பொலிக! பொலிக! 108

எல்லாம் சரியாக உள்ளதாகவே பட்டது. சீடர்கள் அனைவரும் வந்து சேர்ந்துவிட்டிருந்தார்கள். அரங்க நகர்வாசிகள் அத்தனை பேரும் சேரன் மடத்தின் வெளியே குவிந்திருந்தார்கள். யாரும் விரும்பாத ஒரு சம்பவம் நடந்துவிடத்தான் போகிறதென்ற, அறிந்த துயரத்தின் சுவடுகள் அவர்கள் முகமெங்கும் நிறைந்திருந்தன.

‘சுவாமி, நீங்கள் இல்லாமல் நாங்கள் எப்படி உயிருடன் இருப்போம்? இருத்தல் என்பதே சுமையாகிவிடாதா?’ கண்ணீரோடு கேட்ட சீடர்களைக் கருணையுடன் பார்த்தார் ராமானுஜர்.

‘அப்படி எண்ணக்கூடாது. பிறவி என்பது கர்மத்தினால் வருவது. கணக்குத் தீரும்போது யாரானாலும் விடைபெற்றே ஆக வேண்டும். ஆனால் ஒன்று. கிடைத்த பிறவியை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோமா? அது முக்கியம். நாம் கட்டிக்காக்க நினைக்கும் தருமம் தழைக்கப் பணியாற்றியிருக்கிறோமா என்பது அதனினும் முக்கியம். இருப்பது பற்றியும் போவது பற்றியும் கவலைகொள்வது ஒரு வைணவனின் லட்சணமல்ல. செயல் ஒன்றே நமது சீலம்.’ என்றவர், பராசர பட்டரை அருகே அழைத்தார்.

‘பட்டரே, ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். நான் சிலகாலம் வசித்த ஹொய்சள தேசத்தில் மாதவாசாரியார் என்றொரு அபாரமான ஞானஸ்தர் இருக்கிறார். அங்கே அவரை வேதாந்தி என்று குறிப்பிடுவார்கள். யாரும் இதுவரை வாதில் வென்றிராத பெரும் பண்டிதர்…’

‘சொல்லுங்கள் சுவாமி. அடியேன் என்ன செய்ய வேண்டும்?’

‘அரங்கன் சாட்சியாக வைணவ தரிசன நிர்வாகப் பொறுப்பை உம்மிடம் கொடுத்திருக்கிறேன். ஞானஸ்தரான அந்த வேதாந்தியை நமது சித்தாந்தத்துக்குத் திருத்திப் பணிகொள்ளும்.’

‘அப்படியே!’ என்றார் பட்டர். ராமானுஜருக்குப் பின் சிறிது காலம் எம்பாரின் வழிகாட்டலில் மெருகேறி, பொறுப்புக்கு வந்து, தரிசன நிர்வாகப் பணிகளை கவனித்து வந்த பட்டர், தனக்குப் பின் அப்பொறுப்பை ஏற்கவிருக்கும் ‘நஞ்சீயர்’ அந்த வேதாந்திதான் என்பதை அப்போது அறியமாட்டார்.

‘திருக்கோயில் பணியாளர்களை வரச் சொல்லுங்கள்’ என்றார் ராமானுஜர். அவர் உருவாக்கிய பணிக் கொத்து ஊழியர்கள்.

தமது முப்பத்தி ஒன்றாவது வயதில் திருவரங்கத்துக்கு வந்து கைங்கர்யப் பொறுப்பை ஏற்றபோது அவர் உருவாக்கிய சீர்திருத்தங்களின் மகத்தான பெரும் விளைவு அவர்கள். கோயில் கைங்கர்யங்களில் அனைத்து சாதியினருக்கும் அவரளித்த முக்கியத்துவம் தேசத்துக்கே முன்னுதாரணமாயிற்று.

‘வந்துவிட்டார்களா?’

‘ஆம் சுவாமி. இதோ!’ என்று கோயில் ஊழியர்கள் முன்னால் வந்து கரம் குவித்து நின்றார்கள். தன்னலமில்லாமல், பூசல் இல்லாமல், அரங்கன் பணி ஆற்றவேண்டியதன் முக்கியத்துவத்தைச் சில சொற்களில் அவர்களிடம் எடுத்துச் சொன்னார். ‘நீங்கள் வருந்தும்படி நான் எப்போதாவது நடந்துகொண்டிருந்தால் அதைப் பொறுக்க வேண்டும்!’

ஐயோ என்று அவர்கள் பதறித் தடுத்தார்கள். இன்னொருவர் வாழ முடியுமா இப்படியொரு வாழ்க்கை? ராஜேந்திர சோழன் காலத்தில் ராமானுஜர் பிறந்தார். பிறகு ராஜாதிராஜ சோழன் பட்டத்துக்கு வந்தான். இரண்டாம் ராஜேந்திரனும் வீர ராஜேந்திரனும் அதிராஜேந்திரனும் அடுத்தடுத்து வந்தார்கள். முதலாம் குலோத்துங்கன் வந்தான். விக்கிரம சோழன் வந்தான். அடுத்தவன் வந்தான், அவனும் போனான்…

எத்தனை மன்னர்கள்! எத்தனை ஆட்சிகள், நல்லதும் கெட்டதுமாக எத்தனை எத்தனை சம்பவங்கள்! எதிலும் சமநிலை குலையாமல், எத்தருணத்திலும் விட்டுக்கொடுக்காமல், எவர்க்கும் அஞ்சாமல், தன்னெஞ்சு அறிந்ததைத் தயங்காமல் எடுத்துச் சொல்லி, எல்லாக் காலங்களுக்கும் சாட்சியாக இருந்துவிட்டுப் படுத்திருக்கும் பெரியவர்.

‘சுவாமி, உங்கள் சொற்கள் எங்களிடம் இருக்கின்றன. என்றென்றும் உங்கள் ஆசியும் இருக்கப் போகிறது. கோயில் பணிகள் குறைவற நடக்கும்!’ என்று அவர்கள் நம்பிக்கை சொன்னார்கள்.

‘சரி. அவ்வளவுதானே?’ என்பதுபோல் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தார் ராமானுஜர். உதட்டில் சிறு முறுவலொன்று பிறந்தது. அந்தப் புன்னகையே அவரது ஆசியாக இருந்தது. மெல்லக் கண்களை மூடிக்கொண்டார். நெஞ்சில் த்வயம் நிறைந்தது.

அது உடையவர் பிறந்த அதே பிங்கல வருடம். மாசி மாதம். வளர்பிறை தசமி திதி. அதே திருவாதிரை நட்சத்திரமும்கூட.

சீடர்கள் ஒருபுறம் தைத்ரீய உபநிடதத்தில் இருந்து பிருகுவல்லி, ஆனந்தவல்லி என்ற பகுதிகளை ஓதினார்கள். திருவாய்மொழி சேவித்தார்கள். கட்டுக்கடங்காத கண்ணீரோடு காரியங்கள் நடைபெறத் தொடங்கின. ஞான புத்திரனாக அவர் ஸ்வீகரித்திருந்த திருக்குருகைப் பிரான் பிள்ளான் அந்திமக் கிரியைகளைச் செய்தார்.

ராமானுஜர் ஒரு தத்துவத்தை நெஞ்சில் சுமந்தார். எளிய, பாமர மக்களுக்கான மோட்ச உபாயம். மூச்சிருந்த நூற்றி இருபதாவது வயது வரை தான் நம்பிய விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தையும் சரணாகதி என்கிற பெருந்தத்துவத்தையும் மட்டுமே போதித்து வந்தார். பேதமற்ற ஒரே பெரும் சமூகமென்ற வண்ணமயமான கனவைத் தரையில் இறக்கி வைத்து அதை நெருங்கப் பாதை அமைத்துக் கொடுத்தார்.

நிகரற்ற செயல்வீரராகத் திகழ்ந்து, பரவி, அடங்கிய தனது புத்திரரை அரங்கன் தனது திருக்கோயிலுக்குள்ளேயே ஐந்தாம் சுற்றில் பள்ளிப்படுத்தத் திருவுள்ளம் கொண்டான். அது அரங்கனின் வசந்த மண்டபமாக இருந்த இடம். அங்கே ராமானுஜரின் திருவுடலைப் பள்ளிப்படுத்தினார்கள். ‘தானுகந்த திருமேனியை’ச் சுமந்து சென்று ஶ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்துவிட்டு மகிழ்ச்சியுடன் திரும்பியிருந்த கந்தாடையாண்டான், இப்போது மடை திறந்த கண்ணீர் வெள்ளத்துடன் அங்கே உடையவரின் இன்னொரு திருமேனிச் சிலையைப் பிரதிஷ்டை செய்ய, அது ‘தானான திருமேனி’ ஆயிற்று.

தனது சூட்சுமத்தில் என்றும் உறங்காத எம்பெருமானாரின் ஞானச்சுடர் விழிகள் அவரது ஸ்தூலத்தில் இருந்து எழுந்து வந்து பொருந்தி ஒளிர்ந்தன. அதே முகம். அதே தோள்கள். அதே பத்மாசனம். அதே தவத்திருக்கோலம்.

உடையவரின் சீடர்கள் அனைவரும் சன்னிதியில் கரம் கூப்பிக் கண்ணீரோடு நின்றிருந்தார்கள். அது சொற்கள் கைவிட்ட பெருந்துயரத்தின் தருணம். அத்தனை பேரின் மானசீகத்திலும் அவரது குரல் ஓங்கி ஒலித்தது.

‘அறியவொண்ணாப் பெருந்தத்துவமான பிரம்மத்தின் வெளிப்பாடுகள் இரண்டு. ஒன்று ஜீவாத்மா. இன்னொன்று பரமாத்மா. நீ பரமாத்மாவைச் சரணடைந்துவிட்டால் உன் பொறுப்பு அவனுடையது. மோட்சத்துக்கென்று தனியே மெனக்கெட அவசியமில்லை. அவன் பார்த்துக்கொள்வான்.’

வைணவம் அநாதியானது. ராமானுஜர் அத்தத்துவத்துக்கு ஒரு வண்ணமும் வடிவமும் அளித்தார். வையமெங்கும் அதைப் பரப்பும் பணியில் வாழ்நாள் முழுதும் ஈடுபட்டார். மனித குலத்தின்மீதான மாசற்ற நேசம் ஒன்றே அவரை இதைச் செய்யவைத்தது. தாம் பிறந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு இன்றும் அவர் வாழ்வது நிகரற்ற அப்பெரும்பணியால்தான்.

ராமானுஜ சித்தாந்தம் இன்னொரு ஆயிரமாண்டுகள் தாண்டியும் வாழும்.

-நிறைந்தது-

[ ராமானுஜரின் 1000வது திருநட்சத்திரமான நாளைய தினம், முடிவுரையாகச் சில சொற்கள்.]
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி