புத்தகக் கண்காட்சி

மழை

சென்ற வருடம் போலவே இந்த வருடமும் புத்தகக் கண்காட்சியை மழை வரவேற்கிறது.

நேற்று வரை ஒன்றுமில்லை. ஆனால் இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம், மதியத்துக்குப் பிறகு பொழியத் தொடங்கியிருக்கிறது. நாளைக்குள் நின்றுவிட்டால் நல்லது. நாளை பேய் மழை பெய்யும் என்று பூப்போட்ட சட்டை அணிந்துகொண்டு வானிலை ஆய்வு மைய அதிகாரி ரமணன் இன்று தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினாலொழிய பொழியாமல் விடப்போவதில்லை.

ஏற்கெனவே [வழக்கத்தைவிடச் சற்று கூடுதலாகவே] மந்தமாக நடந்துகொண்டிருக்கும் கண்காட்சி வளாகக் கட்டுமானப் பணிகள் இதனால் இன்னும் சற்றுத் தாமதமாகலாம் என்று அங்கிருந்து பிரசன்னா குறுஞ்செய்தியில் தெரிவித்தார். கூடவே ஆஞ்சநேயரை வேண்டிக்கொள்ளவும் சொன்னார்.

மேலும் ஒரு பிரச்னை. இம்முறை கண்காட்சியைத் திறந்து வைக்கப் போகிறவர் என்று அறிவிக்கப்பட்டவர் அப்துல் கலாம். அவர் இப்போது மருத்துவமனையில் உள்ளார். கலாமின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் படித்தேன். கலாமுக்கு பதில் யார்? நாளை மாலை வரை பொறுத்திருப்பது தவிர வேறு வழியில்லை.

பி.கு: இந்தக் கவலைகளும் பதற்றமும் பதிப்பாளர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் தீவிர வாசகர்களுக்கும்தான். கண்காட்சியை நடத்துவோர் கீதாசாரம் பிரகாரம் வாழ்பவர்கள் என்பதறிக.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி