நீயெல்லாம் ஒரு இலக்கியவாதியா?

சில காலம் முன்னர் பத்ரி ஒருமுறை என்னிடம், ‘உங்கள் வலைப்பதிவின் சைட் பாரில்  நானொரு இலக்கியவாதி இல்லை என்று  கட்டம் கட்டிப் பெரிதாகப் போடுங்கள்’ என்று சீரியஸாகச் சொன்னார். செய்வதில் எனக்குப் பெரிய ஆட்சேபணை ஒன்றுமில்லை. அநாவசியமான சில விவாத விதண்டாவாதங்களைத் தவிர்க்கலாம் என்பதால்தான் செய்யவில்லை.

எனக்கு இலக்கியம் பிடிக்கும். படைக்க அல்ல. படிக்க. அதுதான் என் எழுத்துக்கு வலு சேர்ப்பது. கொஞ்சகாலம் முன்னர் வரை, தமிழில் ஒவ்வோர் ஆண்டும் எழுதப்படும் அனைத்து நாவல், சிறுகதைத் தொகுப்புகளையும் விடாமல் வாங்கிப் படித்துக்கொண்டிருந்தேன். சமகாலத் தமிழ் இலக்கியம் ஒரு மப்பான மார்க்கத்தில் போகத் தொடங்கியபோது வாங்குவதை நிறுத்திவிட்டேன். ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு நான் வாங்கிய இலக்கியப் புத்தகம் பேயோன் 1000. [இப்படிச் சொன்னால் பேயோன் என்னை உதைக்க வருவார்.]

பிரச்னை என்னவென்றால் எழுதுகிற எல்லோரையும் இலக்கியவாதிகள் என்று சிலர் [அல்லது பலர்] நினைத்துக்கொண்டு விடுவதும், புராதனமான ஒரே ஸ்கேலை வைத்து அனைவரையும் அளப்பதும்தான்.

என் முந்தைய கட்டுரையைப் படித்துவிட்டு சிலர் எழுதிய மின்னஞ்சல்களில், நாவல், சிறுகதை எழுதவும் இதே மாதிரி முறையைக் கடைப்பிடிக்க முடியுமா என்று கேட்டிருந்தார்கள். படைப்பை எப்படி டைம் டேபிளுக்குள் அடக்க முடியும் என்று சண்டைக்கு வந்திருக்கிறார்கள்.

நான் சில நாவல் முயற்சிகள், சில சிறுகதை முயற்சிகள் செய்து பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு நாவலாசிரியனாகவோ, சிறுகதை எழுத்தாளனாகவோ என்னை முன்வைத்துப் பேசத் தயக்கமாக இருக்கிறது. எனக்குக் கதை எழுதத் தெரியும். நன்றாகவே எழுதுவேன். அதில் சந்தேகமில்லை. பந்தயம் கட்டி உங்களை வாய் பிளக்கச் செய்வதுபோல் ஒரு கதை எழுதிவிடுவது எனக்கு வெகு சுலபம். ஆனால் அதன் கலை வெற்றி குறித்த உத்தரவாதம் தர இயலாது. நாவல் என்னும் வடிவம் எனக்கு இன்னும் சரியாகப் பிடிபடவில்லை என்றே இன்னமும் தோன்றுகிறது. முயற்சி போதவில்லை என்பதே இதன் காரணம். அதற்காகப் பெரிதாக மெனக்கெடவில்லை என்பதையும் சொல்லிவிட வேண்டும். பத்திரிகை உத்தியோகத்தால், தொடர்கதை வடிவம் வசப்பட்டுவிட்டது. ஆனால் அதில் எனக்கு சவால் இல்லை.

கட்டுரை வடிவம் எனக்குச் சரியாக இருக்கிறது. சவாலாகவும். ஒரு புனைவின் மொழி நேர்த்தியைக் கட்டுரைக்கு அளித்துவிட முடியும்போது, அதன் உண்மையும் இதன் வாசனையும் இணைந்து ஒரு நூதனமான ரசவாதத்தை நிகழ்த்திவிடுகிறது.

இதைக் குறிப்பிட்டுத்தான், ஓர் இலக்கியவாதி இப்படி டேட்டா எண்ட்ரி ஆப்பரேட்டர் போல எழுதுவது கேவலமில்லையா என்று இன்னொரு நண்பர் மின்னஞ்சலில் கவலை தெரிவித்திருக்கிறார். திரும்பவும் சொல்லிவிடுகிறேன். நான் இலக்கியவாதி இல்லை. இரண்டாவது, டேட்டா எண்ட்ரி உத்தியோகம் அத்தனை எளிதானதும் இல்லை. மூன்றாவதாகவும் ஒரு விஷயமுண்டு. டேட்டா எண்ட்ரிக்கு முன் தயாரிப்புகள் அவசியமில்லை. அபுனை எழுத்துக்கு அது அவசியம்.

இந்தக் கேள்வியை ஜெயமோகன், எஸ்ரா, சாரு போன்றவர்களிடம்  கேட்டிருந்தால் அவர்கள் என்ன பதில் சொல்லியிருப்பார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன். அவர்கள் இலக்கியவாதிகள்.  அதே சமயம் என்னைப் போல், சமயத்தில் என்னைவிட அதிகமாக எழுதுகிறவர்கள். பலநாள் நள்ளிரவுகளில், அதிகாலைகளில் ஆன்லைனில் ஜெயமோகனின்  பச்சை விளக்கைப் பார்த்தே அலறியடித்து என் தூக்கத்தை விரட்டியிருக்கிறேன்.

நல்ல எழுத்தாளர்கள் அதிகம் எழுதுவதில்லை என்பது எந்தக் காலத்திலோ, யாரோ வீணாய்ப்போன பெரிசுகள் கிளப்பிவிட்ட வதந்தி. எழுத்து என்பது தொடர்ந்த, நீடித்த, இடைவிடாத பயிற்சி. எழுதிக்கொண்டேதான் இருக்கவேண்டும். இடையில் நல்ல எழுத்து அகப்படும். அதைத் தக்கவைப்பது மட்டுமே நம் வேலை. சறுக்கல் சாதாரண விஷயம். எழுதுகிற எல்லாமே அதி உன்னதமாக இருந்துவிடும் என்று சொல்லுவதற்கில்லை. எழுத்தில் உள்ள ஆகப்பெரிய சவால், தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பது மட்டுமே.

நாவல் அல்லது சிறுகதை எழுதத் தனியாகக் குறிப்புகள் ஏதும் என்வசம் இல்லை. அவற்றை அளிக்க நான் தகுதியானவனும் இல்லை. பல வருடங்களுக்கு முன்னர் நான் என்னுடைய ஆரம்ப நாவல் முயற்சிகளில் இருந்தபோது இதே கேள்வியை ஜெயமோகனிடம் ஒரு சமயம் கேட்டிருக்கிறேன். பதிலாக அவர் எழுதிய கடிதம் நிச்சயமாகப் பாதுகாக்கப்படவேண்டியது. பாதுகாத்தும் வந்தேன். துரதிருஷ்டவசமாக வீடு மாறியபோது எங்கோ தொலைந்துவிட்டது.

அவரது நாவல் கோட்பாடு நூலின் சுருங்கிய வடிவமே அக்கடிதம் என்பதை பின்னாளில் அவர் அந்நூலை எழுதி வெளியிட்ட பிறகு புரிந்துகொண்டேன். ஆனால், புத்தகத்தில் இல்லாத ஒரு விஷயம், கடிதத்தில் இருந்தது. அது, பிரத்தியேகத்தன்மை. எனக்காக மட்டும் எழுதிய குறிப்புகள் அவை. சிக்கலானதும், சவால்கள் மிக்கதுமான ஒரு பெரிய வினாவை எழுப்பிக்கொண்டு, பல்வேறு மூலைகளில் முட்டி மோதி விடை தேடுவதே ஒரு நாவலின் அடிப்படையாக இருக்கும் என்று அதில் அவர் சொல்லியிருந்த நினைவு. விடை முக்கியமல்ல, தேடலே பிரதானம் என்றும் குறிப்பிட்டிருந்தார். [என் நினைவு சரியென்றால் பின் தொடரும் நிழலின் குரல் வெளியாவதற்கு முன்னர் எழுதிய கடிதம் அது.]

ஆகவே நண்பர்களே, உங்களில் பலர் அல்லது சிலர் இலக்கியவாதி ஆக நினைப்பது குறித்து எனக்குப் பரம சந்தோஷம். அதிர்ஷ்டவசமாக நான் அந்தப் போட்டியில் இல்லை என்பதால் வெற்றி உமதே. நல்ல இலக்கியவாதிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் வழி கேட்பீர்களானால் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். நான் பிரதானமாக அபுனை எழுத்தாளன். இந்த வழி சென்னை கார்ப்பரேஷன் சாலை போன்றது. குண்டு குழிகளை ஆராய்ந்துகொண்டிருந்தால் போய்ச்சேர முடியாது. பிரேக்கில் கையே வைக்காமல் ஆக்சிலரேட்டரோடு மட்டும் உறவாடினால் மட்டுமே இந்தச் சாலையில் மேலே போக முடியும். வழியில் இடிபாடுகள் சர்வ சாதாரணம். அதைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொண்டிராமல் வண்டி ஓட்டத் தயாரென்றால் மட்டும் இந்தப் பக்கம் வரலாம்.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

8 comments

  • ‘ விடை முக்கியமல்ல, தேடலே பிரதானம் என்றும் குறிப்பிட்டிருந்தார்’
    வாசகருக்கு புரியாமல் போவதும் பிரதானம் என்று சொல்லியிருந்தாரா 🙂

  • என்னைப் பொறுத்தவரை நீங்கள் மட்டுமல்ல, சொக்கன், முகில், மருதன் போன்ற கிழக்கு எழுத்தாளர்களின் கட்டுரைகள் அவர்களின் கதைகளை விடச் சிறந்தவையாகவே இருக்கின்றது

  • நல்ல எழுத்தாளர்கள் அதிகம் எழுதுவதில்லை. ஆரவாரங்கள் இல்லாவிட்டாலும் அத்திப்பூக்கள் நிலைக்கும்

  • ///அதிர்ஷ்டவசமாக நான் அந்தப் போட்டியில் இல்லை என்பதால் வெற்றி உமதே. நல்ல இலக்கியவாதிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் வழி கேட்பீர்களானால் உங்களுக்கு உபயோகமாக இருக்கும். ///

    ஜெமோ, சாரு இருவரையும் வீழ்த்தி முதலிடம் பெறுவதே…….. என் லட்சியம், குறிக்கோள், ஆகவே சகதோழன், இலக்கிய சிற்பி லக்கிதான் எனக்கு வழிகாட்ட வேண்டும்.

  • என் பெயர் உங்கள் வலைதளத்தில் வந்திருப்பதாக என் உளவாளிகள் சொன்னார்கள். இங்கே வந்து பார்த்தால் இரண்டு இடங்களில் இடம்பெற்றிருக்கிறது. மெத்த மகிழ்ச்சி.

  • எழுபதுகளில் தமிழ்நாட்டின் திருப்புமுனை எழுத்தாளரிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது உங்கள் எழுத்து ரொம்ப யதார்த்தமாக உள்ளது.”நீங்கள் எந்த எழுத்தாளர்களின் படைப்பை விரும்பி படிப்பீர்கள்” என்றதற்கு, “நான் செய்தித்தாள் தவிர எதையும் படிப்பதில்லை,நம்மை சுற்றி நடப்பதை உள்வாங்கி எழுதுகிறேன்”என்றார்.”மற்றவர்களின் எழுத்து நடை என்னை பாதித்து விடும் என்பதால்”என்று முடித்தார்.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading