சுட்டு சாப்பிடு, சூப்பர் டேஸ்டு

அந்த இளைஞரை நான் வெகு காலமாக கவனித்து வந்தேன். திறமை முழுவதையும் ஏன் இப்படி நூறு சதவீதம் வீணாக்கிக்கொண்டிருக்கிறார் என்று எப்போதும் தோன்றும். ஒரு கட்டத்தில் அவர் போலி குழுமத்தில் ஒருவர் என்று யாரோ சொன்னார்கள். சே என்று வெறுத்துப்போய் கொஞ்சகாலம் அவரது வலைப்பதிவைப் படிக்காமல் இருந்தேன். [ஆனால் போலி டோண்டு வலைப்பதிவை மட்டும் தவறவிடமாட்டேன்.] பாலபாரதி என்னைச் சந்திக்க வரும்போதெல்லாம் தவறாமல் சொல்வான், சார் அவனைக் கொஞ்சம் கவனியுங்கள். பிறகு மீண்டும் கவனிக்கத் தொடங்கினேன். ஒரு நாள் நேரில் அழைத்து, நேரடியாகவே கேட்டேன். நீங்கள் போலி குழு உறுப்பினரா?

அப்படித்தான் லக்கி லுக் என்கிற யுவகிருஷ்ணா எனக்கு அறிமுகமானது. எழுதுகிற எழுத்துக்கும் ஆள் பார்ப்பதற்கும் சம்பந்தமே கிடையாது. அநியாயத்துக்கு வெட்கப்பட்டுக்கொண்டு, பி.சுசீலா குரலில் பேசிக்கொண்டு, இரண்டு நிமிடத்துக்கு மேல் எதிரே உட்காரத் தயங்கிக்கொண்டு – வெட்கப்படாதிங்க சாரெல்லாம் ஊருக்குத்தான் போலிருக்கிறது.

விளம்பரத் துறையில் வேலை பார்த்த அனுபவம் அவருக்கு இருந்தது. பேசிக்கொண்டிருந்தபோது சொன்ன பல விஷயங்கள் சுவாரசியமாக இருந்தன. நாங்கள் ‘மார்க்கெடிங் மாயாஜாலம்’ வெளியிட்டுப் பலகாலமாகியும் விளம்பரத் துறை குறித்து எழுத மட்டும் ஆளில்லாமல் இருந்தபடியால், ‘எழுதுகிறீர்களா?’ என்று கேட்டேன்.

ஒப்புக்கொண்டு குறித்த காலத்துக்குள் எழுதி முடித்தது, மேற்கொண்டு தேவைப்பட்ட விவரங்களை சலிக்காமல் கொண்டுவந்து கொடுத்தது, ஒரு புத்தகத்துடன் திருப்தியடைந்துவிடாமல், உடனே உடனே அடுத்தது, அடுத்தது என்று இலக்குகளை வகுத்துக்கொண்டு வேகமெடுத்தது – எல்லாமே எனக்குப் பிடித்திருந்தன.

இந்தக் கண்காட்சியில் லக்கி லுக்கின் புத்தகம் தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு ஸ்பெஷல்.

விளம்பர உலகம் என்றால் என்ன? பத்து வினாடிகளில் கவிதை மொழியில் ஒரு குறுங்கதையை விஷுவலாகக் காட்டி, சொல்ல வரும் செய்தியைத் தெரியப்படுத்தும் சாமர்த்தியம் ஒன்றுதானா?

இல்லை, அதற்குமேலே நிறைய இருக்கிறது. லக்கி லுக்கின் புத்தகம் விளம்பர உலகம் எப்படி இயங்குகிறது, எதனைச் சார்ந்து – எவற்றை நோக்கி இயங்குகிறது என்பதை மிக அழகாக விவரிக்கிறது. பத்திரிகை, தொலைக்காட்சி, நாளிதழ், வானொலி, போஸ்டர், சினிமா எனப் பலரக விளம்பரங்கள் உருவாக்கப்படுவதன் பின்னணியில் இயங்கும் லாஜிக் மிக முக்கியம். சூப்பர் என்றோ, சொதப்பல் என்றோ ஒற்றைச் சொல்லில் நகர்ந்துவிடுகிறோம். ஆனால் எந்த ஒரு செய்தியையும் சில வினாடிகளுக்குள் அழகுறப் பொருத்துவது சுலபமில்லை. சென்று சேர்வது என்பது அனைத்தைக் காட்டிலும் முக்கியம். ஜான்சன்ஸ் விளம்பரங்கள் மூலம் நாம் அந்நிறுவனத்தை அறிவோம். கோபால் பல்பொடி விளம்பரம் மூலம்தான் அதையும் அறிவோம். இரண்டுமே நம்மை வந்தடைந்த விளம்பரம்தான். ஆனால் மனத்தில் இரண்டும் என்ன விதமாகப் பதிகின்றன?

ஆஞ்சநேயர் மாதிரி கைகூப்பி வந்து கத்திவிட்டோ, அநாதையாக நாலைந்து பெண்கள் வந்து தையா தக்காவென்று குதித்துவிட்டோ போகும் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களை பொதுவில் யாரும் ரசிப்பதில்லை. ஆனாலும் அங்கே கூட்டம் அலைமோதுவது எப்படி? விளம்பரத்துக்கும் அதற்கும் தொடர்பில்லையா?

நகைச்சுவைக்கும் கிண்டலுக்கும் கேலிக்கும் இலக்கான புள்ளிராஜா விளம்பரம், தனது நோக்கத்தில் முழு வெற்றி கண்டது எப்படி?

வெகுகாலம் முன்னர் அப்பளம், ஊறுகாய் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று என்னிடம் தனக்கான விளம்பர வாசகங்களை எழுதித் தரச் சொல்லிக் கேட்டது. ரூ. இருநூற்றைம்பது மட்டும் என்று ரசீது எழுதி கையெழுத்து வாங்கிக்கொண்டு ஒரு மாமா ஐந்து ஐம்பது ரூபாய் நோட்டுகளை எண்ணிக் கொடுத்துவிட்டு, ‘அட்வான்ஸ் இப்ப வாங்கிக்கோங்கோ. மிச்சத்த முடிச்சதும் செட்டில் பண்ணிடறேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

கிட்டத்தட்ட ஆறு மாத காலம் இருக்கும் என்று நினைக்கிறேன். நான் சலிக்காமல் சுமார் ஆயிரம் விளம்பர வாசகங்களையாவது எழுதிக் கொடுத்திருப்பேன். ஒன்றுகூட அந்த அப்பள கம்பெனி முதலாளிக்குச் சரிப்பட்டு வரவில்லை. இறுதியில் அவரே எழுதினாரோ, வேறு யாரைக் கொண்டு எழுதவைத்தாரோ தெரியவில்லை. வெளிவந்த அவர்களது விளம்பரத்தை செங்கல்பட்டு தாண்டி எங்கேயோ செல்லும்போது ஒரு சிறு ஹோர்டிங்கில் பார்த்து தலையில் அடித்துக்கொண்டேன். என்ன கண்றாவி இது என்று பார்ப்பவர்களிடமெல்லாம் புலம்பித் தள்ளினேன்.

ஏதோ ஒரு விளம்பரத்துக்கு இவன் ஏன் இத்தனை மாய்ந்து போகிறான் என்று நண்பர்கள் நினைத்திருக்கக் கூடும். அந்த அப்பள கம்பெனி மேலாளர் மாமா அதன்பின் என்னைச் சந்திக்கவில்லை. கொடுத்த 250 ரூபாயைத் திரும்பக் கேட்கவும் இல்லை. சனியன் விட்டது என்றுதான் நினைத்துக்கொண்டேன். அந்த விளம்பரம் ஒன்றே அவர்களுடைய கம்பெனியை இழுத்து மூடப் போதுமானது என்றும்.

ஆனால் நடந்தது வேறு. விளம்பரம் ஹிட். கிராமப்புறங்களில் ‘சுட்டு சாப்பிடு. சூப்பர் டேஸ்டு’ என்பது ஒரு வேத வரிபோல் ஆகிவிட்டது.

எண்ணெயில் பொறித்துச் சாப்பிடும் மத்திய தர வர்க்கத்துக்கு – அதற்கு மேற்பட்ட வர்க்கங்களுக்காகத் தனது அப்பளம் தயாரிக்கப்படவில்லை; எண்ணெய்க்குக் கூட வசதியற்றவர்கள்தான் டார்கெட் என்று அவர் என்னிடம் முதலிலேயே தெளிவாகச் சொல்லியிருக்கலாம். சுட்டு சாப்பிடு, சூப்பர் டேஸ்டு மாதிரி நானும் ஏதேனும் முயற்சி செய்திருப்பேன்.

எதற்கு இந்தக் கதை என்றால், விளம்பர உலகின் ஆதாரப்புள்ளி என்பது யார் டார்கெட் என்பதில்தான் இருக்கிறது. இந்த விஷயத்தை லக்கி பல சிறப்பான உதாரணங்களுடன் விளக்குகிறார். வெற்றி பெற்ற விளம்பரங்கள், தோல்வியடைந்த விளம்பர உத்திகள் இரண்டைப் பற்றியுமே பேசுகிறார்.

இந்தப் புத்தகத்தை வாசித்த சில நண்பர்கள், இந்தப் புத்தகம் யாருக்கு? விளம்பர உலகில் இருப்பவர்களுக்கா? உள்ளே நுழைய விரும்புபவர்களுக்கா? என்று ஒரு சந்தேகத்தை எழுப்பினார்கள். உள்ளே இருப்பவர்களுக்குப் புதிதாகத் தெரிந்துகொள்ள இதில் ஏதுமில்லை; நுழைய விரும்புவோருக்கு உதவக்கூடிய அம்சங்கள் இதில் குறைவு என்று சொன்னார்கள்.

என்னைக் கேட்டால் மேற்படி இரு தரப்பினருக்குமே அல்ல இந்தப் புத்தகம். பொதுவான வாசகர்களை, புதிய விஷயங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் மிக்கவர்களை நோக்கியே இந்நூல் பேசுகிறது. விளம்பரத் துறை குறித்த ஓர் எளிய அறிமுகத்தையே இந்நூல் தருகிறது. மேற்கொண்டு அறிந்துகொள்ளும் ஆவலைத் தூண்டும் விதத்தில் சுண்டி இழுப்பது ஒன்றே இதன் வெற்றி என்பேன்.

லக்கிக்கு என் வாழ்த்துகள்.

சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் : யுவகிருஷ்ணா : ISBN: 978-81-8368-952-6

Share

9 comments

 • இன்னும் அந்த புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்க வில்லை. சொல்லி விட்டிருக்கேன், இந்தியாவுல வரவங்க கிட்ட,வந்தவுடன் படிக்கனும். லக்கி எழுத்துக்களுக்கு இது இன்னும் ஒரு படிக்கட்டு, அவ்வளவே. அவருடைய எழுத்தால் சுண்டி இழுத்த இதயங்கள் பல.

 • வாழ்த்துக்கள் லக்கி !!!!!

  இந்த பதிவும் டாப் !!!

 • மன்னிக்கவும் என்னால் ஒன்று சொல்லாமல் இருக்க முடியவில்லை. அப்பள கம்பெனி முதலாளி உங்களிடம் இலக்கு வாசகர்களை கூறினாலும் கூறாவிட்டாலும் அவரது பொருள் என்ன, யாரை குறிவைத்து விளம்பரங்கள் வரவேண்டும் என்பதை நீங்கள்தான் அவரைக் கேட்டிருக்க வேண்டும். நீங்களும் இதில் பல காலவிரயங்களை தவிர்த்திருக்கலாம்.

  நான் பணிபுரியும் மொழிபெயர்ப்பு துறையிலும் இலக்கு வாசகர்கள் முக்கியம். உதாரணத்துக்கு ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சு மொழிக்கு மாற்றும்போது அது ஒரு தொழிநுட்ப வார்த்தைகள் நிறைந்த கையேடாக இருந்தால் தயங்காமல் மொழிமாற்றும் நான் அதுவே அக்கம்பெனியின் இணையப்பக்கம் என்றால் அதை பார்க்க வேண்டியவர்கள் பிரெஞ்சை தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதையும் அவர்கள் மண்வாசனையே இல்லாத வாசகங்களை வைத்து கொண்டு சலிப்படைவார்கள் என்பதை உணர்ந்து மரியாதையாக வாடிக்கையாளரிடம் அவர் இந்த வேலையை பிரெஞ்சை தாய்மொழியாக கொண்டவரிடம்தான் தரவேண்டும் எனக்கூறி மேலே சொன்னதையும் சொல்வேன். இருப்பினும் பரவாயில்லை என சில வாடிக்கையாளர்கள் என்னையே செய்யச் சொன்னால் மண்வாசனை இல்லை என பின்னால் ஏதேனு பிரெஞ்சுக்காரர் சொன்னால் அதை வைத்து என்னை தொந்திரவு செய்யக்கூடாது என்று கூறிவிட்டே வேலையைத் துவங்குவேன். அப்படியும் வேலையைத் தருபவர்கள் பிரெஞ்சுக்காரனுக்கு பணம் அதிகம் தரவேண்டும் என்னும் தயக்கத்தால்தான் என்னிடம் வருகிறார்கள் என்பது வேறு விஷயம்.

  போகிற போக்கில், சுட்டு சாப்பிடு சூப்பரா இருக்கு என்பது அமர்க்களமான ஸ்லோகன்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 • எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
  செய்நன்றி கொன்ற மகர்க்கு. (தெய்வப்புலவன்)

  நன்றியோடு இருப்பதை ‘சொம்பு தூக்குதல்’ என்று சில நண்பர்கள் மொழிபெயர்த்துச் சொல்கிறார்கள். பிரச்சினையில்லை. முன்பை விட தீவிரமாக சொம்பு தூக்குவேன். நன்றி 🙂

 • //மன்னிக்கவும் என்னால் ஒன்று சொல்லாமல் இருக்க முடியவில்லை. அப்பள கம்பெனி முதலாளி உங்களிடம் இலக்கு வாசகர்களை கூறினாலும் கூறாவிட்டாலும் அவரது பொருள் என்ன, யாரை குறிவைத்து விளம்பரங்கள் வரவேண்டும் என்பதை நீங்கள்தான் அவரைக் கேட்டிருக்க வேண்டும். நீங்களும் இதில் பல காலவிரயங்களை தவிர்த்திருக்கலாம்.//

  டோண்டு ராகவன் சார்!

  அப்போது பாரா ’சு.இ. விளம்பர உலகம்’ புத்தகத்தை வாசித்திருக்க மாட்டார் என்பதால் க்ளையண்டிடம் விலாவரியாக கேட்டிருக்க மாட்டார் 🙂

 • லக்கியை ஒரு களத்தில் சந்தித்தேன், அன்றிலிருந்து அவரின் எழுத்திற்க்கும், அறிவிற்க்கும் அடிமை. இன்றும் எனக்கு எழத்து உலகில் அல்லது சினிமா உலகில் எதாவது சந்தேகம் இருந்தால், முதலில் eMail(அவரின் eMail முகவரி என்னிடம் இல்லை – ஒரு களத்தில் மூலமாக தொடர்பு கொள்வேன்) அனுப்புவது அவருக்குத்தான்.
  நான் அண்மையில்தான் கிழ்க்கிலிருந்து 25 புஸ்தகங்கள் தருவித்திருதேன், அப்போது இந்த புஸ்தகம் வெளியாகியிருக்கவில்லை. அடுத்தமுறைக்கான எனது பட்டியலில் இப் புஸ்தகத்தை இப்போதே சேர்த்துவிட்டேன்.
  வாழ்த்துக்கள் லக்கி, இன்னும் பல புஸ்தகஙக்ள் எழுத
  -குண்டு

 • Pa Ra sir, neenga poli group member a nu ketathuku enna padhil sonnar ? Adha sollunga mudhala….. Ipa nalla eludhuradhaala ivaru poli dondu kita mathavangala potu koduthadhellam maraka mudiathu…..

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter