‘அழுதழுது புரண்டாலும் அவள் தான் பிள்ளை பெற வேணும்’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. ‘குற்றவாளி’ என உறுதிப்படுத்தப் பட்டவர்கள் அனைவரும் அவர்கள் செய்த குற்றத்துக்கு ஏற்ப தண்டனையை அடைந்தே தீரவேண்டும்.
குற்றவாளி தன்னளவில் குற்றமற்றவராக இருந்தாலும் நீதியின் கண்களுக்கு அவர் குற்றவாளி எனத் தெரிந்தால், அவர் குற்றவாளிதான். குற்றமற்றவர்களின் குரல் எப்போதும் நீதிமன்றத்துக்கு வெளியேதான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் நீதிமன்றத்துக்குள் இருப்பவர்களுக்கு அந்தக் குரல் கேட்பதே இல்லை.
எல்லாக் குற்றவாளியும்கூடத் தன்னைச் சமாதானம் படுத்திக்கொள்வதற்காகவே தனக்கான ஒரு நியாயத்தைக் கொண்டிருப்பர். எல்லா நல்லவர்களும்கூடத் தனக்கான ஒரு நியாயத்தைத் தனக்குள் கட்டமைத்திருப்பர்.
நீதி எப்போதும் குற்றமற்றவர்கள், குற்றவாளிகள் ஆகியோரின் பார்வையில் வழங்கப்படுவதில்லை. அது நீதியின் பார்வையில், நீதிபதியின் சொற்களில் வழங்கப்படுகிறது.
‘சூனியன்’ இதில் எந்த வகையைச் சார்ந்தவனாக இருந்தாலும் அவன் நீதியின் பார்வையிலிருந்து தப்ப முடியாது. ஆனால், அவனின் குரல் நீதிமன்றத்துக்கு வெளியே ஒலித்துக்கொண்டே இருக்கும்.
எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்கள் அத்தகைய ‘சூனியன்’களின் உட்குரலாக இந்த நாவலில் தன் எழுத்தால் ஒலித்துக்கொண்டிருக்கிறார்.