நான் எப்படி எழுதுகிறேன்?

நிறைய எழுதுகிறீர்கள். எப்படி நேரம் கிடைக்கிறது என்று அநேகமாக தினசரி யாராவது ஒருவராவது கேட்டுவிடுகிறார். ஒரு பண்பலை வானொலி நிருபர் சற்றுமுன் தொலைபேசியில் அழைத்துச் சில விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தார். அவரும் கடைசியில் மறக்காமல் இதே கேள்வியைத்தான் கேட்டார். எனக்கு இந்த ‘நேரம் கிடைப்பது’ என்கிற விஷயம் உண்மையிலேயே புரியவில்லை. ராக்கெட் விட்டுக்கொண்டிருப்பவர்களெல்லாம் எண்டர் தட்டிக் கவிதை எழுத நேரமிருக்கும்போது நாமென்ன இருபத்தி நாலு மணிநேரமும் உழைத்துத் தேய்ந்துவிடுகிறோம்?

நான் எழுதுகிற விதத்தைச் சொல்லுகிறேன். இது நிச்சயமாக எல்லோருக்கும் சாத்தியமானதுதான். ஒருவாரம் பழகினால் எளிதாக வந்துவிடக்கூடிய பழக்கமும்கூட.

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் தேதியிலிருந்து ஆரம்பிக்கிறேன். அந்த வருடம் நான் செய்ய நினைப்பது என்ன? செய்ய வேண்டியது என்ன? இரண்டுக்குமான இடைவெளி எவ்வளவு? இதை முதலில் யோசித்து எழுதிவைத்துவிடுகிறேன். என் விருப்பத்துக்கு எழுத நினைப்பவை. நிர்ப்பந்தங்களால் எழுத வேண்டி வருபவை. இதில் புத்தகம், பத்திரிகைத் தொடர், தொலைக்காட்சி, சினிமா பிரிவுகள். பிரித்து எழுதி வைத்துவிடவேண்டும். அதுதான் முதல் காரியம்.

பிறகு ஏப்ரல் வரை படிப்பது தவிர வேறு எதையும் செய்வதில்லை. அந்தாண்டு நான் எழுத நினைத்த / எழுத வேண்டியவற்றுக்கான ஆதார நூல்கள், மூல நூல்கள், உதவி நூல்கள் அனைத்தையும் தேடிச் சேகரிக்க இரண்டு மூன்று மாதங்கள் ஆகும். படிப்பது, குறிப்பெடுப்பது தவிர இம்மாதங்களில் வேறெதையும் செய்வதில்லை. வசன எழுத்துக்கு இம்மாதிரியான மெனக்கெடல்கள் தேவையில்லை என்பதால் அந்தப் பணிகளைச் செய்வதில் எனக்கு எப்போதும் பிரச்னை இருப்பதில்லை. [எது இருந்தாலும் இல்லாவிடாலும் தினமும் நான்கு மணிநேரம் எழுதுவது என்பது என் வழக்கம்.] ஆனால் திரைக்கதை அமைப்பில் பங்கு பெறக்கூடிய சூழல் உருவானால் கொஞ்சம் படிக்க வேண்டும். குறைந்தது தினமொரு படமாவது பார்க்கவேண்டும்.

மே மாதத்துக்குப் பிறகு மெல்ல எழுத ஆரம்பிக்கிறேன். புத்தகமாக அல்லாமல் மனத்துக்குத் தோன்றிய விதத்தில் முதலில் எழுதுவேன். நீளமான கட்டுரைகளாக அவை அமையும். ஒரு புத்தகத்தின் எந்தப் பகுதியில் அது சென்று பொருந்தும் என்றெல்லாம் யோசிக்கமாட்டேன். ஒரு நீள் கட்டுரை தன்னளவில் முழுமையாக இருக்கிறதா என்று மட்டும் பார்ப்பது வழக்கம். சில சமயம் இப்படி எழுதும் கட்டுரைகளைப் பத்திரிகைகளுக்கும் தருவேன். வருகிற வாசகர் கருத்துகளை கவனிப்பேன். ஒரு கட்டுரையில் நாம் வெளிப்படுத்த விரும்பிய விஷயம் சரியாகப் போய்ச் சேர்ந்திருக்கிறதா என்று பார்ப்பேன். சரியில்லை என்று தெரிந்தால் தூக்கிக் கடாசிவிட்டுத் திரும்ப எழுதுவேன். ஜூலை, ஆகஸ்ட் வரை இப்படியே போகும்.

செப்டெம்பரில்தான் பொதுவாகப் புத்தகமாகச் சிந்திக்க ஆரம்பிப்பது வழக்கம். அதற்குள் தேவையானவற்றைப் படித்து, தேவைப்படும் நபர்களை நேரில் சந்தித்துப் பேசி, ஒரு புத்தகத்துக்கான ஆயத்தங்களை முடித்திருப்பேன். நல்ல நாள் பார்த்து எழுத ஆரம்பித்துவிடுவேன்.

கதையல்லாத புத்தக எழுத்துக்கு முதல் தேவை, இடைவிடாத கவனம். எழுதும்போது ஒருநாள் இடைவெளி விட்டால்கூட மொழி மாறிவிடும். அதே போல, எழுதிக்கொண்டிருக்கும்போது இடையில் வேறு ஏதாவது வேலை பார்க்கவேண்டி வந்தாலும் மொழி சிதறிவிடும். எல்லாருக்கும் இப்படி ஆகுமா என்று தெரியாது. எனக்கு ஆகும். பல சமயம் நூற்றுக்கணக்கான பக்கங்களை எழுதி, எதிர்பாராவிதமாக இடைவெளி விழுந்து, மொழி மாறிப்போய், திரும்பவும் முதலில் இருந்து எழுதியிருக்கிறேன். இது ஒரு கெட்ட பழக்கம் என்று திருமணமான தினம் தொடங்கி என் மனைவி என்னைக் கடிந்து வந்திருக்கிறாள்.

இப்போதெல்லாம் நான் ரிஸ்க் எடுப்பதில்லை. எல்லா தலைபோகிற வேலைகளையும் மொத்தமாக முடித்துவிட்டு, அல்லது மொத்தமாகத் தள்ளிப் போட்டுவிட்டுத்தான் எழுத உட்கார்கிறேன்.

எழுதும்போது பிரவுசிங் கூடாது. சாட்டிங் கூடாது. ட்விட்டர் கூடாது. தொலைபேசி கூடாது. வீட்டுக்கு வரும் உறவினர் கூடாது. சினிமா கூடாது. டிவி கூடாது. எழுத்து நீங்கலாக மூன்று செயல்களுக்கு மட்டுமே அனுமதி. சாப்பிடலாம். ஓய்வெடுக்கலாம். இயற்கை உபாதைகளுக்குச் செவி சாய்க்கலாம். அவ்வளவுதான்.

இதெல்லாம் எழுதும் நேரத்தில் மட்டுமே. எழுதாத சமயத்தில் நீங்கள் என்ன செய்தாலும் பிரச்னையில்லை.

உதாரணமாக நான் இரவில் எழுதுகிறேன். அநேகமாகப் பத்து மணிக்கு ஆரம்பித்து, அதிகாலை ஐந்து வரை எழுதுவது என் வழக்கம். புத்தக எழுத்து அல்லாத பட்சத்தில் பத்திலிருந்து இரண்டு. இரண்டு மணிக்குப் படுத்து ஆறு அல்லது ஏழு மணிக்கு எழுந்து வழக்கமான பணிகளைப் பார்ப்பதில் எந்தக் கஷ்டமும் யாருக்கும் வராது. எட்டு மணிநேரத் தூக்கம் அவசியம் என்று யாராவது சொன்னால் அவர்கள் க்ஷேமமாக இருக்கட்டும். எழுத இஷ்டப்படுகிறவர்களுக்கு மட்டும்தான் இந்தக் குறிப்பு.

ஒரு புத்தகம் எழுதுவது என்பதை, ஒரு நாளைக்கு ஒரு பகுதி என்பதாகப் பிரித்துக்கொண்டு விடுவேன். அத்தியாயவாரியாக அல்ல. ஒரு புள்ளியில் இருந்து இன்னொரு புள்ளி வரை. அது அத்தியாய முடிவாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். பிரச்னையில்லை. அன்றைக்கு என்ன எழுதவேண்டும்? அதுதான். அவ்வளவுதான். பகல் பொழுதில் ஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்கும் இடையே அதற்காகப் படித்து, தயார் செய்துகொண்டுவிடுவேன். எப்போதும் கையில் புத்தகங்கள் இருக்கும். ஐந்து நிமிடம் சேர்ந்தாற்போல் கிடைக்கும் என்றால் உடனடியாகத் திறந்துவிட வேண்டும். எனக்கு ஒரு பக்கம் படிக்க 25 வினாடிகள் போதும். ஆங்கிலம் என்றால் 35-40. மாலை ஆனபிறகு மனத்துக்குள்ளோ அல்லது உரக்கவோ, எழுதவிருப்பதை ஓரிருமுறை சொல்லிப்பார்ப்பதும் அவசியம். உச்சரிக்க சிரமமாக இருக்கக்கூடிய சொற்களை கவனமாகக் குறித்துக்கொண்டு எழுத்தில் அவற்றைத் தவிர்ப்பது முக்கியம்.

இப்படித் தயாரான பிறகு இரவு எழுத உட்கார்ந்தால், அநாவசியமாகப் புத்தகங்களைப் புரட்டியோ, இணையத்தில் தேடியோ நேரத்தை வீணாக்கவேண்டி இராது. எழுத உட்கார்ந்தால் சற்றும் தடையற்று எழுதுவது என் பாணி. சொற்களுக்காகவோ, வேறு எதற்காகவோ ஒருபோதும் காத்திருப்பதில்லை. என்னுடைய ரெஃபரன்ஸ் மெடீரியல்கள் அனைத்தும் மின்விசிறியில் ஒளித்துவைக்கப்பட்டிருக்கின்றன என்று மருதன் சொல்லுவான். ஏகாந்தமாக மேலே பார்த்துக்கொண்டு டைப்படித்துக்கொண்டே போய்விடுவேன். அதற்கு அந்த முன் தயாரிப்பு அவசியம்.

உங்களால் ஒரு மணி நேரத்தில் ஐந்நூறு சொற்கள் எழுத இயலுமென்றால் தினசரி நான்கு மணி நேரம் எழுதினால் இரண்டாயிரம் சொற்கள் எழுதலாம். இது தினசரிப் பழக்கமானால் வருஷத்துக்கு 730000 சொற்கள். நான் அவ்வளவுகூட எழுதுவதில்லை. வருடத்துக்கு இரண்டு முதல் இரண்டரை லட்சம் சொற்கள் மட்டுமே எழுதுகிறேன். தினமும் எழுதி முடித்ததும் ஒரு மணிநேரமாவது ஏதாவது படம் பார்த்துவிடுவேன். புத்தகத்தைப் போலவே திரைப்படங்களையும் இரண்டு மூன்று நாள்களில் பார்த்து முடிக்கலாம். ஒன்றும் தப்பில்லை.

சமீபத்தில் முடித்த ஆர்.எஸ்.எஸ் பற்றிய புத்தகத்தை ஏழு தினங்களில் எழுதினேன். ஒரு மாத காலம் அதற்காகப் படித்துக்கொண்டிருந்ததை விட்டுவிடலாம். எழுத எடுத்துக்கொண்ட நாள்கள் வெறும் ஏழு மட்டுமே. இதிலும் எழுதிய நேரம் என்று பார்த்தால், ஒரு நாளைக்குப் பத்து மணி நேரம் வீதம் 70 மணி நேரங்கள் மட்டுமே. நாள் கணக்கில் கூட்டினால் வெறும் மூன்று தினங்கள்.

காலை பத்து மணிமுதல் ஒரு மணிவரை. மீண்டும் இரவு பத்து மணி முதல் அதிகாலை 5 மணி வரை. இடைப்பட்ட நேரத்தில் ஜனநாயகக் கடமைகளை ஆற்றினால் போதாது? யதேஷ்டம்.

எனக்கென்ன தோன்றுகிறது என்றால், எழுதுவது என்பது ஒரு மனப்பயிற்சி. அதைச் செய்து பார்ப்பதைத் தள்ளிப்போடத்தான் நேரத்தைக் குறையாகச் சொல்லிவிடுகிறோம். அபாரமான எழுத்துத் திறமையும், அதைவிட அபாரமான சோம்பேறித்தனமும் படைத்த என் இனிய இணைய நண்பர்கள் சிலர் இதைப் படித்துவிட்டு, வருகிற வருடத்தில் இருந்தாவது இதை முயற்சி செய்து பார்க்கலாம். ஐந்நூறு கூட வேண்டாம். ஒரு நாளைக்கு முன்னூறு சொற்கள் என்ற இலக்கு வைத்து தினமும் தவறாமல் எழுத ஆரம்பித்தாலே போதும். ஒரு புத்தகத்தை எழுதி முடிக்கும்போது கிடைக்கும் பேரானந்தத்துக்கு நிகராக இன்னொன்று கிடையாது.

எழுத்தின் ருசியறிந்தவர்களுக்கு இது நிச்சயம் புரியும்.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

31 comments

  • […] This post was mentioned on Twitter by nchokkan and களிமண் கலயம், Karthick B. Karthick B said: எழுதவேண்டும் என நினைப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு. http://writerpara.com/paper/?p=1679 […]

  • இங்கிருந்தே வணங்குகிறேன் தாங்கள் மிகவும் அருமையாக எளிமையாக வழிகாட்டியுள்ளீர்கள்.நன்றிகள் பல.

  • எழுத்தை பொறுத்த வரையில் நீங்கள் ஒரு ரிஷி மாதிரி வாழ்கிறீர்கள் ராகவன். தூக்கத்தை குறைக்க வேண்டும் என்ற வரிகளை படித்தபொழுது வயிறு, குடல், சிறுநீரகம் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கலக்குகிறது.

    :-)))

    /– அபாரமான சோம்பேறித்தனமும் படைத்த என் இனிய இணைய நண்பர்கள் சிலர் இதைப் படித்துவிட்டு, வருகிற வருடத்தில் இருந்தாவது இதை முயற்சி செய்து பார்க்கலாம்.–/

    இதை எனக்கென்றே சொல்லியது போல இருக்கிறது…

  • இன்று அதிகாலை 5 மணிக்கே எழுந்தது நல்லதாகப் போயிற்று.

    ஏதோ ஒரு விதத்தில் என்னை உற்சாகமூட்டுகிறீர்கள். என்னவென்று சரியாக சொல்லத் தெரியவில்லை. அடிக்கடி இந்த போஸ்டிங் படித்தே என் சோம்பேறித்தனத்தை விரட்டுவேன். இன்னும் நல்ல எழுத்து படைப்பேன். ‘நிறைய எழுதுங்கள்’ என்று சுஜாதா என்னிடம் சொல்லியும், பல முறை ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுத்தும் இருப்பதை நான் உதாசீனம் செய்வது எனக்கே நான் செய்துகொள்ளும் துரோகம். வருகின்ற வருடத்தில் என்னிடமிருந்து மினிமம் 5 புத்தகங்கள் கேரண்டி. இப்போதே துண்டு போட்டு வைக்கிறேன்.

    நானும் ஒரு நாள் ‘நான் எப்படி இவ்வளவு எழுதுகிறேன்?’ எழுதவேண்டாமா?!

  • பாரா! உத்வேகம் தரும்படியான பதிவுக்கு நன்றிகள். எவ்வளவோ எழுதவேண்டும் என்று எப்போதும் நினைப்பதுண்டு. நேரமில்லை என்றுதான் இத்தனை நாள் தள்ளிப்போட்டிருக்கிறேன். உங்களின் பதிவு, எனது பொய்ச் சமாதானத்தைத் தோலுரித்துக் காட்டிவிட்டது. வரும் புத்தாண்டின் முதல் நிச்சயமாய் நீங்கள் சொன்னதை மனதில் வைத்து எழுதத் துவங்குவேன். உங்களுக்கு என் மனபூர்வமான நன்றிகள்.

  • உங்கள் எழுத்தைப் போன்று பத்தில் ஒரு பங்கு எழுத ஆசைப்பட்டு கனினி முன்பாக உட்கார்ந்து உட்காந்து எனக்கு தொப்பை விழுந்தது விட்டது. இன்னும் உட்கார்ந்தால் எங்கே எழக்கூட முடியாமல் முன் கனம் அதிகர்த்து விடுமோ என்று பயந்து கனினிபக்கமே வர தயக்கம் வந்து விட்டது. நீங்கள் எப்படித்தான் பத்து மணி நேரம் உட்கார்ந்து டைப்புகிறீர்களோ! உங்கள் உத்வேகமும் அந்தராத்மாவின் உந்துதலும் தான் இதற்கு காரணம். அருமை.வாழ்க வளமுடன்.

  • நல்ல பயிற்சி முறை ! என்னைப் போல் வளர துடிக்கும் ஆட்களுக்கு அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.

  • எழுத வராதவர்களுக்கு கூட ”நாமும் எழுதிப் பார்க்கலாமோ“ என்று தோன்ற வைக்கும் கட்டுரை. நன்றி.

  • பாரா, சூப்பர். மிக விஞ்சஜன (scientific – ஐயோ கூகிள் இன்டிக்ள இந்த ஞ், பொட்டு இல்லாம அடிக்க முடியல…என்ன என்னவோ வருது..) பூர்வமா எழுதி இருக்கீங்க. இது எழுத்தாளர்க்கு மட்டுமல்ல, என்னை போன்ற வாசகர்களுக்கும் ஒரு செய்முறை விளக்கம். இன்னும் 2 மாததற்குள் ஜாவா முடிக்க முயற்சி, இல்லை, முடிக்க உங்கள் முறையில் செய்ய போகிறேன். எப்படி எழுதுறீங்கன்னு கேட்டா அவன் அவன் ரச்மஸ் படிக்கணும், குத்சொவ குமுறனும், பாவ் பாஜி சாப்டனும்-ன்னு பீலா விடும் போது…நீல படம் மாதிரி…இது தான் மேட்டருன்னு போட்டுபுட்டீங்க .

  • ஒரு எழுத்தாளரின் அ​றை​யை பார்க்க​வேண்டும் என்பது என்னு​டைய நீண்ட நாள் கனவு. உங்களு​டைய இந்த எழுத்து என் நீண்ட நாள் ஆ​சை​யை தீர்த்து ​வைத்தது. உங்களின் இந்த எழுத்து மூலம் நீங்கள் உங்கள் எழுத்த​றை​யை முழு​மையாகச் சுற்றிக் காட்டினீர்கள்.

  • கம்பேனி ரகசியங்களை வெளியிட்டமைக்கு நன்றி

  • எனக்கென்னவோ எழுதுவது பால்கறப்பது மாதிரியான விஷயமாகப் படுகிறது 🙁

    சில நேரத்தில் கறந்து கறந்து ரத்தம் கூட வந்துவிடுகிறது.

  • ஸ்ரீகிருஷ்ணன்: நன்றி. என் எழுத்து அறை குறித்துத் தனியே எழுதலாம். அது எழுத்தைப் போல் அத்தனை ஒழுங்கானதல்ல. ஒரு பெரிய சைஸ் குப்பைத்தொட்டியில்தான் நான் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். நான் வெட்கப்படக்கூடிய விஷயம் அது.

  • ராம்: எழுத்து ஒழுங்காக வந்துவிட்ட பிறகு தொப்பை அழகாகத் தோன்ற ஆரம்பித்துவிடும். எனவே அதற்கு பயந்து எழுதாமல் இருக்காதீர்கள்.

  • கிருஷ்ணப்ரபு: எழுதும்போது நிச்சயமாக நீங்கள் என் நினைவுக்கு வந்தீர்கள்.

  • எழுதும்போது பிரவுசிங் கூடாது. சாட்டிங் கூடாது. ட்விட்டர் கூடாது. தொலைபேசி கூடாது. வீட்டுக்கு வரும் உறவினர் கூடாது. சினிமா கூடாது. டிவி கூடாது. எழுத்து நீங்கலாக மூன்று செயல்களுக்கு மட்டுமே அனுமதி. சாப்பிடலாம். ஓய்வெடுக்கலாம். இயற்கை உபாதைகளுக்குச் செவி சாய்க்கலாம். அவ்வளவுதான்.// பாரா, அதீத ஆணிய பார்வை 🙂 எங்க பக்கமும் யோசிங்க, ஹூம்! நானும் ஒரு பதிவு போட வேண்டியதுதான்

    • அடக்கடவுளே! உஷா மாமி, இது உங்களுக்கும் சேர்த்துச் சொன்னதுதான்.

  • ஒரு பாடநூலாக வைக்கும் அளவிற்கு நேர்த்தியான கட்டுரை.வாழ்த்துக்கள்.
    ஒரு யானை சிற்பத்தைபார்த்து வியந்த ஒருவர்,அதை வடித்த சிற்பியிடம் இதை செதுக்குவது எப்படி என வினவ அவர் சொன்னாராம்”ஒரு பெரிய கல்லை தேர்தெடுத்து எந்த பகுதியெல்லாம் யானை போல் இல்லையோ அவற்றை செதுக்கி எறிந்து விட்டால் மீதி இருப்பது ஒரு அருமையான யானை சிற்பம்”.
    உங்கள் கட்டுரையை படித்துவிட்டு எல்லோரும் கணினி முன் அமர்ந்தால் ராம் சொன்னது போல தொப்பைதான் விழும்.ஜாக்கிரதை.

  • பாரா அவர்களுக்கு, வணக்கம். நான் ஒரு புதிய வாசகன். நிறைய படிப்பதன்மூலம்தான் எழுத முடியும் என்று தெரிந்துக்கொண்டு, படிக்கத் துவங்கியிருக்கிறேன். ஜெயமோகன், பிரபஞ்சன், வாசந்தி போன்ற இலக்கிய எழுத்தாளர்களின் படைப்புக்களையும் நீங்கள் எழுதுகின்ற அரசியல் புத்தகங்களையும் திரு முகில் அவர்களின் வரலாற்று புத்தகங்கள் சிலயும் வாசித்திருக்கின்றேன். நம்மால் இப்படி எல்லாம் எழுத முடியாது என்று ஒவ்வொரு புத்தகத்தினைப் படிக்கின்றபோதும் தோன்றுகிறது. அதே சமயம் எழுதவேண்டும் என்றும் ஆர்வம் பீரிடுகிறது. உங்கள் எழுத்துக்களுக்கு உரமாக நீங்கள் என்னென்ன வாசித்திருப்பீர்கள் என்று அறிந்துகொள்ல விரும்புகிறேன். சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு கண்டிப்பாக வரவுள்ளேன். உங்களைச் சந்திக்க இயலுமா? அங்கே நான் என்னென்ன புத்தகங்கள் வாங்கலாம் என்று எனக்கு நீங்கள் உதவுவீர்களா? என்னைப் பற்றிக் கொஞ்சம்… நான் எலக்ட்ரிகல் இஞ்சினியரிங்கில் டிப்ளமோ பெற்றுள்ளேன். கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றேன். நான்கு மாதம் முன்னர் என் சிறுகதை ஒன்று தினமலரில் பிரசுரமாகியுள்ளது. தொடர்ந்து எழுத முயற்சி செய்துக்கொண்டிருக்கும் உங்கள் வாசகன்..

    மணிகண்டன்.

  • Dear Mr Para, I want to meet you in person. Could you guide me in getting “must read” books in tamil during the book fair days? I will be in chennai upto Feb.

    Cheers,
    J Basheer, Muscat

  • அற்புதம்.எழுத்துக்கு முன்தயாரிப்பு வேண்டும் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.அப்படியே நாபிக் கமலத்திலிருந்து தன்னியல்பாய் பீறிட்டு வரவேண்டும் அது என்று சொல்லாதது தைர்யம் அளித்தது. ஆனால் அது மூளையில் மட்டும்தான் நிகழுமா ..அல்லது எடுத்துவைத்த குறிப்புகளை அவ்வபோது பார்த்துக் கொள்வீர்களா….நடை மாறுவது பற்றி எழுதி இருந்தீர்கள்.புரிகிறது.எனக்கும் அந்தப் பிரச்சினை உண்டு.ஆனால் எழுதி எழுதி ஒரு தனி நடை ஸ்திரப் பட்டுவிடவேண்டும் என்று ஒரு எழுத்தாளர் சொன்னார்.ஆனால் என்றேனும் அவ்விதம் நிகழுமா என்று சந்தேகமாகவே இருக்கிறது.தினம் முன்னூறு சொற்கள்!ம்ம்ம் …[பெருமூச்சு]

    • போகன்: தனி நடை உருவாக்கம் இயல்பாக நிகழும். அது பற்றிக் கவலை வேண்டாம். கதையல்லாத எழுத்தில் மொழி மாற்றம் என்பது சில பொருந்தாச் சொற்களின்மூலம் ரகசியமாக நிகழ்வது. இதை விழிப்புணர்வுடன் கவனிக்கவேண்டும். கூறினார் என்று எழுதவேண்டிய இடத்தில் சொன்னார் என்று எழுதிப்பாருங்கள். காதிலும் கருத்திலுமே அர்த்தம் மாறும். இடைவெளி விட்டு விட்டு எழுதுவதால் இப்படி ஆகும். அதைத் தவிர்ப்பது அவசியம்.

  • சான்சே இல்லை. இத்தனை எங்களால் செய்ய முடிந்தால் நாங்களும் உங்களைப் போல் அல்லவா ஆகி இருப்போம்.
    ஓரளவிற்காவது முயற்சி செய்வோம்.

  • ரெஃபரன்ஸ் மெடீரியல்கள் கலெக்ட் செய்வதற்கு ஏதேனும் ஐடியாக்கள் சொல்லுங்கள். 500 வார்த்தைகள் டைப்புவது பிரச்சினையில்லை.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading