பொன்னான வாக்கு – 05

 

சாமி படத்தில் கோட்டா சீனிவாசராவ் ஒரு வசனம் சொல்லுவார். ‘அவன் பேசும்போது காது ஆடிச்சி, பாத்தியாவே? அவன் நம்ம சாதிக்காரப் பயதாவே.’

இந்த ஒருவரியை ரொம்ப நாள் சிந்தித்துக்கொண்டே இருந்தேன். யானைக்குக் காது ஆடும். தேடினால் வேறு ஒன்றிரண்டு மிருகங்கள் தேறலாம். யாராவது நரம்புக் கோளாறு உள்ளவர்களுக்குக் காது கொஞ்சம்போல் ஆடலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட சாதிக்காரர்கள் அத்தனை பேருக்கும் எப்படிக் காது ஆடும்? கொல்லங்குடி கருப்பாயிக்குக்கூட பாம்படம்தான் ஆடும். என்றைக்காவது ஹரியைப் பார்க்க நேர்ந்தால் இதை விசாரிக்க வேண்டும்.

தாய்த்திரு நாட்டில் அழிக்கவே முடியாத சங்கதிகள் இரண்டு இருக்கின்றன. முதலாவது கரப்பான்பூச்சி. அடுத்தது ஜாதி அரசியல். மேலுக்கு ஆயிரம் பேசினாலும் பேரல் பேரலாக பேகான் ஸ்ப்ரே அடித்தாலும் ஏற்றுக்கொள்ளவும் சகித்துக்கொள்ளவும் அடிப்படையில் நாம் பழகியிருக்கிறோம். சாதிக்காரன் ஒருத்தன் நிற்கும்போது இன்னொருத்தனுக்கு என் ஓட்டு கிடையாது என்பதை பகிரங்கமாகவே சொல்லக்கூடிய சமூகம் இது. வாழ்க. சாதி இரண்டாயிரமொழிய வேறில்லை.

கொஞ்சம் படித்த, பேண்ட் சட்டை போட்டு ஒரு உத்தியோகத்துக்குப் போய் நாலு காசு சம்பாதிக்கும் தலைமுறைக்கு இந்த எண்ணம் சற்று மட்டுப்பட்டிருக்குமோ என்னமோ. அடித்தட்டு மகாஜனங்கள் பெரும்பாலும் அப்படியேதான் இருக்கிறார்கள். மாற்றம் முன்னேற்றம் என்று யார் என்ன சொன்னாலும் மாறாத சாதி ஓட்டுகள் சார்ந்த கணக்கீடுகள் யாருக்கும் இல்லாதிருப்பதில்லை.

சமீபத்தில் ஒரு புதிய ஓட்டாளியிடம் (ஓட்டாண்டியல்ல) சிறிது நேரம் பேச்சுக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அந்தப் பெண் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திலிருந்து உத்தியோக நிமித்தம் சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்த குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளைப் போன்ற பல நூறு குடும்பங்கள் அதே பிராந்தியத்திலிருந்து வீட்டு வேலை செய்யவும் இதர சிறு உத்தியோக சாத்தியங்களை எதிர்பார்த்தும் இடம் பெயர்ந்தவர்கள்.

எலக்‌ஷன் வரப் போகிறதே, யாருக்கு ஓட்டுப் போடப் போகிறாய்? என்று சும்மா ஒரு ஊதுபத்தி கொளுத்தி வைத்தேன். அவள் சற்றும் யோசிக்கவில்லை. ‘விசயகாந்துக்குப் போடப் போறேண்ணா’ என்றாள் தடாலென்று.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. அவளது சாதிக்காரர்கள் எனக்கு நினைவு தெரிந்த நாளாக ங்கொப்புறான ஒரு குறிப்பிட்ட கட்சியைத் தவிர இன்னொரு கட்சிக்கு வாக்களித்ததில்லை. அது சில தென் மாவட்டங்களில் பலம் பொருந்திய கட்சி என்பதும் சாதி ஓட்டுகள் சிதறாது என்பதும்தான் கூட்டணி பேரங்களின்போது பெரிதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் இந்தப் பெண் என்ன இப்படிச் சொல்கிறாள்? சரி, சற்று மேலும் கொளுத்தலாம்.

‘ஏம்மா, விசயகாந்து உங்க சாதி இல்லியே?’

‘ஆமாண்ணா. ஆனா அவரு நல்லவரு.’

‘அப்பிடியா? ஆரு சொன்னாங்க?’

‘தோணிச்சி.’

‘ஒனக்கு விசயகாந்து படமெல்லாம் புடிக்குமோ?’

‘ஐயே அவருக்கு நடிக்கவே வராது. ஆனா அவரு வெள்ளந்தியா இருக்காரு.’

‘ஆனா எப்பவும் ரொம்ப டைட்டாவே இருப்பாருன்னு சொல்றாங்களேம்மா?’

‘போங்கண்ணா. யாரு இப்பங் குடிக்கல? என் ஊட்டுக்காரர் கூடத்தான் குடிக்காரு.’

இதற்குமேல் பேச ஏதுமில்லை என்று தோன்றிவிட்டது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அந்தப் பெண்ணே சொன்னாள், ‘எங்கத்த வளக்கமா போடுற கட்சிக்குத்தான் போடணுன்னு சொன்னாங்க.. ஆனா நான் கேக்கமாட்டேன். எப்பிடியும் அவங்கல்லாம் சிஎம்மாவ முடியாதுண்ணா.’

என்றால், விஜயகாந்தால் முடியுமா?

‘சும்மாருங்கண்ணா.. எனக்கு வேல இருக்குது. சொம்மா அவிங்க ரெண்டு பேரே மாத்தி மாத்தி வர்றாங்க.. இந்த தடவ இவரு வரட்டும்.’

ஒரு மாதிரிக்காகத்தான் இதைக் குறிப்பிட்டேன். இத்தகைய வாக்காளர்களின் சதவீதம் மிகக் குறைவே. ஆனால் சாதி ஓட்டுகளும் இவ்வாறாகப் பிரியும் சாத்தியங்கள் இருப்பதை நாம் யோசித்துப் பார்க்கலாம்.

என்ன கணக்குப் போட்டாலும் ஆட்சி என்பது திமுக-அதிமுகவுக்கு இடையிலான போட்டி மட்டும்தான். கூட்டணிகள் மாறும். வியூகங்கள் மாறும். இருக்கைகளின் எண்ணிக்கை மாறும். ஆனால் மூன்றாவதாக ஒன்று தமிழகத்தில் வரவேண்டுமென்றால் அது டொனால்ட் ட்ரம்ப் வந்தால்தான் முடியும். புதிய ஆம்பள மூஞ்சி கஷ்டமா? சரி, லியனார்டோ டிகாப்ரியோவை மநகூவுக்கு அழைத்து வந்துவிடலாம். அல்லது டி வில்லியர்ஸைத் தூக்கி தமிழ்நாடு காங்கிரசில் போடு!

இரண்டுக்குப் பிறகு எப்போதும் வேண்டாம் என்பது தமிழனின் தாரக மந்திரம். அரசியல் மட்டும் விதிவிலக்கா என்ன?

 

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி