வாழ்வதென்பது…

கொஞ்சகாலமாக நான் வீட்டைவிட்டு அதிகம் வெளியே போவதில்லை. பணி நிமித்தம் மாதம் ஒருசில தினங்கள் வெளியே போனால் அதிகம். மற்றபடி வீட்டில் என் அறையை விட்டு வெளியே வருவதே இல்லை. கூட்டங்கள், விழாக்கள், சினிமா, கடற்கரை, நண்பர்கள் சந்திப்பு எதுவும் கிடையாது.

விடிந்ததும் காலைக் கடன்களுக்குப் பிறகு அறைக்கு வந்து உட்கார்ந்தால், ஒன்பது மணிக்குக் குளிப்பதற்கு எழுவேன். அதன்பின் மதியம் ஒன்றரை மணிக்கு உணவுக்கு எழுந்து செல்வேன். உண்ட பிறகு பத்து நிமிடங்கள் போனில் ஃபேஸ்புக், ட்விட்டரில் மேய்ந்துவிட்டுப் படுக்கப் போய்விடுவேன். மாலை எழுந்து முகம் கழுவிக்கொண்டு மீண்டும் அறைக்குள் வந்தால் இரவு உணவுக்கு ஒரு பத்து நிமிடங்கள். அந்தச் சமயத்தில் மட்டும் டிவி பார்ப்பேன். பெரும்பாலும் ஆதித்யா மற்றும் சிரிப்பொலி சானல்கள். சாப்பிட்டு முடித்தபிறகு மீண்டும் என் அறைக்குள் நுழைந்துவிட்டால் நள்ளிரவு ஒன்றரை இரண்டு வரை அங்கேதான்.

கடந்த டிசம்பரில் அடித்த புயல் சமயத்தில் நடைப்பயிற்சி நின்றது. இன்றுவரை மீண்டும் அதை ஆரம்பிக்க முடியவில்லை. எப்போதும் படிக்கவும் எழுதவும் என்னவாவது இருந்துகொண்டே இருக்கிறது. அதைத் தவிர வேறெதைச் செய்தாலும் நேரம் வீண் என்று தோன்றிவிடுகிறது.

தப்பித்தவறி நான் எங்காவது வெளியே கிளம்பினால் என் மனைவியும் மகளும் அதை ஒரு திருவிழாவைப் போலக் கொண்டாட ஆரம்பித்துவிடுகிறார்கள். ‘ஐ! நிஜமாவே இன்னிக்கு வெளிய போறியா? சூப்பர்ப்பா!’ என்கிறாள் மகள்.

‘நம்பாதடி. கடைசி நேரத்துல ப்ரோக்ராம் கேன்சல்னு சொல்லிடுவான் பாரு!’

எனக்கே இது வியப்பாகத்தான் இருக்கிறது. நான் இப்படி இருந்தவனல்ல. காலை கிளம்பினால் இரவு பத்து மணிக்கு முன்னால் வீடு திரும்பியதே கிடையாது. எனது நேரத்தை யார் யாரோ உண்டுகொண்டிருந்தார்கள் அப்போது. உத்தியோகம் கொஞ்சம் உண்டது. நண்பர்கள் கொஞ்சம் உண்டார்கள். சினிமா தின்றது. அரட்டை தின்றது. ஒன்றுமே இல்லாமல் வெட்டியாகப் பூங்காக்களில் படுத்துக் கிடந்துவிட்டு எழுந்து வந்ததும் உண்டு.

இன்று அதெல்லாமே பழங்கதையாகிவிட்டது. என் படிப்பறை தவிர இந்த உலகில் வேறெந்த இடமும் எனக்கு உகந்ததல்ல என்று தோன்றுகிறது. பகல் இரவு தெரியாமல், நேரம் பார்க்காமல், வெளியே நடக்கிற எதற்கும் காது கொடுக்காமல் என் இஷ்டத்துக்குப் படித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு நாளில் நாலைந்து மணி நேரங்களை ராமானுஜர் இப்போது எடுத்துக்கொள்கிறார். இன்னொரு ஐந்து மணி நேரம் வாணி ராணிக்கு. மற்ற நேரம் முழுதும் என்னுடையதாக இருக்கிறது.

ஒரு சமயத்தில் குறைந்தது மூன்று புத்தகங்களைப் படிக்க ஆரம்பிக்கிறேன். ஒவ்வொன்றிலும் கொஞ்சம் பக்கங்கள் ஒரு நாளைக்கு. படித்ததை உடனடியாகக் குறிப்பெடுத்து வைத்துவிடுகிறேன். தோன்றும்போது எழுதுகிறேன். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு நாவலுக்கான எண்ணமும் ஆவலும் எழுந்திருக்கின்றன. அதற்காகவும் தனியே நிறையப் படிக்கிறேன். நதிகளைப் பற்றி, மாந்திரிகம், பில்லி சூனியம் பற்றி, சித்தர் இலக்கியம், பச்சிலைகள் சம்மந்தமாக, வேதங்களில் கர்ம காண்டப் பகுதிகளாக.

சமயத்தில் என் அறையே ஒரு பெயரற்ற புராதன முனிவரின் குகைபோல எனக்குத் தோன்றும். சன்னல்களை அடைத்து, ஏசியை ஓடவிட்டு, ஒரு சாம்பிராணி வத்தியையும் ஏற்றி வைத்துவிட்டால் முடிந்தது.

எப்போதாவது என்னைக் காணவரும் நண்பர்கள், உறவினர்கள் நான் இப்படி வீட்டுக்குள் அடைந்துகிடப்பதைக் கண்டு வியப்படைகிறார்கள். உலகத்தை மூடிய கதவுகளுக்குள்ளும் கொண்டுவர முடியும் என்பதை யாரும் யோசிப்பதில்லை. செய்திக்கும் மற்றதுக்கும் இணையம் இருக்கிறது. விரிச்சுவல் நட்புகள் போதுமானதாக உள்ளது. ஒரு வேலைக்கும் அடுத்த வேலைக்கும் இடைப்பட்ட பொழுதில் நாலு வரி ட்விட்டரில் எதையாவது எழுதிப் போடுவதே பொழுதுபோக்காக இருக்கிறது.

இப்படியும் கொஞ்சநாள் வாழ்ந்துதான் பார்ப்போமே என்று ஆரம்பித்தது. பழகிவிட்டது.

எழுதுவதற்கும் படிப்பதற்குமாக ஒரு ஸ்டுடியோ அமைக்கவேண்டும் என்பது என் பல்லாண்டு காலக் கனவு. முற்றிலும் இன்னும் நிறைவேறவில்லை என்றாலும் ஓரளவு என் விருப்பப்படியே என் படிப்பறையை அமைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த அமைதியும் புத்தகங்களின் வாசனையும் மெல்லிய இசையும் தருகிற மனக் குவிப்பை வெளியுலகம் எனக்குத் தருவதில்லை.

இன்னும் நான் உள்வாங்கக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான புத்தகங்களும் பல்லாயிரக் கணக்கான இசைக் கோவைகளும் இங்கிருந்து என்னை எழாதே என்கின்றன. வெளியே அப்படி என்ன நிகழ்ந்துவிடுகிறது? எல்லாம் ஒருநாள் உயிரிச் செய்திகள்.

நான் எதையும் இழக்கவில்லை என்று நினைத்துக்கொள்கிறேன்.

நண்பர் ஒருவர் சுமார் ஆயிரம் புத்தகங்களை நேற்று இரண்டு பென் டிரைவ்களில் ஏற்றி அனுப்பி வைத்திருந்தார். அத்தனையும் இருபதாம் நூற்றாண்டின் முதல் முப்பது வருடங்களுக்கு முன்னர் வெளியான புராதனமான புத்தகங்கள். மருத்துவம், சமையல், சித்து, மாந்திரிகம், ஞானம், யோகம் தொடர்பான நூல்கள். எதுவுமே இன்று அச்சில் இல்லாதவை. பிடிஎஃப் வடிவத்திலேயே அரித்த பூச்சிகளின் வாசனையை நுகரவைக்கிற நூல்கள்.

என்று படித்து முடிக்கப் போகிறேன்? தெரியவில்லை. ஆனால் படித்துக்கொண்டிருக்கிற வரைக்கும் இருப்பேன் என்பது மட்டும் புரிகிறது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி