எளிய மனிதர்களுக்கும் பேராற்றல் மிக்கவர்களுக்கும் ஒரே மனநிலைதான் இருக்கிறது. ஆனால், அதில் ஒரேயொரு வேறுபாடு உள்ளது. எளியவர்கள் தம்மை யாரும் பொருட்படுத்தவில்லையே என்பதைத் தன் மனத்துக்குக் கூறிக்கொண்டே இருப்பர். பேராற்றல் மிக்கவர்கள் அதனைப் பல வகையில் மக்களுக்கு உணர்த்திக்கொண்டே இருப்பர்.
‘சூனியன்’ எளியன். ஆனால், அவனுக்குள் ஓர் வலியன் உறைந்திருக்கிறான். அந்த வலியன்தான் இப்படிப் புலம்பித் தவிக்கிறான். உண்மையில், ஒவ்வொருவருக்குள்ளும் ஆழ்மனத்தில் ஒரு ‘சூனியன்’ இருக்கிறான். அதனால்தான் இந்தச் ‘சூனியன்’ பேசுவதை நாம் பொருட்படுத்திக் கேட்கிறோம்.
நமக்குள் இருக்கும் ‘சூனியன்’ இமைகள் திறந்து, இந்தச் ‘சூனியன்’ கூறும் ஒவ்வொரு சொல்லையும் செவிமடுக்கிறான். அதனால்தான் இந்தச் ‘சூனியன்’ நம் மனத்துக்கு நெருக்கமானவனாக மாறிக்கொண்டிருக்கிறான்.
எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்கள் ‘சூனியன்’ என்ற கதைமாந்தரை ஒரு குறியீடாகவே இந்த நாவலில் பயன்படுத்தியிருக்கிறார் என்று நான் கருதுகிறேன். ‘சூனியன்’ என்பவன் எளியோரின் தன்னகங்காரம்.