கால் கிலோ காதல் அரை கிலோ கனவு – 13

விடுமுறை அறிவித்துவிட்டார்கள். சரியாக ஒரு மாதம். பத்தாம் வகுப்புக்குப் போகவிருக்கிற மாணவ மாணவிகளுக்கு இருக்கவேண்டிய பொறுப்பு, அக்கறை குறித்தெல்லாம் ஹெட் மாஸ்டர் சாங்கோபாங்கமாக விவரித்துவிட்டு, லீவு நாள்களை வீணாக்காமல் படிக்கும்படி கெட்ட அறிவுரை சொல்லி அனுப்பிவைத்தார்.

பத்மநாபனுக்குக் கடந்த ஒருமாத கால படிப்பு அனுபவமே அறுபது வயது வரை தாங்கும்போலிருந்தது. என்ன ஆகிவிட்டது தனக்கு? பைத்தியம் பிடித்த மாதிரி பாடப் புத்தகங்களில் மூழ்கி முத்தெடுத்து, தேர்வெழுதித் தீர்த்ததற்கு என்னவாவது பிரயோஜனம் இருக்குமா என்று இப்போது சந்தேகமாக இருந்தது. ஆகப்பெரிய பயன் என்றால் அது நல்ல மார்க். ஆனால் அதில் பெரிய விருப்பம் இல்லை. நல்ல மார்க் என்பது வளர்மதியின் மனத்தில் காதலை உருவாக்குமானால் சரி. வெறுமனே படிக்கிற பையனாக அடையாளம் காணப்படுவதில் பெரிய லாபங்கள் ஏதுமில்லை. தவிரவும் ஒரு மாறுவேடப்போட்டியில் மகாத்மா காந்தி வேஷம் போடுவது போலத்தான் அவன் தேர்வுக்குப் படித்திருந்தான். நிரந்தரமாக மகாத்மா காந்தியாகும் உத்தேசம் ஏதுமில்லை.

யோசித்துப் பார்த்தால் படிக்கிறேன் பேர்வழி என்று ஒருமாத காலத்தைத் தான் மிகவும் வீணாக்கி விட்டது போலத்தான் இப்போது தோன்றியது. வளர்மதியிடம் மேலும் முயற்சி செய்திருக்கலாம். அன்பே உன்னைக் காதலிக்கிறேன். நீயில்லாமல் வாழ்வது கஷ்டம். என் காதலை ஏற்றுக்கொள்வதற்கு ஏன் இத்தனை தயக்கம் காட்டுகிறாய்? என்னைப் பிடிக்கவில்லையா? அப்படியாவது சொல்லிவிடு. நான் ஆறுமுக தேவிக்கு பிராக்கெட் போடப் போகிறேன். ஒன்பதாம் வகுப்பு டி பிரிவில் புதிதாக வந்து சேர்ந்திருக்கிறாள். பார்க்க லட்சணமாக, கல்லுக்குள் ஈரம் அருணா போல இருக்கிறாள். அவள் கண்ணுக்குள் நெட் கட்டி ஷட்டில் காக் விளையாடலாம்போல் அத்தனை பெரிதாக உள்ளது.

இவ்வாறு புத்தி குதிரை வேகம் எடுத்து யோசிக்கத் தொடங்கியபோது படாரென்று பின்னந்தலையில் அடித்துக்கொண்டான்.

சே. எத்தனை கெட்டவன் நான். புனிதமான என் காதலின்மீது நானே சாணி பூசுகிறேன்! வெளியே தெரிந்தால் எத்தனை அசிங்கம். குறிப்பாக வளர்மதிக்குத் தெரிந்தால் என்ன நினைப்பாள்!

அதே சமயம் ஆறுமுக தேவியின்மீது எப்போது தன் பார்வையும் புத்தியும் குவிந்தது என்றும் அவன் யோசிக்கத் தவறவில்லை. சென்ற வருடம்தான் பள்ளியில் புதிதாக வந்து சேர்ந்திருந்தாள். அவளது அப்பா காண்டீபன் பஸ் சர்வீஸில் கண்டக்டராக உத்தியோகம் பார்க்கிறவர். செங்கல்பட்டு – உத்திரமேரூர் ரூட்டில் ஓட்டிக்கொண்டிருந்தவருக்கு திருப்போரூர் – சோழிங்கநல்லூர் ரூட்டுக்கு மாறுதல் வந்தபடியால் கேளம்பாக்கத்தில் குடும்பத்தைக் கொண்டுவந்து வைத்துவிட்டு, போலாம் ரைட் என்று புறப்பட்டுப் போனவர்.

வகுப்பில் ஒரு சில பையன்கள் ஆறுமுக தேவியின் அழகு குறித்து அவ்வப்போது குறிப்பிட்டிருக்கிறார்கள். பத்மநாபனும் ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் அவளைப் பார்த்தான். நன்றாகத்தான் இருந்தாள். ஆனால் வளர்மதியைவிடவுமா என்று சொல்லத் தெரியவில்லை. எப்படி இருந்தாலுமே தன் நினைப்பு அயோக்கியத்தனமானது என்று அவனுக்குத் தோன்றியது. மானசீகமாக வளர்மதியிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, வேகமாக தோட்டத்துப் பக்கம் போனான்.

ஒரு கோவைக்காயைக் கிள்ளி எடுத்துக்கொண்டு சுவரருகே சென்றான். மனத்துக்குள் இருக்கும் வளர்மதி. பிரம்மாண்டமான அளவில் எப்போதும் விழிகளையும் உள் விழிகளையும் நிறைக்கும் அவளது புன்னகை தோய்ந்த முகம். சீ போடா, சீ போடா என்று எத்தனை முறை செல்லமாகத் திட்டியிருக்கிறாள்! ஒரு முறைகூட கோபித்துக்கொண்டதில்லை. வாத்தியார்களிடமோ ஹெட் மாஸ்டரிடமோ போட்டுக்கொடுத்ததில்லை.

காதல் இல்லாமல் இது சாத்தியமா? நிச்சயம் இல்லை. ஆனால் சொல்வதற்குத் தயங்குகிறாள். யாருக்கோ பயப்படுகிறாள். உப்பள முதலாளியான தாத்தா முதலியாருக்கா? உக்கிரமூர்த்தியான அப்பாவுக்கா? வாத்தியார்களுக்கா? ஹெட் மாஸ்டருக்கா? தோழிகளுக்கா?

அன்பே, யாருக்கும் பயப்படாதே. என்னை நம்பு. நான் உன்னுடைய குடுமிநாதன். உனக்காகவே வாழ்கிறவன். எப்போதும் உன்னை நினைத்துக்கொண்டே இருப்பவன். வேண்டாத விடுமுறை மாதத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பின்புறச் சுவரில் உன் திருமுகத்தை வரைந்து பார்க்கிற காதல் பைத்தியம். ஒருவேளை நான் வரையும் உன் படம் ஒழுங்காக வந்துவிட்டால் கீழே ஆர்ட் பை என்று என் பெயரை எழுதிவைப்பேன். சொதப்பிவிட்டால் என் அப்பா பெயரை எழுதிவிடுகிறேன். இதோ கண்ணை வரைந்துவிட்டேன். இதோ மூக்கு. இதோ தலைமுடி.

கடவுளே ஒழுங்காக வந்துவிடும் போல் உள்ளதே. எனக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் கலைஞனை நான் இந்த விடுமுறையில் அடையாளம் கண்டுகொண்டுவிட்டேனா? நான் ஒரு ஓவியனா! மாருதி போல், ஜெயராஜ் போல், லதா போல் வந்துவிடுவேனா?

பத்மநாபனுக்கு அந்த விடுமுறையில்தான் முதல் முதலில் குமுதம் வாசிக்கக் கிடைத்தது. சாண்டில்யன் என்பவர் எழுதும் விஜய மகாதேவி. படித்தால் முழுக்கப் புரிகிறது என்று சொல்லமுடியவில்லை. ஆனாலும் படிக்கவேண்டும், படித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று எப்போதும் தோன்றியது. ஒரு மாதிரி குறுகுறுப்புடனேயே வாசிக்கும் அனுபவம் அவனுக்கு மிகவும் புதிதாக இருந்தது. என்னமாய் வருணிக்கிறார்! குறிப்பாக அந்த இளவரசியை.

பாழாய்ப்போன லதாதான் என்னமாய்ப் படம் போடுகிறார்!

அவன் திரும்பத் திரும்ப விஜய மகாதேவியைப் பார்த்துக்கொண்டே இருந்தான். இரண்டு பக்கங்களை அடைத்துக்கொண்டு சப்ரமஞ்சத்தில் சயனிக்கும் தேவி. மேலாடை மிக இயல்பாக நழுவிச் சரிந்தாலும் அவள் தனக்காகவே அதனைக் கண்டுகொள்வதில்லை என்று அவனுக்குத் தோன்றியது. உள்ளுக்குள் உருவாகி ஓர் உருண்டைபோல் இங்குமங்கும் உருண்ட திருட்டுத் தனத்தை ரகசியமாக பத்திரப்படுத்தினான்.

லதாவைப் போல் ஒரு மாபெரும் ஓவியனாகிவிடவேண்டும் என்று வெஞ்சினம் கொண்டு கையில் கிடைத்த தாளில் எல்லாம் வரைந்து பார்க்கத் தொடங்கினான். கண், மூக்கு, தலையெல்லாம் கூடப் பிரச்னையில்லை. முக்கியமான சில விஷயங்கள் சரியாக வரமாட்டேனென்கிறது. சரியாக வராது போனால்கூடப் பிரச்னையில்லை. சமயத்தில் தனக்கே கொலை வெறி வருமளவுக்கு அரூபமாகிவிடுகிறது. சோகம் உடனே நெஞ்சைக் கவ்விவிடுகிறது.

படம் போடுவது கஷ்டம். கழுத்துக்குக் கீழெ மிகவும் கஷ்டம். எனவே அவன் சுவரில் வரைய ஆரம்பித்த வளர்மதியின் படத்தை கவனமாக முகம் மட்டும் என்று தீர்மானித்துக்கொண்டுதான் ஆரம்பித்தான். தவிரவும் வளர்மதியை வரைய நினைத்துவிட்ட பிற்பாடு முகத்தைத் தவிர வேறெதையும் நினைக்கப் பிடிப்பதில்லை. லதாவின் படங்களில் கவர்கிற அம்சங்களெல்லாம் காதலுக்கு எதிரானவை போலிருக்கிறது. யாருக்குத் தெரியும்? உள்ளுக்குள் என்னென்னவோ நடக்கிறது.

பலவிதமான யோசனைகளுடன் அவன் சுவர்ப் படத்தில் மூழ்கியிருந்தபோது சட்டென்று அம்மாவின் குரல் கேட்டது.

‘சீ கழிசடை. புத்தி போவுது பாரு. நவுருடா. நவுந்து போ மொதல்ல.’

அந்தக் கணம் என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. அம்மா பார்த்துவிட்டாள். ஒரு பெண்ணின் முகத்தை வரைந்துகொண்டிருக்கும் பிள்ளைகளைப் பொதுவாக அம்மாக்கள் விரும்பமாட்டார்கள். அவன் யோசிக்கிற வேகத்தைக் காட்டிலும் நூறு மடங்கு அதிகமாக அம்மா யோசிப்பாள். கெட்டுப்போய்விட்டான் என்று மனத்துக்குள் விழுந்துவிட்டால் அவ்வளவுதான்.

என்ன செய்யலாம் என்று அவன் வேகவேகமாக யோசித்தான். இந்தக் கணம் அம்மா திட்டத் தொடங்கிவிட்டால் வேறு வினையே இல்லை. ஒருமாத விடுமுறையையும் நரகமாகக் கழிக்கவேண்டி வந்துவிடும். எப்பப்பார் போலீஸ் மாதிரி வேவு பார்த்துக்கொண்டே இருப்பாள். சினிமாவுக்குக் கூடப் போகவிடமாட்டாள். கடவுளே, காப்பாற்று.

‘என்னடா வேல இது?’

‘சும்மாம்மா. பொழுது போவல. அதான்…’

‘பொழுதுபோவலன்னா படிக்கவேண்டியதுதான?’

‘எல்லாம் படிச்சாச்சு. பரீட்சை எழுதியாச்சு. இப்ப லீவு’

‘அடுத்த வருச பாடத்த படிக்கவேண்டியதுதான?’

அம்மாக்கள் ஹெட்மாஸ்டர் போல. திருத்தவே முடியாது. சட்டென்று அவனுக்கு ஒரு யோசனை வந்தது. அடடே, சூப்பர்.

‘எல்லாம் அப்பறம் படிச்சிக்கலாம். மொதல்ல இந்த படத்த பாரு. உன்ன மாதிரியே இல்ல?’

இது தூண்டில். சரியான தூண்டில். அம்மா அவனைத் திட்டுவதை நிறுத்திவிட்டுப் படத்தைப் பார்த்தாள்.

‘நானா?’

‘பின்ன? எனக்கு வேற யார தெரியும்? நீதான். கொஞ்சம் சின்னவயசுல எப்படி இருந்திருப்பேன்னு யோசிச்சி போட்டேன்.’

அம்மாவுக்குப் பூரித்துப் போய்விட்டது. ‘எங்கண்ணு’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

கடவுளுக்கு நன்றி. சுடர்மிகும் அறிவுடன் படைத்த கடவுள். தைரியமாகப் படத்தை வரைந்துமுடித்து ஆர்ட் பை பத்மநாபன் என்று கையெழுத்தும் போட்டான். மாலை அப்பா வேலைவிட்டு வந்ததும் அவனே அழைத்து வந்து காட்டினான்.

‘எப்படி இருக்கு?’

‘நீயா வரைஞ்ச?’

‘ஆமா. நல்லாருக்கா?’

‘பரவால்ல.’

‘என்ன பரவால்ல? நல்லாத்தான் வரைஞ்சிருக்கான்’ என்று பின்னால் இருந்து அம்மாவின் குரல் கேட்டது. ஏமாற்றி விட்டது பற்றிய மெல்லிய குற்ற உணர்வு இருந்தாலும் அதுவும் சந்தோஷம் தரக்கூடியதாகவே இருந்தது. பத்தாம் வகுப்புக்குப் போய்விட்ட பிறகு இன்னுமேகூட நிறைய யோசனைகள் உதிக்கும்.

அன்று மாலை என்னவோ தோன்றி, சட்டென்று வளர்மதியின் வீட்டுக்குப் புறப்பட்டான்.

‘எங்கடா கிளம்பிட்ட?’ என்று அப்பா கேட்டார்.

ஒரு கணம் யோசித்தான். ‘வளர்மதி வீட்டுக்குப்பா’ என்றே சொன்னான்.

‘எதுக்கு?’

‘டென்த் புக்ஸ் அவ வாங்கிட்டாளாம். எங்க கிடைக்குதுன்னு கேட்டுக்கிட்டு வரதுக்குத்தான்.’

‘ஓ’ என்றார். அவருக்கு முன்னால் அடுத்த ஆண்டுப் படிப்பு குறித்து அவனே ஆரம்பித்துவிட்டதில் அவரது ஆன்மா நிச்சயம் அமைதியுற்றிருக்கும்.

பதிலுக்குக் காத்திருக்காமல் வேகமாக நடந்தான். வளர்மதி இருப்பாளா? எங்காவது சொந்தக்காரர்கள் வீட்டுக்குப் போயிருப்பாளா?

யோசித்தபடி சென்றவனுக்கு வழியிலேயே அதிர்ஷ்டம் அடித்தது. எதிர்பாராத அதிர்ஷ்டம்.

[தொடரும்]
Share

3 comments

  • பாரா,

    உங்க கதைய படிக்கும் போது சிரிச்சுகிட்டேதான் படிக்கிறேன். அப்படியே சின்ன வயசு காதல படம் பிடிச்சு காட்டி இருக்கீங்க!!! நல்லாவே இருக்கு… இது இன்னும் எத்தன தொடர் பாக்கி இருக்குன்னு சொன்ன இன்னும் நல்லா இருக்கும்…

    இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் எழுத வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    ஹஸன் கமருதீன்

  • இன்றோடு நான்கு நாட்கள் ஆகிவிட்டது, அடுத்த எபிசோட் எப்போது சார்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி