வளர்ப்பு மீன்

பட்டுக்கோட்டை ஜோதிடர் என்னை மீன் வளர்க்கச் சொல்கிறார். நல்லது நடக்கும் என்று யார் சொன்னாலும் நல்லதுதானே? குறிப்பாகப் பட்டுக்கோட்டை சொன்னால் சரியாகத்தான் இருக்கும். ஆனால் எனக்கு இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. நான் செல்லப் பிராணிகள் வளர்த்ததே இல்லை. எங்கள் வீட்டில் தினமும் காக்கைகளுக்கும் புறாக்களுக்கும் மதிய சாப்பாடு வைக்கிறோம். அதனால் பறவை வளர்ப்பதாகி விடுமா?

எனக்குத் தெரிந்த தயாரிப்பாளர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுகள் உண்டென்றாலும் அவர் வளர்த்து வந்த இரண்டு நாய்களைத்தான் தனது உயிருக்கு நிகராகக் கருதினார். இரண்டும் மிகவும் அச்சமூட்டும்படியாக ஆளும் தோளும் வேல்முருகா என்றிருக்கும். நாய்களெல்லாம் மூன்றடி உயரம் ஏன் வளர வேண்டும் என்று அவற்றைப் பார்க்கும்போது எப்போதும் தோன்றும். நாங்கள் ஏதாவது முக்கியமாகப் பேசிக்கொண்டிருக்கும்போது கர்புர் என்று மூச்சு விட்டுக்கொண்டு, ராட்சசன்களைப் போல நடந்து வரும். பயந்த சுபாவம் கொண்டவனான நான் அவற்றைக் கண்டதுமே அலறிக்கொண்டு சோபாவின் மீது எழுந்து நின்றுவிடுவேன். ‘ஒண்ணும் பண்ணமாட்டான் சார் என் செல்லக்குட்டி. நீங்க உக்காருங்க’ என்பார் தயாரிப்பாளர். என்னை சமாதானப்படுத்துவதற்காக அவரது செல்லங்களை இரண்டு கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டு, பிறகு இழுத்துப் பிடித்து முத்தமெல்லாம் கொடுத்து, ‘வெளிய போய் விளையாடுடா. வேலையா இருக்கம்ல?’ என்று சொல்லுவார்.

அந்த இரண்டில் ஒன்று ஒருநாள் இறந்தது. அன்றெல்லாம் அவரது அழுகை கொஞ்ச நஞ்சமல்ல. அவரிடம் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் வேறு வழியில்லாமல் மாலையெல்லாம் வாங்கிக்கொண்டு போய் அஞ்சலி செலுத்தினார்கள். நிச்சயமாக அவர் பத்து நாள் காரியம் முடித்து, சவுண்டிகிரணம், சுபஸ்வீகாரமெல்லாம் கிரமமாகச் செய்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

நானறிந்த இன்னொரு நண்பர் வீட்டில் கண்ணாடித் தொட்டி வைத்துப் பொன் நிறத்தில் ஒரு மீன் வளர்த்து வந்தார்கள். நல்ல பெரிய, திடகாத்திரமான மீன். ஏழெட்டு கிலோ இருக்கும் என்று நினைக்கிறேன். ஏதோ சீனத்து வாஸ்து மீன் என்று சொன்னார்கள். வேளை தவறாமல் அதற்கு உணவளிப்பதும், தொட்டி நீரை அடிக்கடி மாற்றுவதும், மின்சாரம் போய்விட்டால் குழந்தையின் உறக்கம் கலைந்துவிடுமே என்று பதறி விசிறுவது போல ஓடிச் சென்று தொட்டிக்குள் காற்று புக வழி செய்வதுமாக அப்படியொரு அக்கறையுடன் அந்த மீனை கவனித்துக்கொண்டார்கள்.

ஆனால் என்ன? அதுவும் ஒருநாள் இறந்து போனது. அன்றெல்லாம் அந்தக் குடும்பத் தலைவி தலைவிரி கோலமாக அழுது அழுது முகம் வீங்கி, நைட்டி அணிந்த கைகேயியைப் போலக் காட்சியளித்தார். பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பு எதற்காகவோ ஒருநாள் காலை வேளையில் சாருவுக்கு போன் செய்தேன். சில நிமிடங்கள் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தோம். வேறென்ன. ஏதோ ஒரு வம்பு விவகாரம். இரண்டு ஆண் எழுத்தாளர்கள் ஊர் வம்பு பேசத் தொடங்கினால் அதில் எழுத்தாளரல்லாத இரண்டு பெண்கள் பேசுகிற வம்பினும் கலையம்சம் தூக்கலாக இருக்கும். அவ்வளவு சீக்கிரம் அந்த உரையாடல் நிறைவடையாது. குறிப்பாக அந்நிய சக்திகளால் அதைத் தடுக்க முடியாது. ஆனால் அன்றைக்கு ஏதோ அசம்பாவிதமாகிவிட்டது. திடீரென்று எங்கோ தொலைவில் இருந்து யாரோ அவரை அழைக்கும் சத்தம் கேட்டது. அதுவும் பதற்றமாக. அந்த அழைப்பின் அவசர கதியை என்னால் உணர முடிந்தது. அவ்வளவுதான். ‘ராகவன், போன வைங்க. நான் திரும்ப கூப்பிடறேன்’ என்று சொல்லிவிட்டு ஓடியே விட்டார்.

நெருப்புகிருப்பு பிடித்துக்கொண்டதோ, அக்கம்பக்கத்தில் யாராவது இறந்துவிட்டார்களோ, அட மறந்து போய் சாருவுக்கு சாகித்ய அகடமி விருதே கொடுத்துவிட்டார்களோ என்று என்னென்னவோ நினைத்துவிட்டேன். பத்து நிமிடங்களுக்குப் பிறகு அவர் திரும்ப அழைத்தபோது சிறிது தயக்கத்துடன் என்ன விஷயம் என்று கேட்டேன்.

‘ஒண்ணுமில்ல. கீழ என் ஒய்ஃப் பூனைங்களுக்கு சாப்பாடு குடுத்துக்கிட்டிருக்கா. போதாம போயிடுச்சி போல. என்னை எடுத்துட்டு வர சொன்னா. காக்க வெக்க முடியாது பாருங்க. அதான் ஓடிட்டேன்’ என்று சொன்னார்.

இந்த மனநிலையெல்லாம் எனக்கு வருமா என்று யோசிக்கிறேன். இந்த ஜென்மத்தில் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. இப்போது நான் என்ன செய்ய? ஆனால் ரிஷப ராசிக்காரர்கள் மீன் வளர்த்தால் நல்லது நடக்கும் என்று பட்டுக்கோட்டை ஜோதிடர் சொல்லிவிட்டார். சாருவும் ரிஷப ராசிதான். அவர் ஒரு தொட்டி வாங்கி மீன் வளர்க்கலாம். அவருக்கு அதற்கு அனைத்துத் தகுதிகளும் இருக்கின்றன.

பரிதாபத்துக்குரிய பாரா தன்னையே ஒரு கொழுத்த மீனாகக் கருதிக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி