புத்தக அறிமுகம்

பல்சரும் பால கணேஷும்

பால கணேஷ் என் நண்பர் என்பது இந்தப் பக்கத்தைப் பின் தொடரும் அத்தனை பேருக்கும் அநேகமாகத் தெரிந்திருக்கும். உடனடி நகைச்சுவைக்கு, சீண்டலுக்கு, கிண்டலுக்கு, உதாரணத்துக்கு – யோசிக்காமல், போன் செய்து ஒப்புதல் கேட்காமல் நம்மால் யார் பெயரைப் பயன்படுத்த முடியுமோ, அவரைத்தான் நண்பர் என்று சொல்ல முடியும். அவர் எனக்கு அந்த ரகம்.

பெரிய படிப்பாளி. நல்ல, வெகுஜன நகைச்சுவை எழுத்தாளர். கொஞ்சம் தீவிரம் காட்டியிருந்தால் கடுகு, பாக்கியம் ராமசாமி, ஜே.எஸ். ராகவன் வரிசையில் வந்திருக்கக் கூடியவர். எதையுமே சீரியஸாக எடுத்துக்கொள்ளாத அவரது குணம் இந்த விஷயத்திலும் வேலை செய்ததன் விளைவு, எப்போதாவது எழுதுபவராகவே இருந்துவிட்டார்.

இந்த வருடம் அவரைக் கட்டாயப்படுத்தி மெட்ராஸ் பேப்பரில் தொடர்ந்து நகைச்சுவைக் கதைகள் எழுத வைத்தேன். அதைக்கூட விட்டுவிட்டுத்தான் செய்தார். அபத்தங்களின் உலகில் உழன்று, உழன்று தானே ஒரு மாபெரும் அபத்தமாகிப் போனவனின் வாழ்வின் சில பக்கங்களை பால கணேஷ் இக்கதைகளில் காட்டுகிறார். வேறு வேறு கதைகள் என்றாலும் அனைத்திலும் வருகிற கதாநாயகன் ஒருவன்தான். அவன் கிட்டத்தட்ட பால கணேஷைப் போலவே இருப்பான். அதனாலேயே இதனை ஒரு தன் வரலாற்று வகையைச் சேர்ந்த நகைச்சுவை நாவலாகவும் கொள்ள இயலும்.

இந்தக் கதைகளைப் படித்து, சிரித்து முடித்த பின்பு, கண்ணுக்குப் புலப்படாத ஆழத்தில் மிக மெல்லிய துயரத்தின் ஓரிழை தென்படுவதை யாரும் உணராதிருக்க முடியாது. பொதுவாக நகைச்சுவைக்கு மட்டுமென்று எழுதுவோரிடம் இந்த அம்சம் இராது. அந்த ‘சொட்டுத் துயரம்’தான் இந்தக் கதைகள் வேறு ரகம் என்று சொல்ல வைப்பது.

இந்த வருடம் இந்தப் புத்தகம் தவிர அவருடைய இன்னும் மூன்று புத்தகங்களும் வெளியாகின்றன என்பதில் அவரைக் காட்டிலும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

பல்சர் போட்ட குட்டி / பால கணேஷ் / புலரி பதிப்பகம், 23/2 திருவள்ளுவர் சாலை, கைகான் குப்பம், சென்னை 600087 / email: pularipathippagam@gmail.com / விலை ரூ. 100

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி