பொலிக! பொலிக! 31

கீதையின் மோட்ச சன்னியாச யோகத்தில் இடம் பெறும் ‘சர்வ தர்மான் பரித்யஜ்ய, மாம் ஏகம் சரணம் வ்ரஜ | அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோட்ச இஷ்யாமி மாஸுச:’ என்னும் வரி மிக மிக நுணுக்கமானது. மேலோட்டமாக இதன் பொருளை இப்படிச் சொல்லலாம்:

அனைத்து தருமங்களையும் விடுத்து என்னைச் சரணடைந்தால், உன் பாவங்கள் அனைத்தையும் நான் தீர்ப்பேன்; அனைத்துக் கட்டுகளில் இருந்தும் உன்னை நான் விடுதலை செய்வேன்.

இந்த வரி இடம் பெறுவதற்கு முந்தைய சுலோகம் வரை, அதாவது பதினேழு அத்தியாயங்களிலும் பகவான் கிருஷ்ணர் தர்மத்தைப் பற்றித்தான் பேசுகிறார். அவரவர் தருமங்களும் உலகப் பொதுவான தருமங்களும். தருமங்களைத் தழைக்க வைக்கும் உபாயங்களாகப் பலவித யோகங்களை அறிமுகப்படுத்துகிறார். கர்ம யோகம். ஞான யோகம். பக்தி யோகம். இன்னபிற யோகங்கள். ஒவ்வொன்றுக்குமான செயல்முறை விளக்கங்கள். தரும நெறி தவறாத வாழ்வுக்கான வழிமுறைகள்.

அனைத்தையும் விளக்கிச் சொல்லிவிட்டு இந்த இடத்துக்கு வருகிறார். சர்வ தர்மான் பரித்யஜ. எல்லா தருமங்களையும் அவற்றை எட்டிப் பிடிக்க உதவுகிற யோகங்களையும் விட்டு விடுதலையாகி சரணாகதியைப் பற்றிக்கொள்; அதுவே பரிபூரண விடுதலை நிலைக்கான உபாயம்.

என்றால், இதை ஏன் முதலிலேயே சொல்லியிருக்கக்கூடாது? வேலை மெனக்கெட்டு எனக்குரிய உபாயத்தைத் தேடிப் பிடித்து, எனது தருமத்தைக் காக்கிற வெட்டிவேலை எதற்கு? அனைத்தையும் தூக்கிக் கடாசிவிட்டு நீயே சரணம் என்று முதல் வரியிலேயே வந்து விழுந்துவிட்டிருப்பேனே?

என்றால், அங்குதான் இருக்கிறது சூட்சுமம். கீதை, ஒரு சிமிழில் அடைக்கப்பட்ட பாற்கடல். சிமிழைத் திறக்கத்தான் தருமங்களும் யோகங்களும். திறந்ததும் குதிக்கச் சொல்லுவதே இந்த சரம சுலோகம். ஒரு வரியில் விளக்கிவிடக்கூடிய விஷயமல்ல. தவம் வேண்டும். தியானம் வேண்டும். பக்தி வேண்டும். மேலாக வேண்டுவது சரணாகதி.

ராமானுஜருக்கு இது தெரியும். திருக்கோட்டியூர் நம்பி தாமே முன்வந்து சரம சுலோகத்தின் உட்பொருளை உனக்கு விளக்குகிறேன் என்று சொன்னபோது நெகிழ்ந்துபோய் விட்டார். என்ன கற்கிறோம் என்பதைக் காட்டிலும் யாரிடம் அதைக் கற்கிறோம் என்பதும் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.

கோட்டியூருக்குப் போகிற வழியில் ராமானுஜருக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. ஒரு சமயம் திருக்கோட்டியூர் நம்பியிடம் சீடரொருவர் கேட்டார், ‘சுவாமி, நீங்கள் தினமும் தியானம் செய்கிறீர்கள். எதை நினைத்து தியானம் செய்வீர்கள்? உங்களுடைய தியான மந்திரத்தை எங்களுக்கும் சொல்லிக்கொடுக்கலாமே?’

நம்பிகள் சிரித்தார். ‘அப்பனே, என் ஆசாரியர் ஆளவந்தார் அடிக்கடி காவிரியில் குளிக்கப் போவார். அவருக்கு ரொம்பப் பிடித்த விஷயம் அது. நீரில் அமிழ்ந்து அவர் நீந்திச் செல்லும்போது அவரது முதுகு மட்டும் வெளியே தெரியும். நதிப்பரப்பில் ஒரு திடல் நகர்ந்து செல்வது போல இருக்கும். சம்சாரக் கடலில் மனித குலம் அப்படித்தான் ஒரு தக்கைபோல மிதந்து நகர்ந்துகொண்டிருக்கிறது என்று சட்டெனத் தோன்றும். எனக்கு அந்த முதுகுத் திடலை நதிப்பரப்பில் பார்த்துக்கொண்டிருப்பது என்றால் ரொம்ப இஷ்டம். அதைத்தான் நான் தியானத்தின்போது நினைத்துக்கொள்வேன். தியான மந்திரமென்பது எனது ஆசாரியரின் திருப்பெயர்தான்!’

எப்பேர்ப்பட்ட குரு! எக்காலத்துக்கும், எத்தலைமுறைக்குமான பேரனுபவமல்லவா இது! குருட்சேத்திரத்தில் அர்ஜுனனுக்குக் கிடைத்தது, ஆசாரியரின் வெற்று முதுகில் குருகைப் பிரானுக்கு வாய்த்திருக்கிறது! இங்கே தேரோட்டி இல்லை. தெளிய வைப்பவன் இல்லை. விஸ்வரூபம் காட்டி வியப்பூட்ட ஆள் இல்லை. சட்டென்று பொறி தட்டிய ஞானம். சிப்பிக்குள் உதித்த முத்தொன்று தானே உவந்து வெளிவந்து தனது பேரெழில் காட்டி நிற்கிற பரவசத் தருணம்.

‘நான் கொடுத்துவைத்தவன்!’ என்று ராமானுஜர் தனக்குள் எண்ணிக்கொண்டார். நம்பிகளின் வீட்டை நோக்கி வேகவேகமாக நடந்தார்.

வீட்டில் அவரது மகள் தேவகி இருந்தாள்.

‘அடியேன் ராமானுஜன் வந்திருக்கிறேன். நம்பிகளைச் சேவிக்க வேணும்.

‘அப்பா மச்சில் தியானத்தில் இருக்கிறார். சற்றுப் பொறுங்கள். கேட்டு வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு அவள் உள்ளே போனாள். சில நிமிடங்களில் திரும்பி வந்து, ‘தங்களை அங்கே வரச் சொல்கிறார்!’

ராமானுஜர் படியேறி மாடிக்குச் சென்றார்.

‘வாரும் ராமானுஜரே! சரம சுலோகப் பொருள் கேட்க வந்தீரா?’

‘ஆம் சுவாமி! தாங்கள் அன்று சொன்னதில் இருந்து வேறு நினைவே இல்லாதிருக்கிறேன்.’

குருகைப் பிரான் கண்மூடி ஒரு நிமிடம் தியானத்தில் ஆழ்ந்தார். பிறகு எழுந்து சென்று அறைக்கதவைத் தாளிட்டார். ஜன்னல்களை மூடினார். எதிரே வந்து அமர்ந்து,
‘இது மூல மந்திரத்தைக் காட்டிலும் பரம ரகசியமானது. தயவுசெய்து கோபுரத்தில் ஏறி அறிவித்துவிடாதீர்கள்!’

‘இல்லை சுவாமி, மாட்டேன்.’

‘உம்மை நம்புகிறேன்!’ என்று சொல்லிவிட்டு சரம சுலோகத்தின் ஆழ்ந்த உட்பொருள்களை ராமானுஜருக்கு விளக்கத் தொடங்கினார். கண்மூடிக் கரம் கூப்பிக் கேட்டுக்கொண்டிருந்த ராமானுஜரின் விழிகளில் இருந்து கரகரவென நீர் வழிந்தபடியே இருந்தது. பரமாத்ம சொரூபம் என்பது சிலைகளில் தென்படுவதல்ல. மனத்துக்குள் உணர்வது அல்ல. கற்பனை எல்லைகளுக்குள் அகப்படுவதல்ல. தத்துவ ஞானத் தேடல்களில் சிக்குவதல்ல. அது உருவமுள்ள காற்று. மை மறைத்த பெருவெளிச்சம். அண்டப் பெருவெளியெங்கும் தங்குதடையின்றிப் பொங்கிப் பரவுகிற பேரானந்தத்தின் ஊற்றுக்கண். உணர்வல்ல; அதற்கும் மேலே.

அந்த சொரூபத்தின் பேரெழிலைத்தான் திருக்கோட்டியூர் நம்பி ராமானுஜருக்குக் காண்பித்தார். இந்தா எடுத்து விழுங்கு. இதனை நினை. இதனை மட்டுமே நினை. உன் நினைவில் நீ அடையும் சரணாகதி உன்னை அந்தச் சொரூபத்திடம் கொண்டு சேர்க்கும். பெறற்கரிய பேரானந்தம் என்பது அதுதான். உடலும் மனமும் உதிர்த்த நிலையில் உதிப்பது சரணாகதி. அது மட்டும்தான் உய்ய வழி.

கரம் கூப்பி எழுந்து நின்றார் ராமானுஜர். ‘சுவாமி, எப்பேர்ப்பட்ட அனுபவத்தை எனக்கு வழங்கிவிட்டீர்கள்! என்னை நீர் ஏற்றது என் பேறு. ஆனால்…’

‘சொல்லும் ராமானுஜரே!’

‘கோபித்துக்கொள்ளாதீர்கள். இந்த அற்புதத்தை ஒரே ஒருவருக்காவது நான் சொல்லித்தர எனக்கு அனுமதி வேண்டும். பாகவத உத்தமனான கூரத்தாழ்வானுக்கு மட்டுமாவது..’

ஒரு கணம் அவரை உற்றுப் பார்த்த குருகைப் பிரான் சட்டென்று சிரித்துவிட்டார்.

‘உம்மைத் திருத்த முடியாது ராமானுஜரே! சரி, ஒரே ஒரு நிபந்தனை!’ என்றார்.

(தொடரும்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter