக்கூட இப்படி எழுதமுடியுமா? அனுபவமாக இருப்பதால்தான் சுவாரசியமாக இருக்கிறதா? எப்படியானாலும் இந்த தொடர் அருமை பாரா.ராமகிருஷ்ண மடத்துக்கு இப்போது போவதுண்டா? மிகவும் பிசினஸ் லைக் ஆகிவிட்டதாக கேள்வி;-)

  • நீங்கள் கடவுளை பார்க்க நினைத்தீர்களா அல்லது அடைய நினைத்தீர்களா? கடவுளை பார்பதனாலோ அல்லது அடைவதனாலோ அவர் உங்களுக்கு என்ன செய்து விட முடியும் என நினைத்தீர்கள்? உங்களை மனிதனாய் படைத்ததினால் நீங்கள் அல்லவா அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். தொடர்ந்து படித்து வருகிறேன், அருமையான (சுகம்) பிரம்மாஸ்மி.

  • //சன்னியாசியாக இருப்பதற்கும் நல்ல சாப்பாடு சாப்பிடுவதற்கும் தொடர்பில்லை போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.//

    அருமை சுகமான நடை

  • பாலிடெக்னிக்ல கண்டு புடிச்ச விசயத்தை சீக்கிரமே சொல்லுங்க,ஆவலுடன் இருக்கேன்

  • //என் புத்தி குரங்கு கூட அல்ல. கோட்டான். கூவிக்கொண்டேதான் இருக்கும்// :)))

    எழுத்தாளரே நீங்கள் மணிக்கணக்கில் ஆடாமல் அசையாமல் ஒரே இடத்தில் அவ்வப்போது தண்ணீர் மட்டும் பருகிக் கொண்டு பல புத்தகங்களை எழுதியுள்ளீர்கள் அல்லவா, அந்த எழுத்தெல்லாம் எப்படி சாத்தியமானது, அந்த மனநிலை தியானம் என்பதின் மறு பெயர்தானே?

    உங்கள் தேடல் சரியான திசையில்தான் இருந்திருக்கிறது. ‘நான் கடவுள்; மற்றவர்களும் அதுவே (including Asin) என்று கடைசியில் கண்டுபிடித்துவிட்டீர்கள்தானே?

    இன்று நீங்கள் இப்படி இருப்பது is a sum total of your self analysis, ரசனைகள், இடையறாத தேடல்கள், etc etc. ‘அலகிலா விளையாட்டின் மற்றொரு வெர்ஷனாகத் தான் இப்பதிவு இருக்கிறது. வாசிப்பானுபம் என்பார்களே அது வெகு நிறைவாய் கிடைக்கிறது. தொடருங்கள்…

  • மிகவும் சுவாரசியமாக போகிறது… waiting eagerly for the next installment.

  • //ஒரு நாள் தேவதாஸ் என்னும் நண்பன் வீட்டில் ஏழெட்டுப்பேர் கூடி, ஒரு மலையாள நிர்வாணப் படத்தைப் பார்த்தோம். [நிர்வாணத்துக்கு ஏது மொழி? ஆனாலும் அது மலையாள நிர்வாணம்தான்.] படம் பார்க்கும்வரை வேறு சிந்தனை இல்லை. நன்கு ரசித்து, அனுபவித்துத்தான் பார்த்தேன். ஆனால் பார்த்து முடித்து வீடு திரும்பும் வழியில் சுய இரக்கமும் அவமானமும் பயமும் ஒரு மாதிரி அருவருப்புணர்வும் ஏற்பட்டுவிட்டது. நான் ஒரு கெட்ட பையன் என்பதை முழு மனத்துடன் நானே ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக உணர்ந்தேன்.//

    நீங்களும் நம்ம கட்சிதானா..? இதுவெல்லாம் அந்த வயதில் சகஜம்தான்.. குற்றவுணர்ச்சியுடன்தானே அத்தனை பேரும் குற்றங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.

  • //அந்த அயோக்கிய சிகாமணி//

    I think u wont understand OSHO… First u understand the osho through his books alteast nail level …then u will talk about good & bad. (yokiyam & ayyokkiyam)

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி