இரவு ராணி என்னும் மந்திர மலரை பறித்துவந்து சாகரிகாவை கவர நீலவனத்துக்கு கோவிந்த சாமி சென்று கொண்டிருக்கையில், சூனியன் செம்மொழிப்பிரியாவுக்கும் அதுல்யாவுக்கும் ஆளுக்கொரு டாஸ்க் கொடுத்திருக்கிறான்.
கோவிந்தசாமியுடனான டாஸ்க்கை அதுல்யாவுக்கும், நிழலுக்கான டாஸ்க்கை செம்மொழிப்பிரியாவுக்கும் தந்திருக்கிறான் என அறிகிறோம்.
நிழலுடனான டாஸ்க்கை நிறைவேற்ற செம்மொழிப்பிரியா கிளம்புகிறாள். வழியில் அவள் நீலவனத்தின் பல்வேறு சமஸ்தானங்களை கடந்து செல்கிறாள்.
நீலவனம் என்பது ஃபேஸ்புக்கில் உள்ள குழுக்களின் ஒன்றியம். குழுக்கள் தான் சமஸ்தானங்கள். செம்மொழிப்பிரியா ஒரு ஃபேக் ஐடி என்பதை மனதில் வைத்து அந்தப் பகுதியை படித்துப் பார்த்தால் சுவாரஸ்யமாக இருந்தது.
கோவிந்தசாமி தேடிவந்த அதே தாமரைத் தடாகத்தின் கரையில் நிழல் வீற்றிருக்க அவனை காதல் வலையில் வீழ்த்துகிறாள் செம்மொழிப்பிரியா. இரவு அந்த மலர் மலர்ந்துவிடும். கோவிந்தசாமி வந்துவிடுவான். அதுல்யா அவனைத் தேடி வருவாள். இன்னொரு காதலோ அல்லது ரகளையோ அங்கே அரங்கேறலாம்.