பொன்னான வாக்கு – 11

பெட்ரோல் விலை, தங்கம் விலை, பங்குச் சந்தைப் புள்ளிகள், தமிழக அமைச்சரவை போன்ற சில சங்கதிகள் எப்போது வேண்டுமானாலும் மாறிக்கொண்டே இருக்கக்கூடியவை. என்ன காரணத்தால் பெட்ரோல் விலை திடீரென்று இன்று நடு ராத்திரி ஒண்ணே முக்கால் ரூபாய் ஏறியது என்று கேட்டால் நம்மால் பதில் சொல்ல முடியுமா? ஜெயலலிதா ஏன் ஒரு அமைச்சரை டமாலென்று தூக்கியடிக்கிறார் என்று சொல்ல முடியுமா? இன்று ஏறிய தங்கத்தின் விலை அட்சய திருதியைக்குப் பிறகு ஓரிரு வாரங்கள் கழித்துக் கொஞ்சம் குறையும். போன வருஷம் பதவி பறிபோன அமைச்சர் இந்த வருஷம் மீண்டும் சைரன் வைத்த காரில் போவது போல. இவர் இரண்டு வருஷங்களுக்கு முன்னால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே கூடக் கழட்டிவிடப் பட்டிருப்பார். அது ஏன் இது ஏன் என்றெல்லாம் கேட்கப்படாது. சாமி குத்தம்.

நேற்றைக்கு வாட்சப்பில் வந்த ஓர் ஒலிச்சித்திரத்தைக் கேட்க நேர்ந்தது. அதிமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் (பெண்மணி), தமது நண்பர் ஒருவருடன் (இவர் ஆண்) தொலைபேசியில் நிகழ்த்திய உரையாடல். பிரமாத ராணுவ ரகசியங்கள் ஏதுமில்லை என்றாலும் அவரது குரலில் தொனித்த கதனகுதூகலம் முக்கியமாகப் பட்டது. உல்லாசங்களில் யாருக்குத்தான் விருப்பமில்லை? எதுவும் பிழையல்ல. எதுவும் சிக்கலல்ல – சிக்கிக்கொள்ளாத வரை.

அது என் குரலே இல்லை என்று சம்மந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஓர் அறிக்கை வெளியிட்டுவிட்டால் தீர்ந்தது விஷயம். ஆனால் அறிக்கை வருவதற்குள் அசம்பாவிதமேதும் நடந்துவிடாதிருக்க வேண்டும்.

ஆனானப்பட்ட ஓ. பன்னீர் செல்வத்துக்கே சிக்கல். நத்தம் விசுவநாதனுக்குச் சிக்கல். பன்னீரெல்லாம் தப்பு செய்வார் என்று சொன்னால் இந்த சமூகம் அத்தனை சுலபத்தில் நம்பிவிடுமா? ஜெயலலிதா நடத்துவது ராமராஜ்ஜியமில்லாது போனாலும் பன்னீர் இருமுறை பரதன் வேடமேற்றவர். அதில் கனகச்சிதமாகப் பொருந்தியவர். பணிவுக்கு மறுபெயரல்லவா பன்னீர் என்பது? அவரா கட்சி விரோதக் காரியங்களை ஆலா போட்ட ஆத்ம சுத்தியோடு செய்திருப்பார்?

ஒரு வாரம் புகைந்த நெருப்பு ஒருவாறு இப்போது சற்றுத் தணிந்திருக்கிறது. சந்திப்புகள். சமாதானப் பேச்சுவார்த்தைகள். ஓம் சாந்தி. ஓம் சாந்தி. விஜயசாந்தி. டிஸ்கோ சாந்தி.

சிரிக்கலாம். ஆனால் இது சிரிக்கத் தகுந்த சங்கதியல்ல. அமைச்சர்களின் தவறு என்பது முதல்வரின் அவமானம். கட்சியில் இருந்தும் அதிகாரத்தில் இருந்தும் ஒரு வேகத்தில், ஒரு கோபத்தில் தூக்கியடித்துவிட்டு, பிறகு காலக்கிரமத்தில் மீண்டும் அரவணைத்துக்கொள்வதைக் கட்சிக்காரர்கள் வேண்டுமானால் தாய்ப்பாசம் என்று வருணிக்கலாம். நம்பி வாக்களித்த மக்கள் என்ன நினைப்பார்கள்?

கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் மாற்றப்பட்ட அமைச்சர்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்துப் பார்க்கலாம். இது சுட்டிக்காட்டும் அடிப்படைப் பிரச்னை என்னவென்றால், அதிகாரத்தில் உள்ள யாருமே ஒழுங்காக இல்லை என்பதுதான். இது அதிகாரிகளின் பிரச்னையா? அதிகார மையத்தின் பிரச்னையா? ஜெயலலிதாவின் மீது சுமத்தப்பட்ட வழக்குகளில் ஒன்றிரண்டு மட்டுமே நிரூபிக்கப்பட்டவை என்பதால், மற்றவர்கள் செய்யும் பிழைகளை அவசியத்துக்கேற்ப அவர் மன்னிப்பதில் பிழையில்லை என்று ஆகிவிடுமா?

தேர்தல் வேளையில் அதிமுக வளாகத்தில் நிகழும் இம்மாதிரியான அசம்பாவிதங்கள் வெகு நிச்சயமாக அக்கட்சியின் தொண்டர்களை உளவியல் ரீதியில் பாதிக்கவே செய்யும். பொதுவாழ்வில் ஒழுக்கம் என்பது பிரசார வாகனங்களின் முன்புற பம்ப்பர் போல ஆகிவிட்டது. ஒரு பந்தாவுக்கு வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். இஷ்டமில்லாவிட்டால் கழட்டிக் கடாசிவிடலாம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்து நின்றதைப் போலவே இந்த சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக தனித்து நின்றுவிட முடிவு செய்யலாம். ஆனால், அதிபயங்கரத் துணிச்சல் என்பது உள்ளார்ந்த அச்சத்தின் வேறு வடிவமே. சென்னை, கடலூர் மாவட்டங்களில் கொடுமழைக் காலத்தில் நேர்ந்த கோரங்களை நேரில் காணவும் ஆறுதல் சொல்லவும் முதல்வர் வராதது முதல், உடுமலையில் நிகழ்ந்த சாதித் திமிர் படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்து ஒற்றைச் சொல்லைக்கூட உதிர்க்காதது வரை அவர் மீதான மக்களின் அதிருப்தி என்பது மாற்றம் கண்ட அமைச்சரவைப் பட்டியலினும் பெரிது.

பலம் என்று சொல்லிக்கொள்ள எதிர்க்கட்சிகளிடம் இப்போதைக்குக் கைவசம் ஒன்றுமில்லாதது ஒன்றே ஜெயலலிதாவின் பலம். தனது ஆட்சியின் பலவீனங்களை இந்த ஒரு பலம் மறைத்துவிடும் என்று அவர் நினைப்பாரானால், அது பெரும் சரித்திரப் பிழையாகிப் போகும் வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது.

(நன்றி: தினமலர் – 21/03/16)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி