பொன்னான வாக்கு – 39

கடந்த ரெண்டு மூணு தினங்களாக தினமலர் வெளியிட்டு வரும் கருத்துக் கணிப்பு முடிவுகளைப் பார்த்து யார் கிளுகிளுப்பு அடைகிறார்கள், யாருக்கு வெயிற்கால டயரியா சங்கடம் உற்பத்தியாகியிருக்கிறது என்பது ஒரு புறம் இருக்கட்டும். இந்த முடிவுகளின் ஓர் அம்சம் உண்மையிலேயே மிகுந்த வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. தமிழகத்தின் ஆகச்சிறந்த மூன்றாவது அணியாக ‘நோட்டா’ உருவெடுத்துவிடுமோ என்பதுதான் அது.

என்னதான் ஊது ஊதென்று ஊதினாலும் விஜயகாந்த் அணியோ, மேங்கோ ஃப்ரூட்டி மகானுபாவரோ செல்ஃப் எடுக்காத வண்டிகளாகத்தான் நிற்கிறார்கள். சீமான் குரூப்பெல்லாம் வடக்கு கிழக்கு மாகாணத் தேர்தலுக்குத்தான் பிரசாரம் பண்ணிக்கொண்டிருக்கிறார்களோ என்றே தோன்றிவிட்டது. கிட்டத்தட்ட பாமக அளவுக்கு மதிக்கத்தக்க ஒரு கட்சியாக பாரதிய ஜனதா உருவாகியிருப்பதும் தெரிகிறது. ஆனால் இந்த அத்தனை ‘மற்றும் பலரை’க் காட்டிலும் நோட்டா வாக்குகள் பல தொகுதிகளில் அதிகமாகவே இருப்பதைக் காணும்போது மக்கள் மிகவும் நொந்துபோயிருப்பதை உணர முடிகிறது.

நோட்டா வாக்குகளின் சதவீதத்தைப் பெரிதாக எண்ணி அஞ்சவேண்டாம் என்று விற்பன்னர்கள் ஆங்காங்கே சொல்லிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். இன்னும் யாருக்கு வாக்களிப்பதென முடிவு செய்யாதவர்களும் நோட்டாவைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்பது அவர்கள் கட்சி. யாருக்கு வாக்கு என முடிவு செய்யாதவர்கள் என்று யாரேனும் உண்டா என்ன? இருக்கலாம். அவர்கள் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களாகவே இருப்பார்கள் என்று தோன்றுகிறது.

இது ஒன்றும் தமிழக சரித்திரத்தில் நடைபெறுகிற முதல் தேர்தல் அல்ல. குழப்பங்களும் அறச்சீற்ற மோதல்களும் முட்டி மோதும் அளவுக்குப் பிராந்தியத்தில் பெரிதாக ஏதும் நிகழ்ந்துவிடவில்லை. அதே ஜெயலலிதாதான். அதே கருணாநிதிதான். அதே அரை நூற்றாண்டுக் கால அவஸ்தைகள்தாம். ஊழலில் வளர்ச்சி, அதிகார துஷ்பிரயோகங்களில் வளர்ச்சி, இலவசங்களில் வளர்ச்சி, கண்துடைப்பு வைபவங்களில் வளர்ச்சி.

சிலபல உத்தம நடவடிக்கைகள் இரு தரப்பு ஆட்சிக்காலங்களிலும் நடைபெறாதிருந்ததில்லை. ஆனால், பெரிய திடுக்கிடும் திருப்பங்கள் இல்லாத ஆட்சிகளைத்தான் இதுகாறும் பார்த்து வந்திருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கலாம். அப்படி இருக்கும்போது யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்ய முடியாமல் தத்தளிப்போர் சதவீதம் எப்படி அதிகரிக்கும்?

மாற்றத்தை உத்தேசிக்கும்போது அது நிகழலாம். ஆனால் மாற்றத்துக்காக முன்வைக்கப்பட்ட கூட்டணி ஆதித்யா சானலைவிட சிறந்த பல நகைச்சுவைக் காட்சிகளை அரங்கேற்றிக்கொண்டிருக்கும்போது தெரியாத தேவதை – தெரிந்த பிசாசு ஃபார்முலா அல்லவா முன்னுக்கு வரும்?

யாருக்கும் வாக்களிக்க இஷ்டமில்லை என்று சொல்வது ஒருவித தப்பித்தல் மனோபாவம். இதில் கோபம், அலட்சியம், வெறுப்பு, பழிவாங்கல், விரோதம் ஆகியவை போதிய அளவு கலந்திருக்கும். அவரவர் நியாயங்கள் என்பது இருக்கவே செய்யும். ஆனால் அனைத்து நியாயங்களுமே பொது தருமமாகிவிடாதல்லவா?

இது ஆபத்தானது. இதைக் காட்டிலும் பேராபத்து, ‘என் ஒரு வாக்கால் என்ன பெரிதாக நிகழ்ந்துவிடும்’ என்கிற எண்ணம். இருநூறு பேர் இப்படி நினைத்துவிட்டால் ஒரு வார்டு வாக்குகள் வீண் என்று அர்த்தம். லட்சம் பேர் நினைத்துவிட்டால் ஒரு பிராந்திய வாக்குகள் வீண் என்று அர்த்தம். அட, தொகுதிக்குப் பத்தாயிரம் பேர் நோட்டாவைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு லட்சத்தி முப்பத்தி நாலாயிரம் ஓட்டுகள் வீண். இது அநேகமாக நாலு வெற்றி வேட்பாளர்களின் மொத்த வாக்குகளாக இருக்கலாம்!

நமது ஜனநாயகத்தின் மிகப்பெரிய சௌகரியம், யாரும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எந்த முடிவும் எடுக்கலாம் என்பது. இது லீவு என்கேஷ்மெண்ட் மாதிரியான ஒரு ஏற்பாடு. தேவைப்பட்டால் லீவு போட்டுக்கொள்ளலாம். அவசியப்படவில்லை என்றால் வருஷக்கடைசியில் அதையே சம்பளமாக்கிக்கொள்ளவும் செய்யலாம். பயனருக்கே முழுப்பயன் என்னும் சித்தாந்தம். இதை துஷ்பிரயோகம் செய்யலாமா?

ஒரு கல்யாணம் நடக்கிறது. ஜாதகம் பார்த்து, பொருத்தம் பார்த்து, இரு தரப்புக் குடும்பங்களையும் குறித்துத் தீர விசாரித்து, பையனையும் பெண்ணையும் தனியே பேசிக்கொள்ள அனுமதித்து, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளச் செய்து, அதன்பின் பத்திரிகை அடித்து மாங்கல்யம் தந்துனானே சொல்லி, தாலி கட்டிக் கல்யாணம்.

மயக்கமெல்லாம் தீர்ந்த பிற்பாடு, என் பெண்டாட்டிக்கு வத்தக் குழம்பு வைக்கத் தெரியவில்லை என்று சொல்லி பையன் டைவர்ஸ் கேட்டால்? என் புருஷன் ராத்திரி படுத்தால் விடுகிற குறட்டைச் சத்தம் சகிக்கவில்லை என்று புகார் சொல்லி, அந்தப் பெண் விட்டுவிடுதலையாக நினைத்தால்?

மேற்படி இரு காரணங்களுமே நியாயமில்லை என்று சொல்லிவிட முடியுமா! குறட்டை போலொரு இம்சை இல்லை. வத்தக்குழம்பு இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா! நியாயம்தான். ஆனால் அதற்கு டைவர்ஸ் தீர்வாகுமா?

புருஷனாகப்பட்டவன், தன் பெண்டாட்டிக்கு மீனாட்சியம்மாளின் சமைத்துப் பார் புத்தகத்தைப் பிறந்த நாளுக்குப் பரிசளிக்கலாம். அல்லது அவனே வத்தக்குழம்பு செய்யக் கற்றுக்கொண்டு மனைவிக்கும் சமைத்துப் போட்டு அசத்தலாம். பெண் தெய்வமானது, காதுகளில் பஞ்சடைத்துக்கொண்டு படுக்கலாம். அல்லது குறட்டையின் ஆரோகண, அவரோகண சுரங்களை ஆராய்ச்சி செய்து பிஎச்டி வாங்கலாம்.

நமது ஜனநாயகத்தின் சௌகரியங்கள் எப்படிப்பட்டவை என்பதை, பக்கத்து ஊர் பாகிஸ்தான் அரசியல் நிகழ்வுகளோடு அவ்வப்போது ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வது நமக்கு இருக்கிற எளிய வழி. அங்கும் ஜனநாயகம்தான். ஆனால் அடிக்கடி டவுசர் அவிழும் ஜனநாயகம். நோட்டாவைத் தேர்ந்தெடுப்பதென்பது, தனி மனித சுதந்தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் நமது அரசியல் அமைப்பை கேலி செய்வதாகும்.

உள்ளதில் ஒன்று; உருப்படியான ஒன்று என்பதே நமக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது. சுதந்தரம் என்பது வேலிகளற்று இருப்பதல்ல. வசதிக்கேற்ப வேலிகளை நகர்த்திக் கட்டிக்கொள்வது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter