மடினி

இருபதாவது நாள்

கடந்த ஆறேழு ஆண்டுகளில் முதல் முறையாகத் தொடர்ச்சியாக பதினைந்து நாள்களுக்குமேல் என் மடினியை இழந்து நான் மட்டும் தனியாக இருக்கும்படி நேர்ந்தது. என்னவோ எல்சிடி பிரச்னை; கண்ணைப்பார் சிரி என்று கண்ணடித்துக்கொண்டே இருந்தது. சரி, சளி ஜலதோஷம் மாதிரி என்னவோ வந்திருக்கும் என்று சர்வீசுக்குக் கொடுத்தேன்.

பிரகஸ்பதி, நாளை காலை ஆதிபராசக்தி மீது ஆணையாகக் கொண்டுவந்து கொடுத்துவிடுகிறேன் சார் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டுத்தான் எடுத்துச் சென்றான். நாளை காலை கேட்டபோதும் அதையே சொன்னான். நாளை காலை. அன்று கேட்டபோதும் அடுத்த நாளை காலை. இது வேலைக்கு உதவாது என்று வழக்கை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்று, எங்கள் சிஸ்டம் அட்மின் தங்கவேலுவிடம் விளக்கிச் சொல்லி, எப்படியாவது விரைவில் என் மடினி வர ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.

தங்கவேலுவாகப்பட்டவர் மிகவும் நல்லவர். தினசரி நான் படும் அவஸ்தைகள் பொறுக்கமாட்டாமல், ‘வெயிட் பண்ணுங்க சார். எப்படியும் ஒரு வாரம் ஆயிடும் என்றார். அதாவது அன்ற நான்காவது நாளைக்காலை தொடங்கி ஒருவாரம். ஆக மொத்தம் 11 நாள்.

செத்தேன் என்று முடிவு செய்தேன். அவசர அவசரமாக என் வீட்டில் இருக்கும் சார்ல்ஸ் பேபேஜ் காலத்து டப்பாவைத் தட்டித் துடைத்து, பூஜை செய்து, தாஜா செய்து ஆன் செய்து, என்னெச்செம் ரைட்டர் போட்டு (இதுநாள் வரை அந்த டப்பாவைப் படம் பார்க்க மட்டுமே பயன்படுத்தி வந்தேன்.) எழுதிப் பார்த்தேன். புராதனமான பெண்டியம் டப்பா அது. சுமாராக ஒத்துழைத்தது. ஆனால் கீ போர்ட்தான் வசப்படவில்லை. கம்ப்யூட்டர் பொட்டியில் எழுதியே பல்லாண்டு காலம் ஆகிவிட்டது. எல்லோரும் டைப் அடுத்துக்கொண்டிருந்த காலத்தில் நான் டைப் உடைத்துக்கொண்டிருந்தேன். பிறகு லேப்டாப் பழகியதும் என் விரல்கள் பூவாயின. தடவினால் போதும். தானே எழுதிக்கொண்டுவிடும்.

அந்த சொகுசில் ஆறேழு வருடங்கள் ஓடிவிட்டதால், திரும்பவும் டைப் உடைக்க உட்கார்ந்தது சரிவரவில்லை. என் வழக்கமான அலுவலகப்பணிகள், எழுத்து வேலைகள், தமிழ் பேப்பர் வேலைகள் அனைத்தும் சொதப்பின. எழுதிக்கொண்டிருக்கும் புத்தகம் முறைத்தது. சொதப்பிவிடுவேன் என்று பயமுறுத்தியது. திரும்பத் திரும்பத் தங்கவேலுவைப் படுத்த ஆரம்பித்தேன். அவர் அப்பியர் ஆஃப்லைனில் வாழத்தொடங்கினார்.

பதினொரு நாள் கடந்த மறுநாள் எல்சிடியாகப்பட்டது எங்கோ பரதேசத்திலிருந்துதான் வரவேண்டும் என்று சொல்லப்பட்டது. கிட்டத்தட்டப் பைத்தியமாகிவிடுவேன் போலிருந்தது. இதனிடையே இன்னொரு காமெடி. தமிழ் பேப்பர் கட்டுரைகள், தொடர்கள், எந்தக் கிழமையில் யாருடையது போன்ற பட்டியல் எல்லாம் என் மடினியில் உள்ளன. ஞாபகத்தில் ஏதுமில்லை. எனவே ஒன்றிரண்டு தினங்கள் அந்தப் பணியிலும் அருமையாக சொதப்பினேன். தினமும் யாராவது ஓர் எழுத்தாளர் என்னுடையது ஏன் இன்று வரவில்லை என்று கேட்பார். நாளை வரும் என்று சொல்லுவேன். அவர் அனுப்பிய கட்டுரை மடினியில் இருக்கும். மெயில் சர்வரை  ‘ஒரு குறிப்பிட்ட நன்னாளு’க்குப் பிறகு நான் தினமும் துடைத்து வைப்பதை வழக்கமாக்கிக் கொண்டவன்.

எனவே எல்லாம் கெட்டது. என் வாழ்வின் அதி உன்னத சொதப்பல் தினங்கள் இவை. வங்கி விவகாரங்கள், சொந்த விவகாரங்கள், அலுவலக விவகாரங்கள், சினிமா சமாசாரங்கள் எல்லாம் அந்த ஒரு சிறு பெட்டிக்குள்தான் இருந்தன. அது முடங்கிவிட்டதில் முழு வாழ்வுமே இருட்டாகிவிட்டாற்போல் ஆகிவிட்டது.

ஒரு நள்ளிரவு வீறுகொண்டு எழுந்து மறுநாளே ஒரு மாற்று லேப்டாப் சொந்தத்தில் வாங்கிவிடுவது என்று முடிவு செய்தேன். அது இன்னொரு காமடியானது.

இன்னொரு லேப்டாப்பைப் பரீட்சார்த்த முயற்சிகளுக்குப் பயன்படுத்தலாம் என்று உள்ளுக்குள் ஒரு குரல் கேட்க, ஆப்பிள் மேக் ப்ரோ வாங்கிவிட ஆசைப்பட்டேன். இது தொடர்பாகப் பல நண்பர்களிடம் கருத்துக் கேட்டு, விசாரித்து, கிட்டத்தட்ட ஸ்டீவ் ஜாப்ஸைவிட ஆப்பிளை நன்கறிந்தவனாகிவிட்டேன். ஒரு நண்பர் அடுத்த மாதம் வாங்கிவந்துவிடுகிறேன் என்றும் வாக்குறுதி அளித்துவிட்டார்.

இந்தச் செய்தி அலுவலகத்துக்குத் தெரியவர, ஆப்பிள் பழத்தை வைத்துக்கொண்டு அன்றாடப் பசி போக்க முடியாது என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். நாகராஜனும் பத்ரியும் என்னை ஜாதிப்ரஷ்டமே செய்துவிடுவார்கள் போலிருந்தது. அச்சுப்புத்தக வேலைக்குத் தேவையான சில சௌகரியங்கள் ஆப்பிளில் இதுவரை இல்லை (தமிழுக்கு). அதனால் அதை வாங்காதே என்றார்கள். என் கனவைக் கொன்று தமிழ் வளர்க்க நினைப்பது பற்றிப் பெரிய வருத்தமில்லை. சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அடுத்தபடியாக குட்டியாக ஒரு நெட்புக் வாங்கலாம், செலவும் குறைச்சல் என்று தோன்றியது. இன்னொரு நண்பர் ஒன்றுக்கு இரண்டாக நெட்புக்கை வைத்துக்கொண்டு வித்தை காட்டிக்கொண்டிருப்பதை தினசரி ஆன்லைனில் பார்த்துக்கொண்டிருக்கிறபடியால், அவரிடம் கருத்துக் கேட்டேன்.

பொறுமையாக அதன் சாதக பாதகங்களை விளக்கி, தாராளமாக வாங்கலாம் என்று சொன்னார். உலகிலுள்ள அனைத்து நெட்புக் மாடல்களையும் பார்த்து ஒன்றி்ரண்டைத் தேர்வு செய்தும் வைத்துவிட்ட நிலையில், ‘பத்து பைசா பிரயோஜனமில்லை, வாங்காதே’ என்று இன்னொரு தொழில்நுட்ப நண்பர் சொன்னார். ‘நெட்புக் ஓகேதான். உங்களுக்கு சரிப்படாது’ என்று குறிபார்த்துச் சுட்டார் வேறொரு நண்பர். மீண்டும் கன்பூசன். சரி, லேப்டாப்பே வாங்கி உபுண்டு போட்டுவிடலாம் என்று நினைத்தேன். ஓர் உபுண்டு நண்பரும் எனக்குண்டு. அவர் டெல்லியில் இருந்தார். நாளை காலை ஓடி வந்துவிடுகிறேன். நானே செட்டப் செய்து தருகிறேன் என்று வாக்களித்தார். நீண்டநாளாக மைக்ரோசாஃப்டிலிருந்து மாறிவிடவேண்டும் என்றும் உள்ளுக்குள் ஒரு நப்பாசை இருந்து வந்தது. இந்தத் தருணத்தை அதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாமே? சரிப்பட்டு வந்தால் சரி. இல்லையா? இருக்கவே இருக்கிறது, வந்துவிடப்போகிற என் ஒரிஜினல் பழைய லேப்டாப்.

நான் பேப்பர் பேனா கொண்டு எழுதிக்கொண்டிருந்த காலத்தில் எல்லாம் சரஸ்வதி பூஜை வீட்டில் அமர்க்களப்படும். பிறகு அந்த இடத்தை ஆக்கிரமித்த லேப்டாப், சற்றும் வஞ்சனை வைக்காமல் மஞ்சள் குங்குமம் பூசி தெய்வீகம் ஏந்தும். இந்த வருடம் சரஸ்வதி பூஜை நாளில் நான் கண்ணீர் விட்டுக் கதறாத குறை. முதல் முறையாக லேப்டாப் இல்லாமல் பூஜை. தேவி சரஸ்வதி என்னை மன்னிக்கவே போவதில்லை.

துக்கத்தை அடக்கிக்கொண்டுதான் பொரி கடலை சாப்பிட்டேன்.

நேற்று மாலை ஐந்து மணிக்குள் கண்டிப்பாக என் லேப்டாப் வந்துவிடும் என்று தங்கவேலு சொல்லியிருந்தார். அப்படி இப்படி இருபது நாளாகிவிட்டபடியால், நிச்சயமாக வந்துவிடும் என்று நானும் நம்பினேன்.

விதி வெகு வலுவாக இருக்கிறது போலுள்ளது. மாலை 5 மணிக்குப் பிறகும் அது வந்துசேரவில்லை.  இனி பொறுப்பதில்லை தம்பீ எரிதழல் கொண்டுவா என்று எனக்குள்ளிருந்து எவனோ ஒருத்தன் குரல் கொடுத்தான். கண்ணைமூடி பத்து நிமிடம் யோசித்துவிட்டு விறுவிறுவென புறப்பட்டுவிட்டேன்.

என்றைக்கானாலும் இப்பிரச்னை திரும்ப வரலாம். எதற்கும் கைவசம் இன்னொரு மடினி இருப்பது நல்லது என்றே தோன்றியது. வாங்கி அதற்குரிய சாமக்கிரியைகள் செய்து இதனை எழுதிக்கொண்டிருக்கும்போது மணி இரவு அல்லது அதிகாலை 1.58.

என்ன வாங்கினேன், ஆப்பிளா, நோட்பேடா, நெட்புக்கா, என்ன பிராண்ட், மைக்ரோசாஃப்ட் போட்டேனா, உபுண்டு போட்டேனா, என்ன விலை என்பதை மட்டும் சொல்லுவதற்கில்லை. அமெரிக்காவில் இருந்து கோயமுத்தூர் வரை விரிந்து பரவியுள்ள என் நண்பர் சமூகத்தை இதன் பொருட்டுக் கடந்த பத்து நாளாக நான் படுத்திய பாடு கொஞ்சநஞ்சமல்ல. நான் என்ன வாங்கியிருக்கிறேன் என்று தெரிந்தால் அவர்கள் அடுத்த வண்டியேறி அடிக்கவே வந்துவிடக்கூடும்.

ஆகவே இத்துடன் முடித்.

Share

14 Comments

 • ஒரு பேப்பரும் பேனாவும் வைத்து எழுதிக்கொண்டிருந்தவர்கள்தான் எத்தனை புத்திசாலிகள்!

 • ஒரு லேப்டாப் வாங்க ஒருத்தரை இந்த அளவுக்கு அலைய புலம்ப விட்டுட்டாங்களே! என்ன கொடுமை சார்! 🙂

  என் பங்குக்குக்கு நானும் கொஞ்சம் குழப்பலாம் என்று இருந்தேன்..கடைசியா நீங்க வாங்கிட்டேன்னு வேற சொல்லிட்டீங்க ..அதனால அப்பீட்டு ஆகிக்குறேன்.

 • அட ராகவா! என்று ஆண்டவனையும் சேர்ந்து கூப்பிட தோன்றியது. ஆகவே இத்துடன் முடித்………..ன்.

 • //முடித்.//

  கடைசி வரியை முடிப்பதற்குள் புது லேப்டாப்பும் சதி செய்து விட்டது போலிருக்கிறதே? 🙂

  தொழில்நுட்பம்தான் நம்மை ஆள்கிறதோ, என்னவோ.

 • calculator vanthathum vaippadu maranthuponathu.typewriter,computer varugai,ezuthuvathu ninrathu.pc repair aanaal kashtam padu kashtam.kapi illamal soru thanni illaamal irukkalaam. intha imsai illaamal imsai.kittaththatta spouse mathiri…hm…mmmm

 • “துக்கத்தை அடக்கிக்கொண்டுதான் பொரி கடலை சாப்பிட்டேன்”

  காரியத்தில் கண்

 • நான் மேஜைக்கணினி சரியாக இருக்கும்போதே மடினியும் வாங்கினேன். அதன் காரணம், ஊர்களுக்கு போனாலும் எனது மொழிபெயர்ப்பு வேலைகள் நிற்க வேண்டாமே என்பதாலேயே. கூடவே ரிலையன்ஸ் டேட்டா கார்ட் வேறு.

  இப்போது நிலைமை என்னவென்றால் நான் மடினி மற்றும் மேஜை கணினிகளை மாற்றி மாற்றி பாவிக்கிறேன். கணினியை மூடுவதற்கு முன்னால் அதில் புதிதாக உருவாக்கிய/இற்றைப்படுத்திய கோப்புகளை எனக்கே மின்னஞ்சல் செய்து கொள்வேன். மற்றொரு கணினியை திறந்ததுமே அக்கோப்புகளை அதனிலும் தரவிறக்கிக் கொண்டுதான், வேறு வேலையே ஆரம்பிப்பேன்.

  ஆக என்னிடம் இருக்கும் இரு கணினிகளுமே ஒன்றுக்கு இன்னொன்று சப்போர்ட். நீங்களும் இதை உங்கள் இரு மடினிகளிலும் பின்பற்றலாமே.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 • உங்கள் தேவைக்கு ஏற்ப ஒரு 100 GB அல்லது 250 GB அல்லது 512 GB external hard disk வாங்கி laptop-இல் இருந்து அவ்வப்போது backup எடுத்துக் கொள்ளலாம். Data Synchup software – உடன் External HD கிடைக்கிறது. உங்கள் laptop பழுதானாலும் வேறு system – உடன் இணைத்து Data recovery செய்து விடலாம்.

 • சேவைத் துறையில் உள்ளவர்கள், நாளை தருகிறேன் என்று தரும் வாக்குறுதியை மட்டும் நம்பவே கூடாது என்பதை எனக்கு மூவர்
  அனுபவபூர்வமாகக் கற்பித்திருக்கிறார்கள் அண்மையில்.
  முதலாவது புண்ணியவான், முகப்பேரிலுள்ள ஒரு தையற்கலைஞர். பிள்ளைகளுக்குப் புதிய சீருடை தைக்கக் கொடுத்து நான் பட்ட அவஸ்தை, கேட்டால் கல்லும் கரையும். என்னென்னவோ செய்து பார்த்தும், பள்ளி திறந்த நாளன்று பையன் சீருடை இல்லாமல்தான் போக முடிந்தது. நம்பினால் நம்புங்கள், பன்னிரண்டு தடவை தையல் கடைக்கு அலைந்து சாதித்தேன்.
  அடுத்த மகானுபவர், ஒரு தச்சர். நுளம்புத் தொல்லையில் இருந்து,
  ( அதுதாங்க, நம்ம தேசியப் பறவை கொசு. முன்பு இலங்கை வானொலியில் கொசுவை, நுளம்பு என்றுதான் சொல்வார்கள்.)
  குடும்பத்தாரைக் காப்பாற்ற, ஜன்னல்களுக்கு வலைவீச, நானில்லாத நேரத்தில், என் மனைவி, அவர் தம்பி உதவியோடு ஒரு டுபாக்கூர் தச்சருக்கு அச்சாரம் கொடுத்து, என் ஒரு மாத நிம்மதி போனது.
  ஒரு சுபயோக சுபதினத்தில் பெரும் மனது வைத்து வந்து ஜன்னலைச் சுற்றி முதலில் அடித்த சட்டத்தில், வலையைப் பொருத்தமின்றிப் பொருத்திப் போயே போய்விட்டார்.
  ஆகக் கடைசி அனுபவம், ஒரு மிகப் பிரபலமான கேஸ் அடுப்பு நிறுவனத்திடம் கிடைத்தது. சில பல தொலைபேசி அழைப்புகளுக்குப் பிறகு இம்மாதம் நாலாம் தேதி அடுப்பு சீராக எரியவில்லை என்ற புகாரைப் பதிவு செயது கொண்டு வசதியாக மறந்து விட்டார்கள்.
  தொலைபேசியை எடுத்தால்தானே மவனே பேசுவாய் ? என்று அதை எடுப்பதே இல்லை. வேறு வழியின்றி வாங்கிய கடை மூலம் நச்சரித்ததில், ஒருவர் அழைத்தார். இன்றே வருவேன் ! இன்னே முடிப்பேன் ! என்று உறுதி தந்தார். ஊஹூம். பெப்பேதான்.
  பயனீட்டாளர் நீதிமன்றத்துக்குப் போகப் போவதாக விடுத்த பிரம்மாஸ்திரமும் பலனின்றிப் போனது. இன்று வருவதாக நேற்று உறுதி கூறியவர் உண்மையிலேயே வந்து விட்டார். கிள்ளிப் பார்த்தவனை அவர் என்ன நினைத்தாரோ ? வள்ளிசாக மூன்று வாரங்கள் ஓடி விட்ட நிலையில் என் வீட்டு அடுப்பு எரிகிறது. என் மனைவி முகம் குளிர்ந்தது. இதனால் அறியப்படும் நீதி யாதெனில்,
  சேவைத் துறைப் பணியாளர்கள் சொல்வதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எப்படியோ, புது மடிக்கணினி வாங்கியதற்கு,
  பாராட்டுக்கள் பாரா சார் !

 • ஐயா மந்திர எழுத்து மன்னரே, கயித்தால தான் கட்டி போடுவாங்கன்னு கேள்வி பட்டிருக்கிறேன். நீங்க எழுத்தால கட்டி போடுறீங்களே எப்படி ஐயா ? சமீபத்தில் தான் உங்க மாயவலை முழு புத்தகத்தையும் படித்தேன் !! எப்படி ஐயா !! பேனாவில் ஏதும் வசியம் வைத்திருக்கிறீர்களா ?

 • நமது மடிகணணியை சர்வீஸ் செய்யக்கொடுக்கும்போது நமக்கு உபயோகிக்க ஒரு மடி கணணியை பேக அப்புடன் தரும் சில நல்ல கம்பெனிகளை எனக்குத் தெரியும், அடுத்த முறை ஏதாவது நேர்ந்தால்(வேண்டாமென வேண்டிக்கொள்கிறேன்) தொடர்பு கொள்ளவும்
  ரமணன்

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி