பொலிக! பொலிக! 61

‘மன்னனே, இந்த உலகையும் உயிர்களையும் படைத்தவன் இறைவனே என்றால் தனது படைப்புகளுக்குள் அவன் எப்படி பேதம் பார்ப்பான் அல்லது பிரித்து வைப்பான்? பேதங்கள் மனிதர்களால் உருவாக்கப்படுபவை. வாழ்வின் மீதான அச்சத்தின் பிடியில் சிக்கித் தவிப்போர் தமது குறைந்தபட்ச பாதுகாப்புக்காக உருவாக்கிக்கொண்டதே மேல் சாதி என்கிற அடையாளம். அது கீழே நிற்கும் சிங்கத்துக்கு பயந்து மரக்கிளை மீது ஏறி நின்று கொள்வது போல. ஒரு சூறைக்காற்று கிளையை முறித்துவிடும் என்பதை எண்ணிப் பாராமல் செய்கிற குழந்தைத்தனம். ஞானமும் பக்தியும் சாதி பார்க்காது. கனியின் ருசியைப் போன்றது அது. மண்ணுக்குள் இருக்கிறவரை எந்த விதை என்னவாக விளையும் என்று யாருக்குத் தெரியும்? விளைச்சல் சரியாக இருக்கிற போது ருசியும் மணமும் இயல்பாகச் சேரும்.’ என்றார் ராமானுஜர்.

‘நீங்கள் சொல்வது வியப்பாக உள்ளது சுவாமி. இறைவனை நெருங்கத் தகுதி என்ற ஒன்று இல்லவேயில்லையா?’

‘பக்தி ஒன்றே தகுதி. சாதியல்ல. வேறு எதுவும் அல்ல. ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். ஆழ்வார்களில் எத்தனை பேர் அந்தணர்கள்? வேதம் தமிழ் செய்த மாறன் என்ன இனம்? திருப்பாணாழ்வார் என்ன சாதி? மங்கை மன்னன் என்ன அந்தணனா? இவர்களைவிட இறைவனை நெருங்கியவர்கள் யார்?’

‘ஆஹா. அப்படியானால் என் பக்தி சரியாக இருந்தால் என்னாலும் இறைவனை நெருங்க முடியுமா?’

‘நீ ஏன் நெருங்குகிறாய்? அவன் நெருங்குவான் மன்னா! உன்னை அள்ளி எடுத்து அரவணைத்துக்கொள்வதைவிட அவனுக்கென்ன வேலை? உமது வில்லியைக் கொள்ளை கொண்டவன் அவன். இங்கே தாழ்ந்த குலத்தவர் என்று ஊரார் ஒதுக்கிவைத்த மாறனேர் நம்பிக்கு மோட்சத்தின் வாசலைத் திறந்து வைத்தவன். பரமாத்மாவுக்கு பேதம் கிடையாது. பேதம் பார்ப்பது பரமாத்மாவாக இருக்க முடியாது.’

‘நீங்கள் சொல்வதெல்லாம் கேட்பதற்குப் பரவசமாயிருக்கின்றன. காலகாலமாக வேதம் ஓதுபவர் உயர்ந்தவர் என்றும் மற்றவர்கள் தாழ்ந்தவர் என்றும் சொல்லிச் சொல்லியே வளர்த்துவிட்ட சமூகம் சுவாமி இது! உங்களை ஏன் புரட்சிக்காரர் என்கிறார்கள் என்பது இப்போது புரிகிறது.’

‘அடக்கடவுளே! இதுவா புரட்சி? இது அடிப்படை உண்மை மன்னா. மிக எளிமையான சுட்டிக்காட்டல். மோட்சத்தில் விருப்பம் கொண்ட யாரும் பேதத்தில் மயங்கிக் கிடக்கமாட்டார்கள். தக்கார் தகவிலார் என்பது எச்சத்தால் காணப்படும் என்பார்கள். சாதியின் உச்சம் அல்ல தகுதி. வாழ்ந்த வாழ்வின் சாரம் என்னவென்று பாருங்கள். பக்தி செய்தோமா, பாகவதனாக இருந்தோமா, பரோபகாரம் நமது இயல்பாக இருக்கிறதா, மனித குலத்தின்மீது நிபந்தனையற்ற அன்பு நமக்கு இருக்கிறதா, பிரதிபலன் நோக்காது இருக்கிறோமா… பார்க்க வேண்டியவை இவை மட்டும்தான்.’

அகளங்கன் கண் கலங்கிப் போனான். பரவசம் பொங்கக் கைகள் இரண்டையும் கூப்பி நின்றான்.

‘சுவாமி, இந்த அற்பனை ஒரு பொருட்டாக மதித்து இத்தனை நல்லவற்றைச் சொல்லியிருக்கிறீர்கள். இதற்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்!’

‘வைணவம் கைம்மாறு எதிர்பார்க்காது அகளங்கா. சொன்னேனல்லவா? நிபந்தனையற்ற அன்பு ஒன்றே அதன் அடையாளம். அது மனித குலத்தின்மீது வைக்க வேண்டியது. எதிர்பார்ப்புகளற்ற சரணாகதி ஒன்றே உச்சம். அது பரமாத்மாவின்மீது செய்யப்பட வேண்டியது.’

‘இரண்டையும் செய்ய நான் சித்தமாயிருக்கிறேன் சுவாமி!’

‘அப்படியென்றால் நீயும் ஒரு வைணவனே.’

‘வில்லிதாசருக்குக் கிட்டிய பேரருள் எனக்கும் வாய்க்குமா? காண்பதெல்லாம் கண்ணனே என்று தீர்மானமாக இருக்கிற அவரது மருமகன்களைப் போன்ற மனம் எனக்கும் அமையுமா? எனக்கு வேதம் தெரியாது. எதுவும் தெரியாது. நான் வெறும் மன்னன். தகுதியென்று எனக்கு இருக்கிற எதுவும் தகுதியே அல்ல என்று இன்று தெளிந்தேன். கடையனிலும் கடையனான எனக்கும் கதி மோட்சம் உண்டா?’

ராமானுஜர் அவனை நெருங்கி ஆசீர்வதித்தார். அகளங்கன் அன்று முதல் அகளங்க நாட்டாழ்வான் ஆகிப் போனான்.

‘அகளங்கா! நாம் அனைவரும் அரங்கன் ஆளும் மண்ணில் வசிக்கிறவர்கள். அரங்கனின் கோயில்தான் நமது கோட்டை. அங்கே நடைபெறுகிற சிறு அசைவும் ஒரு திருவிழாவாகவே இருக்கவேண்டும்.’

‘ஆம் சுவாமி. ஒப்புக்கொள்கிறேன்.’

‘அரங்கன் பணியில் இருப்போரை நாம் பத்து தனித்தனிக் கொத்துகளாகப் பிரித்துப் பணியாற்ற வைத்திருக்கிறோம். திருவரங்கத்துக்கு வருகிற பாகவத உத்தமர்களை கவனித்துக்கொள்கிறவர்கள் திருப்பதியார் கொத்து. திருப்பாற்கடல் தாசர், திருக்குருகைப் பிரான் பிள்ளை தொடங்கி, இங்கே உள்ள பல நிலச்சுவாந்தார்கள், பெரிய மனிதர்கள் அந்தக் கொத்தில் இருக்கிறார்கள்.’

‘ஓ!’

‘கோயில் திருப்பணியில் ஈடுபட்டிருப்போரை கவனித்துக்கொள்வதும், திருப்பணிகள் தடையற்று நடப்பதற்கு ஆவன செய்வதும் இரண்டாம் கொத்திலர்களின் பணி. நாலுகவிப் பெருமாள் தாசர், திருக்குருகூர் தாசர், சடகோப தாசர், திருக்கலிகன்றி தாசர், ராமானுச தாசரென ஐந்து பேர் அப்பணியில் இருக்கிறார்கள். மூன்றாவது கொத்து பாகவத நம்பிமார். இவர்கள் பெருமாளின் திருவாராதன கைங்கர்யங்களை கவனிப்பவர்கள். உள்ளூரார் என்கிற அடுத்தக் கொத்தினர் மேற்படி திருவாராதன கைங்கர்யம் செய்வோருக்கு உதவி செய்கிற குழுவினர். தோதவத்தித் தூய்மறையோர் என்று சொல்லப்படும் கொடுவாள் எடுப்பார் குழுவில் இருந்து இவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.’

‘ஆஹா!’

‘விண்ணப்பஞ்செய்வார் திருக்கரகக் கையார், ஸ்தானத்தார், பட்டாள் கொத்து என்று அடுத்தடுத்து பல குழுவினர்கள் உண்டு. கோயில் திருவாசல் காப்போரை ஆரியபட்டாள் கொத்து என்று சொல்கிறோம். தொண்டரடிப்பொடி ஆழ்வார் காலம் தொடங்கி கோயிலுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்யும் புண்டரீகதாசர் வம்சத்தவர்கள் பத்தாம் கொத்தில் வருவார்கள். அவர்களை தாசநம்பி கொத்து என்போம்.’

‘நல்லது சுவாமி. அரங்கன் சேவையில் அடியேனை எந்தக் கொத்தில் தாங்கள் சேர்ப்பீர்கள் என்று அறிய ஆவலாயிருக்கிறேன்.’

ராமானுஜர் ஒரு கணம் கண்மூடி யோசித்தார். ‘அகளங்கா, நீ மன்னன். நிர்வாகம் தெரிந்தவன். வேலைகள் சரிவர நடக்கிறதா என்று கண்காணிக்க முடிந்தவன். அந்தத் திறமையை நீ அரங்கன் சேவையில் செலுத்து.’

‘உத்தரவு சுவாமி!’

‘இன்று முதல் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைப் பரிபாலிக்கிற பொறுப்பு உன்னுடையது. வருமானம் சிந்தாமல் ஶ்ரீபண்டாரத்தை வந்தடையும் வரை நீ கவனித்துக்கொள்ள வேண்டியது.’

அகளங்கன் கைகூப்பித் தாள் பணிந்தான். ஶ்ரீபண்டாரம் என்கிற கஜானாவை கவனிக்கத் தொடங்கும்முன் ஆயிரம் பொற்காசுகளைத் தம் பங்காக அதில் கொண்டு வந்து சேர்த்தான். தன்னிடம் பணியாற்றிக்கொண்டிருந்த மணவாள மாராயன், கிடாரத்து அரையன், உலகநாத அழகான், சோழ மாராயன் என்று பலபேரைத் திருவரங்கன் திருப்பணியில் ஈடுபடுத்தினான்.

வைணவ உலகம் வியப்பில் வாய்பிளந்து நின்றது.

(தொடரும்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி