அனுபவம்

கிறுக்குப் பயல்

எப்படி முயற்சி செய்தாலும் சில கிறுக்குத்தனங்களை என்னால் விட முடிவதேயில்லை. எழுத்தாளர்கள் கொஞ்சம் முன்னப்பின்னதான் இருப்பார்கள் என்று முத்திரை குத்திவிட முடியாது. மிகவும் நேர்த்தியாக வாழும் பல எழுத்தாளர்களை எனக்குத் தெரியும். என்னுடைய கிறுக்குத்தனங்களுக்கான பழியை மரபணுவின் மீது போட்டுவிடலாமா என்றால் அதுவும் முடிவதில்லை. வம்சத்தில் என்னைத் தவிர பிறர் சரியாகத்தான் இருக்கிறார்கள். நான் மட்டும்தான் உருமாறிய டெல்டாவாக இருக்கிறேன்.

ஓர் உதாரணம் சொல்கிறேன். என் அலுவலகம் இருக்கும் சாமியார் மடம் பகுதியில் இருந்து மேற்கு மாம்பலம் ஆரிய கௌடா சாலைக்குச் செல்ல வேண்டுமானால் அதற்கொரு எளிய வழி இருக்கிறது. அப்படியே அம்பேத்கர் சாலையைக் கடந்து காளி பாரி கோயில் தெருவைப் பிடித்தால் இரண்டு நிமிடத்தில் கொண்டு சேர்த்துவிடும். ஆனால் நான் அப்படிப் போகமாட்டேன். ஸ்கூட்டரில் அம்பேத்கர் சாலையில் முக்கால் வாசித் தூரம் பயணம் செய்து புதூர் ஹைஸ்கூல் எதிரே இடப்புறம் திரும்புவேன். அப்படியே நேராக ஆயிரம் மீட்டர் பயணம் செய்தால் போஸ்டல் காலனி முதல் தெரு வரும். அதில் திரும்பி அந்த முழுத் தெருவைக் கடந்தால் ஆரிய கௌடா சாலையின் இந்தப் பக்கத் தொடக்கம் தென்படும். அங்கிருந்து புறப்பட்டுக் கடை கடையாகப் போனால்தான் எனக்குத் திருப்தி.

இதில் அநியாயம் என்னவென்றால், புதூர் ஹைஸ்கூல் எதிரே திரும்பிய உடனேயே வரிசையாக பாலகிருஷ்ணன் தெரு, மகாதேவன் தெருவெல்லாம் வரும். எதில் திரும்பினாலும் ஆரிய கௌடா சாலை வந்துவிடும். ஆனாலும் நான் போஸ்டல் காலனி முதல் தெருவில் திரும்பித்தான் போவேன். போஸ்டல் காலனிக்கு இரண்டாவது, மூன்றாவது தெருக்களும் உண்டு. ஆனால் அந்தப் பக்கம் போனது கிடையாது.

என் கிறுக்குத்தனங்களில் அதிக அளவு என் மனைவியால் விமரிசிக்கப்பட்டது நான் யோசிக்க அமரும் விதம். எழுதுவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் கொண்ட ஓர் அறை இருக்கிறது. அதெல்லாம் சரிப்படாதென்றால் அபார்ட்மெண்ட் வளாகத்தில் செடிகள் பூத்துக் குலுங்கும் சிறிய அளவிலான சோலை ஒன்று உள்ளது. வானம்தான் வேண்டுமென்றால் அசாத்திய நீள அகலங்களைக் கொண்ட மொட்டை மாடி இருக்கிறது. மணிக் கணக்கில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு யோசிக்கலாம். ஆனால் இதெல்லாம் என் கற்பனைக் குதிரையை உசுப்பிவிடாது. இரண்டு சுவர்கள் இணையும் மூலையில் நாற்காலியைத் திருப்பிப் போட்டுக்கொண்டு சுவரைப் பார்க்க உட்கார்ந்தால்தான் எனக்கு யோசிக்க முடியும். கலகலப்பு 2வில் வரும் முதுகு பாபாவைப் போல. திருமணமான புதிதில் என்னுடைய இந்தப் பழக்கத்தைக் கண்டு என் மனைவி பயந்து போயிருக்கிறார். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் என்னால் அதை மாற்றிக்கொள்ள முடிந்ததில்லை. இன்றுவரை அப்படித்தான் இருக்கிறேன். ஆனால் அறைக் கதவுக்கு ஸ்டாப்பர் போட்டுவிட்டேன். யாராவது கதவில் கை வைத்தால், திறக்கும் சத்தம் கேட்கும். உடனே நாற்காலியை ஒரு சுழற்று சுழற்றி ஒழுங்காக உட்கார்ந்துவிடுவேன்.

