அழுது தீர்த்திருந்த கோவிந்தசாமி ஒரு காஃபி கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறான். அந்த நினைப்பின் நீட்சி ஒற்றை காஃபிக்காக தன் சித்தாந்தத்தை கொத்தி கூறு போட்ட சாகரிகாவுடனான ஒரு சச்சரவை நினைவு கொள்ள வைத்து விடுகிறது. சிறிது நேரத்திற்கு முன்பு வரை காஃபியை நினைத்த கோவிந்தசாமியின் மனது சாகரிகாவை நினைத்துக் கொள்கிறது.
புதிய இரவு ராணிமலரை பறித்து அதில் தன் எண்ணத்தைக் கவிதை வடிவில் உச்சரித்து உருவேற்றிக் கொண்டு நடக்க ஆரம்பிக்கிறான். அந்த நடை அவனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது? மலர் சாகரிகா வீட்டிற்குப் போனதா? கோவிந்தசாமி நினைத்தது நடந்ததா?. அடுத்த சில அத்தியாயங்கள் வரையேனும் காத்திருக்க வேண்டியிருக்கும் என நினைக்கிறேன்.
தன்னை மகாகவியாய் நினைத்துக் கொள்ளும் கோவிந்தசாமியின் கார்கில் கவிதைக்கு சாகரிகா கொடுக்கும் எதிர்வினையும், தேசியவாதிகள் ஏன் கவிதை எழுதுவதில்லை? அல்லது கவிஞர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் ஏன் தேசியவாதியாக இல்லை? என்ற கோவிந்தசாமியின் கேள்விக்கு தமிழகஜி தரும் விளக்கத்தைக் கேட்டு கோவிந்தசாமி தன்னை பாரதிக்கு இணையாய் நினைத்துக் கொள்வதும், சமகால மகாகவிக்கு அப்துல் கலாமை உள்ளிழுத்து விடுவதும் முகநூல் கவிஞர்கள் தரப்பை பதம் பார்ப்பதற்கா? ஆழம் பார்ப்பதற்கா? எழுத்தாளர் பா.ரா.வுக்கே வெளிச்சம்!
#கபடவேடதாரி_போட்டி