சூனியர்களின் உலகில், கடவுளின் படைப்பில் எஞ்சி நிற்கும் எலும்புகள் மதிப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. திருமணம், மரணம் என எல்லா முக்கியமான நிகழ்வுகளுக்கும் புகழ்பெற்றவர்களின் எலும்புகளால் மரியாதை செய்யப்படுகிறது.
இங்கு துரோகியென முத்திரை குத்தப்பட்ட சூனியன், தண்டனையை நிறைவேற்றும் பொருட்டு துரோகிகளின் எலும்புகளாலான கப்பலில் அழைத்துச் செல்லப்படுவதை தனக்கான அவமரியாதையாக கருதுகிறான்.
தன் மீது உருவான பழியை துடைக்க தான் தப்பிக்க வேண்டும் அல்லது தண்டனைக்குரிய மற்ற ஊழியர்களை ஒருங்கிணைத்து ஒரு புரட்சியை உருவாக்கவேண்டுமென நினைக்கிறான்.
எதிர்பாரா விதமாக எலும்புக் கப்பலை நோக்கி வரும் மிதக்கும் நகரத்தால் ஏற்பட இருக்கும் ஆபத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, தனது புத்தி கூர்மையால் தப்பிக்க நினைக்கிறான் சூனியன்.
மனித உலகில் மட்டுமல்ல. சூனியர்களின் உலகிலும் அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்த்து பேசுவது தண்டனைக்குரிய விஷயமாகவே கருதப்படுவது வருத்தத்திற்குரியது.
சூனியர்களின் வெப்பத்தைத் தாங்கும் உடலமைப்பு, புதன் கோளில் கிரகித்துக்கொண்ட வெப்பத்தாலான கவசங்கள்,குளிர் ஒவ்வாத உடம்பில் பனிக்கத்திகளை செருகுதல் ,சூனியர்களை அடைத்து வைத்திருக்கும் கடலை கூடு ,புதனின் மையப்பகுதியில் மட்டுமே கிடைக்கும் கடறி என்ற உலோகத்தால் செய்யப்படும் வெப்ப கவசங்கள், மழையிலிருந்து சூனியர்களின் கப்பலை பாதுகாக்கும் பிசாசுகள்…. ஒவ்வொன்றும் எண்ணிப் பார்க்க இயலாத அளவுக்கு பிரமிக்க வைக்கும் கற்பனையின் உச்சங்கள்.
பிசாசு பற்றிய வர்ணனைகளை படிக்கும் பொழுது அருவருப்பையும்,சூனியர்களின் உடலமைப்பு பற்றிய வர்ணனைகளில் ஆச்சரியத்தையும் ஒருங்கே உணர வைக்கிறார் ஆசிரியர்.
இருந்த காலங்களின் நினைவு என்பது இருந்த காலங்களை காட்டிலும் அழகானது என்னும் வரிகள் ஆசிரியரின் அழகிய மொழிநடைக்கு மகுடம் சூட்டுவதாயுள்ளது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.