திகைத்துவிட்டான் கூரத்தாழ்வான். பேச்செழ வழியில்லாத திடுக்கிடல். நெடுநேரம் பிரமை பிடித்தாற்போல் எங்கோ பார்த்தபடி அப்படியே உறைந்துபோய் நின்றிருந்தான்.
‘இதில் வருத்தப்பட ஏதுமில்லை கூரேசா! ஆசாரியர் நியமனம் என்னவோ அதைத்தான் நாம் கடைப்பிடித்தாக வேண்டும். மீறுவதற்கான நியாயம் இதில் சற்றும் இல்லை.’
‘புரிகிறது சுவாமி. ஆனால் ஒரு வருடம் என்றல்லவா சொல்லிவிட்டார்!’
ராமானுஜர் புன்னகை செய்தார். ஆம். ஒரு வருடம்தான். அப்படித்தான் குருகைப் பிரான் சொன்னார். கூரேசனுக்கு மட்டுமாவது சரம சுலோகத்தின் ஆழ்ந்த உட்பொருள்களைச் சொல்லி வைக்கிறேன் என்று அனுமதி கேட்டதற்கு அவர் விதித்த நிபந்தனைக் காலம் அது. ஒரு முழு வருடத்துக்குக் கூரேசன் ஆசாரிய சேவை புரியவேண்டும். இம்மியளவும் பிசகாத, இடைவிடாத சேவை. சரம சுலோகத்தின் அருமை புரிய மனம் ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பக்குவப்பட வேண்டும். தொண்டால் மட்டுமே அது சாத்தியம். ஊருக்குச் செய்ய வேண்டாம், வேறு யாருக்கும் செய்ய வேண்டாம். உமக்குச் செய்தால் போதுமானது என்றார் குருகைப் பிரான்.
ஒரு வருடத் தொண்டு கூரேசனுக்கு ஒரு பெரிய விஷயமில்லைதான். தனது வாழ்வையே ராமானுஜரின் பாதங்களில் சமர்ப்பித்தவனுக்கு ஒரு வருடம் என்பது ஒன்றுமேயில்லைதான். ஆனால் ஓர் அற்புதத்தின் வாசல் திறக்க அந்த ஒரு வருட காலக் காத்திருப்பு கட்டாயம் என்னும்போதுதான் சங்கடமாகிப் போகிறது.
‘வேறு வழியில்லை கூரேசா. அதுதான் அவர் சொன்னது. அதைத்தான் நான் கடைப்பிடித்தாக வேண்டும். இந்த உபாயம்கூட இன்னும் முதலியாண்டானுக்குக் கிட்டவில்லை என்பதை எண்ணிப் பார்!’
‘இல்லை சுவாமி. நான் அதையெல்லாம் எண்ணவில்லை. ஆனால் நீங்கள் நினைத்தால் இதற்கொரு மாற்று வழி காண முடியாதா?’
‘அப்படி ஒன்று இருக்குமானால் முயற்சி செய்திருக்க மாட்டேனா?’
கூரேசன் சற்றுத் தயங்கினான். ‘உங்களுக்குத் தெரியாததல்ல. ஆசாரியர் இருப்பிடத்தின் வாயிலில் ஒரு மாத காலம் உபவாசமிருப்பது ஒரு வருடம் சிசுருஷை செய்ததற்குச் சமம் என்று நமது சாஸ்திரம் சொல்கிறது…’
கூரேசன் பெரும் பண்டிதன். அவன் பயிலாத சாத்திரங்கள் இல்லை. எந்தத் தருணத்துக்கும் பொருத்தமான சாத்திர உதாரணங்களை அவனால் சட்டென்று எடுத்துக் காட்ட முடியும். இது ராமானுஜருக்கு நன்றாகத் தெரியும். எனவே குருகைப் பிரான் சொன்ன ஓராண்டு ஆசாரிய சேவைக்கு மாற்றாகக் கூரேசன் முன் வைத்த ஒரு மாத உபவாச யோசனை அவருக்குச் சரியாகப் பட்டது.
‘ஆனால் நான் பொறுமையின்மையால் இதனைக் கோரவில்லை சுவாமி! ஒரு வருடம் காத்திரு என்று நீங்கள் சொல்வீரானால் ஒரு வருட காலத்துக்கு இந்த உயிர் ஜீவித்திருக்கும் என்று நாமே நம்புவது போலாகிவிடும். நிச்சயமற்ற மனித வாழ்வில் ஒரு வருடத்துக்கு ஒன்றைத் தள்ளிப்போடுவது தங்களுக்கு உவப்பானதாக இருக்க முடியாது என்றே கருதுகிறேன்.’
கூரேசன் குடும்பஸ்தன்தான். ஆனால் அவனது மனத்தூய்மையும் பற்றற்ற பெருவழிப் பாதைப் பயணமும் ராமானுஜர் அறியாததல்ல. பரமாத்ம சொரூபத்தை அறிவதிலும் அதிலேயே லயித்துக் கிடப்பதிலும் அவனுக்கிருந்த கட்டற்ற பேரவா ஒப்பீடற்றது. தமக்குக் கிட்டிய சரம சுலோக ரகஸ்யார்த்தங்கள் தனது சீடர்களில் ஒருவருக்காவது கிடைத்துவிட வேண்டும் என்று ராமானுஜர் எண்ணியபோது சட்டென்று கூரேசனின் நினைவு வந்தது அதனால்தான்.
‘சரி சுவாமி! நான் இன்று முதலே எனது உபவாசத்தைத் தொடங்கிவிடுகிறேன். ஒரு மாத காலம் என் நாவில் நீரும் படாது. உமது திருமாளிகை வாசலில் இச்சென்மம் பழி கிடக்கும்.’
வணங்கி எழுந்து வாசலுக்குப் போய்விட்டான் கூரேசன்.
மடத்தில் இருந்த அத்தனை பேரும் இதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். முதலியாண்டானுக்குப் பெரும் வருத்தமாகிப் போய்விட்டது.
‘சுவாமி, எனக்கு சரம சுலோகத்தின் ஆழ்பொருள் அறியும் யோக்கியதை இல்லையா? நான் அத்தனை பெரிய பாவியா?’
‘அப்படி இல்லை தாசரதி! நீ என் உறவுக்காரன். அந்தப் பாசத் தடுப்பு நம் இருவருக்குமே இருந்துவிடக் கூடாது. சரம சுலோகம் அறிய அபாரமான நிஷ்டை நியமங்கள் தேவையென்று திருக்கோட்டியூர் நம்பி கருதுகிறார். என் உறவினன் என்ற ஒரே காரணம் பற்றி உனக்கு நான் இதனை போதித்துவிட்டால் அதன் மதிப்பு அர்த்தம் இழந்து போய்விடும்.’
‘புரிகிறது சுவாமி.’
‘என்னைக் கேட்டால் நீ திருக்கோட்டியூர் நம்பியிடம் தனியே செல். அவரது தாள் பணிந்து அவரையே உனக்கு போதிக்கச் சொல்லுவதுதான் சரி. அவர் உன்னை ஒப்புக்கொண்டுவிட்டால் அதற்குமேல் ஒன்றுமே இல்லை.’
‘அப்படியே ஆகட்டும் சுவாமி!’ என்று அன்றே புறப்பட்டான் முதலியாண்டான்.
இதற்குள் ராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பியிடம் கேட்ட சரம சுலோக ரகஸ்யார்த்தங்களைத் தாமும் பெறுவதற்காகக் கூரேசனும் முதலியாண்டானும் மேற்கொண்டிருக்கும் முயற்சி ஊரெல்லாம் பரவிவிட்டது. திருவரங்கத்தில் ராமானுஜர் தங்கியிருந்த மடத்தின் வாசலில் கூரேசன் அன்ன ஆகாரமின்றித் தவமிருப்பதைப் பார்க்க மக்கள் வந்தபடி இருந்தனர்.
அது திருவரங்கம் அதுவரை காணாத காட்சி. எப்படிப்பட்ட குரு! எப்பேர்ப்பட்ட சீடர்! ஒழுக்கத்தின் உயர் கல்வி என்பதை இவர்களிடம் அல்லவா பயில வேண்டும்! பரவசப்பட்டுப் போனார்கள்.
ராமானுஜரின் எதிர்ப்பாளர்களுக்கு இது இன்னும் ஆத்திரத்தைக் கிளப்பியது. என்ன பெரிய சரம சுலோகம், என்ன பெரிய உபவாசம்! வழி வழியாக வந்த நடைமுறைகளை மதிக்கத் தெரியாத கூட்டத்துக்கு இதிலென்ன ஒழுக்க வேஷம்?
இங்கே அவர்கள் பொருமிக்கொண்டிருந்தபோது அங்கே திருக்கோட்டியூரில் முதலியாண்டான் நம்பியின் வீட்டைச் சென்றடைந்தான்.
‘வாரும். என்ன சேதி?’
‘சரம சுலோக ரகஸ்யார்த்தங்களைத் தங்களிடம் அறிய வந்திருக்கிறேன் சுவாமி! கருணைகூர்ந்து என்னைக் கடாட்சித்து அருளவேண்டும்.’
ஒரு கணம் அவனை ஏற இறங்கப் பார்த்தார் திருக்கோட்டியூர் நம்பி.
‘மூன்று கர்வங்கள் உனக்கு இருக்கின்றன. குலம், கல்வி, செல்வம் சார்ந்த கர்வங்கள். இந்த மூன்றையும் உதறித் தள்ளிவிட்டு எம்பெருமானைச் சரணடைகிற வழியைப் பார். அவரே உனக்கு வழி காட்டுவார்.’ என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.
உடல் நடுங்க, கூப்பிய கரங்களை எடுக்கவும் தோன்றாமல் முதலியாண்டான் அங்கேயே ஆணியடித்தாற்போல நின்றிருந்தான். அவன் கண்கள் மட்டும் கதறிக் கொட்டிக்கொண்டிருந்தன.
(தொடரும்)