கண்ணுக்கெட்டும் தொலைவெங்கும் வேலிக்காத்தான் புதர்கள் மண்டியிருந்தன. வெளியூர்க்காரர்கள் இதனை சீமைக் கருவேலம் என்று சொல்லுவார்கள். நான் பிறப்பதற்கு சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தாவரம். ஆஸ்திரேலியாவில் இப்போது இது இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் என் சிறு வயதுகளில் சென்னையின் பல பேட்டைகளை இந்த வேலிக்காத்தான் புதர்களின் அடர்த்தியைக் கொண்டே அடையாளம் காண்பேன்.
சைதாப்பேட்டையில் இருந்து அடையார் வழியாக நாவலூர் போகும்போது இடையில் மூன்று பெரும் வேலிக்காத்தான் காடுகளைக் கடக்க வேண்டியிருக்கும். முதலாவது, நீதி மன்றம் இருக்கும் இடத்தின் பின்புறம். (இன்றைய ஸ்ரீதேவி காலனி) அடுத்தது மத்திய தோல் ஆராய்ச்சிக் கழகத்தின் எதிர்ப்புறம். (இன்றைய தரமணி மெட்ரோ ஸ்டேஷன் தொடங்கி திருவான்மியூர் வரையிலான பிராந்தியம்.) மூன்றாவது, திருவான்மியூர் பலகை வாராவதியைத் தாண்டியதும் ஆரம்பிக்கும். நாவலூர் வரை நீளக்கூடிய காடு.) ஒவ்வொரு காட்டைக் கடந்ததும் ஒரு பேருந்து நிறுத்தம் வரும். மக்கள் இறங்கி புதர்களுக்கு நடுவே நுழைந்து மறைந்து போவார்கள். நாவலூருக்குப் பிறகு படூர் வரை இந்தக் காட்டின் அடர்த்தி மேலும் மிகுந்துவிடும்.
பயிர்களுக்கு வேலியாகவும் அடுப்பெரிக்க விறகாகவும் பயன்படும் என்று எண்ணிக் கொண்டு வரப்பட்ட தாவரம். விறகு அடுப்புகள் வழக்கொழிந்த பின்பும் வேலிக்காத்தான் புதர்கள் வாழ்ந்துகொண்டிருந்தன. மழை வேண்டாம். நீரூற்ற வேண்டாம். எருவிட வேண்டாம். எதுவும் செய்ய வேண்டாம். சும்மா விட்டால் போதும். அது தானே வளரும். ஒரு விதத்தில் சென்னை கண்ட முதல் கிருமி இதுதான். மக்களைக் கொல்லாமல் மண்ணைக் கொன்ற கிருமி. ஆனால் சென்னைக்கு வந்த எதுவும் வாழாதிருந்ததில்லை.
1985ம் ஆண்டின் தொடக்கத்தில் குரோம்பேட்டைக்கு நாங்கள் குடிவந்தபோது, பார்க்கும் இடமெல்லாம் இந்த வேலிக்காத்தான் புதர்கள் அடர்த்தியாக நிறைந்திருந்தன. ஒரு புதருக்கும் அடுத்த புதருக்கும் நடுவே ஒன்றரை அடி அல்லது இரண்டடி இடைவெளி மட்டுமே இருக்கும். இந்த இடைவெளியைத்தான் பாதை என்று சொல்வார்கள். சில இடங்களில் குறுகலான செம்மண் பாதையும் இருக்கும். நடுவே நிறைய சரளைக் கற்களைப் போட்டு நிரப்பியிருப்பார்கள். பல்லாவரம் அல்லது குரோம்பேட்டையில் இருந்து திருநீர்மலை செல்லும் பாதைகள் மட்டும் சற்று சுமாராக இருக்கும். அதில்கூடத் தார் கிடையாது. செம்மண்தான். ஆனாலும் நடக்க முடியும். மாட்டு வண்டிகள் போகும். பேரல் பேரலாகத தோல் கழிவுகளை ஏற்றிக்கொண்டு போகும் மாட்டு வண்டிகளின் நடுவே மூன்று சக்கர சைக்கிள்களில் சாராய கேன்களை எடுத்துப் போவார்கள். தோல் கழிவு வண்டிகள் சாராய வண்டிகளுக்குப் பாதுகாப்பு.
அந்நாளில் திருநீர்மலை, சாராயத்துக்குப் புகழ்பெற்ற ஊர். நீர்வண்ணப் பெருமாளோ, திருமங்கை ஆழ்வாரோ அங்கு இரண்டாம் பட்சம்தான். சாராயம் மட்டுமே மக்களை வாழவைத்துக்கொண்டிருந்தது. எங்கெங்கிருந்தோ மூட்டை மூட்டையாக வெல்லமும் தார் தாராக வாழைப்பழங்களும் கொத்துக் கொத்தாக திராட்சையும் கொண்டு வருவார்கள். கருவேலம்பட்டைக்கு எங்கும் அலைய வேண்டாம். அது பிராந்தியத்திலேயே நிறைய கிடைக்கும். அனைத்தையும் இடித்துப் போட்டு அடிப்படைக் கலவை தயார் செய்து அதன்மீது நன்கு புளித்த இட்லி மாவை ஊற்றிக் கலப்பார்கள். அருகே நின்று பார்த்தாலும் இக்கலவையின் பதம் அவ்வளவு எளிதில் புரியாது. அது வல்லுநர்கள் மட்டுமே அறிந்தது.
கலவை தயாரானதும் பாண்டங்களின்மீது துணி கட்டி, வேலிக்காத்தான் புதர்களின் நடுவே குழி தோண்டிப் புதைத்துவிடுவார்கள். ஒவ்வொரு சாராய ஊறலும் குறைந்தது முப்பது நாள்களுக்குக் குழியில் இருக்க வேண்டும். நடு நடுவே நாலைந்து நாள்களுக்கு ஒருமுறை குழியைத் தோண்டி ஊறலைக் கிளறிவிடுவதைப் பார்த்திருக்கிறேன். முப்பது நாள் ஊறி முடித்த பிறகு, பாண்டம் வெளியே வரும். பிறகு கல் வைத்து அடுப்பு மூட்டி ஊறலை அதில் ஏற்றுவார்கள். கொதிக்கும்போது வரும் நீராவிதான் பிற்பாடு சாராயமாகிறது. அதை ட்யூப் வைத்துப் பானைகளில் பிடிப்பார்கள். இதனிடையே போதைக்காக பேட்டரி உடைத்துச் சேர்ப்பது, எத்தனால் கலப்பதெல்லாம் தனி.
எத்தனை உழைப்பு! எத்தனைப் பேர் உழைப்பு! கற்பனைகூடச் செய்ய முடியாது. ஊர் பஞ்சாயத்தார், காவல் துறை இரு தரப்புப் பாதுகாப்புடன் இந்தப் பணி நடக்கும். யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது.
குரோம்பேட்டைக்குக் குடிவந்த காலத்தில் திருநீர்மலை சாராயத் தயாரிப்பு உலகம் எனக்கு மிகுந்த வியப்பளித்தது. அடிக்கடி அங்கு போய் நின்று வேடிக்கை பார்ப்பேன். யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள். உக்காந்து பாரு தம்பி என்று உருளைக் கல்லை நகர்த்திப் போட்டுவிட்டுப் போகிற முதலாளிகள் இருந்தார்கள்.
அப்போதெல்லாம் திருநீர்மலையை அடையும் வழியில் ஒரு வீடுகூடக் கிடையாது. சாலையின் இடப்புறம் நீளமாக ஏரி இருக்கும். வலப்புறம் முழுவதும் முட்புதர்கள்தான். மாட்டு வண்டிப் போக்குவரத்து, மூன்று சக்கர சைக்கிள் போக்குவரத்து எல்லாம் புதர்களின் ஊடேதான் நிகழும். தோல் கழிவுகளை அகற்றும் சிப்பந்திகளுக்கு சாராயத் தொழிலாளர்கள் உதவியாக இருப்பார்கள். சாராயத் தொழிலாளிகளுக்குத் தோல் கம்பெனி சிப்பந்திகள் உதவி செய்வார்கள். திருநீர்மலை சாராயம் வடக்கே சைதாப்பேட்டை, கிண்டி தொடங்கி தெற்கே செங்கல்பட்டு வரை பயணம் செய்யும். சிறிதோ, பெரிதோ, யாராவது வெள்ளை நிற கேனைக் கையில் கொண்டு போனாலே அது சாராயத்துக்குத்தான் என்பது பிராந்தியம் முழுவதும் பிரபலம்.
குரோம்பேட்டைக்கு நான் வந்து சேர்ந்தபோது ஒன்பதாம் வகுப்பு மாணவன். உலகத்தை அப்போதுதான் பார்க்கலாம் என்று எண்ணியிருந்தேன். காரணம், அதுவரை என் தந்தை தலைமை ஆசிரியராகப் பணி புரிந்த பள்ளிக்கூடங்களில் மட்டுமே படித்துக்கொண்டிருந்தேன். குரோம்பேட்டைக்கு வந்தபோதுதான் அவருக்குப் பதவி உயர்வு கிடைத்து, தென்னாற்காடு மாவட்டக் கல்வி அதிகாரியாகப் போயிருந்தார். அவர் வீட்டிலும் பெரும்பாலும் தலைமை ஆசிரியரைப் போலவே இருந்ததால் அதுவரை நான் ‘படிக்கிற பையனாக’ மட்டுமே இருக்க வேண்டியிருந்தது. அவர் வெளியூர் போனபோதுதான் நான் முதல் முதலாக வீதிக்கு வந்தேன்.
எங்கள் வீட்டுக்கு இரண்டு வீதிகள் தள்ளி இருந்த ஒரு வீட்டில் அப்போது ஒரு ஆங்கிலோ இந்தியக் குடும்பம் குடியிருந்தது. ஏராளமான பெண்களும் சில ஆண்களும் ஒரு வயதான தம்பதியும் அந்த வீட்டில் இருந்தார்கள். என் வாழ்வில் குட்டைப் பாவாடை அணிந்த பெண்களை நான் பார்த்தது அதுவே முதல் முறை. வெளேரென்று இருந்த அந்த வீட்டுப் பெண்கள் அனைவருமே எனக்கு ஒரே பெண்ணின் பல பிரதிகளைப் போலத் தெரிந்தார்கள். அனைவருமே குட்டைப் பாவாடைதான் அணிந்திருந்தார்கள். தலையை வாரிப் பின்னாமல் பறக்கவிட்டுக்கொண்டு எப்போதும் இறகுப் பந்தாட்டம் ஆடிக்கொண்டிருந்த பெண்கள். அவர்களது பாட்டியாரான அந்த வயதான பெண்மணிதான் நைட்டி அணிந்து நான் பார்த்த முதல் பெண். அவர்கள் வீட்டுப் பக்கம் சும்மா போய் நின்றுகொண்டிருப்பது எனக்கு அப்போது மிகவும் உவப்பான செயல். அவர்கள் ஆங்கிலம் பேசும் அழகில் அப்படியே மயங்கிவிடுவேன். சாதாரணமாகப் பேசும்போது இருப்பதைவிட, கோபத்தில் ஒருவரையொருவர் திட்டிக்கொள்ளும்போது இன்னுமே கேட்க சங்கீதமாக இருக்கும். அதையும்விட எனக்கு அவர்களை மிக அதிகம் பிடித்துப் போனதற்குக் காரணம், அந்தப் பெண்களில் சிலர் சிகரெட் பிடிப்பவர்களாக இருந்தது. வார இறுதி தினங்களில், மாலை வேளைகளில் குடும்பம் மொத்தமாக வீட்டுக்கு வெளியே மரத்தடியில் கூடி அமர்ந்து திருநீர்மலை சாராயம் அருந்துவார்கள். இது உண்டாக்கிய கலாசார அதிர்ச்சி நெடுநாள் என்னைவிட்டு நீங்கவில்லை.