70 Kg நாயக்கர் மஹால்

சமீபத்தில் இந்தக் குறிப்பிட்ட கட்டுரையைப் படித்துவிட்டுப் பல நண்பர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். அவர்களது சந்தேகங்களை இப்படித் தொகுக்கலாம்:

* எடைக் குறைப்பு சாத்தியமே. ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வேகமும் அளவும் கேள்விப்படாததாக இருக்கிறதே?

* டயட் இருப்பதனால் உடல் சோர்வு ஏற்படுகிறதா?

* கண்டிப்பாகச் சாப்பிடக்கூடாதவை என்னென்ன? எப்போதாவது ஒரு ஐஸ் க்ரீம், ஒரு கல்யாணச் சாப்பாடு, ஒரு வாழைக்காய் பஜ்ஜி சாப்பிடுவதுகூடவா தவறு?

* பால் போன்றவற்றை அறவே நிறுத்திவிட்டால் கேல்சியம் குறைபாடு உண்டாகுமாமே?

இம்மாதிரிப் பல சந்தேகங்கள் எழுந்திருப்பதாகத் தெரிகிறது.

எனக்கு மருத்துவமோ, உடற்கூறு அறிவியலோ அல்லது ஒழுங்கான டயட் முறைகள் குறித்தோகூட எதுவும் தெரியாது. என்னுடைய மருத்துவர் எனக்குப் போட்டுக்கொடுத்த சார்ட்டின்படி மட்டுமே நான் உணவு எடுத்துக்கொள்கிறேன். இது எனக்குப் பலனளிக்கத் தொடங்கியபிறகு ஓர் ஆர்வத்தில் மனித உடலின் செயல்பாட்டு அறிவியல் குறித்தும் எடை கூடுவது – குறைவது குறித்தும் சக்தி எப்படி கொழுப்பாக உருமாற்றம் கொள்கிறது என்பது குறித்தும் படித்து, கேட்டு அறிந்துகொள்ளத் தொடங்கினேன்.

நான் எடைக்குறைப்பு தொடர்பாக ஆலோசனை கேட்க மருத்துவரிடம் சென்ற தினம், அவரது க்ளினிக்கில் எடை பார்த்தேன். சரியாகத் தொண்ணூறு கிலோ இருந்தேன். நடமாடும் ஒரு பெரிய சைஸ் உருளைக்கிழங்குபோல் தோற்றமளித்திருப்பேன் என்று நினைக்கிறேன். பிரச்னையில்லை, குறைத்துவிடலாம் என்று டாக்டர் நம்பிக்கையளித்தார்.

எடைக்குறைப்புக்காக உணவுக் குறைப்பு கூடாது என்பதுதான் அவருடைய அடிப்படைக் கட்டளையாக இருந்தது. ஆனால் உணவில் மாற்றம் அவசியம். அரிசியில் இருக்கக்கூடிய மிதமிஞ்சிய கார்போஹைட்ரேட்தான் பெரும்பாலும் கொழுப்பாக மறு உருவாக்கம் பெறுகிறது. பல்வேறு கிழங்கு வகைகள், பிஸ்கட் போன்ற பொருள்களும் இந்த வகையைச் சேர்ந்தவையே.

ஐஸ் க்ரீமில் கார்போஹைட்ரேட் கிடையாது. ஆனால் நேரடிக் கொழுப்பு அபாயம் உண்டு. நூறு மில்லி பாலில் (தோராயமாக ஒரு தம்ளர் அளவு) 4.2 சதம் கொழுப்பு இருக்கிறது. இது தவிர ஒரு சதவீத ப்ரோட்டீன், ஏழு சதவீதம் லாக்டோஸ் இதில் அடங்கியிருக்கிறது. லாக்டோஸ் என்பது சர்க்கரை. அதுவும் கெட்ட வஸ்து. இந்த அளவு பால் எழுபத்திரண்டு கலோரி சக்தியை உள்ளடக்கியது.

வளரும் குழந்தைகளுக்கு மட்டுமே பால் தேவை. இதற்குமேல் வளராதே, ஆபத்து என்று உள்ளுணர்வு எச்சரிக்கை விடுக்கும் என் போன்ற தூலசரீரிகளுக்குப் பால் முதல் எதிரி. எண்ணெய் அதே மாதிரி.

பதிலுக்கு கீரைகள் சாப்பிடலாம். சாப்பிட வேண்டும். பாலில் கிடைக்கக்கூடிய கேல்சியம் சத்து, அதனைக் காட்டிலும் அதிக அளவில் கீரையில் கிடைக்கிறது. எந்தக் கீரையானாலும் சரி. மணத்தக்காளி, பொன்னாங்கன்னி, அரை, முளை, முருங்கை என்று கிடைத்ததையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிடலாம். அளவுக் கட்டுப்பாடே வேண்டாம். ஒரு வேளை சோற்றுக்கு பதில் கீரை மட்டுமே சாப்பிட்டால்கூடத் தவறில்லை. நூக்கோல், முட்டை கோஸ், பீன்ஸ், அவரை, காராமணி, வெண்டை, முள்ளங்கி, வெள்ளரி, வெங்காயம், தக்காளி, பூண்டு, வாழைத்தண்டு போன்றவையும்.

டயட்டில் இருப்போருக்கு, குறைவாக சாதம் உட்கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் சொல்வதன் அர்த்தம்: பழக்கத்தை விடமுடியாது. எனவே ஒழிந்துபோ. கொஞ்சம் சாப்பிட்டுக்கொள் என்பதுதான். உண்மையில் முற்றிலும் அரிசியை விடமுடிந்துவிட்டால் உடம்பு சிறகுபோலாகிவிடுகிறது.

சில வாரங்கள் நான் அப்படி இருந்து பார்த்துவிட்டேன். அந்த வாரத்தின் எனது எடை குறைப்பு அளவு கணிசமாக உயர்ந்திருக்கிறது என்பது தவிர, வழக்கத்தைக் காட்டிலும் சுறுசுறுப்பாக இருப்பதாகவும் உணர்கிறேன்.

எதைச் சாப்பிடலாம், எது கூடாது என்பது ஒரு விஷயமே இல்லை. ஐஸ் க்ரீமையும் வாழைக்காய் பஜ்ஜியையும் உருளைக்கிழங்கு போண்டாவையும் மட்டுமே கூட சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம். எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம்.

ஓர் உதாரணம் மூலம் இதனை எளிதில் புரியவைக்கலாம்.

உங்கள் எடை 75 கிலோ என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் மூட்டை தூக்குகிற பணியில் இல்லை. ஓர் அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்தான். எக்சர்சைஸ் எதுவும் செய்வதில்லை.

என்றால் ஒரு நாளைக்கு உங்கள் உடல் 1500 கலோரி சக்தியை எரிக்கிறது. இதுகாறும் உங்களுக்கு வியாதி வெக்கை ஏதுமில்லை, இதே எடையில் இறுதிவரை இருந்துவிட்டுப் போனால் போதும் என்று நினைப்பீர்களானால் 1500 கலோரி ஒரு நாளைக்கு நீங்கள் உட்கொள்ளவேண்டும். அதாவது செலவாகும் சக்தியை ரீஃபில் செய்கிறீர்கள். அவ்வளவுதான். இதற்குமேலே உள்ளே போகும் ஒவ்வொரு கலோரியும் கொழுப்பாக உருமாற்றம் கொள்கிறது. [ஓரளவு ஆக்டிவாக எழுந்து நடமாடியபடியே நாளைக் கழிப்பவர் என்றால் 2000 + கலோரிகள் செலவாகும்.]

நீங்கள் எடை குறையவேண்டுமென்று விரும்பினால் 1500 கலோரி அளவுக்கு பதில் 1400, 1250, 1200 என்று அளவு குறைத்து உட்கொள்ளவேண்டும்.

இந்த ஆயிரம் கலோரி அளவுக்கு நீங்கள் ஐஸ் க்ரீமாகவே சாப்பிட்டாலும் பாதகம் அதிகமில்லை. (ஷுகர் தொடங்கி வேறு பக்கவிளைவுகள் வந்து சேர்ந்தால் நான் பொறுப்பல்ல.) என்ன பிரச்னை என்றால் ஐஸ் க்ரீமையும் ஆயிரம் கலோரிக்குச் சாப்பிட்டுவிட்டு, மூன்று வேளை ரவுண்டு கட்டி சாப்பாட்டைவேறு உள்ளே தள்ளினால்தான் அபாயம் நெருங்கிவிடுகிறது.

டயட் என்பது பட்டினி அல்ல. இது புரிந்தே ஆகவேண்டும்.

நான் டயட் கடைபிடிக்கத் தொடங்கிய அதே சமயத்தில் எனது நண்பரான பெண்மணி ஒருவரும் டயட்டில் இருக்க ஆரம்பித்தார். [என்னைவிட குண்டாக இருந்தவர்.] உணவுக்கட்டுப்பாட்டுடன் கூட நடைப்பயிற்சி மற்றும் யோகாவும் சேர்த்துச் செய்தார் அவர்.

என்னைக் காட்டிலும் வேகமாக அவரது எடை குறைந்துகொண்டே வந்தது. புடைவை மட்டுமே உடுத்திப் பழகிய தோழி, சர்வ அலட்சியமாக ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்தார். மாடிப்படிகளை ஒரு சிறுமிபோல் தாண்டிக் குதித்து ஏறினார். அலுவலகத்தில் எல்லோருமே அவரைக் கண்டு வியப்படைந்தார்கள். நாலைந்து மாதங்களில் அவர் அத்தனை மெலிந்தது எனக்கும் மிகுந்த வியப்பளித்தது. தனது முந்தைய எடையில் இருபது சதவீதத்தை அப்போது அவர் இழந்திருந்தார்.

ஆனால் ஒரு கட்டத்தில் அவரது முகம் இருண்டு, சுருங்கி, கண்கள் உள்ளடங்கிவிட்டாற்போல் தெரிந்தது. எச்சரித்தேன். அவர் என்ன உட்கொள்கிறார் என்று விசாரித்தபோது அதிர்ச்சியாக இருந்தது.

காலை ஒரு இட்லி, மதியம் ஒரு கரண்டி சாதம், இரவு ஒரு சப்பாத்தி என்று அவர் சொல்லிக்கொண்டே போக, ‘நீங்கள் கடைபிடிப்பது டயட் அல்ல, உண்ணாவிரதம் அல்லது பட்டினி’ என்று சொன்னேன்.

இது நீடிக்காது, நீடிக்கவும் கூடாது. பெரிய அபாயங்களில் தள்ளிவிடும். வயிற்றைக் காயப்போடவே கூடாது.

உடல் பருமனுக்கு வித்திடும் உணவுப்பொருள்களை மட்டும் தவிர்த்துவிட்டு, நார்ச்சத்து மிக்க உணவுகளை நிறைய உட்கொள்வதன்மூலம் பசியின்றி இருக்கவேண்டியதுதான் டயட்டின் முதல் விதி. மாறாக வயிற்றை காலியாகவே எப்போதும் வைத்துக்கொள்வதன்மூலம் வாயுத்தொல்லைக்கும் வேறு பல பக்கவிளைவுகளுக்கும் ஆட்பட நேரிடும்.

நான் தினசரி காலை எழுந்ததும் (ஐந்து மணிக்கு) பால் சேர்க்காத பச்சை டீ ஒரு தம்ளர் அருந்துகிறேன். ஒரு மணி நேரம் நடை அல்லது நீச்சல் பயிற்சிக்குப் பிறகு எட்டரை மணி அளவில் இரண்டு தம்ளர் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுகிறேன். இதிலும் பால் கிடையாது. நிறைய தண்ணீர் சேர்த்த மோர் விட்டுக் கரைத்துக் குடிக்கிறேன். பதினொரு மணிக்கு ஒரு ஆரஞ்சுப் பழம். மீண்டும் பால் சேர்க்காத ஒரு டீ. மதிய உணவைத் தவிர்ப்பதில்லை. ஆனால் சாதத்தின் அளவு குறைவாகவும் காய்கறிகள் அதிகமாகவும் எடுத்துக்கொள்கிறேன். சில நாள்களில் சாதத்தைத் தவிர்த்துவிட்டு நான்கு சப்பாத்திகள். வாரத்தில் மூன்று நாள் சாதமும் நான்கு நாள் சப்பாத்தியும் மதிய உணவாக இருப்பது எனக்குச் சரியாக இருக்கிறது. பிற்பகல் மூன்றரைக்கு மீண்டும் ஒரு பழம். ஒரு தம்ளர் தேநீர். இரவு மூன்று சப்பாத்திகள். அவ்வளவுதான்.

எங்காவது திருமணம், பார்ட்டி, டின்னர் என்று போகவேண்டி அமைந்துவிட்டால் மறுநாள் உணவை மாற்றுவதில்லை. மாறாக ஒரு மணிநேர நடையை இரண்டு மணிநேரமாக உயர்த்திவிடுகிறேன்.

இரவு எழுத்து, படிப்பு வேலைகளை முடித்துவிட்டுப் படுக்க ஒன்று அல்லது  இரண்டு ஆகும் எனக்கு. சில நாள் மட்டும் இடையில் பன்னிரண்டு மணிவாக்கில் லேசாகப் பசிப்பது போலிருக்கும். அப்போது ஒரு பழம் சாப்பிட்டுவிடுவேன். பழம் இல்லாவிட்டால் அதே பச்சை டீ. போதும்.

இந்த டயட்டில் உடலை வருத்த ஏதும் கிடையாது. வயிறு நிரம்பியே இருக்கும். எடைக் குறைப்பு நடக்குமே தவிர அது முகத்தில் தெரியாது. [இடுப்பளவில் மட்டும் தெரிந்து, பரவசமூட்டும்.]

பொதுவாக டயட்டில் இருப்பவர்கள் தூக்கத்தைக் குறைத்துக்கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். எனக்குச் சாத்தியமில்லாதது அது. மூன்று அல்லது மூன்றரை மணிநேர உறக்கம்தான் என்பது பல ஆண்டுகளாக எனக்குத் தொடர்வது. அதற்குப் பரிகாரமாக ஏதும் செய்யமுடியாத நிலையில் இருப்பதை என் டாக்டரிடம் சொல்லிவிட்டேன். அதையும் கருத்தில் கொண்டு அவர் போட்டுக்கொடுத்த சார்ட் தான் மேலே காண்பது.

எடை குறைய விரும்புபவர் தானாக ஒரு டயட்டில் இறங்காமல், ஒரு டயட்டீஷியன் அல்லது குறைந்தபட்சம் ஜெனரல் ஃபிசீஷியன் துணையுடன் பயிற்சியைத் தொடங்குவதுதான் சரி. தொடங்கிவிட்டால் இஷ்டத்துக்கு மாற்றிக்கொள்ளாமல் ஓர் ஒழுங்கு கடைபிடிக்க வேண்டுமென்பது முக்கியம். இடையில் ஒரு நாள், இரண்டு நாள் கண்டபடி சாப்பிட்டுவிட்டு, மன வருத்தம் கொள்ளவே வேண்டாம். முன்பே சொன்னதுபோல், எத்தனை கலோரி உள்ளே போயிருக்கிறது என்பதுதான் விஷயம். கவனித்து மறுநாளே அந்த அளவைச் சரி செய்துவிட்டால் போதும்.

இணையத்திலேயே நிறைய கலோரி கேல்குலேட்டர்கள் கிடைக்கின்றன. வாழைக்காய் பஜ்ஜிக்கும் உருளைக் கிழங்கு போண்டாவுக்கும் ஸ்ட்ராபெரி ஐஸ் க்ரீமுக்கும் ஓல்ட் மாங்க் ஒரிஜினல் ரம்முக்கும் கலோரி பார்த்துக்கொள்ளுங்கள். நன்றாகச் சாப்பிட்டு விட்டு அந்தளவுக்கு அடுத்த வேளை குறைத்துவிட்டால் / அல்லது உடற்பயிற்சி செய்துவிட்டால் தீர்ந்தது விஷயம்!

பி.கு: நேற்றைய தினம் என்னுடைய இலக்கின் முதல் எல்லையான 70 கிலோவுக்கு வெகு அருகில் வந்துவிட்டேன். இன்னும் ஆறு கிலோ மட்டுமே முழு எல்லைக்கு மிச்சம்.  சிவ ராத்திரியுடன் குளிர் போய்விடும் என்கிறபடியால் நாளை முதல் நடைப் பயிற்சியை நிறுத்திவிட்டு மீண்டும் நீச்சலில் முழு வேகத்துடன் இறங்க உத்தேசம். அதன்பின் குறைந்த எடையைப் பராமரிக்கிற பணி மட்டும்தான் என்றபடியால் உணவில் சில சலுகைகளை எனக்கு நானே அளித்துக்கொள்ள முடியும். அந்தத் திருநாளில் நண்பர்களுக்கு ஒரு மகத்தான ட்ரீட் வாக்களித்திருக்கிறேன்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி