எனக்கு இருபது உனக்குப் பத்து

எனக்கு இருபது உனக்குப் பத்து

மேலே உள்ள குறுஞ்செய்தியை வாசித்தீர்களா? இன்று வந்தது. முன்பின் தெரியாத என் பேரில் இந்த நாரீமணிக்குத்தான் எவ்வளவு கரிசனம். இந்தக் கொடூரமான ஊரடங்குக் காலத்தில் நான் இருக்கிறேனா செத்தேனா என்று கேட்கக்கூட ஒரு நாதியற்றுக் கிடப்பது பற்றி அடி மனத்தில் ஒரு துயரம் படிந்திருந்தது. சொன்னால் யார் நம்பப் போகிறார்கள்? வீட்டோடு இருக்கும் இக்காலத்தில் மொத்தமாகவே இதுவரை நான்கைந்து பேருடன் தான் தொலைபேசியில் பேசியிருப்பேன். கிருமிக்கு பயந்து ஊருக்கு ஓடிவிட்ட சூர பயில்வான்கள் எல்லோரும் மறக்காமல் போனை எப்போதும் சார்ஜில் போட்டு வைத்துவிட்டே வாழ்கிறார்கள். ஏன் எடுக்கவில்லை என்று கேட்டால் பதில் சொல்ல ஒரு உண்மை வேண்டியிருக்கிறது அல்லவா? ஊர்க்காரர்கள் பாடு என்றைக்குமே ஜாலிலோ ஜிம்கானாதான். இங்கு இருக்கும்போதுதான் பஞ்சப்பாட்டு பாடிக்கொண்டிருப்பார்கள். ஊருக்குப் போய்விட்டால் வாட்சப் ஸ்டேடஸில் குடும்பக் குதூகலப் படங்களாகப் போட்டுத் தள்ளிக்கொண்டிருப்பார்கள். போதாக்குறைக்கு தினுசு தினுசாகச் சாப்பாட்டுப் படங்கள். ஓடை மீன், காடை பிரியாணி, குச்சி ஐஸ், குல்பி மிட்டாய் இத்தியாதி.

ஒரு மண்டல காலமாக இவ்விடத்தில் உத்தியோகம் இல்லை. உத்தியோகம் இருக்கும்போதே உருப்படி சற்று முன்னப்பின்னத்தான் வரும். நமது தயாரிப்பு நிறுவனங்களுக்கு அடிப்படையில் பிரமாதமான மனசு உண்டு. ஊழியக்காரர்களுக்கு மாதம் பிறந்ததும் டாண் என்று சம்பளத்தைக் கொடுத்துவிட்டால் அதை அவர்கள் கண்மண் தெரியாமல் செலவழித்துவிடுவார்கள். பார்ட்டி என்ன, குடி என்ன, சிகரெட் என்ன, ஓட்டல் பரோட்டாக்கள் என்ன, போதாக்குறைக்கு கலர் கலராக சட்டை பேண்டுகள் வாங்கிப் பணத்தை வீணடித்துவிடுவார்கள் என்பதால் எப்போதும் ஒரு மாதச் சம்பளத்தைப் பிடித்து வைத்துக்கொண்டு, மறு மாதத்தில் இருந்துதான் படியளக்கத் தொடங்குவார்கள். அதாவது பிக்சட் டெபாசிட் மாதிரி நமது ஒரு மாத வரும்படியானது தயாரிப்பு நிறுவனத்தில் பத்திரமாக இருக்கும். வட்டி சேராதே தவிர இறுதித் தீர்ப்பு நாளில் அசல் மட்டுமாவது லம்ப்பாக வந்துவிடும் என்கிற நினைப்புதான் எவ்வளவு வண்ணமயமானது!

இந்த மாதமோ, பிடித்தம் செய்யாத மாதத்தின் வரும்படிகூட எப்போது வருமென்று தெரியாத கணக்காக இருக்கிறது. ஊழியக்காரர்களுக்கு ஒன்றரை அணா சிரமம் என்றால் உத்தியோகம் தரும் முதலாளிகளுக்குக் கழுத்தை நெரிக்கும் அளவுக்குப பொருளாதார நெருக்கடி இருக்கும். படப்பிடிப்புகள் நடக்கவில்லை. ஒளிபரப்பு நின்றுவிட்டது. ரேட்டிங்குகள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. விளம்பர வருமானங்கள் படுத்தே விட்டன. போட்டுப் புரட்டி எடுத்துப் பைசல் செய்ய வழியே இல்லாமல் தேசமே கதவைப் பூட்டிக்கொண்டு அடங்கிக் கிடக்கிற சூழ்நிலையில் கள்ள நோட்டு அச்சடித்தாவது சம்பள பைசல் செய்ய வழியற்றுப் போய்விட்ட அவல நிலையை என்ன செய்ய முடியும்? இனிமேல் நிலவரம் சீராகி, மீண்டும் படப்பிடிப்புகள் ஆரம்பித்து, ஒளிபரப்பு ஆரம்பித்து, வருமானமெல்லாம் வரத் தொடங்கி வாழ்க்கை சீராக அவர்களுக்கே இன்னும் மூன்று நான்கு மாதங்கள் பிடிக்கும் என்று கணிக்கிறேன். அதற்குப் பிறகு ஊழியதாரிகளுக்குப் பழைய பாக்கிகள் கண்டிப்பாக வரத் தொடங்கிவிடும். அதில் சந்தேகமில்லை.

ஆனால் அம்மணி, அதுவரை பிக்சட் டெபாசிட்டில் போட என்னிடம் சொல்லிக்கொள்ளும்படியாகக் கூடக் கேவலம் ஒரு பொன்முடிப்பு இல்லையே, நான் என்ன செய்வேன்? அப்புறம் போட்டால் வட்டிக்காசு பிச்சைக் காசாகத்தான் இருக்கும் என்று நீங்களே சொல்கிறீர்கள். சிக்கல்தான். பெரிய சிக்கல்.

ஒன்று செய்யலாம். முன் தேதியிட்ட தள்ளுபடி அல்லது தள்ளிவைப்பு அறிவிப்புடன் எனக்குப் பத்து முதல் இருபது லட்சங்கள் வரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடன் கொடுக்க ஆவன செய்யுங்கள். வருகிற தொகையில் சரி பாதியை பிக்சட் டெபாசிட்டாகப் போட்டுவிடுகிறேன். இப்போதே போடப் போவதால் வரப் போகிற ஏராள வட்டியைக் கொண்டு அந்தக் கடனையும் காலக்ரமத்தில் அடைத்துவிட்டு நானும் சிறிது சௌக்கியமாக வாழ்ந்துகொள்கிறேன். எவ்வளவோ அபிமானத்துடன்தான் நீங்கள் எனக்கு இந்தக் குறுஞ்செய்தியை அனுப்பியிருக்கிறீர்கள். மேற்படி எளிய உபகாரத்தையும் சேர்த்துச் செய்துவிட்டீர்களென்றால் பரஸ்பரம் நாம் சௌக்கியமாக இருக்கலாம்!

Share