ஆத்தா உன் கோயிலிலே!

திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டியில் ஒரு கோடி ரூபாய் செலவில் தமிழுக்கு ஒரு கோயில் கட்டுகிறார்கள் என்று இன்றைக்கு ஒரு செய்தி படித்தேன். சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் சென்னை வெயிலில் இருபது கிலோமீட்டர் மூச்சிறைக்க ஓடவிட்டால் என்னவென்று தோன்றியது.

கன்னித்தமிழுக்குக் கல்யாணம் செய்து வைத்து அன்னைத் தமிழாக்கி, அவள் பல  பிள்ளை குட்டிகள் பெற்றுப் போட்டு, கிட்டத்தட்ட ரிடையர் ஆகி வீட்டில் தொலைக்காட்சி சீரியல்களுக்குள் முடங்கிக் கிடக்கிறாள். இப்போது எதற்கு இத்தனை பெரிய செலவு?

எனக்குத் தமிழ் பிடிக்கும் என்று சொல்வதே அபத்தம். நமக்குத் தமிழ் தெரியும். அவ்வளவுதான். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் தெரிந்திருக்கலாம். அவர்கள் யாமறிந்த மொழிகளிலே என்று விருத்தம் பாடலாம். மற்றபடி சிலை வடித்து, கோயில் கட்டி, ஆறு கால பூஜை செய்து பொங்கல் வைப்பது என்பது அபத்தத்தின் உச்சம். அறியாமையின் விளைவு.

மொழி விஷயத்தில் இந்தியாவுக்கு வெளியே யாராவது இத்தனை உணர்ச்சிவசப்படுகிறார்களா என்று தெரியவில்லை. ஈழத் தமிழர்களின் மொழிப்பற்றிலாவது ஓர் அர்த்தம் இருக்கிறது. அவர்கள் உபயோகிக்கும் தமிழ், நம்முடையதைக் காட்டிலும் சுத்தமாக இருக்கிறது. நம்மால் நாலு வரி சேர்ந்தாற்போல் தவறில்லாமல் எழுத, பேசக்கூட வராத பாவத்துக்கா கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்கிறார்கள்?

ஒரு தகவல் தொடர்புக் கருவி என்கிற அளவில் மொழிக்குக் கொடுக்கவேண்டிய நியாயமான கவனத்தைக் கொடுத்துவிட்டுப் போவதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். சரி, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துச் சரக்கா? ஒழியட்டும், கனிமொழிக்கு அமைச்சர் அந்தஸ்து, தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து. போதாது? முடிந்தால் பேச்சிலும் எழுத்திலும் மொழியைச் சிதைக்காமல் அழகாகக் கையாண்டு அதன் ஆயுசை இன்னும் கொஞ்சம் ஆண்டுகள் அதிகரிக்க நம்மாலான உதவியைச் செய்யலாம்.

எனக்கென்னவோ இந்த தமிழ்க் கோயிலுக்கும் குஷ்பு கோயிலுக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. வெறும் கூத்து.

இந்தத் தமிழ்க் கோயில் சார்பில் பா-புனைதல், இலக்கணக் கோட்பாடுகள் எல்லாம் கற்றுத்தரப்போகிறார்களாம். கொஞ்சநஞ்சம் தமிழ் படிக்க நினைக்கும் தலைமுறையையும் தலைதெறித்து ஓடச் செய்ய இதனைக் காட்டிலும் வேறு சிறந்த உபாயம் இருக்க முடியுமென்று தோன்றவில்லை.

நாட்டில் இருக்கிற கவிஞர்கள் படுத்துகிற பாடு போதாதா? இலக்கணம் படித்து யாப்பில் ஆப்படிக்க ஒரு புதுத் தலைமுறை வேண்டுமென்று யார் அழுதது?

இதுதான் எனக்குப் பெரிய தீவிரவாதமாகத் தோன்றுகிறது. யாராவது இந்த அபத்த முயற்சியைத் தடுத்து நிறுத்த முன்வருவார்களா?

Share

41 comments

  • //மொழி விஷயத்தில் இந்தியாவுக்கு வெளியே யாராவது இத்தனை உணர்ச்சிவசப்படுகிறார்களா என்று தெரியவில்லை.//

    ரஷ்யர்களிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன்

    // தமிழ்க் கோயிலுக்கும் குஷ்பு கோயிலுக்கும் //
    பிற கோயில்களுக்கு ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா

  • /மொழி விஷயத்தில் இந்தியாவுக்கு வெளியே யாராவது இத்தனை உணர்ச்சிவசப்படுகிறார்களா என்று தெரியவில்லை. ஈழத் தமிழர்களின் மொழிப்பற்றிலாவது ஓர் அர்த்தம் இருக்கிறது. அவர்கள் உபயோகிக்கும் தமிழ், நம்முடையதைக் காட்டிலும் சுத்தமாக இருக்கிறது./

    இலங்கையில் கோயில் கட்டலாம் என்று சொல்லுங்கள்.

  • //யாராவது இந்த அபத்த முயற்சியைத் தடுத்து நிறுத்த முன்வருவார்களா?// என்னது? தடுக்கறதா? மூச்…. இதை பத்தின மாற்றுக் கருத்து உங்களுக்கு வந்ததே ரொம்ப அநியாயம், இதுல தடுக்க முயற்சி வேறயா? ரொம்பத்தான் பேராசை உங்களுக்கு…

    இது அபத்தம்னு சொன்னதினாலேயே நீங்க எவ்வளவு பெரிய தமிழ்த் துரோகின்னு தெரிஞ்சுட்டதே… வலையுலக பாணியில் “சட்டைக்குள் நெளியும் பாராவின் பூணூல்” அப்படின்ற ரீதியிலான டைட்டில்களுடன் பதிவுகள் பொங்கி வந்திருக்கணுமே இந்நேரம்… எங்கப்பா போனாங்க நம்ம வலையுலக நுண்ணரசியல் கண்டுபிடிப்பாளர்கள் எல்லாம்? ஒரு வேளை அடுத்த புத்தகம் எழுதறதில பிசியாயிருக்காங்களோ? 😉

  • .இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத கடவுளுக்கு உலகெங்கும் பல கோடி செலவில் கோயில்கள் கட்டும் போது, ஏன் ஒரு வாழும் மொழியை வளர்ப்பதற்காக கோயில் என்ற பெயரில் ஒரு இடத்தைக் கட்டக்கூடாது?

    கோயில்களில் சமய நூல்களைக் கற்றுத் தருவதால் சமயத்தைப் பின்பற்றும் இளைய தலைமுறையினர் தலை தெறித்து ஓடிவிட்டார்களா என்ன?

    தமிழ்க் கோயில் கட்டுவதற்கான ஒரு கோடி செலவை வேறு பயனுள்ள வழிகளில் செலவிட்டிருக்கலாம் தான். ஆனால், கோயில் கட்டுவதையே ஒரு குறையாகவும் அவர்களின் தமிழ் வளர்ப்பு முயற்சிகளை இழித்துக் கூறுவதும் சரியில்லை

  • இது ஒரு விஷயமாகவே படவில்லை, கோடிகள் செலவழித்து கோயில்கள் கட்டுவதை வைத்துப் பார்க்கும்போது….

    சமீபத்தில் வேலூருக்கு அருகில் தங்கக் கோயில் ஒன்றை பல கோடி செலவு செய்து கட்டினார்கள். அந்தப் பணத்தை வைத்து ஏழைகளுக்கு உருப்படியாகயாக ஏதாவது செய்திருக்கலாம் தான்.

  • Mr. para,

    Your comments are not acceptable and

    I also feel :-

    // தமிழ்க் கோயிலுக்கும் குஷ்பு கோயிலுக்கும் //

    பிற கோயில்களுக்கு ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா??????

    Kuwait Tamilan

  • அண்ணா,

    உங்கள் வாதம் புரியவில்லை.

    ஒரு மனிதரை/பொருளை/விஷயத்தை நினைவில் கொள்வதற்கும், போற்றுவதற்கும் சின்னங்கள் அமைப்பது உலகளாவிய வழக்கம். சுதந்திர தேவிக்கு ஒரு சிலை, விடுதலைக்கு ஒரு மணி, உழைப்பாளர்களுக்கு சிற்பம், காதலுக்கு ஐரோப்பா எங்கும் கலைப்படைப்புகள் என அரூபமான விஷயங்களை ரூப வடிவில் கொண்டாடுவதும், பல சமயங்களில் anthropomorphize செய்வதும் சாதாரணமான வழக்கம் தான்.

    கோயில் என்ற வடிவத்தில் இதைச் செய்வது ஒரு இந்திய/இந்து பண்பாட்டு வழி வந்த பழக்கம்.

    அவர்கள் காசு, அவர்கள் செலவழிக்கிறார்கள். தமது அடையாளத்திற்கு மையமாகக் கருதும் ஒன்றைப் போற்றிக் கொண்டாடுகிறார்கள்; நான்கு பேருக்கு தமிழ் சொல்லித் தருகிறார்கள்; தீங்கற்ற நல்ல விஷயம்தான். சந்தோஷமாயிருங்கள்.

    ஶ்ரீகாந்த்

  • :)) என்ன அபத்தம்னு கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருக்கலாம். பாம்புக்கு, நாய்க்கு, அரிவாளுக்கு, குதிரைக்கு, யானைக்கு, மரத்துக்கு, உருவத்துக்கு, அருவத்துக்கு எல்லாம் கோவில் கட்டி கும்பிட்டுகிட்டுதான் இருக்கோம். இதில மொழிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்றதுல என்ன புதிய அபத்தம்? அவரவர்க்கு அவரவர் நியாயம். இந்த மாதிரியான போக்கினால ஏதாவது தீங்கு, நேர / சக்தி விரயம் ஏற்படுதுன்னா இதைக் குறை சொல்லலாம். ஆனா அதே லாஜிக் எந்த வழிபாட்டுக்கும் பொருந்துமே 🙂

    கண்ணகியை புனிதமாக நினைக்கிறவங்க கண்ணகி கோவிலோ, கொற்றவை கோவிலோ கட்டுறாங்க. திரௌபதி அம்மன் கோவில் கூடத்தான் இருக்கு. குஷ்பு கோவில் மட்டும் என்ன அபத்தம்? 🙂 ஒரு வாதத்துக்குதான் கேட்கிறேன்.

  • Para Sir,

    There are many such nonsense happening in our society. They too have justification for their activities.

    They’ll realize their foolishness only after loss of money.. Simply ignore them…

  • //ஒரு கோடி ரூபாய் செலவில் தமிழுக்கு ஒரு கோயில் கட்டுகிறார்கள் //

    புதுசு புதுசாக் கெளம்பி வராங்களைய்யா?

  • தல…இந்த டெம்ப்ளேட் கலர் நல்லா இருக்கு. ஆனா பழைய டெம்ப்ளேட் எனக்கு இன்னும் அதிகமா பிடிச்சிருந்தது…

  • //இலக்கணம் படித்து யாப்பில் ஆப்படிக்க ஒரு புதுத் தலைமுறை வேண்டுமென்று யார் அழுதது?//

    அப்படியானால் உம் நோக்கில் இலக்கணம் படிப்பதும் யாப்பறிதலுமான தமிழ் பற்று இனி வரும் தலைமுறைக்கு வேண்டாத வேலை?!

  • எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. இந்த கோவிலுக்கான செலவு அபத்தத்தின் உச்சம் தான் , நீங்கள் கோவிலுக்கு செல்வதுண்டா? திருப்பதி , வேளாங்கண்ணி போன்ற அபத்தங்களுக்கு நடுவில் இதுவும் ஒன்று.

  • Chumma oru publicity-kkaga ippdi ellam ezhudanama..??? Blog irukungradhukkaga edha venumnaalum ezhuthuveengala Para.?? Idha vandhu padichadhu daan thappu..

  • அட உக்காந்து ரூம் போட்டு யோசிப்பாங்க்களோ???

  • காரைக்குடியில், கம்பன் மணிமண்டபத்தில் தமிழ்த்தாய்க்கு கோவில் இருக்கிறது.

  • கோவில் கட்டி வழிபாடு நடத்துவது நமது பழக்கம், இது காலம் காலமாக இருக்கிறது, இதில் தவறு என்பது நீங்கள் நமது முன்னோர்கள் அனைவரையும் திட்டுவது அல்லது முட்டாள் என்பது போல் உள்ளது. வேன்றுமென்றால் இதில் உள்ள அறியாமையை மக்களுக்கு எடுத்துச் சொல்லலாம்.

    குஷ்புவுக்கு கோயில் கட்டியது இரு ரசிகர் மன்றங்களுக்கு இடையே இருந்த போட்டி, அதை நீங்கள் உண்மையான கோயிலாக பார்த்தது உங்களுடைய பார்வை.

  • கோவில் என்றால் என்ன?
    எந்த எந்த விசய‌த்துக்கு (பொருளுக்கு )கோவில் கட்டலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

    உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டால் நல்லது.

    **

    //இந்த தமிழ்க் கோயிலுக்கும் குஷ்பு கோயிலுக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. வெறும் கூத்து.//

    ஆண்குறி, பெண்குறி, நாய் , பன்னி , கழுதை , பாபா, பாப்பா, ஓம் என்ற எழுத்து , சட்டை , வேட்டி, சீலை, பாவாடை , சிலுவை, கட்டடம் , சமாதி, கருமாதி, வப்பாட்டி வீடு என்று பலவற்றை அடையாளப்படுத்தி கோவில்கள் நீங்கமற நிறைந்து இருக்குன்றன.

    இதில் குஸ்பூவும், தமிழும் என்ன பாவம் செய்தது? இருந்துவிட்டுப் போகட்டுமே.

    அவனவன் எதைக் கும்பிடலாம், எதற்கு கோவில் கட்டலாம் என்று சட்டமா போட முடியும்? இது ஒரு விதமான அதீத இரகசித்தன்மையின் விளைவு.

    **

    //மொழி விஷயத்தில் இந்தியாவுக்கு வெளியே யாராவது இத்தனை உணர்ச்சிவசப்படுகிறார்களா என்று தெரியவில்லை. //

    மொழி என்பது ஒரு அடையாளம். மொழி வழி அடையாளத்தை தொலைத்துவிட்டால் என்ன கேடு என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

    தமிழகம் மொழி விசயத்தில் உணர்ச்சிவசப்படாமல் இருந்திருந்தால் இங்கே இப்படி ஒரு சினிமா தொழில் உருவாகி இருக்காது. கான்களுக்கு காவடி தூக்கிக் கொன்டு இருக்கும் மத்த மாநிலங்கள் போல தமிழகமும் இருந்து இருக்கும்.

    உணர்ச்சி இருப்பவன் வசப்படுகிறான். அவனின் உணர்ச்சியை ஆக்கபூர்வமான வழியில் எடுத்துச் செல்லவில்லை என்று விமர்சியுங்கள், உணர்ச்சிவசப்படுவதே சரியல்ல என்று சொல்ல வேண்டாம். மொழிக்காதல் (காதல் ஒரு உணர்வு) உள்ள நாடுகள் உங்களுக்கு தெரியவில்லையா?

    ****

    //ஒழியட்டும், கனிமொழிக்கு அமைச்சர் அந்தஸ்து, தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து. போதாது? //

    செம்மொழி அந்தஸ்து என்பது இன்றைய அரசியல் அரங்கில் தேவைப்படும் ஒரு அடையாளம். இருந்துவிட்டுப் போகட்டுமே.

    செத்து சுண்ணாம்பான மணியாட்ட மட்டுமே பயன்படும் ,பேச்சு வழக்கில் இல்லாத சம்ஸ்சுகெரகத்தையே “புல் தோன்றி புஸ்வானம் தோன்றா காலத்துக்கு முன் வந்த மொழி, தேவபாடை” என்று ஜல்லி அடிக்கும் மக்கள் மத்தியில் , தமிழை அதனினும் உயர்வாக அடையாளப்படுத்துவது தவறில்லை. அதற்கு மொழிக்காதல்/உணர்ச்சி வேண்டும்.

    கனிமொழி மேட்டர்… கவிதை எழுதறவுக, கதை எழுதுறவுக எல்லாம் முற்போக்கு என்று உணர்ச்சிவசப்பட்டவர்கள்தான் கவிதாயினி கனிமொழி ஏன் இப்படி பதவிக்கு ஆசைப்படுகிறார் என்று சொல்ல வேண்டும்.

    ****

    //முடிந்தால் பேச்சிலும் எழுத்திலும் மொழியைச் சிதைக்காமல் அழகாகக் கையாண்டு அதன் ஆயுசை இன்னும் கொஞ்சம் ஆண்டுகள் அதிகரிக்க நம்மாலான உதவியைச் செய்யலாம். //

    இது பாயிண்டு. இதைச் சொல்லவந்து எதற்கு கோவில்,குஸ்பூ ,செம்மொழி ,கனிமொழி என்று மத்த மேட்டரை இழுக்க வேண்டும்?

  • // தமிழ்க் கோயிலுக்கும் குஷ்பு கோயிலுக்கும் //
    பிற கோயில்களுக்கு ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா//

    இந்த கேள்விக்கு என்ன பதில் பா.ரா

  • //ஈழத் தமிழர்களின் மொழிப்பற்றிலாவது ஓர் அர்த்தம் இருக்கிறது. அவர்கள் உபயோகிக்கும் தமிழ், நம்முடையதைக் காட்டிலும் சுத்தமாக இருக்கிறது. //

    இதைவிட முக்கியமான காரணம் – மொழியால் அவர்கள் வெறுக்கப்படுகிறார்கள். இதனாலேயே அந்த contextஇல் ‘தமிழனாக இருக்க பெருமைப்படுகிறேன்’ என சொல்லலாம். இந்த கோயிலோ பண விரயம்!

  • //1. சீரியல்களுக்குள் 2. விஷயத்தில் 3. கும்பாபிஷேகம் 4. அந்தஸ்து(2முறை) //

    முடிந்தால் பேச்சிலும் எழுத்திலும் மொழியைச் சிதைக்காமல் அழகாகக் கையாண்டு அதன் ஆயுளை(சை) இன்னும் கொஞ்சம் ஆண்டுகள் அதிகரிக்க உங்களாலான உதவியைச் செய்யலாம்.

  • ஈழத் தமிழர்களின் மொழிப்பற்றிலாவது ஓர் அர்த்தம் இருக்கிறது//

    இதற்கு காரணமிருக்கிறது. ஈழத்தில் பேரின சிங்களவாதம் தமிழர்களை அடக்கியது. தமிழ் என்று அவர்கள் அடக்க.. அதை எதிர்கொள்ள அதே தமிழையே நாங்களும் உயர்த்திப் பிடித்தோம். தமிழ் என்றுதானே அடிக்கிறாய்.. இந்தா பார் என்ற மனநிலையில் இன்னும் இன்னும் அந்த வெறி உருவானது.

    மற்றும்படி.. சாதாரண நிலையிலிருந்தால்.. ச்சும்மாவே தொப்புள்கொடி உறவென சொல்லித்திரிகிற நாமும் ஆறுகோடி பேரின் பின்னேயே வந்திருப்போம். 🙂

  • போயிட்டுப்போறது பா.ரா. எப்படியோ இன்னும் பல ‘நல்லவை’களுக்கு இது முன்னோடியா இருக்கும் பெருமை கிடைக்கப்போகுதே.

    இந்தியக் கோவில் வளாகம் ஒன்னு அமைச்சு அதுலே ஒவ்வொரு மொழிக்கும் கோயில் கட்டி வச்சுடலாம். நவகிர டூர் போல மக்கள் வருவாங்க. வரணும். மொழி தாய்க்குச் சமம் பாருங்க அதனால்….

    மறக்காம எல்லாச் சந்நிதிகளிலும் உண்டியல். ஒரு 22 மொழி இருக்குதானே இப்போதைக்கு? இல்லே அதிலும் கூடுதலா?

    அத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு. பூஜை செய்யணுமுல்லே? ஒரே ஆள் எப்பவுமே இருக்க முடியுமா? ஷிஃப்ட் முறையில் கூடுதல் பூசாரிகள்.

    இப்படி யோசிச்சுக்கிட்டேப் போனா, ‘ யே ஐடியா இத்னா புர்ரா நஹி ஹை’:-)

  • காத்தவராயன்:

    ரசித்தேன். ஆனால் நான் அறியாமையால் தவறாக எழுதுவதில்லை. ஒழுங்காகத் தமிழ் அறிந்தவன் இயல்பாக மீறுவதில் பிழையில்லை.

  • //கோவில் என்றால் என்ன?
    எந்த எந்த விசய‌த்துக்கு (பொருளுக்கு )கோவில் கட்டலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

    உங்கள் கருத்தைச் சொல்லிவிட்டால் நல்லது.

    **

    //இந்த தமிழ்க் கோயிலுக்கும் குஷ்பு கோயிலுக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. வெறும் கூத்து.//

    ஆண்குறி, பெண்குறி, நாய் , பன்னி , கழுதை , பாபா, பாப்பா, ஓம் என்ற எழுத்து , சட்டை , வேட்டி, சீலை, பாவாடை , சிலுவை, கட்டடம் , சமாதி, கருமாதி, வப்பாட்டி வீடு என்று பலவற்றை அடையாளப்படுத்தி கோவில்கள் நீங்கமற நிறைந்து இருக்குன்றன.

    இதில் குஸ்பூவும், தமிழும் என்ன பாவம் செய்தது? இருந்துவிட்டுப் போகட்டுமே.

    அவனவன் எதைக் கும்பிடலாம், எதற்கு கோவில் கட்டலாம் என்று சட்டமா போட முடியும்? இது ஒரு விதமான அதீத இரகசித்தன்மையின் விளைவு.

    **

    //மொழி விஷயத்தில் இந்தியாவுக்கு வெளியே யாராவது இத்தனை உணர்ச்சிவசப்படுகிறார்களா என்று தெரியவில்லை. //

    மொழி என்பது ஒரு அடையாளம். மொழி வழி அடையாளத்தை தொலைத்துவிட்டால் என்ன கேடு என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

    தமிழகம் மொழி விசயத்தில் உணர்ச்சிவசப்படாமல் இருந்திருந்தால் இங்கே இப்படி ஒரு சினிமா தொழில் உருவாகி இருக்காது. கான்களுக்கு காவடி தூக்கிக் கொன்டு இருக்கும் மத்த மாநிலங்கள் போல தமிழகமும் இருந்து இருக்கும்.

    உணர்ச்சி இருப்பவன் வசப்படுகிறான். அவனின் உணர்ச்சியை ஆக்கபூர்வமான வழியில் எடுத்துச் செல்லவில்லை என்று விமர்சியுங்கள், உணர்ச்சிவசப்படுவதே சரியல்ல என்று சொல்ல வேண்டாம். மொழிக்காதல் (காதல் ஒரு உணர்வு) உள்ள நாடுகள் உங்களுக்கு தெரியவில்லையா?

    ****

    //ஒழியட்டும், கனிமொழிக்கு அமைச்சர் அந்தஸ்து, தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து. போதாது? //

    செம்மொழி அந்தஸ்து என்பது இன்றைய அரசியல் அரங்கில் தேவைப்படும் ஒரு அடையாளம். இருந்துவிட்டுப் போகட்டுமே.

    செத்து சுண்ணாம்பான மணியாட்ட மட்டுமே பயன்படும் ,பேச்சு வழக்கில் இல்லாத சம்ஸ்சுகெரகத்தையே “புல் தோன்றி புஸ்வானம் தோன்றா காலத்துக்கு முன் வந்த மொழி, தேவபாடை” என்று ஜல்லி அடிக்கும் மக்கள் மத்தியில் , தமிழை அதனினும் உயர்வாக அடையாளப்படுத்துவது தவறில்லை. அதற்கு மொழிக்காதல்/உணர்ச்சி வேண்டும்.

    கனிமொழி மேட்டர்… கவிதை எழுதறவுக, கதை எழுதுறவுக எல்லாம் முற்போக்கு என்று உணர்ச்சிவசப்பட்டவர்கள்தான் கவிதாயினி கனிமொழி ஏன் இப்படி பதவிக்கு ஆசைப்படுகிறார் என்று சொல்ல வேண்டும்.

    ****

    //முடிந்தால் பேச்சிலும் எழுத்திலும் மொழியைச் சிதைக்காமல் அழகாகக் கையாண்டு அதன் ஆயுசை இன்னும் கொஞ்சம் ஆண்டுகள் அதிகரிக்க நம்மாலான உதவியைச் செய்யலாம். //

    இது பாயிண்டு. இதைச் சொல்லவந்து எதற்கு கோவில்,குஸ்பூ ,செம்மொழி ,கனிமொழி என்று மத்த மேட்டரை இழுக்க வேண்டும்?//

    Best comment from Kalvettu.I repeat this again.

  • கல்வெட்டு பின்னூட்டத்தை அப்படியே ரிப்பீட்டிக்கிறேன்…

    அதற்கான பதிலை தனிப்பதிவா போட்டாலும் நன்றாக இருக்கும்..

    கல்வெட்டு கலக்கல்.

  • ஒரு கோடி ரூபாயில் தமிழகம் முழுவதும் 1000 நூலகங்கள் அமைத்து நல்ல தமிழ் நூல்களை வைத்து இருக்கலாம்.

    வழிபாடு நடத்திட்டா போதும். வேற ஒரு புண்ணாக்கும் வேண்டாம்..

    இத்தனை கோயில்கள் இருந்தும் கூட்டம் கூட்டமாக மக்கள் சென்றும் மனித நேயமே இல்லையே ஏன்…??

    கோயில் வாசலில் பிச்சை போடுவதை போலத்தான் நமது உணர்வு…

    “ பிச்சை இட்டதும் நான் நல்லவன்” நிறைய உதவி செய்து விட்டேன்.. எனக்கு எல்லா நன்மையும் கிடைக்கும் அதுக்கு கடவுள் துணையிருப்பார் என்ற அதீத பேராசை…

    தமிழன் ””ரொம்ப நல்லவன்”

  • அதானே… குஷ்பூவிற்கு கோவில் கட்டியதை இப்படியா கேவலப்படுத்துவது, உங்களுக்கு பிடிக்காவிட்டால் உங்க ஆசைக்கு சாவித்திரி பாட்டிக்கு ஒரு கோயிலோ சர்ச்சோ கட்டிக்கோங்க, அதவுட்டுபோட்டு… அனுஷ்காஹாசன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு உமக்கு invitation நஹீ!

  • என்னங்க இது அநியாயமா இருக்கு?

    தமிழ்நாட்டில் தமிழுக்கு கோட்டமோ, கோயிலோ கட்டாமல் சமஸ்கிருதத்துக்கா கட்டமுடியும்? 🙂

    லஷ்மியக்கா. இந்த நுண்ணரசியல் ஓக்கேவா?

  • இது பாமரத்தனமான கட்டுரை இல்லை. பாராத்தனமான கட்டுரை.

    பாமரத்தனமான கட்டுரைகளில் விஷய அஞ்ஞானம் யோசனையோடு எழுதப்படும். பாராத்தனமான கட்டுரைகளில் அரைகுறை ஞானம் யோசிக்காமல் எழுதப்படும்.

    வடக்கே சூலம் என்பதை விஷய ஞானத்தோடா புரிந்துகொள்கிறோம்? பெரியவர்கள் சொல்லுகிறார்கள் என்பதற்காக ஏற்றுக்கொள்கிறோம். அதைப் போல பாரா சொல்லுகிறார். நாமும் படிக்கிறோம்.

    இது சுத்த வாக்ய பாராத்தன பஞ்சாங்கக் கட்டுரை.

  • A ‘devotee’ wrote a letter to the editor of a newspaper and complained that it made no sense to go to the Temple.

    ‘I’ve gone for 30 years now, he wrote, and in that time I have heard something like 3,000 mantras. But for the life of me, I can’t remember a single one of them. So, I think I’m wasting my time and the Gurus are wasting theirs by giving services at all.’

    This started a real controversy in the ‘Letters to the Editor’ column, much to the delight of the editor. It went on for weeks until someone wrote this clincher: I’ve been married for 30 years now. In that time my wife has cooked some 32,000 meals. But, for the life of me, I cannot recall the entire menu for a single one of those meals. But I do know this…

    They all nourished me and gave me the strength I needed to do my work. If my wife had not given me these meals, I would be physically dead today. Likewise, if I had not gone to the Temple for nourishment, I would be spiritually dead today!

  • கோவில் கட்டுவது பெரிய புண்ணியம் என்பது, பகுத்தறிவுப் பாசறைக் கூட்டத்தின் அடி மன உணர்வு. ஹிந்தி எதிர்ப்பு – ஆங்கிலத்திற்கு ஆப்பு என்று முழங்கியபடியே, தங்கள் குழந்தைகளை ஆங்கிலம் – ஹிந்தி பள்ளிக்கு அனுப்பி, அவர்கள் அவற்றை கற்ற பாவம் போகட்டும் என்று தமிழன்னைக்கு கோவில் கட்டுகிறார்கள்….விடுங்கள்…

  • இங்கே எழுதியவர்கள் முக்கியமாக லஷ்மி அவர்கள், தமிழுக்கு கொடுக்கும் முக்கியதுவத்தை தமிழனுக்கு தரவில்லை என்று தான் நான் நினைக்கிறேன்.

    தமிழை மட்டுமே படித்தால் தமிழ்நாட்டை விட்டு தாண்டி போய் வேலை பார்க்க முடியாது.

    கொஞ்சம் குறுகிய வட்டத்தில் இருந்து வெளியில் வந்து யோசிச்சுப் பாருங்கள்.

    எல்லோரும் சொல்வார்கள் ” மேற்க்கத்தியர்கள் அம்மனமாக இருந்த காலத்திலே நம்மாளுங்க நாகரிகமா இருந்த்தாங்க ” என்று்.
    அப்படி இருந்தும் நாம் அப்படியே இருக்கிறோம் ஆனால் அவர்கள் வளர்ந்து நிற்கிறார்கள்.அவர்கள் அறிவியல் ஞானத்தை நம்பினார்கள். நாமோ,
    அறிவியல் ஞானத்தை நம்பாமல் மெய் ஞானத்தை நம்பி அப்படியே இருக்கிறோம். கொஞ்சம் சிந்தியுங்கள் உலக அறிவை பெற ஒரே வழி மற்ற மொழிகளையும் கட்டாயம் கற்றாக வேண்டும்.
    முக்கியமாக ஆங்கில அறிவு.

    தமிழ் தமிழ் என்று நம்முடைய சந்ததியினரை நாமே கெடுக்க கூடாது.

    இந்த கோயில் கட்டுவது தமிழை மட்டுமே படிக்கவேண்டுமென்பது எல்லாம் நாம் நம் சந்ததிக்கு செய்யும் துரோகம்.

    இந்த துரோகமெல்லாம் யாருக்கு நாம் இழைக்கிறோம் என்றால் ஏழைக் குழந்தைகளுக்கு மட்டுமே. பணவசதி படைத்தவர்கள் Convent ,Matriculation என்று சேர்ந்து படிக்கிறார்கள்.

    இங்கே எழுதும் bloggers எத்தனை பேர் தன்னுடைய குழந்தைகளை தமிழ் வகுப்புகளில் அரசாங்கப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். உண்மையாக நேர்மையாக பதில் சொல்லுங்கள்.

    யாருமே இருக்காது. படித்தவர்கள் பணம் படைத்தவர்கள் அனைவருமே தனியார் பள்ளிகளை மட்டுமே நாடுகிறார்கள். அப்படி இருக்கையில் நாம் செய்யும் துரோகம் எல்லாம் ஏழை மாணவர்களுக்கு மட்டுமே.

    தமிழ் தமிழ் என்று சொல்லும் யாராவது தன்னுடைய பிள்ளைகளை அரசாங்க பள்ளியில் தமிழ் வகுப்புகளில் சேர்த்துவிட்டு வந்து பேசட்டும் மற்றவர்களுக்கு அதைப் பற்றி பேச எந்த அருகதையும் யோக்கியதையும் இல்லை.

    ஏழைகளுக்கு ஒரு நியாயம் பணக்காரர்களுக்கு ஒரு நியாயமா?

    blog எழுதும் நணபர்களே சற்று சிந்தியுங்கள் எது நாம் முன்னேறுவதற்க்கு சிறந்த வழியோ, நம் சமூகம் முன்னேறுவதற்கு சிறந்த வழியோ அதை மட்டுமே முற்போக்குச் சிந்தனையுடன் ஆக்க பூர்வமாக பேசுவோம்.

  • blog எழுதும் நணபர்களே சற்று சிந்தியுங்கள் எது நாம் முன்னேறுவதற்கு சிறந்த வழியோ, நம் சமூகம் முன்னேறுவதற்கு சிறந்த வழியோ அதை மட்டுமே முற்போக்குச் சிந்தனையுடன் ஆக்க பூர்வமாக சொல்வோம், எழுதுவோம் செய்வோம்.

  • பா.ரா,

    உங்கள் கருத்தோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், பதிவு “வாஷிங்டனில் திருமணம்” படித்தது போல இருந்தது.

    சீனு.

  • அமெரிக்காவில் ஸ்பானிஷ் மொழியை இரண்டாவது ஆட்சி மொழியாக்குவதற்கு பலத்த எதிர்ப்பு உள்ளது. ஆனால் அதிகாரபூர்வமற்ற முறையில் அது ஏற்கனவே இரண்டாம் மொழி – Dial 2 for spanish – 🙂

    ஈழத் தமிழர்கள் சரியான தமிழ் பேசுகிறார்கள் என்பதில் எனக்கு சந்தேகமுண்டு. அவர்களின் ஊடகத் தமிழ் சுத்தமாக உள்ளது. அதாவது தமிழக ஊடகங்களில் தமிழ் இல்லை ஆனால் ஈழத் தமிழர்கள் ஊடகங்களில் தமிழ் மிகச் சிறப்பாக உள்ளது. தமிழக ஊடக எழுத்தாளர் என்கிற வகையில் உங்களுக்கும் (எனக்கு நிச்சயம்) இதில் பங்கிருக்கும் என நினைக்கிறேன். மற்றபடி ஈழத்தமிழர்களின் பேச்ச்சுத்தமிழ் நம்மூரைப்போல மருவிய தமிழ்தான் என்பதை ’உவர்களே சொல்லுவினம்’.

  • பிரதிபலிப்பான்,

    //இந்த கோயில் கட்டுவது தமிழை மட்டுமே படிக்கவேண்டுமென்பது எல்லாம் நாம் நம் சந்ததிக்கு செய்யும் துரோகம்.
    //

    செய்தியில் இல்லாத கருத்தைக் கூறி திசை திருப்புகிறீர்கள்.

    தமிழை மட்டும் படி என்று யார் சொன்னார்கள்? கோயில் என்ற பெயரில் ஒன்றைக் கட்டித் தமிழ் மொழியைப் பயிற்றுவிக்கிறோம் என்கிறார்கள். பாராவோ தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்பித்தலையே கேள்விக்குள்ளாக்குகிறார் !

    தமிழை மட்டும் படிப்பதற்கும், அனைத்துத் துறைகளையும் தமிழில் படிப்பதற்கும் நிறைய வேறுபாடுண்டு. இளங்கலை அறிவியல் வரை தமிழ் வழியில், அரசு பள்ளியில், கல்லூரியில் பயின்று உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில், நிறுவனங்களில் பணியாற்றும் எத்தனையோ தமிழர்கள் உள்ளனர். (பலர் என் நண்பர்கள். நேரடியாகவே தெரியும்)

    எல்லா நாட்டுக் காரர்களும் அவரவர் மொழியில் படித்து தான் தங்கள் நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் படித்தால் வெளியூரில் போய் பிச்சையெடுக்க முடியாது என்ற அரைத்த மாவு வாதத்தை கேட்டுப் புளித்து விட்டது.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி