பாட்டி மரணப் படுக்கையில் இருந்தாள். வயதான கட்டைதான் என்றாலும் போகப் போகிற நேரத்தில் ஒரு துயரம் சூழத்தான் செய்யும். அம்மா அழுதுகொண்டிருந்தாள். எதிர்பார்த்து முன்கூட்டி வந்திருந்த உறவினர்கள் ஒவ்வொருவராகத் தமது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். பாட்டி நல்லவள். பாட்டி பரந்த மனப்பான்மை கொண்டவள். சிக்கனமானவள். அவள் கோபப்பட்டுப் பார்த்ததில்லை. அவள் சமைக்கும் அரிசி உப்புமா ருசிகரமானது. பாட்டி நிறைய கஷ்டப்பட்டிருக்கிறாள். ஆனால் எதையும் காட்டிக்கொண்டதில்லை. தாத்தா அவளை இன்னும் சிறிது நன்றாக வைத்துக்கொண்டிருந்திருக்கலாம். இறுதி வரை போராட்ட வாழ்க்கைதான் அவளுக்கு வாய்த்தது.
இன்னும் என்னென்னவோ சொன்னார்கள். எழுபது எண்பது வருட வாழ்க்கையில் நினைவுகூர நிறையவே இருக்கும். இதையெல்லாம் நினைவற்றுக் கிடக்கும் அவள் எதிரே அமர்ந்து சொல்வதற்கு ஏதாவது தத்துவார்த்தக் காரணம் இருக்குமா என்று தெரியவில்லை. ஒருவேளை அவளுக்கு அரை நினைவு இருக்குமானால், பேசுவதெல்லாம் காதில் விழுந்து சிறிது திருப்தியடையக்கூடும். அது நிம்மதியாகப் போய்ச்சேர வழி வகுக்கும் என்றால் சரி. ஆனால் யாருக்குத் தெரியும்?
தனக்கு ஏன் அப்படி நினைவுகூரும் விதமாக ஒன்றுமில்லை என்று யோசித்தான். பாட்டி என்றல்ல. எந்த உறவுடனும் நெருங்கியது கிடையாது. யாருடனும் உணர்வுபூர்வமான தொடர்பு இருந்ததில்லை. இருக்கிறாயா. இருக்கிறேன். சாப்பிட்டாயா. சாப்பிட்டேன். யார் கவளத்தையும் இன்னொருவர் களவாடாதவரை எல்லோரும் நல்லவர்கள்.
ஏண்டா உம்முனு இருக்க என்று சில உறவினர்கள் கேட்டார்கள். அவனுக்கு மட்டும் வருத்தம் இருக்காதா என்று வேறு சிலர் பதில் சொன்னார்கள். உண்மையில் தனக்கு அப்படி ஒரு வருத்தம் ஏன் சிறிதும் இல்லை என்பதே அவனது கவலையாக இருந்தது. இத்தனைக்கும் பாட்டிக்கு அவனைப் பிடிக்கும். நிறைய செய்தவள் இல்லை என்றாலும் அன்பில் குறை வைத்ததில்லை. அருகே அமர்ந்து சில முறை தலையைக் கோதி, கன்னம் வருடிக் கொடுத்திருக்கிறாள். சிறிய வயதில் சில கதைகள்கூடச் சொல்லியிருக்கிறாள்.
தெரியவில்லை. ஒருவேளை பாட்டி இறந்த பிறகு அழுகை வருமோ என்னவோ. எதற்கும் இருக்கட்டும் என்று பாட்டி அருகே அமர்ந்து ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டான். பிறகு அதை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு, அமைதியாக உறங்குங்கள் பாட்டி என்று ஒரு கேப்ஷன் கொடுத்தான்.
அன்றிரவு பாட்டி இறந்துவிட்டாள். அவனுக்கு அழுகை வரவில்லை. மறுநாள் காரியமெல்லாம் முடிந்து ஓய்வாக ஃபேஸ்புக்கைத் திறந்து பார்த்தபோது இரண்டாயிரம் லைக்குகளும் அறுநூறு ரிப்களும் வந்திருந்தன. அப்போது அழுகை வந்தது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
Ivan iravan Abraham pola
இன்றைய இளைய தலைமுறைக்கு வாழ்க்கையின் பெரும்பகுதி பேஸ்புக்,வாட்சப்,டுவிட்டரிலேயே இருக்கின்றது என்பதை உணர்த்துகிறது
அப்போது அழுகை வந்தது. முத்தாய்ப்பான இடம் அது.
அந்த அரிசி உப்புமா.. அதன் மேல் கடைசியாக விடப்படும் ஒரு ஸ்பூன் நெய்.
பாட்டியின் அத்தனையும் அதிலே நம்மோடு கலக்கும். மீண்டும் வார்த்தைகளை முடக்கும் ஒரு கணம்.ஒரு கதை.