தீவிரவாதியாக வாழ்வது எப்படி?

மாயவலை மொத்தம் 1300 பக்கங்கள். ஆறு வருடங்கள் வேலை செய்தேன். ஒரு நாள்கூட இடைவெளி இல்லாமல் இரண்டு வருடங்கள் எழுதினேன். இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. அந்தப் புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்த காலத்தில் தீவிரவாத இயக்கங்களின் ட்விட்டர் கணக்குகளுக்குள் நுழைந்து, அதில் தொடர்புடைய நபர்களின் சொந்தப் பக்கங்களை தேடி ஃபாலோ செய்தது என்னைப் பொறுத்தவரை பெரிய சாகசம். அன்று இது அவ்வளவு எளிய காரியமல்ல.

எப்படி என்று சொல்கிறேன். அல் காயிதா போன்ற அமைப்புகள் அறிக்கை வெளியிடும் ட்விட்டர் பக்கத்தை ஃபாலோ செய்வதில் எந்த லாபமும் இருக்காது. அல் காயிதா உறுப்பினர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களை அடையாளம் கண்டு (அவர்களை இந்த அதிகாரபூர்வ கணக்கைப் பின் தொடர்வோர் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்) தேடிப் பின் தொடர்வதுதான் சவால். ஏனென்றால் உறுப்பினர்கள் யாரும் நம்மைப் போலத் திறந்து வைத்துக்கொண்டு தீவிரவாதம் பேசமாட்டார்கள். அவர்கள் எதையாவது பேச விரும்பினால் அவர்கள் சார்பில் வேறு யாராவதுதான் பேசுவார்கள். அதுவும் தொடர்பற்ற யாருக்கும் புரிந்துவிடாதபடி பேசுவார்கள். ரொம்ப சுலபம், அரபியில் பேசிவிடுவது. இதிலும் அதிபயங்கரத் தீவிரவாதிகள் சிலர் ஆங்கில லிபியில் அரபி பேசுவார்கள். (அன்று கூகுள் டிரான்ஸ்லேட்டரெல்லாம் கிடையாது.) இவ்வளவையும் கடந்து ஒருத்தரைக் கண்டுபிடித்துவிடுவோம் என்றாலும் அவ்வளவு சுலபமாக சும்மா ஒரு பொத்தானை அழுத்தி, பின் தொடர்ந்துவிட முடியாது. பின் தொடர ஆரம்பித்த மறுகணம் ப்ளாக் செய்துவிடுவார்கள்.

ரொம்ப புத்திசாலித்தனமாக முல்லா ஓமர் என்றோ அசன் அல் துராபி என்றோ புனைபெயர் வைத்துக்கொண்டாலும் கண்டுபிடித்துவிடுவார்கள். இந்த இடர்பாடுகளைத் தாண்டி ஒரு அக்கவுண்ட்டைப் பின் தொடர வேண்டுமென்றால் அதற்குக் கீழ்க்கண்டபடி செய்ய வேண்டும்.

பிரிட்டன் அல்லது ஜெர்மனிக்குக் குடி பெயர்ந்த ஏமன் அல்லது சவூதி அரேபியாவைச் சேர்ந்த முஸ்லிம்கள் என்ன மாதிரி பெயர் வைப்பார்கள் என்று விசாரித்து, அதில் வினோதமாகத் தெரியாத, சாதாரணமான ஒரு பெயராகத் தேர்ந்தெடுத்து ஐடி க்ரியேட் செய்ய வேண்டும். நேரடியாக ஏமன் அல்லது சவூதியில் இருப்பது போன்ற அடையாளத்தை உருவாக்கினால் உள்ளே நுழைய அனுமதிக்க மாட்டார்கள். பிரிட்டன், ஜெர்மனி தவிர வேறெந்த ஐரோப்பிய தேசத்து முஸ்லிம் பெயராக இருந்தாலும் அனுமதி கிடைப்பது சிரமம்தான். இது ஏன் என்று எனக்குப் புரிந்ததே இல்லை.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் பெயர் ஷியாக்கள் அதிகம் பயன்படுத்தாத பெயராக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

உங்கள் வயது 24க்கு மிகாதவாறு அமைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் படிப்பதற்காக ஜெர்மனிக்கோ பிரிட்டனுக்கோ போயிருக்கிறீர்கள். அல்லது அங்கேயே பிறந்து வளர்ந்து படித்துக்கொண்டிருக்கிறீர்கள். இதை மறக்கக்கூடாது.

தவறியும் போட்டோ போட்டுவிடக்கூடாது.

சரியான அடையாளங்களுடன் அப்படி ஒரு ஐடி க்ரியேட் செய்த பிறகு இஸ்லாமிய சகோதரத்துவம் சார்ந்து குறைந்தது நூறு போஸ்டாவது அதில் போட்டுவைக்க வேண்டும். பாலஸ்தீனில் நடக்கும் யுத்தம், இஸ்ரேலிய அத்துமீறல்களைச் சுட்டிக்காட்டும் நியூஸ் வீக், டைம்ஸ் புகைப்படங்கள் இருப்பது அவசியம். நான்கு போஸ்டுக்கு ஒரு அல் ஜசீரா லிங்க் தர வேண்டும்.

இதையெல்லாம் சரியாகச் செய்த பிறகு நீங்கள் கண்டுபிடித்து வைத்திருக்கும் அல் காயிதா ஆதரவாளருக்கு ஃபாலோ ரிக்வஸ்ட் தந்தால் சேர்த்துக்கொள்ளப்படுவீர்கள். நமக்கு நேரம் நன்றாக இருந்தால் அந்த ஐடியின் மூலம் ஏதாவது ஒன்றிரண்டு தகவல்கள் உபயோகமாகக் கிடைக்கலாம். இத்தகைய ஐடிக்கள் மாதக் கணக்கில் செயல்படாமலேயே இருக்கும். திடீரென்று ஒருநாள் ஒரு போஸ்ட் போட்டுவிட்டு ஓடிவிடும். அந்த போஸ்டையே அடுத்த நாள் டெலீட் செய்தாலும் செய்துவிடுவார்கள். விழிப்புடன் இருப்பது நமது பொறுப்பு.

மாயவலை எழுதிக்கொண்டிருந்த காலத்தில் சுமார் நாற்பது ட்விட்டர் ஐடிகள் என்னிடம் இருந்தன. சன்னி இயக்க ஆதரவாளர்களுக்காகச் சில; ஹிஸ்புல்லா போன்ற ஷியா இயக்க ஆதரவாளர்களுக்காகச் சில. ஒரே ஐடியில் நாலைந்து பேரைப் பின் தொடர்ந்தால் ப்ளாக் செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் கவனமாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஐடி வைத்திருப்பேன். ஒவ்வொரு ஐடியிலும் தினமும் வேறு வேறு போஸ்ட் போடவேண்டிய கொடுமை வேறு. ஒரே போஸ்டாகவே இருந்தாலும் வேறு வேறு சொற்களில் அதைச் சொல்ல வேண்டும். அதுவும் ஆங்கிலத்தில்.

மாயவலையை எழுதி முடித்தவுடன் போதுமடா சாமி என்று ஒரு மணி நேரத்தில் அத்தனை அக்கவுண்ட்களையும் டெலீட் செய்து தீர்த்தேன். இருபது கிலோ எடை குறைந்தாற்போல இருந்தது.

இன்று அதன் புதிய மறுபதிப்பு இன்னும் ஒன்றிரண்டு தினங்களில் அச்சாகி வந்துவிடும் என்று காயத்ரி போன் செய்தார். இது எத்தனையாவது மறு பதிப்பு என்றுகூட எனக்கு நினைவில்லை. ஆனால் ஒவ்வொரு மறு பதிப்பின்போதும் இப்படி ஏதாவது ஒரு விஷயம் நினைவுக்கு வந்துவிடுகிறது.

O

மாயவலை மறுபதிப்பை நீங்கள் ஜீரோ டிகிரி தளத்தில் முன் பதிவு செய்யலாம். முன் பதிவு செய்து வாங்கினால் விலையில் 20 சதத் தள்ளுபடி இருக்கும். முன்பதிவு செய்வதற்கான லிங்க், இங்கே உள்ளது.

Share

1 comment

  • இப்படிச் செய்தேன் என எழுதுகிறீர்களே இது பாதுகாப்பானதா!!…?

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!