நகைச்சுவை

தமிழன் ஏன் புத்தகம் வாங்குவதில்லை?

புத்தகக் கண்காட்சி நெருங்கும் நேரத்தில் எழுத்தாளர்களை எப்போதும் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டு விடுகிறது. எழுதுவது குறித்த பதற்றம் இல்லை அது. எத்தனை கிலோ அல்லது கிலோபைட் வேண்டும்? இந்தா சாப்டு என்று அள்ளிப் போட அவர்களால் முடியும். பிரச்னை வாசகர்கள் சார்ந்தது.

இந்தத் தமிழ் வாசகர்கள் ஏன் புத்தகம் வாங்குவதில்லை? உலகமெங்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கோடித் தமிழர்கள் இருக்கிறார்கள். பரதேசி, இதில் பத்து விழுக்காட்டினர் கூட ஏன் புத்தகம் வாங்கிப் படிப்பதில்லை? தார்மிகக் கோபம், அறச் சீற்றம், சுய ஆதங்கம் உள்ளிட்ட சகலமான கெட்ட சமாசாரங்களும் புவிக்கடியில் பொங்கும் சரஸ்வதி நதியென மனத்துக்குள் பொங்கிப் பீறிடும் தருணம்.

சமீபத்தில் ஃபேஸ்புக்கில் நண்பர் ஒருவர் (இவர் நண்பரொருவர் அல்லர்) தென் கொரியாவின் புத்தகச் சந்தை குறித்து ஒரு குறிப்பை எழுதியிருந்தார். எத்தனையோ மில்லியன் டாலர்களுக்குப் புத்தகங்கள் அங்கே விற்கின்றவாம். வருடம் தோறும் எழுத்தாளப் பணக்காரர்களை உருவாக்கித் தூக்கித் தூக்கிப் போட்டுக்கொண்டிருக்கிறதாம் அந்தக் குட்டி தேசம்.

கஷ்டம்தான். தங்கத் தமிழ் எழுத்தாளர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்தான். அதற்காக நாம் கொரிய மொழி கற்றுக்கொண்டு அங்கு போயா குப்பை கொட்ட முடியும்? சுத்த நான்சென்ஸ்.

ஏதோ என்னால் முடிந்தது, தமிழன் ஏன் புத்தகம் வாங்குவதில்லை என்பதற்கான காரணங்களைத் துப்பறிய ஓர் உரத்த சிந்தனை மேற்கொண்டேன். அவை பின்வருமாறு :-

1) தமிழனுக்கு எப்போதும் டயமிருக்காது
2) தமிழன் கனமான பொருட்களைத் தூக்க விரும்புவதில்லை
3) தமிழன் பிறவி பிடிஎஃப் பிரியன்
4) இலவச வேட்டி, இலவச சேலை, இலவச டிவி, இலவச அரிசி, இலவச மின்சாரம் என அனுபவித்துப் பழகிய தமிழனுக்கு இந்த சமூகம் இலவசப் புத்தகங்களைத் தருவதில்லை
5) தமிழன் ஆங்கிலப் புத்தகங்களை மட்டுமே படிப்பான்
6) தமிழனின் பெண்டாட்டி பெரும்பாலும் படிக்க விடுவதில்லை
7) தமிழனின் சம்பளம் கம்மி.
8) தமிழ்ப் புத்தகங்களில் ப்ரூஃப் மிஸ்டேக்குகள் அதிகம்
9) தமிழ் எழுத்தாளர்கள் தங்களைத் தமிழனைவிடப் பெரிய பருப்பு என எண்ணிக்கொள்கிறார்கள்
10) தமிழனுக்கு டிவி சீரியல் இருக்கிறது
11) தமிழனுக்குத் திருட்டு சிடி இருக்கிறது
12) படுத்துக்கொண்டு படித்தால் வீட்டில் திட்டுகிறார்கள்
13) தமிழன் போகும் கடைகளில் தமிழ்ப் புத்தகங்கள் இருப்பதில்லை
14) தமிழன் விரும்பும் எழுத்தாளரின் புத்தகம் இம்முறை வெளியாகவில்லை
15) தமிழனின் மனைவி லெண்டிங் லைப்ரரி கார்டு வைத்திருக்கிறாள்
16) தமிழன் நண்பர்களிடம் வாங்கிப் படிப்பதையே விரும்புவான்
17) தமிழனுக்குத் தமிழ் பேசத்தான் தெரியும். dont know to read in டாமில்
18) தமிழன் கத புக்ஸ்தான் படிப்பான். ஆனால் மாத நாவல்களின் வரத்து குறைந்துவிட்டது
19) தமிழன் ரிடையர்மெண்ட்டுக்கு அப்புறம் புத்தகம் வாங்க நினைத்திருக்கிறான். இப்போது மகள் திருமணத்துக்குக் காசு சேர்க்கிறான்
20) எல்லா தமிழனும் எழுத்தாளனே. ஒரு எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனின் புத்தகத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

Share

15 Comments

 • படிக்கறவனுக்கு ஆயாசம் வராத அளவுக்கு எழுதுனாலே போதும். இப்ப இருக்கறவங்க ஒரே சூத்திரம் தான் வச்சிருக்காங்க. அதுல x,y,z மட்டும் மாத்துனா எப்படி. இது எல்லா எழுத்தாளர்னு சொல்லிக்கரவங்களையும் சேரும். The Da Vinci Code, Angels & Demons, inferno, The Lost Symbol மாதிரி வரலாற்று அடையாளங்களை வச்சி எழுதுன சுவாரசியமான நாவல் சொல்லுங்க நீங்க. ஒரு தடவ ஏமாறலாம், இன்னொரு தடவ ஆயிரக்கணக்குல செலவு பண்ண முடியாது சாரே.

 • பத்ரி முக்கியமான ஒன்றை நீங்கள் மறந்துட்டீங்க. தமிழ் புத்தகங்கள் தமிழ் நாட்டில் ப்ரிண்ட் செய்யப்படுகின்றன அதனால்தான் அதை வாங்குபவர்கள் மிக குறைவு வேண்டுமானால் வெளிநாட்டில் அச்சடித்து வெளியிட்டால் விற்பனை அதிகரிக்க கூடும்

 • 21) தமிழனுக்கு தமிழ்ப் புத்தகத்தின் இரண்டு பக்கங்களைப் படித்த உடனேயே தூக்கம் வந்து விடுகிறது. ஒரு புத்தகத்தையை முழுதாகப் படிக்க முடியாததால் அவனால் புதிதாக வேறு வாங்க முடியவில்லை.

  (உ-ம்) பிரபல எழுத்தாளர் எழுதிய “பிரம்மாபுரம்” என்ற நூலை கடந்த 22 வருடமாக ’நண்பரொருவர்’ தினந்தோறும் வாசித்து வந்தும் இன்னும் பாதி புத்தகம் கூட முடித்தபாடில்லை.

  ஆகவே எழுத்தாளர்கள், வாசகர்களைத் தூங்க விடாமல் பைத்தியமாக அடிக்கும் (அ) பைத்தியம் பிடிக்கும் ”நடிகையின் கதை” பாணி நூல்களை எழுத வேண்டுமென “பதலக்கூர் சீனிவாசலு’வின் ”நண்பர் ஒருவர்” கேட்டுக் கொண்டிருக்கிறார்.

  செய்வீங்களா.. செய்வீங்களா…

 • அய்யா! கலக்கிவிட்டீர்கள். உங்களையே படித்துக்கொண்டிருக்கும் ஒருவன் சிரித்துக்கொண்டே விரக்தியாகிப் பின் சொஸ்தாவது உறுதி!!

 • 22. தமிழ்ப் புத்தகங்கள் அநியாய விலைக்கு விற்கப்படுகின்றன. அதன் தரம் குறைவு.
  23. தமிழ்ப் புத்தகங்கள் ,இக்கால தமிழன் / தமிழச்சி உகந்ததாக இல்லை.
  24. பெரும்பாலும் அரைத்த மாவையே அரைக்கின்றனர் – தமிழ்ப் எழுத்தாளர்கள்.
  25. ஏழை தமிழ் பதிப்பாளர்கள் விளம்பரம் செய்ய வசதி இல்லை. மக்களுக்கு என்னென்ன புத்தகங்கள் வருவது என்றே தெரிவதில்லை.

 • டி-20-ல் கடைசிபந்து சிக்ஸரைப்போல, உங்கள் கடைசிபாய்ண்ட்டில் தூக்கி அடித்துவிட்டீர். ஒரு எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனின் புத்தகத்தை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான் தான்; சத்தியம்!
  -ஏகாந்தன்

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி