உடலுக்கு மரியாதை

குறிப்பிட்ட காரணம் ஏதுமில்லை. 2007 ஜூலை இறுதியில் திடீரென்று ஒருநாள் நாம் இத்தனை குண்டாக இருக்கவே கூடாது என்று தோன்றியது.

மிகச் சிறு வயதிலிருந்தே உடல் ஆரோக்கியம் தொடர்பான எவ்வித முயற்சிகளையும் மேற்கொண்டதில்லை. ஓடுவது, விளையாடுவது, குதிப்பது, குஸ்தி போடுவது, கொழுப்புச் சத்து மிக்க உணவுப்பொருள்களை உட்கொள்ளாமல் இருப்பது என்பதிலெல்லாம் கவனம் சென்றதில்லை. வெந்ததைத் தின்று விதிப்படி இயங்கிக்கொண்டிருந்த வாழ்க்கை. இயல்பிலேயே இரட்டை நாடி சரீரம் என்பதனால் எனது ஸ்தூல தேகம் எனக்கோ, யாருக்குமோ எப்போதும் ஒரு பொருட்டாக இருந்ததில்லை. பெண் பார்க்கச் சென்றபோது மிகவும் ஒல்லியாக என் கண்ணுக்குத் தென்பட்ட என் மனைவிகூட எனது குண்டுத் தோற்றம் பற்றிய விமரிசனம் ஏதும் வைக்கவில்லை. மாறாக, திருமணத்துக்குப் பின் எனக்குச் சரியான ஜோடியாக இருக்கவேண்டுமே என்கிற கவலையில் அவளும் என்னில் பாதியாகி பிறகு என்னைக் கடந்து சென்றாள்.

எனது பெருத்த (அல்லது பருத்த) சரீரம் ஒருபோதும் எனக்குப் பிரச்னையாக இருந்ததுமில்லை. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். ஒரு நாளில் பதினெட்டு மணிநேரம் அல்லது இருபது மணிநேரம் இடைவிடாமல் பணியாற்ற முடியும். அதிகாலை இரண்டு மணிக்குப் படுத்தாலும் ஆறு மணிக்குச் சற்றும் களைப்பில்லாமல் எழுந்துவிட முடியும். கொழுப்புச் சத்து மிக்க உணவுப்பொருள்களை மிகவும் விரும்பி உண்டுகொண்டிருந்தேன். கட்டித் தயிர். வெண்ணெய். எண்ணெயில் பொறித்த பலகாரங்கள். மசாலா உணவுகள். இனிப்பு வகைகள். பேக்கரி ஐட்டங்கள். எதுவும் விலக்கில்லை.

முப்பத்தேழு வருடங்கள் இடைவிடாது இம்மாதிரியாகவே வாழ்ந்து தீர்த்தபிறகும் சர்க்கரை வியாதியோ ரத்தக் கொதிப்போ உண்டானதில்லை. எல்லாம் சரியாகவே இருந்தது. எப்போதும் சரியாகவே இருந்தது. எனக்காகப் பல நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் அவ்வப்போது எச்சரிக்கை நோட்டீஸ் விடுப்பார்கள். ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை.

ஆனால் யாரும் எடுத்துரைக்காத ஒரு தினத்தில் திடீரென்று எனக்கே தோன்றியது. நாம் ஏன் கொஞ்சம் எடை இழக்கக்கூடாது?

குடும்ப நண்பரும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி டீனாகப் பணியாற்றுபவருமான டாக்டர் செல்வத்தைச் சென்று சந்தித்து என் விருப்பத்தைச் சொன்னேன். என்னால் முடியுமா? எத்தனை கிலோ இழக்கலாம்?

அவர் என்னுடைய உயரம், எடை, வயது அனைத்தையும் கணக்கிட்டு ஒரு தாளில் விறுவிறுவென்று சில விஷயங்களை எழுதினார். என் அகத்திய உயரத்துக்கு நான் 65 கிலோதான் இருக்கலாம். சுமார் முப்பது கிலோ எடை கூடுதலாக இருக்கிறது. ஒரு நடமாடும் கொழுக்கட்டையாக இருந்தது போதுமே? கண்டிப்பாகக் குறைத்தாகவேண்டும். இல்லாது போனால் காலக்ரமத்தில் பல உபாதைகளுக்கு ஆட்படவேண்டியிருக்கலாம். இதுவரை ஒன்றுமில்லை என்பது ஒரு பொருட்டே இல்லை. இன்றைக்கு வந்து சேர்ந்தால் கூட எஞ்சிய காலம் இன்பமாக இராது.

சரி டாக்டர். புரிகிறது. என்ன செய்யலாம்?

அப்போதுதான் வாழ்வில் முதல்முறையாக ஓர் உண்மை எனக்குப் புரிந்தது. எடை குறைப்பதற்குப் பட்டினி இருப்பது பயன் தராது. மாறாக, முன்னர் சாப்பிட்டுக்கொண்டிருந்ததைக் காட்டிலும் அதிகம் உண்ணவேண்டும். ஆனால் எதைச் சாப்பிடவேண்டும் என்று இருக்கிறது.

அவர் எனக்குப் போட்டுக்கொடுத்த டயட் சார்ட்டில் காலை காப்பி நிறுத்தப்பட்டிருந்தது. பால் கூடாது.

ஆனால் டாக்டர், கேல்ஷியம்? அதெல்லாம் ஏழு தலைமுறைக்குச் சேர்த்து வைத்திருக்கிறீர்கள். கொஞ்சம் பேசாதிருக்கிறீர்களா? இனிமேல் டீதான் சாப்பிடவேண்டும். பால் சேர்க்காத பச்சை டீ. பிறகு காலை உணவாக இரண்டு தம்ளர் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுங்கள். அதிலும் பால் கூடாது. தண்ணி மோர் சேர்த்துக் குடிக்கவும். பதினொரு மணிக்கு ஏதேனுமொரு பழம். ஆப்பிளாக இருக்கலாம். ஆரஞ்சாக இருப்பது நல்லது. வாழைப்பழம் கூடாது. அரை மணி கழித்து மீண்டும் ஒரு கடும் டீ. மதிய உணவுக்கு ஒரு சிறு கப் சாதம். அதையும் தவிர்த்துவிட்டால் சால நன்று. நிறைய காய்கறிகள். சாதம் அளவுக்குக் காய்கறிகள். வெந்தது, வேகாதது எதுவும் விலக்கல்ல. நார்ச்சத்து நிறைய வேண்டும். அதுதான் விஷயம். தவறிக்கூட எண்ணெய் ஐட்டங்களைத் தொடாதீர். பொறித்த அப்பளம், வத்தல், வடாம், வடை, போண்டா, பஜ்ஜி, முறுக்கு, அல்வா, இனிப்புக் கசுமாலங்கள் ஏதும் கூடாது. மூன்று மணிக்கு மீண்டும் பச்சை டீ. ஐந்துக்கு மீண்டுமொரு ஆரஞ்ச். இரவு எட்டானால் இரண்டு சப்பாத்தி. தொட்டுக்கொள்ள காய்கறிகள் மிகுந்த சப்ஜி. போதும். சிரமம் பார்க்காமல் தினசரி ஒரு மணிநேரம் நீச்சல் பயின்றால் சீக்கிரம் இளைத்துவிடுவேன்.

நீச்சல்! நான் நினைத்துப் பார்த்ததுகூட இல்லை. எனது ஸ்தூல சரீரம் நீரில் விழுந்தால் குளப்புரட்சி உண்டாகிவிடுமே என்பதுதான் முதல் கவலையாக இருந்தது. இரண்டாவது கவலை எனக்கு நீச்சல் தெரியாதே என்பது.

அதெல்லாம் பிரச்னையே இல்லை. முதலில் குதித்துவிடுங்கள். உயிர்மீது ஆசை இருந்தால் தன்னால் நீந்தத் தொடங்கிவிடுவீர்கள் என்று டாக்டர் சொன்னார்.

எனக்காகவே நான் வசிக்கும் பேட்டையில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு நீச்சல் குளம் கட்டிவைத்துக் காத்திருக்கிறார்கள் என்கிற விஷயம் நினைவுக்கு வந்தது. ஒரு ஆர்வத்தில் மறுநாள் காலையே புறப்பட்டுப் போனேன். பணத்தைக் கட்டிவிட்டு சரசரவென்று குளத்தில் இறங்கிவிட்டேன். எனக்கு நீச்சல் தெரியாது, கற்றுத்தருவீர்களா என்று நியாயமாகக் கேட்டிருக்கவேண்டும். தோன்றவில்லை. முயற்சி செய்து பார்ப்போம், முடியாது போனால் கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்து, பாதுகாப்பாக மூன்றடி ஆழத்திலேயே என் முயற்சியைத் தொடங்கினேன்.

கண்டிப்பாகச் சுற்றி இருந்தவர்கள் சிரித்திருக்கவேண்டும். தொப்பையும் தொந்தியுமாக ஒரு கார்ட்டூன் பூதம் போலிருந்தவன் குளத்தின் ஓரத்தில் தத்தக்கா புத்தக்கா என்று தண்ணீருக்குக் கேடு உண்டாக்கிக்கொண்டிருந்தது அவர்களை மிகவும் சிரமத்துக்குள்ளாக்கித்தான் இருக்கும். என் விதி, அங்கே சில பெண்களும் நீச்சல் பயில வந்திருந்தார்கள். (விதியின் நல்ல அம்சமாக அவர்களும் குண்டாகவே இருந்தார்கள், இளைப்பதற்காகவே வந்திருந்தார்கள்.)

முதல் சில தினங்கள் நான் நீருடன் நிகழ்த்திக்கொண்டிருந்த துவந்த யுத்தத்தைக் கேலியாகப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள், திடீரென்று ஒரு நாள் (அன்றைக்கு ஆசீர்வதிக்கப்பட்ட தினம்.) ‘சார், உங்களுக்கு நீந்த வருகிறதே? இன்னும் இரண்டடி உள்ளே சென்று முயற்சி செய்யலாமே?’ என்று ஒருசிலர் சொன்னார்கள்.

எனக்குத் தண்ணீரின் இயல்பு பிடிபட்டுவிட்டது. அதற்கு மனிதர்களை அறவே பிடிக்காது. பொதுவாக விழுங்க விரும்பாது. நாம் அதை விழுங்கத் தொடங்கினால் மட்டுமே மூழ்கும் அபாயம் உண்டு. மூடிக்கொண்டு இருந்துவிட்டால் மிதக்கவே செய்வோம். தவிரவும் அது ஒரு நல்ல மூச்சுப்பயிற்சியும் கூட.

ஆகவே மிகுந்த உத்வேகத்துடன் இன்னொரு குற்றாலீஸ்வரன் ஆகிவிடும் வெறியில் மேலும் இரண்டடி முன்னேறி நீந்தத் தொடங்கினேன். இதற்கிடையில் என்னுடைய நீச்சல் முயற்சிகளை நானே பாராட்டிக்கொள்ளும் விதத்தில் எனக்கு இரண்டு பரிசுகள் அளித்துக்கொண்டேன். தலைக்கு ஒரு தொப்பி. ஒரு நீச்சல் கண்ணாடி. வெளிர் நீல நீருலகில் மெல்ல நீந்தியபடி நான் நகர்வதை நானே பார்ப்பது ஒரு பேரனுபவமாக இருந்தது. நீரின்றி அமையாது உலகும் உடலும்.

வீட்டாரின் கிண்டல்கள், நண்பர்களின் நக்கல்கள், எனக்கே அவ்வப்போது எழுந்த அவநம்பிக்கை, காலை ஒரு மணிநேரத்தைக் கண்டிப்பாகச் செலவிட்டாகவேண்டியதில் உண்டான பல பிரச்னைகள் என்று அனைத்துத் தடைகளையும் தாண்டி, தொடர்ந்து நீச்சலுக்குச் செல்லத் தொடங்கியதில் இரண்டு லாபங்கள் சித்தித்தன.

முதலாவது, எனக்கு ஒரு மாதத்தில் நீச்சல் வந்துவிட்டது. நன்றாக, குளம் முழுதும் அலைந்து திரிய முடிந்தது. பத்தடி, பன்னிரண்டடி ஆழத்துக்கெல்லாம் சர்வ சாதாரணமாகச் செல்லத் தொடங்கினேன். குப்புறப்படுத்து நீச்சல், மல்லாக்கப் படுத்து நீச்சல், பட்டர்ஃப்ளை நீச்சல், கழுதை நீச்சல், காக்கா நீச்சல் என்று கண்டதும் சாத்தியமானது. பக்கத்தில் இருப்பவர் செய்வதைப் பார்த்தேதான் இவையனைத்தையும் பழகினேன். எப்படியோ வந்துவிட்டது. மனிதர்களாலும் என்னாலும் முடியாதது ஏதுமில்லை.

இரண்டாவது, முதல் மாத இறுதியில் சற்றே தயக்கமுடன் எடை பார்த்ததில் கடும் சரிவு கண்டிருந்தது. இது எனக்கு மிகப்பெரிய மனக்கிளர்ச்சியைத் தந்தது. நினைவு தெரிந்து தொண்ணூறுக்குக் கீழே இறங்கியிராதவன், சடாரென்று எப்படி எண்பத்தி ஏழுக்கு வர முடிந்தது?

மெஷின் சரியில்லாமல் இருக்கலாம் என்று மனைவி கருத்து தெரிவித்தாள். இருக்கலாம். எதற்கும் இன்னும் ஒரு மாதம் கடும் முயற்சி செய்துவிட்டு மீண்டும் பார்க்கலாம் என்று நினைத்து உக்கிரமாக என் விரதத்தைத் தொடரத் தொடங்கினேன். ஒருநாள் தவறாமல் நீச்சலுக்குச் சென்றேன். ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு மணி நேரம், மூன்று மணிநேரமெல்லாம் நீரில் ஊறி எனக்குள் ஓர் எருமை உணர்வு பெற்றேன். உணவு விஷயத்தில் டாக்டர் கூடாது என்று சொன்ன எதையும் கனவிலும் தொடவில்லை. எப்படி என்னால் முடிந்தது என்று கண்டிப்பாகப் புரியவில்லை. ஆனால் எனக்கு விருப்பமான அனைத்தையும் விடுத்து, அவசியமான அனைத்தையும் விருப்பத்துக்குரியவையாக மாற்றிக்கொண்டேன்.

அடுத்த மாத இறுதியில் எடை பார்த்தபோது மொத்தத்தில் ஏழரை கிலோ குறைந்திருக்கக் கண்டு, வீட்டார் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள். நண்பர்கள் சாங்கோபாங்கமாக விசாரிக்கத் தொடங்கினார்கள். என்னப்பா, இளைச்சமாதிரி தெரியற? அன்று முதல் தினசரி எடை பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது. அலுவலகத்துக்கு அருகே ஒரு வங்கியில் எடை பார்க்கும் கருவி உள்ளது என்று நண்பர்கள் சிலர் சொல்ல, வங்கி மேனேஜரைவிடவும் சின்சியராக, தினசரி அங்கே செல்லத் தொடங்கினேன். விரைவில் எனக்கு எடை பார்க்கும் இயந்திரங்கள் பற்றிய பல உண்மைகள் புரியத் தொடங்கின. அனைத்து இயந்திரங்களும் ஒரே எடையைக் காட்டாது. கண்டிப்பாக ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் அரைக்கிலோ வித்தியாசமாவது இருக்கும். கூடியவரை ஒரே இயந்திரத்தில் நம் கனத்தைப் பரிசோதித்துக்கொள்வது சாலச்சிறந்தது. என் வீட்டில் உள்ள இயந்திரத்தில் நான் இப்போது எழுபத்தி நான்கு கிலோ. வங்கி இயந்திரத்தில் எழுபத்தி ஆறு. டாக்டர் செல்வத்தின் க்ளினிக்கில் உள்ள இயந்திரத்தில் எழுபத்தி நாலு புள்ளி எட்டு. இதன் சராசரியையே எனது எடையாக எடுத்துக்கொள்கிறேன்.

இது ஒரு புறமிருக்க, என்னுடைய எடைக்குறைப்புப் பிரதாபங்களை அடுத்தவருக்கு விளக்குவதில் விரைவில் பெரிய ஆர்வம் வந்துவிட்டது. என்னைக் கண்டாலே பின்னங்கால் பிடறியில் பட கதறி ஓடும் மக்கள்கூட்டம் அதிகரித்தது. மாட்னா மவன செத்த. டயட் பத்தி பேசியே சாவடிச்சிடுவான்.

ஆனாலும் நான் நிறுத்தவில்லை. எனது முயற்சிகளையும் அதனை எடுத்துரைப்பதையும். விளையாட்டாக ஆரம்பித்ததுதான். ஆனால் அதுவே பழக்கமாகி, எடைக்குறைப்பு நடவடிக்கைகளுக்கு அடிக்ட் ஆகிவிட்டது போல உணர்ந்தேன். திருப்பதி லட்டை மறுக்கிறேன், பண்டிகை தினங்களில் கூட அலட்டிக்கொண்டு பட்சணங்களை நிராகரிக்கிறேன், வெளியில் எங்காவது சென்றால்கூட ஒருநாள் அட்ஜஸ்ட் செய்துகொள்வதில்லை, வீட்டில் எதையும் சமைக்கவே முடிவதில்லை என்று முதலில் தினசரி நூறு குற்றச்சாட்டுகள் எழுப்பிய வீட்டார், சில மாதங்களில் எனது நடவடிக்கைகளுக்குப் பழகிப் போனார்கள். அவனப் பாரு. அவனமாதிரி இருக்க முடியுமா ட்ரை பண்ணு.

மூன்று மாதங்களில் பத்து கிலோ எடையை இழந்து, எனக்குள் ஓர் ஆண் தேவதையாக நான் உருமாறி காற்றில் மிதப்பதுபோல் தோன்றத்தொடங்கியதும் நண்பர்களுக்கு ஒரு ட்ரீட் கொடுத்தேன். பதினைந்து கிலோ இழந்தபோது இன்னொரு ட்ரீட். (கவனமாக இந்த இரண்டு ட்ரீட்களின்போதும் சப்பாத்தி மட்டுமே உட்கொண்டேன்.)

இப்போது என்னைக் காண்பவர்கள் அனைவரும் நான் மெலிந்திருப்பதை உறுதி செய்கிறார்கள். எனக்கே நன்றாகத் தெரிகிறது. நிறைய நடக்கிறேன். சிறிய டேபிள் டென்னிஸ் மட்டையைக் கொண்டு சுவரில் பந்தடித்து வியர்க்க வியர்க்க ஆடுகிறேன். நண்பரின் மொபைல் கேமராவில் தினசரி பரிணாம வளர்ச்சியை (அல்லது வீழ்ச்சியை)ப் படமெடுத்துப் பார்த்து ரசிக்கிறேன். எடை குறைப்புக்கு முன் – பின் என்று கேப்ஷன் போட்டு அந்தப் புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்புவதிலும் ஓர் அற்ப சந்தோஷம் இருக்கிறது.

இன்னும் நான்கு மாதங்களில் என் கனவு எடையான 65 கிலோவை அவசியம் தொட்டுவிடுவேன். அதற்குப்பிறகு எப்படி அதைப் பராமரிப்பது, டயட்டிலிருந்து எவ்வளவு வெளியே வரலாம், வரத்தான் வேண்டுமா என்பதைப் பார்த்துக்கொள்ளலாம். இப்போதைய பரவசம், இடுப்பளவு பற்றியது. பழைய பேண்ட்களை அணியமுடிவதில்லை. சுற்றளவு 42 இஞ்ச்சாக இருந்தது இப்போது 36 ஆகியிருக்கிறது. சட்டை அளவு 44 ஆக இருந்தது இப்போது 40 ஆகியிருக்கிறது. திருமணத்தன்று அணிவிக்கப்பட்ட மோதிரம் இப்போது போடமுடியாததாக இருக்கிறது. அடிக்கடி விழுந்துவிடுகிறது.

ஏகப்பட்ட செலவு. புதிய பேண்ட் சட்டைகள். சரியான அளவில் தைத்துப் போட்டுச் சென்றால் பார்க்கிறவர்கள் அத்தனை பேரும் கைகுலுக்கிப் பாராட்டுகிறார்கள். யூ லுக் ஸோ ஸ்லிம். எப்படி முடிஞ்சிது?

போதாது? சராசரி மனிதனுக்கு அற்ப சந்தோஷங்கள் போதும். நான் சராசரி.

சில கண்டுபிடிப்புகள்:

0 புத்ணர்ச்சி அல்லது உற்சாகம் அல்லது சுறுசுறுப்பு என்பதெல்லாம் உடல் தொடர்பானதில்லை. அவை மனத்தில் உற்பத்தியாகிறவை மட்டுமே. முன்பு நான் எப்படி இருந்தேனோ, இயங்கினேனோ, அதேபோலத்தான் இப்போதும். மாற்றம் ஏதுமில்லை. ஆனாலும் புத்துணர்ச்சி பெற்றிருப்பதுபோல் ஓர் எண்ணம் எப்போதும் உள்ளே இருக்கிறது.

0 எடைக்குறைப்பு எனக்கு ஆரோக்கியத்தைத் தரலாம் அல்லது நாளைக்கே சர்க்கரை நோயோ வேறு ஏதாவதோ வரலாம். அது பிரச்னையில்லை. ஆனால் திட்டமிட்டு ஒரு முயற்சியைத் தொடங்கி, அதில் வழுவாமல் முன்னுக்குச் செல்வது ஒரு நல்ல மனப்பயிற்சி. இது மிகுந்த தன்னம்பிக்கை தருகிறது.

0 எதையும் பெற்றால்தான் மகிழ்ச்சி என்பதில்லை. எடையை இழந்தாலும் அதுவே.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி