சுகம் பிரம்மாஸ்மி – 5

நான் கடவுளை விட்டு வெகு தூரம் விலகி இருந்த நாள்கள் என்று யோசித்தால் அடையாறு செண்ட்ரல் பாலிடெக்னிக்கில் படித்த மூன்று வருடங்களைத்தான் சொல்லத் தோன்றுகிறது.

படித்த என்றா சொன்னேன்? மன்னிக்கவும். இருந்த.

இப்போது யோசித்துப் பார்த்தால் அன்றைய என்னுடைய அத்தனை பொறுக்கித்தனங்களுக்கும் அடிப்படைக் காரணம், படிப்பு வரவில்லையே என்கிற பயம்தான் என்று தோன்றுகிறது. பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு நேரே பொறியியலுக்குப் போனால் ஒரு இழவும் புரியவில்லை. புத்தகங்களோ 600,700 பக்கங்களுக்குக் குறைவதேயில்லை. ஆர்.எச். குருமி என்று இயந்திரவியல் துறைக்கு ஒரு பி.எஸ். வீரப்பா உண்டு. தடி தடியாக எழுதிக் குவித்த அறிவுத் தீவிரவாதி. ஒருவரியாவது நிம்மதியாகப் படித்து புரிந்துகொள்ளவே முடியாது. பின் நவீனத்துவ எழுத்தாளர்களெல்லாம் அவரிடம் பிச்சை வாங்கவேண்டும். அத்தனை தெளிவு இருக்கும் எழுத்தில்.

என்னுடைய பேராசிரியர்கள் பொதுவாக அதிகம் பேசவே மாட்டார்கள். பாடமெடுக்கும்போதுகூட போர்டுடன் தான் அவர்களுக்கு உறவே தவிர, மாணவர்களுடன் இருந்ததில்லை. படிப்பாளிப் பையன்கள் மட்டும் அவ்வப்போது கேள்விகள் கேட்டு ஏதோ பதில் பெற்று திருப்தியடைந்துவிடுவார்கள். என்னைப்போல் முழு முட்டாள் என்ன செய்வான்?

எதிர்ப்பைக் காட்டும் விதமாகச் சில நண்பர்களுடன் வகுப்பிலிருந்து வெளியே போய்விடுவேன். மரங்கள் அடர்ந்த வனப்பகுதி அது. இப்போது நிறைய கட்டடங்கள் வந்துவிட்டன. அதன் அழகு போய்விட்டது என்றே தோன்றுகிறது. அன்றைக்கு யாராவது முன்பின் தெரியாமல் அந்தப் பிராந்தியத்துக்குள் வந்துவிட்டால் சரியான வழியில் வெளியேறுவதே கஷ்டம். அத்தனை அடர்ந்த பிரதேசம்.

என்ன செய்யலாம்? மாஸ் கட் அடிக்கலாம். என்னத்துக்காவது ஸ்டிரைக் செய்யலாம். டபிள்யூ.பி.டி.  பக்கம் சென்று அமர்ந்து நிறம் நோக்கலாம். தியாகராஜாவில் சினிமா பார்க்கலாம். ஐந்து டி பஸ் வந்தால் ஏறி தாளம் போட்டு ரகளை செய்யலாம். ராகிங் செய்யலாம். சாந்தி தியேட்டர் பக்கத்துக் கட்டடத்தில் காபரே போகலாம். இந்திரா நகர் கோஷ்டி அடிதடியில் பாட்டில் வீசலாம். போலீஸ் வந்ததும் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் பதுங்கி மறையலாம். திருட்டு பயத்தில் ஜுரம் வந்தால் காந்தி மண்டபத்தில் படுத்துக்கிடக்கலாம்.

எல்லாம் செய்தோம். எல்லாம் செய்தேன். கல்லூரி வளாகத்தில் ஓர் அறியப்பட்ட பொறுக்கியாக ஒருமுறை பிரின்சிபாலின் கார் மீது கல்லெறிந்து கண்ணாடியை உடைத்தேன். பையன்கள் தோள்மேல் தூக்கிவைத்து டான்ஸ் ஆடி விசிலடித்தார்கள். பின்னிட்ட மாப்ள. கொளுத்திட்ட மாமு. மவன இனி நம்ம பக்கம் வரமாட்டான் சோடாபுட்டி.

உற்சாக வார்த்தைகளில் அன்றே ஒரு ரவுடி ஆகிவிடுவது என்று முடிவு செய்தேன். சுவாமி யதாத்மானந்தா ஏன் எனக்கு துறவியாக உதவி செய்யவில்லை? அதன் பலன் இதுதான்.

அந்த மூன்று வருட காலத்தில் எனக்கே வெறுத்துப்போகிற அளவுக்கு ரவுடித்தனங்கள் செய்திருக்கிறேன். எத்தனை முறை வார்னிங்? எத்தனை முறை சஸ்பெண்ட்? வகுப்புகளுக்குப் போவதைப் பெரும்பாலும் நிறுத்தியிருந்தேன். என் வீடு அதுநாள் வரை போதித்து வந்த நல்லொழுக்கங்கள் அனைத்தையும் மறந்து, நானே ஆர்வமுடன் பயின்ற ஆன்மிக நூல்களை ஒதுக்கி, தினசரி இரண்டு திரைச்சித்ராக்களைத் தவறாமல் வாசித்தேன். பறங்கிமலை ஜோதி, ஆலந்தூர் ராமகிருஷ்ணா [அப்போது விக்டோரியா], ராதாநகர் வேந்தர், பாண்ட்ஸ் ஸ்டாப்பிங் லட்சுமி என்று எங்கெல்லாம் மலையாள நிர்வாணப்படங்கள் திரையிடப்பட்டதோ அங்கெல்லாம் தவறாமல் இருந்தேன். எதிர்பார்த்த அளவுக்குப் படம் திருப்தி தராவிட்டால் பல சமயம் தியேட்டர்களிலும் ரகளை செய்திருக்கிறோம்.

கூட்டமாக இருக்கும்போது கோழைத்தனத்துக்கு வடிகால் கிடைத்துவிடுகிறது. குரல் மேலோங்கி எழுகிறது. அருவருப்புகள், அசிங்கங்கள் அனைத்தும் ஆண்மை என்பதாக மறு அடையாளம் கொள்கின்றன.

ஒரு விஷயம். இந்த உண்மை எனக்குத் தாமதமாகத் தெரிந்ததில்லை. அப்போதே. எல்லாம் முடித்து வீடு திரும்பி, இரவு படுத்ததும் ஒரு துக்கம் கவ்வி, அழுகை பீறிடும் பாருங்கள், அதை விவரிக்கச் சொற்களே கிடையாது. உலகம் முழுதும் கைவிட்டுவிட்ட அநாதை போல உணரத்தோன்றும். கடவுளை, பெற்றோரை, ஆசிரியர்களை, படிப்பை, படிக்கிற பையன்களை – அத்தனை பேரையும் சபித்துவிட்டு என்னையறியாமல் தூங்கிப் போவேன்.

பகல் பாதுகாப்பானது. பொறுக்கிகள்தான் என்றாலும் என் நண்பர் வட்டம் மிகவும் இணக்கமானது. அவர்களது அண்மையில் என் இரவுநேர மனக்கலக்கமெல்லாம் இருந்த இடம் தெரியாமலாகிவிடும். அன்றைய தினத்துப் பொறுக்கித்தனங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பது ஒன்றே இலக்காகிவிடும்.

இவ்வாறாக இரண்டரை வருடங்களைக் கழித்த பிறகு ஒரு நாள் – அப்போது ஐந்தாவது செமஸ்டரில் இருந்தேன் – எனக்கொரு பேருண்மை புரிந்தது. என் பெற்றோராலும் கடவுளாலும் மட்டுமல்ல. என் உயிருக்குயிரான என் பொறுக்கி நண்பர்களாலும் நான் அழகாக ஏமாற்றப்பட்டிருந்தேன். தற்செயலாகத்தான் செந்தில்குமாரின் அந்த செமஸ்டர் மார்க் ஷீட்டைப் பார்க்க நேர்ந்தது. சில வினாடிகள் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கண் இருட்டிவிட்டது. நிஜம்தானா? எப்படி?

எல்லா பாடங்களிலும் அவன் அறுபதுக்குமேல் மதிப்பெண்கள் வாங்கியிருந்தான். சட்டென்று விழிப்புற்று ராமமூர்த்தியின் மார்க் ஷீட்டைக் கேட்டு வாங்கிப் பார்த்தேன். ஐம்பதுக்கு மேல். முருகவேல்? படுபாவி எழுபது.

ஒரு சிலரைத் தவிர எங்கள் குழுவில் பெரும்பாலான மாணவர்கள் பொறுக்கித்தனம் செய்த நேரம் போக, மிச்ச நேரத்தில் ஒழுங்காகப் படித்துப் பரீட்சை எழுதவே செய்திருக்கிறார்கள். அல்லது ஒழுங்காக பிட் அடித்திருக்கிறார்கள்.

தத்தி மாதிரி நான் ஒருவன் மட்டுமே பன்னிரண்டு பாடங்களில் அரியர்ஸ்.

அடக்கடவுளே என்று அப்போதுதான் மீண்டும் கடவுளை நினைத்தேன். ஒரே வினாடியில் என் தனிமை எனக்கு முற்று முழுதாகப் புரிந்துவிட்டது. இரண்டரை வருட காலத்தில் முதல் முறையாகப் பகலில் நான் அனுபவித்த தனிமை!

நண்பர்கள் அப்போதும் உடன் இருக்கவே செய்தார்கள். எப்போதும் போல் அன்பான நண்பர்கள். மாப்ள வரியா, சவுக்கார்பேட் போலாம்? பங்கியடிச்சிப் பாக்கணும்டா ஒருநாள்.

மறுத்துவிட்டு நேரே ராமகிருஷ்ண மடத்துக்குத்தான் போனேன். யதாத்மானந்தாவைப் பார்க்கும் மனநிலை இல்லை. தியானமண்டபத்துக்குப் போய் உட்கார்ந்து வெகுநேரம் மௌனமாக அழுது தீர்த்தேன். பாவம் கரைந்ததோ இல்லையோ, பாரம் இறங்கியது போலிருந்தது. பரமஹம்சர் நல்லவர். இத்தனைக்குப் பிறகும் என்னை அவசியம் ஏற்பார். எத்தனை மனம் திருந்திய மைந்தர்களின் கதைகளைக் கேட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம்!

ஒன்று புரிந்துவிட்டது. மகராஜ் தபஸ்யானந்தா மட்டும் தப்பித்தவறி என்னை மடத்தில் சேர்த்துக்கொண்டிருந்தால் அவர் கதி என்ன ஆகியிருக்கும்? மடத்தின் கதிதான் என்ன ஆகியிருக்கும்! என் படிப்பு வராத குறைக்கு மாற்றாக நான் துறவியாவது அல்லது ரவுடியாவது என்று இரண்டு எல்லைகளில் முடிவெடுக்கக்கூடியவனாக இருந்திருக்கிறேன். எப்பேர்ப்பட்ட கிரிமினலாக இருந்திருந்தால் இப்படித் தோன்றியிருக்கும்! மிகவும் வெறுப்பாக, அவமானமாக இருந்தது.

இரண்டுக்குமே லாயக்கில்லாதவன் என்பது புரிந்தபோது, அப்போதும்கூடப் பாடம் படிக்கத் தோன்றாமல் இலக்கியம் படித்து மீண்டும் கெட்டுப்போகவே செய்தேன். பிற்பாடு இதையே ஒரு கதையாக எழுதி கல்கிக்கு அனுப்பி, பிரசுரமும் உத்தியோகமும் ஒன்றாகக் கிடைத்தது, இந்தத் தொடருக்குச் சம்பந்தமில்லாத விஷயம்.

[தொடரும்]
Share

20 comments

  • செண்ட்ரல் – சென்ட்ரல்
    டவுண் – டவுன்

    இது போன்ற ஆங்கில சொற்களில் எது சரி எது தவறு? NHM செண்ட்ரல் என்று தானாக மாற்றிவிடுகிறதே!

  • /முறையாகப் பகலில் நான் அனுபவித்த தனிமை//
    நானும் அனுபவித்து இருக்கிறேன்.

  • சேற்றில் புரண்டு மீண்டெழுந்த கதை யாருக்கு தான் புடிக்காது. keep them coming sir.

  • உங்களுடன் லூட்டியடித்த நண்பர்கள் உங்களுக்கு தெரியாமல் மற்ற நேரங்களில் படித்து மார்க் வாங்கியிருக்கிறார்களா? அப்படிப்பட்டவர்களை பற்றி நான் எழுதிய பதிவு: http://dondu.blogspot.com/2006/12/3_30.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  • ராகவன் சார்!
    off-stage ஆக ஒரு தகவல்!
    குருமி ஒரு நூலகர் மட்டும்தான் என்ற வதந்தி(அல்லது உண்மை) நான் படிக்கும்போது இருந்தது.
    அதாவது மேதைகள் எழுதிய புத்தகங்களைப் படித்து சிலபசுக்குத் தகுந்தவாறு அருமையாக கோத்து, தொகுத்துத் தருபவர் என்று கூறக் கேள்விப்பட்டிருக்கிறேன்! (வாதத்திற்கு உறுதி சேர்ப்பதுபோல் அவரின் டிகிரியோ, இன்ன இடத்தில் இன்ன நேரங்களில் வேலை பார்த்தேன் போன்ற விவரங்களோ, அவரின் புத்தகங்களில் கண்டதில்லை)

    மற்றபடி உங்களின் திருவிளையாடல்களைப் படிக்கும்போது பிருத்விராஜ் ‘மொழி’யில் பிரம்மானந்தத்தைப் பார்த்து சொன்ன வசனம்தான் நினைவிற்கு வருகிறது – “அம்பி மாதிரி இருக்கிற உங்களுக்குள்ள இப்படி ஒரு அந்நியனா?!”

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

  • கொத்தனார்,

    சென்ட்ரல் என்றுதான் வரவேண்டுமென்று நினைக்கிறேன். ஆனால் ரைட்டரில் வேகமாக அடிக்கும்போது N+T போட்டால் அது தானாக மூணு சுழி ண் போட்டுவிடுகிறது. திரும்பச் சென்று திருத்தக் கைவருவதில்லை. தவிரவும் ஆங்கிலம்தானே? உச்சரித்துப் பார்த்தால் நாக்கு மேலண்ணத்தைத்தான் தொடுகிறது. எனவே மூணு சுழி பரவாயில்லை என்றும் தோன்றுகிறது.

  • மிகவும் அருமை. படிக்கப் படிக்க உணர்ச்சி வெள்ளப் பெருக்கென பெருகுகிறது….

  • அருமை. என்னமாய் எழுதுகிறீர்கள்! இத்தனை வெளிப்படையாய், அவமானங்களையும் மூடி மறைக்காமல் உண்மையாய் எழுதுவோர் குறைவு. படிக்க படிக்க ஒரு பரவச நிலைக்கே கொண்டுபோகிறீர்கள். ஒவ்வொரு மனிதனும் தான் கடந்துவந்த பாதையை இப்படி திரும்பி பார்த்தால், தவறுகளை நினைத்துப்பார்த்தால் சமூகமே மேம்படத் துவங்கிவிடும். நீங்கள் பத்திரிக்கைகளில் எழுதும் அரசியல் கட்டுரைகளைவிட சுகம் பிருமாஸ்மி மிகவும் சுகமாக இருக்கிறது. தயவுசெய்து நிறுத்தாமல் தொடருங்கள்.

    அன்பு வாசகன்
    வினாயகமூர்த்தி.

  • //சிலபசுக்குத் தகுந்தவாறு அருமையாக கோத்து, தொகுத்துத் தருபவர்//

    கோத்துத் தந்ததே இப்படி என்றால் ஒரிஜினல் படித்திருந்தால் நான் என்ன ஆகியிருப்பேன்!

  • டோண்டு,

    படித்தேன். அயோக்கியர்கள் அகிலமெங்கும் உண்டு போலிருக்கிறது.

  • Dear Paa Raa,
    These kind of days may be everybody might have experienced, but many can’t say it openly, in fact to say all these things required a different mind set.

    I have seen few sucessful peoples will say their past mistakes openly, is there any link between sucess and coming out openly ?

    Regards
    Sankaran

  • PARA,
    Great self analysis.
    Eagerly reading and enjoying your perspectives.
    Thanks for writing.
    anbudan,
    srinivasan.

  • Beautiful narration Para sir…
    how did your Parents react to all your activities? you couldnt have hidden all your activities for a long period…

  • //how did your Parents react to all your activities?//

    மிக நல்ல கேள்வி. ஒரு தேர்ந்த கிரிமினலாக என்னைப் பற்றிய அனைத்து விவரங்களையும் நான் என் வீட்டுக்கு மறைத்தே வைத்திருந்தேன். மடத்துக்குப் போனது போன்ற சில மட்டும் தெரியும். மடம் நிராகரித்ததும் தெரியும். பிறகு வேறு சில சாமியார்களுடன் சுற்றியது தெரியும். பாலிடெக்னிக்கில் நான் படிக்கவில்லை என்பது தெரியும். ஊர் திரிந்தது தெரியும். ஆனால் குறிப்பாக என்னென்ன செய்தேன் என்பது தெரியாது். இப்போது பதினொரு வருடங்களாக என்னைப் பூமாதிரி பராமரித்து வருகிற என் மனைவிக்குக்கூட இதைப் படித்துத்தான் என் முன்கதைச் சுருக்கம் அத்தியாயம் அத்தியாயமாகத் தெரியவருகிறது. இவையெல்லாம் கடவுள் தொடர்பான அனுபவங்கள் மட்டுமே. பத்திரிகை, சினிமா, பதிப்பு, தொலைக்காட்சி, நண்பர்கள், ஆசிரியர்கள் தொடர்பான பிற அனுபவங்களைத் தனித்தனியே யோசிக்கும்போதுதான் அவை சார்ந்த சம்பவங்களை நினைவுக்குக் கொண்டு வர முடியும்.

    எது சார்ந்து யோசித்தாலும் அயோக்கியன், அயோக்கியன் தான். அதில் சந்தேகமில்லை. இந்தக் கணம் முதல் உத்தமனாக வாழவேண்டும் என்று ஒவ்வொரு கணமும் நினைப்பதிலும் சந்தேகமில்லை.

  • Dear Pa.Ra,

    Same Storey is My Life

    But My age is Below 30,

    at present I am working in Private Company in Accounts Section

    With regards /James Rajendran / Coimbatore

  • //ஒரு சிலரைத் தவிர எங்கள் குழுவில் பெரும்பாலான மாணவர்கள் பொறுக்கித்தனம் செய்த நேரம் போக, மிச்ச நேரத்தில் ஒழுங்காகப் படித்துப் பரீட்சை எழுதவே செய்திருக்கிறார்கள்.//
    CPT விசேஷமே இதுதான் என்று நினைக்கிறேன், நான் படித்த போதும் இதை கண்கூடாக பார்த்திருக்கிறேன்
    நானும் CPT தான் சார்

  • //ஒன்று புரிந்துவிட்டது. மகராஜ் தபஸ்யானந்தா மட்டும் தப்பித்தவறி என்னை மடத்தில் சேர்த்துக்கொண்டிருந்தால் அவர் கதி என்ன ஆகியிருக்கும்? மடத்தின் கதிதான் என்ன ஆகியிருக்கும்!//

    போன பதிவைப் படித்த போதே நானும் இதைத்தான் நினைத்தேன். நீங்களும் அதையேதான் நினைத்திருக்கிறீர்கள்..

    எப்படி பா.ரா..?

    //தினசரி இரண்டு திரைச்சித்ராக்களைத் தவறாமல் வாசித்தேன்.//

    நான் விருந்து, மருதம் இரண்டுக்கும் ரெகுலர் கஸ்டமர்.

    //பறங்கிமலை ஜோதி, ஆலந்தூர் ராமகிருஷ்ணா [அப்போது விக்டோரியா], ராதாநகர் வேந்தர், பாண்ட்ஸ் ஸ்டாப்பிங் லட்சுமி என்று எங்கெல்லாம் மலையாள நிர்வாணப்படங்கள் திரையிடப்பட்டதோ அங்கெல்லாம் தவறாமல் இருந்தேன். எதிர்பார்த்த அளவுக்குப் படம் திருப்தி தராவிட்டால் பல சமயம் தியேட்டர்களிலும் ரகளை செய்திருக்கிறோம்.//

    என்னை மாதிரியேதானா..? ரொம்ப நெருங்கிட்டோம் பா.ரா. ஸார்..

    ஆலந்தூரில் ராஜாதானே இருந்தது..? ராமகிருஷ்ணா எங்கேயிருந்தது..?

    நான் ஜோதியிலும், ராஜாவிலும் ரெகுலர் கஸ்டமர்..

    உங்களை மாற்றியது ஒரு நிகழ்வு. என்னை மாற்றியதும் ஒரு நிகழ்வு.

    தங்களுக்கு நண்பர்களின் மார்க் ஷீட்.. எனக்கு கண்ணதாசன்..

  • //டோண்டு,

    படித்தேன். அயோக்கியர்கள் அகிலமெங்கும் உண்டு போலிருக்கிறது.//

    பாரா,
    பொத்தாம்பொதுவா எல்லாரையும் அயோக்கியர்கள்னு சொல்லிடாதீங்க. நானும் CPTதான் (’91 batch). பெரும்பாலும் 10வதுல ரொம்ப நல்ல மார்க் எடுத்தவங்களுக்குதான் அங்க இடம் கிடைக்கும். பொதுவா பத்தாவதுல நல்ல மார்க் எடுக்கிற பசங்க அதுவரைக்கும் அப்பா, அம்மா பேச்சை கேக்கற, கண்டிப்போட வளர்கப்பட்டவங்களா இருப்பாங்க. CPTக்கு வந்த உடனே அடிமையா இருந்து விடுதலையான ஒரு உணர்வு வந்துடுது.

    எலக்ட்ரானிக்ஸ்ல நானும் கடைசி பென்ச், ஹாஸ்டல்வேற, செமஸ்டர் தவறாம IDC, branch வாத்தியருங்க எல்லாரும் மொக்கைங்க. இருந்தும் examக்கு மொதராத்திரி மட்டுமே படிச்சி நானும் 74% வாங்கினேன். அதுபோல உங்க நண்பர்களும் இருந்திருக்கலாம். ஆனால் எனக்கு எல்லாம்(!) கத்துக் கொடுத்த நண்பன் பரம்பை.குமாரும் 70%, என்னப்போல அவன்கிட்ட கத்துகிட்ட ரெக்ஸ், முத்து, மகேஷ் எல்லாருமே First Class. (நாங்க நாலு பெருமே CPTக்கு வந்தபோது 10thல அதிக மார்க் எடுத்த, ஒண்ணும் தெரியாத ரொம்ப நல்ல பசங்க, குமார்தான் எங்களுக்கு சிகரெட்டு, சாராயம், பலான படம் எல்லாம் சொல்லிகொடுத்தான்; அவனும் என்னவிட 10thல அதிக மார்க்தான், ஆனா எல்லாம் தெரிஞ்சவனும்கூட).

    IQ அதிகமானவங்க ஆராய்சியாளராகவோ, கிரிமினலாகவோ ஆவங்கனு சொல்வாங்க. அது மாதிரி ஒருவர் CPTல மத்த எல்லாருக்கும் வாழ்க்கை பாடத்த சொல்லிதருவங்க போல. CPT எனக்கு சொல்லி தந்தது அதிகம் (நன்மை, தீமை இரண்டையுமே, குருதிதானம், சிறுமை கண்டு பொங்குவது முதல் தெரிந்து கொள்வதற்காவல்லாமல் பாஸ் பண்ணுவதற்கு மட்டுமே படிப்பது வரை).

    பி.கு: 91ல ஆலந்தூர் ராஜா, இப்ப ஆலந்தூர் ராம்கி, victoriyaனா நீங்க எந்த batchனு தெரிஞ்சிக்கலாமா? இன்றுதான் உங்கள் வலைப்பக்கதிற்கு எதேச்சையாக வந்தேன்; அருமையாக இருக்கிறது.

    -பா.இரா

  • {/சிலபசுக்குத் தகுந்தவாறு அருமையாக கோத்து, தொகுத்துத் தருபவர்//
    கோத்துத் தந்ததே இப்படி என்றால் ஒரிஜினல் படித்திருந்தால் நான் என்ன ஆகியிருப்பேன்!
     
    டோண்டு,
    படித்தேன். அயோக்கியர்கள் அகிலமெங்கும் உண்டு போலிருக்கிறது.
    }
     
    இந்த இரண்டு பதில்களிலும் அக்மார்க் பாரா'த்தனம் இருக்கிறது.
    புது வெள்ளம் போல குதித்தோடும் நடை..இந்தந் தொடரை புத்தகமாக எழுதி வெளியிடலாம்..
     
    ஏனோ பல இடங்களில் பா.கு.வின் மு.க.சு நினைவுக்கு வருகிறது..
    ஆனால் அவரை விட அனுபவங்களில்' பட்டாசு கிளப்பியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
    🙂

    NHM ல் நீங்கள் (கூடவா !) தமிங்கிலத்தில் அடிப்பது நியாயமா என்ன? டாம்99 பழக சிரமமாக இருக்கிறது;ஆனால் பழகி விட்டால் சுகம்தான்,இல்லறம் போல!
    பழகுங்கள்..

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!