விநாயகரை வணங்கி, இதனை இன்று அறிவிக்கிறேன்.
Bukpet-WriteRoom எழுத்துப் பயிற்சி வகுப்புகளை முறைப்படித் தொடங்குகிறேன். இன்று மாலை இந்திய நேரம் 6.15க்கு என் நண்பர்கள் ராஜேஷ் கர்கா, பெனாத்தல் சுரேஷ், தினேஷ் ஜெயபாலன் இவர்களுடன் என் மகள் பாரதியும் இணைந்து சமூக வெளியில் இதற்கான இணையத்தளத்தை அறிமுகம் செய்வார்கள்.
தொடக்கமாக, எட்டு வகுப்புகளுக்கான விவரங்களும் அறிவிப்புகளும் இன்று வெளியாகும். இன்னும் சில பாடத் திட்டங்கள் பிறகு சேரலாம்.
இணையத்தளத்தைப் பார்வையிட்டு உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.
0
எழுதுவதெல்லாம் கற்றுக் கொடுத்து வராது என்று ஒரு சாரார் சொல்வார்கள். எதையும் கற்றுத்தரவும் கற்றுக்கொள்ளவும் முடியும் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவன் நான். முட்டி மோதி நான் கற்றதைத்தான் இப்போது பிறருக்குச் சொல்லித்தர முடிவு செய்திருக்கிறேன்.
இன்றைக்கு எழுத்து என்னும் துறை பல முகங்களையும் வடிவங்களையும் கொண்டதாகிவிட்டது. பத்திரிகை, புத்தகப் பதிப்புத் துறை, மின் நூல் பதிப்புத் துறை, தொலைக்காட்சி, செய்தித் தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளங்கள், விளம்பரத் துறை, சமூக வலைத்தளங்கள், யூ ட்யூப், மொபைல் என்று எங்கெங்கு காணினும் ‘கண்டெண்ட்’ தேவைப்படுகிறது. விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் எழுதப்படும் ‘கண்டெண்ட்’ மட்டும்தான் ரசிக்கப்படுகிறது; செல்லுபடியாகிறது. நவீன இலக்கியம் நீங்கலாக, இந்த விறுவிறுப்பும் சுவாரசியமும் தேவைப்படாத எழுத்து சார்ந்த துறைகளே இன்றில்லை.
ஆனால் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். இந்த விறுவிறுப்பும் சுவாரசியமும் கலை அல்ல. நுட்பம்தான். இதைக் கற்க முடியும். அடிப்படை மொழி அறிவும் வரம்பற்ற எழுத்தார்வமும் இருக்குமானால் தேர்ந்த எழுத்தாளராக உருப்பெறுவது எளிது.
இருபதாண்டுக் கால பத்திரிகை மற்றும் பதிப்பு ஆசிரியப் பணியின் அனுபவங்களை முதலீடாக்கி இதற்கான பாடத் திட்டங்களை வகுத்திருக்கிறேன். கற்க ஆர்வமுள்ளோரை அன்புடன் அழைக்கிறேன்.
0
இந்த எழுத்துப் பயிற்சி வகுப்புகளை நடத்துவதுடன் நான் ஒதுங்கிக்கொள்கிறேன். இணையத்தளம், மின்னஞ்சல் பரிமாற்றங்கள், வாட்சப் விசாரணைகள், கட்டண விளக்கங்கள் உள்ளிட்ட அனைத்தையும் என் மனைவி கவனித்துக்கொள்கிறார். அட்மின் அட்மின் என்று இவ்வளவு நாளாக இங்கே நான் குறிப்பிட்டு வந்த என் அட்மின் ஒரு fake admin அல்ல. உண்மையிலேயே இன்றுவரை என்னுடைய புத்தகப் பதிப்புகள் முதல் இந்த ஃபேஸ்புக் ப்ரொஃபைல் வரை நிர்வகித்து வருபவர் அவர்தான். இந்த முயற்சியும் அவரது மேற்பார்வையிலேயே ஆரம்பிக்கப்படுகிறது.
தளத்தின் தொழில்நுட்ப விவகாரங்களை என் நண்பர் செல்வ முரளி கவனித்துக்கொள்கிறார். கடந்த ஒரு மாத காலமாக இந்தத் தளத்தைக் கட்டியெழுப்ப அவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. செல்வ முரளியால் பில் கேட்ஸைக்கூட திருப்தி செய்துவிட முடியும். என்னைச் சமாளிப்பது எவ்வளவு சிரமம் என்பதை இந்நாள்களில் அவர் புரிந்துகொண்டிருப்பார்.
இந்த உலகில் ஆகச் சிரமமான பணி ஒன்று உண்டென்றால், அது எல்லாவற்றிலும் எளிமையைக் கொண்டு வருவதே. இந்த இணையத்தளம் அப்படி இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்படியே நடந்திருக்கிறது.
இம்முயற்சியில் என் உடன் நின்ற அத்தனைப் பேருக்கும் என் அன்பு.
எழுத்துப் பயிற்சி வகுப்பில் இணையவிருக்கும் முதல் மாணவர் யாராக இருப்பார் என்று அறிய இனி காத்திருப்பேன்.
இன்று மாலை 6.15க்கு இணையத்தள அறிமுக நிகழ்வில் மீண்டும் சந்திப்போம்.
Thank you sir.
அடிப்படை மொழி அறிவும் வரம்பற்ற எழுத்தார்வமும் இருக்குமானால் தேர்ந்த எழுத்தாளராக உருப்பெறுவது எளிது.
நீங்கள் குறிப்பிட்டது போன்று என்னுள் ஒருவகையான
இலக்கிய ஆர்வமும் ஆற்றலும் உண்டு. உங்கள்
நேர்காணல் சூரியன் வானொலிமூலம் முகநூலில்
பார்த்தேன். எனது முகநூலில் சில சிறுகதைகள்
கட்டுரைகள் ஒரு சில கவிதைகள் அப்பப்போ
எழுதிவருகின்றேன் ஆனால் ஒரு தரமிக்க எழுத்தாளராக
வரவேண்டும் எனது படைப்புகள் வரவேற்கபடவேண்டும்.
உங்கள் கருத்துகளை வரவேற்கின்றேன். அன்புடன்.
வேலு- சிறிதரன்.(டென்மார்க்கிலிருந்து)