இன்னொன்று நினைவுக்கு வருகிறது. பொதுவாக நான் எழுதுவதில் ஆய்த எழுத்து இருக்காது. மிக மிக அரிதாக எப்போதேனும் ஃ உள்ள சொல் எதையாவது பயன்படுத்த நேர்ந்தால், அந்த எழுத்தை டைப் செய்தவுடன் எழுதுவதை நிறுத்திவிடுவேன். குறைந்தது இருபது வினாடிகளாவது அதையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டுத்தான் அடுத்த எழுத்துக்கு என்னால் செல்ல முடியும்.

என் மகளுக்கு என்னிடம் பிடிக்கவே பிடிக்காத கிறுக்குத்தனம் ஒன்றைச் சொல்கிறேன். திருப்தியாக வயிறு முட்ட முட்டச் சாப்பிட்டு முடித்த பின்பு, பசியைத் தூண்டும் சமையல் வீடியோக்களை விரும்பிப் பார்ப்பேன். ஒரு நாளில் அந்த வீடியோக்களை எப்போது வேண்டுமானாலும் நான் பார்க்கலாம். ஏனோ சாப்பிட்டு முடித்தவுடன்தான் street food videos பார்க்கத் தோன்றும். இது வக்கணையாக சமைத்துப் போடும் அம்மாவை அவமதிப்பது போல இருக்கிறது என்றுகூட ஒருமுறை சொல்லிவிட்டாள். மாற்றிக்கொள்ள முடிந்ததில்லை.

பல் துலக்கும்போது ஒன்று இரண்டு மூன்று என்று ஒவ்வொரு பக்கமும் கை எவ்வளவு முறை போய் வருகிறது என்று எண்ணுவது, நகம் வெட்டிய பின்பு நறுக்கிய கட்டை விரல் நகத்தினால் மற்ற நகங்களை வாரி அள்ளுவது, ஓட்டலில் சாப்பிடும்போது போடப்படும் அப்பளத்தை சாப்பிடாமல் அப்படியே வைத்திருந்து, இறுதியில் தயிர் சாதத்தில் ஊற வைத்துச் சாப்பிடுவது (பாயசம் இருந்தால் அதில் ஊற வைப்பேன்), எப்பேர்ப்பட்ட நாவலானாலும் இறுதி அத்தியாயத்தை மட்டும் படிக்காமல் நிறுத்தி வைத்து மூன்று மாதங்களுக்குப் பிறகு படிப்பது, தினமும் வேலையில் அமரும்போது நான் வணங்கும் சித்தர்களைப் பெயர் சொல்லி அழைத்துவிட்டு வேலையைத் தொடங்குவது (வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில், ‘கருப்பா, வாடா’ என்று சிலையைப் பார்த்துக் கூப்பிட்டுவிட்டு பூசாரி, சிவனாண்டியைப் பார்க்கப் புறப்பட்டுப் போவாரே அதைப் போல.) என்று ஏராளமான கிறுக்குத்தனங்களைப் பாதுகாத்து வருகிறேன்.

இவையெல்லாம் இல்லாமல் வாழ்வது எளிதுதான். ஆனால் இவையெல்லாம் இல்லாமல் வாழ்க்கை அவ்வளவு நன்றாக இருக்குமா என்றுதான் சந்தேகமாக இருக்கிறது.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி