எழுத்தாளர்கள் விருது

கொண்டாட ஒரு தருணம்

நாஞ்சில்நாடன்

நல்லி செட்டியாருக்கு என்று அறிவிக்கப்பட்டாலும் தமிழர்கள் ஜீரணித்துவிடுவார்கள் என்றாலும், நாஞ்சில் நாடனுக்கு இவ்வாண்டு சாகித்ய அகடமி விருது என்னும் அறிவிப்பு உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருகிறது. நாஞ்சிலுக்கு அன்பான வாழ்த்துகள்.

தலைகீழ் விகிதங்கள் தொடங்கி நாஞ்சில் நாடனின் ஒரு படைப்பையும் நான் விட்டதில்லை. நமக்கே நமக்கென்று அந்தரங்கமாகச் சில விஷயங்கள் எப்போதும் இருக்குமல்லவா? நாஞ்சிலின் கதைகள் எனக்கு அப்படியானவற்றுள் ஒன்று. எளிமையும் நேரடித்தன்மையும் உண்மையும் மிக்கவை அவருடைய எழுத்துகள். யதார்த்தவாதக் கதைகளின் காலம் முடிந்துவிட்டது என்று இலக்கிய உலகின் ஈசான மூலையில் இருந்து எப்போதும் ஒரு குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். கதவிடுக்குப் பல்லியின் குரல் அது. நாஞ்சிலின் கதைகள் யதார்த்தத்தின் அச்சிலிருந்து இம்மியும் பிறழாதவை. அழுத்தந்திருத்தமாக இந்த மண்ணில் கால் பதித்து கம்பீரமாக எழுந்து நிற்கும் கதைகள்.

ஒரு தினத்தந்தி வாசகன் முயற்சி செய்தால்கூட அவரது கதையுலகில் எளிதில் நுழைய முடியும். ரசிக்க முடியும். வியக்கவும் பகிரவும் அனுபவிக்கவும் முடியும். சிறந்த இலக்கியங்கள் அனைத்துக்குமான பொது இயல்பு இது. ஆனால் தமிழ்ச் சூழலில், எழுத்தாளர்களுக்கும் சிற்றிதழ் வாசகர்களுக்கும் மட்டுமே இன்று இந்தத் தருணத்தின் அருமை புரியும்.

நாஞ்சிலின் பிழை அல்ல இது. நமது பிழை.

சென்னை புத்தகக் கண்காட்சி நெருங்குகிறது. இதுநாள் வரை நாஞ்சில் நாடனை வாசிக்காத வாசகர்களுக்கு இது ஒரு சந்தர்ப்பம். அவருடைய பெரும்பாலான (அனைத்து?) புத்தகங்கள் விஜயா பதிப்பக அரங்கில் கிடைக்கும். தமிழினி ஸ்டாலில் சமயத்தில் நாஞ்சிலே கிடைப்பார்!

NHM வெளியிட்டுள்ள நாஞ்சில் நாடனின் எட்டுத்திக்கும் மதயானை – நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இங்கே.

Share

11 Comments

 • மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது. அவரது தலைகீழ் விகிதங்களை நாண்கு நாட்கள் முன்னர்தான் படித்து முடித்தேன். எப்படி இவரைத் தவற்விட்டோம் என நினைத்துக்கொண்டிருக்கும்போது இப்படி ஒரு அங்கீகாரம், நாஞ்சில்நாடனுக்கு. எனக்கே விருது கிடைத்ததுபோல உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி. சாகித்திய அகாதமி தன்னை கௌரவப் படுத்திகொண்டுவிட்டது. இனிமேலும் தகுதியானவர்களுக்கு வழங்கி தனது கௌரவத்தை சாகித்திய அகாதமி காப்பாற்றிக்கொள்ளட்டும்.

  மிக்க மகிழ்ச்சியுடனும், அன்புடனும் நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்களுடனும், ஜெயக்குமார்

 • மிக்க மகிழ்ச்சியான செய்தி!!! நாஞ்சில் நாடனுக்கு மனம்நிறைந்த வாழ்த்துகள்…!!

 • மிக்க மிகிழ்ச்சி.

  //நல்லி செட்டியாருக்கு என்று அறிவிக்கப்பட்டாலும் தமிழர்கள் ஜீரணித்துவிடுவார்கள்//

  வசமாய் தான் “க்”க்கு வைத்திருக்கிறீர்கள் :)))))

 • //ஒரு தினத்தந்தி வாசகன் முயற்சி செய்தால்கூட அவரது கதையுலகில் எளிதில் நுழைய முடியும். ரசிக்க முடியும். வியக்கவும் பகிரவும் அனுபவிக்கவும் முடியும். சிறந்த இலக்கியங்கள் அனைத்துக்குமான பொது இயல்பு இது. ஆனால் தமிழ்ச் சூழலில், எழுத்தாளர்களுக்கும் சிற்றிதழ் வாசகர்களுக்கும் மட்டுமே இன்று இந்தத் தருணத்தின் அருமை புரியும்.//

  நாஞ்சில் நாடன் அவர்கள் தமிழ்நாட்டின் மாணிக்கம்

 • மண்ணின் மனம் கமழும் எழுத்துக்களைத் தந்தவருக்கு தாமதமாகவேனும் சாகித்ய அகாதமி விருது கிடைத்ததில், விருதும் மகிழ்ந்திருக்கும். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

 • வெள்ளாளர் வாழ்க்கையை குறித்து எழுதியதால் வெள்ளாளர்களின் தலைவன் என்று நாஞ்சில் நாடனை வெள்ளாள இன நண்பன் சொன்னான். நான் சொல்கிறேன், நாஞ்சில் நாடன் மனிதம் குறித்து எழுதியவர். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி