O பா. ஜகந்நாதன்
எனக்கு இந்த வீடு ,பிளாட்’டுன்னு வாங்க அலையறது சுத்தமா பிடிக்காது சார். ஆனா,ரொம்ப நாளாவே ,ஒரு வீடோ ,மனையோ வாங்கணும்கறது என் பொண்டாட்டியோட ஆசை. “எந்த ஏரியால யார் பிளாட் போட்ருக்காங்க? என்ன ரேட்?யாரு பில்டர்?”….. எல்லாம் அவளுக்கு அத்துப்படி! அவள் ஒரு நடமாடும் “சுலேகா.காம்”.
என்னை ,ஏதாவது ஒரு வீடோ, மனையோ வாங்கி போடச்சொல்லி அவள் ரொம்பநாளா டார்ச்சர் பண்ணிகொண்டிருந்தாள். “எப்படா ஞாயித்து கிழமை வரும்?’’னு ஏங்கி ஏங்கி, வாரத்தை ஓட்டி, ஞாயித்துகிழமை வந்துட்டா போதும். நமக்கு வேலை ரெடியா இருக்கும். அவள் சனிக்கிழமையே, Hindu-Property Plus, தினமலர்- வீடு,மனை வரி விளம்பரங்களை ஒண்ணு விடாம, IAS Exam மாதிரி படிச்சிட்டு, அடுத்த நாள் விசிட்டுக்கு- ஊரப்பாக்கம், சிங்கபெருமாள் கோயில்,ECR,கூடுவாஞ்சேரி’னு பிளான் போட்டு வைத்து, ரெடியா இருப்பாள்.ஞாயிற்றுகிழமைகளில் அவள் அடிக்கும் ஸ்டாண்டர்ட் டயலாக்-
”நாலு இடம் பாத்தாதான் அமையும்.கெளம்புங்க..எப்பப்பாத்தாலும், ஈஸி சேர்ல ஒக்காந்துண்டு”.
எனக்கு ”ஞாயித்துகிழம ஏண்டா வருது?’’ன்னு ஆயிடிச்சி. வேகாத வெயில்ல என் டொக்கு ஸ்கூட்டர்ல நானும் மூணு வருஷமா, வீடு மனை வாங்க, அலையா அலையறேன். ஆனா, இது வரைக்கும் ஒண்ணும் படியல.
என்னமோ தெரியல..கருமம்..இந்த நிலம் வாங்கற பிசினஸ் மட்டும் எனக்கு சுத்தமா பிடிக்கல சார். வீடு வாங்கணும்னா, அதிலதான், எத்தன தலைவலி? பட்டா,வில்லங்கம்,ஈசி,இத்யாதி,இத்யாதி….தூத்தேரி…மனுஷன என்ன பாடு படுத்துது, இந்த நிலம் வாங்கற ஆசை?
பட்டா,தாய்ப்பட்டா, நாய்ப்பட்டா! பாடு பட்டா..அவஸ்தை பட்டா’தான் இது கெடைக்கும்.அததான், சுருக்கமா இத பட்டா‘ங்கறாங்களோ?
இந்த “வில்லங்கம் “? பேர்’லயே வில்லங்கம் …. எனக்கெதுக்கு சார் இந்த வில்லங்கம்?
EC –ன்னு பேரு.ஆனா,அதா வாங்கறது என்ன அவ்வளவு ஈசியா?
எல்லாம் சரியா இருந்தா, ஒரு லீகல் ஒபீனியன் வாங்கணுமாம் ! (இதுல நடக்கற ஊழலுக்கு, ‘இல்லீகல்’ ஒபீனியன்தான்யா வாங்கணும்!)
இது வரைக்கும் நான் வீடு/மனை பார்க்க சுத்தின கதைகள ஒரு மெகா சீரியாலாவே எடுக்கலாம்.(‘சித்தி….’ மாதிரி ‘சுத்தி’?).ஆனா, நீங்க பாக்க மாட்டீங்க! அதனால,சுருக்கமாவே சொல்றேன்.
மொதல்ல 2009-ல, குரோம்பேட்டை ரங்கா நகர்ல ஒரு வீடு பாத்தேன்… பாரதியார் பாடுனா மாதிரி, பத்து பன்னெண்டு தென்னை மரங்களுக்கு நடுவுல ஒரு கிரௌண்டுல,என் பட்ஜெட்’டுக்குள்ள, ஒரு வீடு. என் புரோக்கர் மோகன் சரியான இடமாத்தான்யா புடிச்சிருக்கான். Seller வயசான மனுஷன்.ரொம்ப அமைதியானவர்.நல்ல மனுஷன்.மணிரத்தினம் படம் மாதிரி அளவா பேசறார்.ஆனா, தெளிவா பேசறார். பாத்தாலே, நம்பிக்கை,நாணயம்.(பாலு ஜ்வல்லர்ஸ் மாதிரி ஆய்டக்கூடாதுப்பா!). எல்லாருக்கும் பிடிச்சி…டோக்கன் அட்வான்ஸ் 1000/- கூட கொடுத்துட்டேன். டீல் ஸ்மூத்தா முடிஞ்சுது.ரெண்டு நாள் கழிச்சு ,காத்தால அவர் வீட்டுக்கு போய் ,கேட்டேன்…
” சார்.. ரெஜிஸ்ட்ரேசஷன் எப்போ வெச்சிக்கலாம் சார் ?”
“Owner-ஐ கேட்டு சொல்றேன்”
அடப்பாவி! அப்போ, நீ Owner இல்லையா?
அப்புறம் விசாரிச்சதில தெரிஞ்சிது Owner-க்கு இத விக்கறதில இஷ்டம் இல்லன்னு!
சரியாப்போச்சு ! அட்வான்ச திருப்பி வாங்கிட்டு வெளியில வந்துட்டேன்.
அடுத்து, ஊரப்பாக்கம் சரவணா பில்டர்ஸ்…Row Houses…அட்டகாசம்..நல்ல Lay out. இம்முறை என் மனைவியும் உடன் வந்தாள்.சைட் ஆபீசில் விநாயகர்,முருகர்,அம்மன் என்று ஏகமாய் பக்தி போட்டா’ க்கள்… பிளாட் ப்ரொமோட்டர், நெத்தியில பட்டையோட நடுவுல பெரிய குங்கும பொட்டு கூட வெச்சிருந்தார். நல்ல கட்டுமஸ்தான ஆள். சரவணா பில்டரா,பாடி பில்டரா? ஆனாலும், “நல்ல மனுஷன்” என்று என் மனைவி செர்டிபிகெட் அடித்து கொடுத்தாள்.
“சார்.. இந்த டாகுமெண்ட் copy எல்லாம் கொடுத்தீங்கன்னா…ஒரு legal opinion வாங்கிண்டு வந்து ,ஒடனே புக் பண்ணிடறோம்.”
‘சார்..அட்வான்ஸ் பத்தாயிரம் கொடுத்தீங்கன்னா ரெண்டுநாள்’ல ஜெராக்ஸ் காப்பி ஒரு செட் கொடுப்போம்’னார்….
எடு செக்க…கிழி…கொடு.Take that Ten Thousand !
பணம் கொடுத்தாச்சு…ரெண்டு நாள் கழிச்சி நான் அவருக்கு போன் பண்ணினேன்.
“சார்..அப்புறம், அந்த டாகுமெண்ட் ஜெராக்ஸ் காப்பி இருக்கா…”
ஏதோ, நான் நரசூஸ் காப்பி கேட்ட மாதிரி “பேஷ் பேஷ் நல்லா இருக்கு”ன்னார்.
“எந்த டாகுமெண்ட்? ஒ….அதுவா.. ஆபீஸ்ல வந்து வாங்கிக்கங்க” -லைன் கட்.
எந்த ஆபீஸ்?
நொந்த ஆபீஸ் ! ஒரிஜினல் இருந்தால் தானே ஜெராக்ஸ்?
பின்னர்,பல முறை போன் செய்தும் ஒரு ஜெராக்ஸ் பேப்பரும் கிடைக்க வில்லை. அந்த படுபாவி ‘பாடி பில்டரி’ன் நெத்தி பட்டை ஞாபகம் வந்தது. எனக்கும் போட்டு விட்டான் !பத்தாயிரம் ரூபாய் அவுட்… மாமா பிஸ்கோத்து !
அடுத்து,பல்லாவரம் அருகே, பிரம்மாண்டமாய் ஒரு அபார்ட்மெண்ட். இந்த இடம் எனக்கே பிடித்திருந்தது. பெரிய Promoters. Launch தினம் அன்றே போய் ஒரு லட்சம் அட்வான்ஸ் கொடுத்து புக் செய்து விட்டேன். கோட்டுசூட்டு போட்ட நல்ல ஆபீசர்கள்,ரொம்பவே டீசன்ட். நல்ல rate-இல் 3 BHK FLAT. குளுகுளு ஸ்விம்மிங் பூல், கிளப்,மினி தியேட்டர் என்று என் வாழ்க்கை மாறப்போகிறது. மனைவி, என்னை மிகவும் பாராட்டினாள். பின்னர் மேற்கொண்டு பேச, மறு நாள் அவர்கள் கம்பெனி ஆபீஸ் சென்றேன். குளுகுளு A/C ஆபீஸ்.அழகான ரிசப்ஷனிஸ்ட். டீசன்ட்டான பேச்சு. எல்லா டாகுமன்ட்ஸும் காட்டினார்கள். பிளான் அப்ரூவல் பார்த்தால், ஒரு FLOOR -க்கு நாலு கிச்சன். கட்டுவது ஆறு ! இப்போது ,ஸ்விம்மிங் பூல் எனக்கு சுட்டது! அய்யா..நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு!
“நான் ஒரு Straight forward ஆசாமி.இது நேர்மையாக உழைத்த பணம்.எனக்கு எல்லாமே சரியாக இருக்க வேண்டும் சார்.எனக்கு இந்த Flat வேண்டாம்” என்றேன். ஆனாலும், அது ஒரு நல்ல கம்பெனி. ஒரு வாரத்தில், அட்வான்ஸ் பணத்தை உடனே திருப்பி விட்டார்கள்.
பின்னர்,நமக்கு வீடெல்லாம் வேண்டாம்;எங்காவது நிலம் வாங்கி போடலாம் என்று முடிவு செய்து ஒரு ஞாயிற்றுகிழமை கூடுவாஞ்சேரி வரை சிறப்பு பயணம் மேற்கொண்டேன். ஒரு பிரபல Land Promoters போட்ட Layout. ஏரிக்கரையோரம், நல்லதொரு நிலம். எல்லாம் பிடித்து வர, நான் சற்றே மனையை சுற்றி பார்க்க போனேன்…அருகே பார்த்த ஒரு போர்டு எனக்கு அதிர்ச்சி அளித்தது….
”மயானத்துக்கு போகும் வழி!”
போச்சு !வீட்டுக்கு பக்கத்தில் சுடுகாடா?வேண்டாம் சார்.
இந்த மயான அதிர்ச்சியிலுருந்து மீண்டு ,அடுத்து நான் போனது அனகாபுத்தூர். மனையை பற்றி அட்ரஸ் விசாரிக்க வேண்டி, அருகில் ஒரு வீட்டு கதவை தட்டினால்…கதவை திறந்து கொண்டு வெளியே வந்தது ஒரு லேடி…தலைவிரி கோலமாக வெள்ளை புடவையில்…”நா……னே…. வரு…..வேன்..” என்ற பாட்டில் பார்த்த சுப்ரியா மாதிரி வெளியே வந்தாள். ஐயோ ! என்று அலறி, பின்னர், “கால் இருக்கா?” என்று பார்த்து உறுதி செய்தபின் ,மெல்ல கேட்டேன்…
”அம்மா..இங்க மனை ஏதும் விலைக்கு …”?
“அங்க போங்க”..என்று வழி காட்டினாள். நன்றி தெரிவித்து,ஓட்டம் பிடித்தேன். அங்கே போய் பார்த்தால், காலி மனை.நல்ல இடம். 1800 sq.ft. அற்புதம். “அடிச்சோம்டா ஜாக்பாட்”.
ஆனால்..பக்கத்தில்..என்ன அது புகை?
எட்டி பார்த்தால்….
மயானம் !
அரு”மயான” அதிர்ச்சி …ஒடுறா டேய்…
எப்படி இங்கேயும்? புரியவில்லை!
சில நாள் கழிந்தது.
“சோமங்கலத்துல நல்ல எடம். நான் வாத்யாரா வேல பத்த இடம்..போய் ரவி ப்ரோக்கரை பாரு” என்று என் அப்பா ஆணை இட்டார். நல்ல ஊர். ஏரி.பசுமை. ஆஹா..நம் மனை வேட்டை முடிவுக்கு வந்தது என்று நினைத்துக்கொண்டு,மெல்ல உடன் வந்த ப்ரோக்கரிடம் கேட்டேன்…
”இங்க பக்கத்தில மயானம் ஏதும் இருக்கா?”
ப்ரோக்கர் என்னை ஒரு மாதிரி பார்த்தார்.
“ஏன் சார்..எல்லாரும் பக்கத்துல ஸ்கூல் இருக்கா,ஹாஸ்பிடல் இருக்கான்னு கேப்பாங்க..நீங்க ….”
“யோவ்….கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும்”
அவர் சொல்லவில்லை…நானே மனைக்கு பின் பக்கம் போய் பார்த்தால்…..எனக்கு அதிர்ச்சி ! சொன்னால், நம்பமாட்டீர்கள்..மீண்டும் மயானம்!
என்ன கொடுமை? என்னால், இந்த Coincidence-ஐ நம்ப முடியவில்லை. வீட்டுக்கு வந்து அப்பாவிடம் சொல்லி,சொல்லி சிரித்தேன்.
“இருந்தா என்னடா?”
“வேணாம்பா”.
மேலும்,சில மாதங்களில், பல இடங்களை நான் பார்த்து Reject செய்து வந்தேன் இப்போது, இது எனக்கு ஒரு ‘சண்டே ஹாபி’யாகவே ஆகிவிட்டது. இடம் பிடித்திருந்தால் ரேட் அநியாயம். ரேட் படிந்து வந்தால்,எனக்கு பிடிக்க வில்லை. நான் வசிக்கும் ஏரியாவில், எல்லா ப்ரோக்கர்களுக்கும் நான் ஒரு “Career Challenge”-ஆகவே இருந்து வந்தேன்.
என் “மயான” ராசி பற்றி அறிந்த சில ப்ரோக்கர்கள், என்னை “சாவு கிராக்கி” என்று மனதிற்குள் திட்டி இருக்கக்கூடும்.நான் என்ன செய்வது?
என் ஆஸ்தான புரோக்கர் மோகன் மட்டும் மனம் தளராமல் விக்கிரமாதித்தன் மாதிரி முயற்சி செய்து கொண்டிருந்தார்.
ஒரு ஞாயிறு.நான் ஆயாசமாக படுத்து டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது மோகன் போன் செய்தார்.
“சார்..உடனே வாங்க..அஸ்தினாபுரம் பக்கத்தில அருமையான இடம்..அரை கிரௌண்டுல வீட்டோட…கிளியர் டைட்டில்..பாத்துட்டு வந்துடலாம்”
மனைவியின் உந்துதலால் என் “ஈஸி சேர்” தவத்தை கலைத்து , மனதை திடப்படுத்திக்கொண்டு என் பஞ்சகல்யாணி ஸ்கூட்டரை மிதித்தேன்.மனைவி, ” ALL THE BEST !” என்று பால்கனியிலிருந்தபடி, டாட்டா காட்டினாள். நான் என்ன CAT Entrance exam–ஆ எழுத போகிறேன்?
ஒரு வழியாக,மோகனுடன் அஸ்தினாபுரம் போய் சேர்ந்தேன்.இதை அஸ்தினாபுரம் என்று சொல்ல முடியாது. அதையும் தாண்டி…சற்றே, ஆந்திரா பார்டரில் அது இருந்தது. புரோக்கர் மோகனை முறைத்தவாறு வீட்டை நோட்டம் விட்டேன். நல்ல வீடு. லொகேஷன் ஓகே. ஆனால்…. ஒரு Bad smell.என்ன அது? பக்கத்து வீட்டு வாசலில்…பத்து பன்னெண்டு எருமை மாடுகள் !!!! எங்கெங்கு நோக்கினும் சாணியடா !
இந்த ஷஹருக்கு நடுவுல எப்படி ஒரு பால்காரன் பங்களா கட்டி, இத்தனை எருமைகளுடன் குடும்பம் நடத்துகிறான்? காணி நிலம் வேண்டும்.ஆனால், சாணி நிலம்??
வேண்டாம் சார்…
இதுக்கு அப்புறம், ஒரு வருஷம் வெறுத்து போய் எந்த இடத்தையும் பார்க்க போக வில்லை.ப்ரோக்கர்களும், என் “வீடு பார்க்கும் பாலிசி” பிடிக்காது, என்னை ஒரு “மன்மோகன் சிங்” போல வெறுத்து ஒதுக்கினார்கள். மோகன் உள்பட…
திடீரென்று, ஒரு நாள் பெருங்களத்தூரில் 1750 ரூபாய்ல 3BHK flat என்ற ஒரு அருமையான offer பற்றி கேள்விப்பட்டு என் அண்ணன் கோடம்பாக்கத்திலிருந்து கிளம்பி வந்தான். என்னையும் வந்து பார்க்க சொன்னான். இன்னொரு ஞாயிறும் நாசம். மனைவியின் உந்துதலால், கிளம்பி போனேன். அற்புதம். நல்ல இடம்.ஆனால்…என் வழக்கமான சந்தேகம் கிளம்பியது !
சுத்தி போய் பார்த்தால்….Plot பக்கத்தில் ..ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள்!
மயானம் !
இம்முறை,சற்றே பெரியது.மொத்த பெருங்களத்தூர் அமரர்களும் அங்கே ஒய்வு எடுத்துக்கொண்டு இருந்தார்கள்.
எனக்கு வேண்டாம் சார்.இனிமேல் வேண்டாம்.
எவ்வளவு கிரௌண்ட் நிலம் வாங்கினாலும், ”கடைசியில், 6X4 நிலம்தான் சாஸ்வதம்” என்ற உயர்ந்த தத்துவத்தை இறைவன் எனக்கு உணர்த்தும் குறியீடாக, இதை நான் உணர்ந்தேன்.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.
மனை அமைவதும் !
இனி வீடு/மனை ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் என்று உறுதியாக முடிவு செய்தேன்.எத்தனை ஞாயிற்று கிழமைகள் பாழாய்ப்போயின? இனி, வேண்டாம். விடுமுறை தினங்களில் ஒய்வு எடுப்போம். சந்தோஷமாக இருப்போம்.எங்கே என் ஈஸி சேர்?எங்கே என் MP3 பிளேயர்?
மேலும் வரும் நாட்களில், ஹிந்து Property plus/ தினமலர் ரியல் எஸ்டேட் வரிவிளம்பரங்கள் எல்லாத்தையும் என் மனைவி கண்ணில் படாது ,நைசாக ஒளித்து வைக்க ஆரம்பித்தேன்.
அடுத்த சனிக்கிழமை-Second Saturday-ஆபீஸ் லீவு !
காலை வீட்டில் ஹாயா’க உக்கார்ந்து, டிவி போட்டேன். விஜய் டிவி அலறியது.
“செங்கல்பட்டில் இதுவரை யாருமே கொடுக்காத சதுர அடி வெறும் 150 ரூபாயில் ‘அசோகா ப்ரோமொட்டர்’ஸின் 175-ஆவது மனை பிரிவு- உடனே அணுக,மொபைல் நம்பர் 9345634256.” என்று ஒரு மெகா சீரியல் நடிகை, ஏகத்துக்கு சிரித்துக்கொண்டிருந்தாள்.
செங்கல்பட்டா??? ரொம்ப தூரமாச்சே….உடனே சுதாரித்து, சேனல் மாற்ற முயலும்போது, பின்னால் உட்கார்ந்திருந்த, என் மனைவி அந்த நம்பரை அவள் மொபைலில்,”SAVE” செய்து கொண்டிருந்தது,எனக்கு வயிற்றில் புளியை கரைத்தது.
நாளை ஞாயிறு.
இல்லை. மீண்டும் எனக்கு சனி !
நல்லாருக்கு. பேசாம இவரையே ரெகுலரா எழுதச்சொல்லிடுங்க.
சார்,
மயானம் ஒன்றும் கேவலம் இல்லை. ருதர பூமி என்று சொல்வார்கள். முன்னர் மயானமான இருந்த இடத்தில் வீடு கட்டிக் கொண்டால் ஹோ ஹோ என்று சிறப்பாக இருப்பார்களாம். யாரோ சொல்லிக் கேட்டது.தமிழகத்தில் பல டவுன்களில் புற நகர் பகுதிகள் எல்லாம் முன்னர் திறந்த வெளி மயானமாக் இருந்த இடங்களே.சென்னையில் பெசண்ட நகரில் பெரும் பகுதி முன்னர் மயானமாக இருந்த இடமாம்.இன்று பெசண்ட் நகரில் பிளாட் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது.மயானம் என்று ஒதுக்காதீர்கள். தைரியமாக மனை வாங்கிப் போடுங்கள்.
உடன்பிறப்புகள்,பிற குடும்ப உறுப்பினர் படைப்புகளுக்காக தனியாக தளம் துவங்கலாமே.எதற்காக இங்கே.
அன்றைக்கு உங்களையும் குடும்ப்த்தாரையும் அங்கே வைத்து பார்த்தேன். ஆனால் சுடுகாடு என் கண்ணில் படவில்லையே. இருக்கட்டும் – அடுத்த முறை பார்த்துவிடலாம்.
அன்புடன்
நடராஜன்
I don’t know the marketing strategy behind this ghost-writing series posts.Its OK for first time that you gave an intro to his writings.But why do you repeat the same for all of his posts ? Please ask your relative to open a blog.
கல்யாணம் பண்ணிப்பார் வீட்டை கட்டிப்பார் அப்படீன்னு பெரியவங்க சொன்னாங்க அவங்களுக்கு தெரியல எதிர்காலத்துல “இடத்தை வாங்கிப்பார்” என்ற ஒரு புதுமொழியை சேர்க்க வேண்டும் என்பது. வரவர சகோதரர் எழுத்தில் மெருகு ஏறிக்கொண்டே போகிறதே ? உங்களை விட நல்லா எழுதுவார் போல தெரியுதே !! சரி சரி முறைக்காதீங்க !! சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்.
romba pidichirkku.