இது போதும்

நேற்று டிஸ்கவரி வேடியப்பன் அழைப்பின் பேரில் ஆண்டிறுதி புத்தக இரவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன். நண்பர் சமஸையும் என்னையும் கேஎன் சிவராமன் கேள்விகள் கேட்டுப் பேச வைத்தார். நிகழ்ச்சியில் ஒரு வினா – புதிய எழுத்தாளர்களை நீங்கள் எவ்வாறு அடையாளம் காண்கிறீர்கள்? எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

சுமார் இருபதாண்டுகளாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பலர் இதனைக் கேட்டுவிட்டார்கள். பதில் மிக எளிமையானது. அப்படித்தான் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் ஒருமுறைகூட நான் சொன்னதை யாரும் சரியாகப் புரிந்துகொண்டதாகத் தெரிந்ததில்லை. இன்னொரு முறை இங்கே சொல்லிப் பார்க்கிறேன்.

1. எழுதுவதில் அடிப்படை ஒழுக்கம், அடிப்படை சுத்தம், சிறிதளவு நேர்த்தி இருக்கிறதா என்று முதலில் பார்ப்பேன்.

2. சுருக்கமாகச் சொல்வது குறித்த விருப்பமாவது இருக்கிறதா என்று கவனிப்பேன்.

3. நூறு சொற்களுக்கு ஒன்றாவது அட என்று சொல்ல வைத்தால் போதும்.

இம்மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தேறுவது கடினம். மூன்றும் கூடியிருந்தால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இழுத்துக்கொண்டு ஓட முடியும்.

எழுத்து கற்க வருவோரிடம் அவர்களைக் குறித்த சுருக்கமான அறிமுகம் ஒன்றை எழுதி அனுப்பச் சொல்லிக் கேட்பது என் வழக்கம். அவர்கள் யார், என்ன ஜாதி, என்ன நட்சத்திரம், கோத்திரம் என்று தெரிந்து எனக்கென்ன ஆகப் போகிறது? தகவல் பிழையில்லாமல் எழுதத் தன்னைப் பற்றி எழுதுவதுதான் எளிய வழி. அதனால்தான் அதைக் கேட்பேன். அப்படி எழுதி அனுப்பப்படும் சிறு குறிப்புகளின் முதல் ஒன்றிரண்டு வரிகளுக்குள் எனக்கு முன்சொன்ன மூன்று பொருத்தங்களும் உண்டா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

சென்ற வருடம் அப்படி வந்தவர்களுள் நான்கைந்து பேர் எனக்குத் தரமான கரங்களாகத் தென்பட்டார்கள். ராஜிக் இப்ராஹிம், ஜெயரூபலிங்கம், ஶ்ரீதேவி, கோகிலா பாபு, ரும்மான் போன்றவர்களிடம் மொழி நேர்த்தி இயல்பாகவே இருந்தது. ஶ்ரீதேவி, ரும்மான் இருவரிடமும் நூதனமானதொரு ஸ்டைலும் தென்பட்டது. (ஆனால் அவர்கள் இன்னும் அதைக் கண்டுபிடித்ததாகத் தெரியவில்லை.) தொடர்ச்சியான எழுத்து ஒழுக்கம் கடைப்பிடிக்கும்போது இவர்களுடைய எழுத்து கவனம் பெற்று மேலே வரும்.

மேற்சொன்னவர்கள் தவிர இன்னொருவர் இருக்கிறார். ஒரே ஒரு வகுப்புக்குத்தான் வந்தார். ஒரே ஒரு பயிற்சிக் கட்டுரைதான் அவரை எழுதச் சொன்னேன். அதிலும் முதல் பத்தியை மட்டும்தான் படித்தேன். உடனே மெட்ராஸ் பேப்பருக்கு எழுதச் சொன்னேன். நான்கைந்து கட்டுரைகள் எழுதியிருப்பார். சட்டென்று புத்தகம் எழுதுகிறீர்களா என்று கேட்டேன். அரை மணி நேரம் சொல்லிக் கொடுத்திருந்தால் அதிகம். பாண்டியராஜனின் ‘ராகுல்’ இந்த சென்னை புத்தகக் காட்சியில் வெளியாகிறது.

அந்தப் புத்தகத்தைச் சிறிது பொருந்திப் படித்துப் பார்த்தீர்களென்றால் நான் சொல்ல வருவது புரியும். எழுத்து நேர்த்தி, எழுத்து ஒழுக்கம் என்பதை அவ்வளவு எளிதாக விளக்கிப் புரிய வைத்துவிட இயலாது. ஒரு நாவலுக்கு அதன் ஆசிரியர்தான் எஜமானர். அவர் என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம், எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். மொழிப் பிழைகள், பிசிறுகள் அனைத்தும் அதில் மன்னிக்கப்படும் அல்லது ஏதாவதொரு காரணம் சொல்லி மறக்கடிக்கபடும். இலக்கியத் தரம் என்ற ஒன்று கூடிவிடுமானால் இதர பிழைகள் அனைத்துமே மன்னிக்கப்பட்டுவிடும்.

ஆனால் அபுனைவு அப்படியல்ல. அவ்வளவு எளிதுமல்ல. சொல்லுக்குச் சொல் ஆதாரங்கள் அவசியம். புள்ளிவிவரங்கள் அவசியம். அது போரடித்துவிடாமல் கோக்கும் லாகவம் அவசியம். எங்கே விறுவிறுப்பு தேவை, எங்கே சுவாரசியம் தேவை, எங்கே ஓட வேண்டும், எங்கே நிறுத்தி நிதானமாகப் பேச வேண்டும், எங்கே அழுத்தம் தர வேண்டும், எதைத் துலக்கிக் காட்ட வேண்டும், எதை மறைபொருளாகச் சொல்ல வேண்டும் என்கிற சூட்சுமம் அறிந்திருக்க வேண்டும்.

இது ஒரு நுட்பம். எடுத்தால் வைக்க முடியாமல் படித்து முடிக்கக்கூடிய தரத்தில் ஒரு அபுனைவு நூலை எழுதி முடிப்பது அவ்வளவு எளிதல்ல. பாண்டியராஜனுக்கு அது இந்தப் புத்தகத்தில் சாத்தியமாகியிருக்கிறது. என்னிடம் அவர் கற்றது வெகு சொற்பம். சரியாகச் சொல்வதென்றால் இன்னும் தொடங்கவேயில்லை. இயல்பிலேயே அவருக்குக் கட்டுரை எழுத்தின் சூட்சுமம் பிடிபட்டிருக்கிறது. சரியாக யோசிக்கவும், யோசித்ததை நேர்த்தியாகக் கோக்கவும் தெரிந்திருக்கிறது. பிறருக்கு அது இந்தப் புத்தகத்தில் தென்படும். எனக்கு அவர் முதலில் அனுப்பிய பயிற்சிக் கட்டுரையின் முதல் பத்தியில் தெரிந்துவிட்டது. அவ்வளவுதான் வேறுபாடு.

சென்ற ஆண்டு தொண்ணூறு பேருக்கு மேல் என்னிடம் வந்து கற்றுச் சென்றார்கள். அதில் எனக்கு ஓரளவு திருப்தியளித்த சுமார் பத்துப் பதினைந்து பேருக்குத்தான் மெட்ராஸ் பேப்பரில் எழுத வாய்ப்பளித்தேன். இந்த வருடம் இன்னும் சிறிது கெடுபிடி கூட்டலாம் என்று நினைத்திருக்கிறேன். அதிகபட்சம் ஐந்து பேர். சமரசமே இல்லாத தரத்தில் சுவாரசியம் குன்றாமல் எழுதத் தெரிந்தவர்கள்.

இந்த வருடம் நான் எழுதிக்கொண்டிருந்த நாவலை முடிக்க முடியாத வருத்தம் சிறிது இருக்கிறது. அதை மறைக்க மாட்டேன். ஆனால் நான் எண்ணி மகிழ்ச்சி கொள்ளும் விதத்தில் எழுதப் பயின்ற ஒரு சிறிய அணியை உருவாக்கியிருக்கிறேன். இந்த வருடம் எனக்கு இது போதும்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி