“இன்று தொடக்க நாள். தொடங்கி வைக்க அப்துல் கலாம் வருவாரா மாட்டாரா என்று தெரியவில்லை. என்னை அழைத்தாலும் போகமுடியுமா எனத் தெரியவில்லை. நிறைய அரங்கவேலைகள் இருக்கின்றன. பார்க்கலாம். சென்ற முறை முதல்வர் கருணாநிதி வருவதாக இருந்தது. மழை காரணமாக அவர் வருகை ரத்து செய்யப்பட்டது. இன்னொரு நாள் வந்தார். இந்த முறையும் மழை, அப்துல் கலாமிற்கு உடல்நலக் குறைவு வேறு. என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம். சென்ற முறை கருணாநிதி வரும் நிமிடம் வரையில் வெளி அரங்க வேலைகள் நடந்துகொண்டிருந்தன. கருணாநிதி புத்தகக் கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பேசப்போகும் நிலையில், யாரேனும் ஒருவர் வந்து, ‘ஐயா கொஞ்சம் எந்திரிச்சுக்கோங்க, ரெண்டு நட்டு டைட் பண்ணனும்’ என்று சொல்வார்கள் என்றெல்லாம் கடுமையாக கற்பனை செய்து வைத்திருந்தேன். மழையின் புண்ணியத்தில் கருணாநிதி தப்பித்தார். இந்தமுறை அப்துல் கலாம் எப்படித் தப்பிக்கிறார் என்று பார்க்கவேண்டும். ஏனென்றால் வெளி அரங்கப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. மழையின் காரணமாக அந்த வேலை மெல்லவே நடக்கிறது…”
புத்தகக் கண்காட்சி அரங்கில் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் பிரசன்னாவின் ரிப்போர்ட் இங்கே. இந்தமாதிரி ஒரு சர்வ ஜாலியான உரைநடையை அவர் கி.முவில் எழுதியதாக நினைவில்லை. வெளுத்து வாங்கும் நேரத்தில் கைதட்ட வேண்டியது கடமை. படித்துவிட்டுத் தட்டுங்கள்.