ருசியியல் – 26

ராஜமாணிக்கம் முதலியாரின் பேத்தி ராஜாத்தி வயசுக்கு வந்தபோது வீதி அடைத்துப் பந்தல் போட்டு மயில் ஜோடித்தார்கள். அன்றைக்கு முதலியார் வீட்டுக்குப் போயிருந்த அத்தனை பேருக்கும் பிளாஸ்டிக் தம்ளரில் பாதாம் கீர் கொடுத்தார்கள். பாதாம் கீர் என்ற பானத்தை வாழ்வில் முதல் முதலில் நான் அருந்திய தருணமாக அதுவே நினைவில் இருக்கிறது. நாக்கில் தட்டுப்பட்ட மெல்லிய நறநறப்பும் அடித்தொண்டை வரை இனித்த சர்க்கரையும். அது ருசியான பாதாம் கீராக இருந்ததா என்று இப்போது நினைவில்லை.

மிகப்பல வருடங்களுக்குப் பிறகு அமுதசுரபியில் நான் உத்தியோகம் பார்த்த காலத்தில் ஆர்மேனியன் தெருவில் ஒரு சேட்டுக்கடையில் பாதாம் பானம் சாப்பிட்டிருக்கிறேன். அது பாதாம் கீரல்ல. பாலில் அரைத்துவிட்ட பாதாம், பிஸ்தா மற்றும் வெள்ளரி விதைகள் அடங்கிய ஒரு போதை வஸ்து. அருந்திய பத்து நிமிடங்களுக்கு ஒரே மப்பாக இருக்கும். சென்னை நகரில் அந்நாள்களில் கடை விரித்திருந்த அத்தனை சேட்டு புண்ணியாத்மாக்களோடும் எனக்குப் பரிச்சயம் உண்டு. எந்தக் கடையில் என்ன ஸ்பெஷல் என்று தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் தவறின்றிச் சொல்லுவேன்.

சைதாப்பேட்டையில் என் பாட்டி வீட்டின் பின்புறம் ஒரு பாதாம் மரம் இருந்தது. அவ்வப்போது விழும் கொட்டைகளை எடுத்து வைத்துக்கொண்டு உடைத்துத் தின்பது சிறு வயது நினைவாக எஞ்சியிருக்கிறது. ஆனால் அந்த மரம் தந்த பருப்புகளைவிட, இலைகள்தாம் எனக்கு மிகவும் நெருக்கம். பாட்டி பாதாம் இலைகளில்தான் அரிசி உப்புமா வைத்துத் தருவாள்.

திருமண விசேஷங்களில் அலங்காரத் தட்டுகளில் பாதாம் பருப்புகளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டிருக்கிறேன். இதற்காகவாவது நமக்கொரு கல்யாணமாகாதா என்று ஏங்கிய காலம் உண்டு. மற்றபடி ஒரு பள்ளிக்கூட வாத்தியார் வீட்டு வாரிசு எண்ணிய போதெல்லாம் விரும்பித் தின்னும் வகையறாவாக அது என்றுமே இருந்ததில்லை. இருக்க வாய்ப்பும் இல்லை என்றுதான் நினைத்திருந்தேன். காலம் யாரை எப்படி மாற்றும் என்று யாருக்குத் தெரியும்?

ஓராண்டுக்கு முன்னர் என் ஒருவேளை உணவாகவே பாதாம் மாறிப் போனது.

பொதுவாக சத்து மிக்க உணவுகளில் ருசி கொஞ்சம் மட்டாக இருக்கும். அல்லது, சத்து முழுதாக உள்ளே போகவேண்டுமானால் ருசிகரமாகச் சமைப்பதை விடுத்து, மொட்டைப்பாட்டித்தனமாக உண்ணவேண்டியிருக்கும். இந்த விதியைப் பொடிப்பொடியாக்குகிற ஒரே உணவு பாதாம். தின்னத் தின்ன, தின்றுகொண்டே இருக்கலாம் என்று எண்ண வைக்கிற உணவு எனக்குத் தெரிந்து பாதாம் மட்டுமே.

என்னடா இவன் பாதாம் பருப்பைப் போய் உணவென்று சொல்கிறானே என்று நினைக்காதீர். இந்தச் சப்பாத்தி, பரோட்டா, இட்லி, தோசை வகையறாக்களை ஒருநாள் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு வேளை உணவாக நூறு பாதாம் பருப்புகளை நான் சொல்கிறபடி சாப்பிட்டுப் பாருங்கள். அதன்பின் வீட்டில் அரிசி, பருப்பு, மிளகாய், புளி, எண்ணெய் வாங்குகிற செலவு இருக்காது. என்னைப் போல் மொத்த பாதாம் கொள்முதலில் இறங்கிவிடுவீர்கள்.

பாதாம் பருப்பை முதலில் தண்ணீரில் நன்றாக அலச வேண்டும். அரிசி களைவது மாதிரிதான். சுத்தமாக அலசிக் கழுவிவிட்டு, மூழ்கும் வரை தண்ணீர் விட்டு அப்படியே ஒரு ராத்திரி முழுக்க மூடி வைத்துவிடுங்கள். காலை எழுந்ததும் மீண்டும் ஒருமுறை அலசிக் கொட்டிவிட்டு, திரும்பவும் தண்ணீர் ஊற்றி மூடிவிடவும். இம்முறை அதன் தலையில் அரைப்பிடி கல் உப்பு போட்டு மூடவேண்டும். மாலை வரை இப்படியே ஊறிக்கொண்டிருக்கட்டும்.

சுமார் இருபது மணி நேரம் ஊறியபிறகு பாதாம் நன்றாகப் பருத்து கொழுகொழுவென்று காட்சியளிக்கும். அதை அப்படியே அள்ளி ஒரு மெல்லிய துணியில் கொட்டி நிழலில் உலர்த்தி வையுங்கள். ஒரு இரண்டு மூன்று மணி நேரம் இருந்தால் போதும். நன்றாகக் காய்ந்துவிடும்.

முடிந்ததா? இதன் பிறகு அடுப்பில் வாணலியைப் போட்டு, கொஞ்சம் சூடானதும் இந்த பாதாமை எடுத்துப் போட்டு வறுக்கத் தொடங்கவும். நெருப்பு மிகவும் மிதமாக இருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் வறுக்கும்போது பாதாம் தீய்ந்துவிடும் அபாயம் உள்ளது.

ஒரு பதினைந்து நிமிடங்கள் வறுத்தால் போதும். பொன்னிறத்தில், சும்மா கமகமவென்று ஒரு வாசனையைக் கிளப்பிக்கொண்டு, உண்ணும் பதத்துக்கு பாதாம் தயாராகிவிடும். இறக்கி வைத்தபின்னர் அம்மிக் குழவி, கல் அல்லது மனைவிமார்களின் பிற ஆயுதங்களில் ஒன்றைப் பயன்படுத்தி வறுத்த பாதாமை லேசாக இடிக்கவும். பொலபொலவென்று உதிர்ந்து கொடுக்கும். இதை ஒரு கப்பில் எடுத்துப் போட்டு, அதன் தலையில் ஓரிரு ஸ்பூன் நெய்யை ஊற்றுங்கள். உப்பு, மிளகாய்ப் பொடி அல்லது மிளகுப் பொடி உங்கள் சௌகரியத்துக்கு.

நான் சில நாள் உப்புக்கு பதில் ஒரு சீஸ் க்யூபை உருக்கிச் சேர்ப்பேன். சீஸுக்கு உள்ள ருசியோடுகூட அதிலுள்ள உப்பே பாதாமுக்கும் போதுமானது. நன்றாகக் கலந்து எடுத்துச் சாப்பிட்டுப் பாருங்கள். சொத்தை எழுதி வைத்துவிடலாம் என்று தோன்றும்.

ரொம்பப் பணக்காரத்தனமாகத் தெரிகிறதே என்று நினைக்கவேண்டாம். ஒரு வேளை ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டால் என்ன செலவு ஆகுமோ அதுதான் ஒருவேளை உணவாக பாதாமை உண்பதற்கும் ஆகும். என்ன விசேஷம் என்றால், இப்படி நூறு கிராம் பாதாமை ஒருவேளை சாப்பிடும்போது அலுங்காமல் குலுங்காமல் சுமார் இருபத்திரண்டு கிராம் ப்ரோட்டீன் நமக்கு அப்படியே கிடைக்கும். ஐம்பது கிராம் கொழுப்பு இருக்கிறது என்பதால் நாலு மசால் தோசை தின்ற பின்பும் பசியெடுப்பது போல இதில் நடக்காது. சொல்லப் போனால் உண்ட ஆறேழு மணி நேரங்களுக்குப் பசியே தெரியாது.

மனுஷனாகப் பிறந்தவனுக்கு ரொம்ப முக்கியத் தேவைகளான மக்னீசியம், விட்டமின் ஈ, பி2, பி3, பி9, கால்சியம், பொட்டாசியம் என்று என்னென்னமோ சங்கதிகள் இதில் ஏகத்துக்கு இருக்கிறது.

சத்தும் ருசியும் ஒன்று சேர்வதென்பது காங்கிரசும் பாரதிய ஜனதாவும் இணைவது மாதிரி. நடக்கவே நடக்காத இதுவும் சமயத்தில் சில விஷயங்களில் சாத்தியமாகத்தான் செய்கிறது. பாதாம் அந்த ரகம். என்ன பிரச்னை என்றால், பேரைச் சொன்னாலே ‘ஐயோ கொழுப்பு!’ என்று அலறச் சொல்லிக் கொடுத்துவிட்டது சமூகம். உண்மையில் பாதாமில் உள்ளது உடம்புக்கு நல்லது மட்டுமே பண்ணுகிற சமர்த்துக் கொழுப்புதான். ஒரு கணம் யோசித்துப் பார்க்கலாம். மனித உடலின் அதி முக்கிய உள்ளுறுப்புகளான மூளையும் இதயமுமே இரண்டு பெரும் கொழுப்புப் பந்துகள்தாம். கொழுப்பு, கொழுப்பை வேண்டாம் என்று சொல்லுமா?

சமீபத்தில் நண்பர்களோடு கேரளத்துக்கு ஒரு சுற்றுப்பயணம் சென்றிருந்தேன். போன மாதம் இதே கேரளத்துக்குக் குடும்பத்தோடு சென்று கண்ணராவியான சாப்பாட்டில் கதி கலங்கித் திரும்பிய அனுபவம் இருந்தபடியால் இம்முறை ஜாக்கிரதையாக ஒரு காரியம் செய்தோம். போகும்போது கடையில் ரோஸ்டட் பாதாம் பாக்கெட்டுகள் சிலவற்றை வாங்கிக்கொண்டே வண்டி பிடித்தோம். குமுளியில் இறங்கி அங்கும் சில பாக்கெட்டுகள் கொள்முதல் செய்துகொண்டோம்.

கடைகளில் விற்கும் இந்த ரோஸ்டட் பாதாமை நான் சொன்னபடி அலசி ஊறப்போட்டு ப்ராசஸ் செய்திருப்பார்களா என்பது சந்தேகமே. அப்படிச் செய்து சாப்பிடுவதுதான் தேக நலனுக்கு நல்லது. ஆனால் அவசர ஆத்திரத்துக்கு வேறு வழியில்லை அல்லவா?

இந்த பாதாம் பாக்கெட்டுகள் இம்முறை ரொம்ப வசதியாக இருந்தது. என்ன ஒன்று, பாக்கெட் பாக்கெட்டாக பாதாம் தின்பதைப் பார்க்கிறவர்களெல்லாம் இவன் நாளைக்கு செத்துவிடுவான் என்று நினைத்திருப்பார்கள். உண்மையில், ஆரோக்கிய வாழ்க்கை தினங்களை அதிகரித்துக்கொள்ள பாதாம் ஒரு சிறந்த சகாயம்.

(ருசிக்கலாம்…)

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading