ருசியியல் – 31

இரு வாரங்களுக்கு முன்னர் என் தந்தை காலமாகிப் போனார். நல்ல மனிதர். எனக்கு நிறைய செய்தவர். அதில் தலையாயது, என்னை முழுச் சுதந்தரத்துடன் வளரவிட்டது. யோசித்துப் பார்த்தால் நான் செய்த எதையுமே அவர் மறுத்ததோ நிராகரித்ததோ இல்லை. இதைச் செய்யாதே என்று சொன்னதும் இல்லை. எத்தனை பேருக்கு அப்படியொரு அப்பா கிடைப்பார் என்று தெரியவில்லை. விடுங்கள், விஷயத்துக்கு வருகிறேன்.

அப்பா இறந்த அதிர்ச்சியை உள்வாங்கி ஜீரணித்து சற்று நிலைக்கு வந்த பிற்பாடு, எனக்கு அடுத்த வேளை உணவு குறித்த கலவரம் உண்டானது. நீ சாப்பிடக்கூடாது என்று யாராவது சொன்னால் சரி என்று என்னால் அதிகபட்சம் ஐம்பது மணி நேரங்கள் வரை தாக்குப் பிடிக்க முடியும். ஆனால் இன்று முதல் அடுத்த பத்துப் பன்னிரண்டு தினங்களுக்கு நீ இதைத்தான் சாப்பிட வேண்டும் என்று கழுத்தில் துண்டைப் போட்டு வளைத்தால் நான் செத்தேன்.

பிரச்னை உணவில் அல்ல. என் உணவு முறையில் அது இருந்தது. கடந்த ஓராண்டுக் காலமாக நான் அரிசியைத் தொடுவதில்லை. அரிசி மட்டுமல்ல. பருப்பு உள்ளிட்ட பிற எந்த தானியமும் கிடையாது. நல்லெண்ணெய், கடலெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் வகையறாக்கள் கிடையாது. உருளை, சேப்பங்கிழங்கு ரகங்கள் இல்லை. பீன்ஸ், அவரை, காராமணி இனங்கள் இல்லை. புளி கிடையாது. ரொம்ப முக்கியம், இனிப்பு அறவே கிடையாது.

இதெல்லாம் இல்லாமல் எந்த வீட்டில் காரியச் சமையல் நடக்கும்? இதையெல்லாம் நான் சாப்பிட மாட்டேன் என்று அம்மாவிடம் போய்ச் சொல்லவும் தயக்கமாக இருந்தது. ஒரு பேரிழப்பைவிட இது பெரிய விஷயமா என்று எனக்கே தோன்றுகிறபோது அம்மாவுக்கு எப்படித் தோன்றாதிருக்கும்? இருந்தாலும் என்னிடம் ஓர் அஸ்திரம் இருந்தது. அதை ஒரே ஒருமுறை பிரயோகித்துப் பார்க்கலாம் என்று நினைத்தேன்.

அழுகையெல்லாம் சற்று வடிந்திருந்த தருணத்தில் மெல்லப் பேச்செடுத்தேன். அம்மா, வாழ்நாளில் ஒருபோதும் அப்பா என் சுதந்தரத்தில் தலையிட்டதில்லை. என் உணவு முறை என்பது என் சுய புத்தியுடன் நானே தேர்ந்தெடுத்த ஒன்று. அப்பா நிச்சயமாக இதைத் தனக்காக மாற்றிக்கொள்ளச் சொல்லிக் கேட்கமாட்டார். உனக்கும் ஆட்சேபணை இல்லையென்றால் இந்தக் காரிய தினங்களிலும் நான் என் விரதம் கெடாமல் பார்த்துக்கொள்வேன்.

சொற்களில் வாழ்பவனால் இதுவா முடியாது? தவிரவும் சொல்லுகிற தொனி. உனக்கு இஷ்டமில்லையென்றால் செய்யமாட்டேன் என்பதைச் சொல்லாமல் புரியவைக்கிற உத்தி. அது உதவும். வேலை செய்யும்.

செய்தது. உன் இஷ்டம் என்று அம்மா சொல்லிவிட்டபடியால் ஒரு பிரச்னை தீர்ந்தது என்று எண்ணிக்கொண்டேன். சமையல் பொறுப்பை ஏற்றிருந்தவரிடம் நான் உண்ணக்கூடிய காய்கறிகளின் பட்டியலை அளித்தேன். தினசரிச் சமையலில் இதில் ஏதாவது ஒன்று இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். தனியே அவசரமாக ஒரு பனீர் சமையல். கூடவே இந்தக் காய் இனத்தில் ஒன்றிரண்டு. கொஞ்சம் வெண்ணெய். கொஞ்சம் தயிர். முடிந்தது. வெங்காயம் கிடையாது, பூண்டு கிடையாது. அவ்வளவுதானே? அது ஒரு பிரச்னையே இல்லை எனக்கு.

உறவினர்களும் நண்பர்களும் பந்தியில் அமருகிறபோதெல்லாம் இதை வினோதமாகப் பார்த்தார்கள். சரியாக ஒரு வருடம் கழித்து இலை போட்டுச் சாப்பிடுகிறேன். ஆனால் இலையில் சாதம் இல்லை. பருப்பில்லை. சாம்பார், ரசம் இல்லை. அபர காரிய பட்சணங்களான அதிரசம், சுய்யம், சொஜ்ஜியப்பம், பருப்புப் பாயசம் உள்ளிட்ட எதுவும் இல்லை.

‘சுவாமி, ஒரே ஒரு எள்ளுருண்டை மட்டும்…’

அங்கே நான் விழுந்தேன்.

நான் இனிப்பு சாப்பிட்டுக்கொண்டிருந்த காலத்தில் மிகவும் விரும்பி உண்ட பொருள்களுள் ஒன்று எள்ளுருண்டை. அதைப் போன்றதொரு ருசி மிக்க பட்சணத்தை எதற்காக திவசச் சடங்குகளுக்கு மட்டும் என்று கட்டம் கட்டி ரிசர்வ் தொகுதியில் நிற்க வைத்தார்கள் என்று எப்போதும் நினைப்பேன்.

பொதுவாகவே நமது வீடுகளில் மாதாந்திர மளிகைப் பட்டியலில் எள் இருக்காது. வாசமிகு கரங்கள் உடைய பெண்கள் மட்டும் மிளகாய்ப் பொடி அரைக்கும்போது பிடி எள்ளை வறுத்து அள்ளிக் கொட்டி அரைப்பார்கள். எள் சேர்த்த மிளகாய்ப் பொடியின் மணமும் ருசியும் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. மிளகாய்ப் பொடிக்கு சகாயம் செய்யப் போகும்போதே அத்தனை ருசிக்கிற வஸ்துவைத் தனியே ஒரு பட்சணமாக்கினால் சும்மாவா இருக்கும்?

எள்ளுருண்டை என்பது இனிப்புகளில் ஒரு தனி ரகம். எள்ளில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பதாலோ, அல்லது அதில் வைட்டமின் பி1, பி6, தையாமின், நியாஸின், கால்சியம், மக்னீசியம் போன்ற எக்கச்சக்க சத்து இருப்பதாலோ, மற்ற இனிப்புப் பலகாரங்களுக்குக் கூடாத ஒரு பிரத்தியேக ருசி எள்ளுருண்டைக்குச் சேரும்.

வெள்ளை எள்ளைக் காட்டிலும் கறுப்பு எள்ளுக்குத்தான் ருசி அதிகம். கொஞ்சம் அலசி உலர்த்தி, கால்வாசி ஈரத்தோடே வாணலியில் போட்டு வறுத்து வெல்லப்பாகில் பிடித்து உருட்டினால் எள்ளுருண்டை தயார். கூடுதல் வாசனைக்குச் சற்று ஏலம். முடிந்தது.

ஒன்று தெரியுமா உங்களுக்கு? மூட்டுவலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ஒரு பிரமாதமான மருந்து. தினசரி இரண்டு உருண்டைகள் சாப்பிட்டு வந்தால் பெரிய நிவாரணம் இருக்கும். [ரத்த சர்க்கரை அளவு ஏறிவிட்டது என்பீரானால் நான் பொறுப்பல்ல.] மாதவிடாய் வருகிற நேரம் சில பெண்களுக்கு மார்பக வலி இருக்கும். உடம்பு திடீரென்று கனமாகிவிட்டாற்போலிருக்கும். தலைவலி, முதுகுப்பக்க வலி, வயிறு உப்புசம் என்று என்னவாவது ஓர் இம்சை இருக்கும். இதற்கெல்லாம் எள்ளுருண்டை ஒரு நல்ல மருந்து.

மருந்தோ என்னமோ. எனக்கு அது விருந்து. அதனால்தான் பரிமாற வந்தவர் ‘ஒரே ஒரு எள்ளுருண்டை’ என்று எடுத்து நீட்டியபோது சரி என்று சொல்லிவிட்டேன்.

எள் ஒரு தானியம். எனவே எனக்கது கூடாது. அதனுள் இருக்கும் எண்ணெயும் எனக்குச் சேராது. அப்புறம் வெல்லம். என்னளவில் அந்த மூன்றுமே கெட்ட பொருள். இலையில் விழுந்த பிறகு என்னடா செய்யலாம் என்று சில வினாடிகள் தவித்தேன். இம்மாதிரி சமயங்களில்தான் சமயத்தைச் சகாயம் பண்ணிக்கொள்ள வேண்டும்.

எள் என்பது என்ன? விஷ்ணுவின் வியர்வையில் உதித்ததல்லவா அது? தவிரவும் லட்சுமி வாசம் புரிகிற தானியம். அந்தப் புனிதத்தைப் பேணத்தான் தினசரி சமையலில் அதைத் தவிர்க்கச் சொல்லி, இம்மாதிரியான தருணங்களுக்கு மட்டும் அனுமதிக்கிறார்கள். ஒன்று சாப்பிட்டால் ஒன்றும் தப்பில்லை என்று நினைத்துக்கொண்டு இரண்டு சாப்பிட்டேன். என்ன ருசி! எனக்குத் தெரிந்து ருசியை மூக்காலும் உணரவைக்கிற ஒரே தின்பண்டம் எள்ளுருண்டைதான். இதன் ருசியை இன்னுமே சற்றுக் கூட்ட முடியும். ஆனால் காரியச் சமையல்காரரிடம் அதைச் சொன்னால் அடிக்க வந்துவிடுவார்.

உருண்டைக்காக எள்ளை வறுக்கிறபோது கொஞ்சம் கொண்டைக்கடலை உடைத்துச் சேர்த்து வறுத்துப் பாருங்கள். பொட்டுக்கடலையும் போடலாம். ஆனால் கொண்டைக்கடலை அளவுக்கு ருசி கூடாது. அதே மாதிரி ஏலக்காயைப் பொடி செய்து சேர்க்கிறபோது கூடவே இரண்டு கிராம்பையும் இடித்துச் சேர்த்தால் சுவை அள்ளும்.

என் தந்தை நாற்பது வருடங்களுக்கு மேலாக இனிப்பே தொடாமல் வாழ்ந்தவர். இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் அவரது சர்க்கரை அளவு 600. அதை நினைத்துக்கொண்டுதான் அந்த எள்ளுருண்டையைச் சாப்பிட்டேன்.

[ருசிக்கலாம்.]
Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

Add comment

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading