ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 1

நகரம் காலியாக இருக்கிறது. நடமாட்டம் இல்லை. வீட்டுக் கதவுகள் மூடப்பட்டிருக்கின்றன. கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன. வாகனப் போக்குவரத்து வெகுவாகக் குறைந்துவிட்டது. எத்தகைய நெரிசலுக்கும் அசராமல் எல்லா சாலைகளிலும் ஊர்ந்து செல்லும் மாடுகள் எங்கே போயின என்று தெரியவில்லை. எப்போதும் தமக்குள் சண்டையிட்டுக்கொண்டு சீறிப் பாயும் எண்பத்தேழாயிரத்து நாநூற்று எண்பது நாய்களும் முடங்கிவிட்டன. பெட்டிக் கடைகள் இல்லை. போஸ்டர்கள் இல்லை. திரையரங்குகளின் வாசல்களில் பூட்டு தொங்குகிறது. தொண்ணூறுகளுக்குப் பிறகு பிறந்தவர்களின் தொழுகைத் தலமான மால்கள் மூடப்பட்டுவிட்டன. கோயில்களின் மணியோசைச் சத்தம் நின்றுவிட்டது. தேவாலயங்கள், மசூதிகள் அனைத்தும் யாரும் வரவேண்டாம் என்று அறிவித்துவிட்டன. பூங்காக்கள், கடற்கரை, உணவகங்கள், காப்பி விடுதிகள் அனைத்தும் இழுத்துப் பூட்டப்பட்டிருக்கின்றன. மனிதர்கள் எங்காவது சில வினாடிகள் தட்டுப்படுகிறார்கள். அவர்களில் தெரிந்தவர்களை அடையாளம் கண்டு புன்னகை செய்ய அவகாசம் இருப்பதில்லை. வெளிர் பச்சை நிற முகமூடிகளுடன் அவர்கள் நிற்க விரும்பாமல் அவசரமாக ஓடிவிடுகிறார்கள். உடனே வீதிகளும் சாலைகளும் வாய் பிளந்து மல்லாக்கக் கிடக்கும் முதலைகளின் தோற்றத்தைப் பெற்றுவிடுகின்றன. ஒரு மெல்லிய அச்சக் கிருமி மட்டும் வெளியில் நிதானமாக மிதந்துகொண்டிருக்கிறது.

இந்த அனுபவம் மிகவும் புதிதாக இருக்கிறது. வினோதமாக, சிறிது வியப்பூட்டும் விதமாகவும். ஏனெனில் வீடுகளும் அலுவலகங்களும் பிற கூடலகங்களும் சலிக்கும்போதெல்லாம் இந்நகரவாசிகளுக்கு வீதிகள்தாம் ஆசுவாசம் அளித்து வந்திருக்கின்றன. அழகோ, நேர்த்தியோ இல்லாத, மரம் செடி கொடிகள் இல்லாத, ரசனையை கௌரவிக்கும் எந்த ஒரு அம்சமும் இல்லாத, மேடு பள்ளங்கள், சாக்கடைகள், அழுக்குகள், குப்பைகள் மண்டிய இந்நகரின் வீதிகளில் – அதன் ஆரவாரங்களில் கிடைக்கும் பேரமைதி வேறெங்கும் இருக்காது. வழிபாட்டிடங்களில்கூட. பூகம்பம், சுனாமி, புயல் வெள்ளக் காலங்களில், மலேரியா, டெங்கு, பறவைக் காய்ச்சல் காலங்களில், இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி படுகொலைகள் நிகழ்ந்த சமயத்தில், பல பெருந்தலைவர்களின் மரணத்தின்போது, எத்தனையோ கலவர நேரங்களில், எண்ணிலடங்காத இடர்களின் கோரத் தாண்டவத்தின்போதெல்லாம் வீடுகளல்ல; வீதிகளே எப்போதும் நிறைந்திருந்தன. வீடுகள் பொருள்களாலும் வீதிகள் முகங்களாலும் ஆன விசித்திர நகரம் இது. இடரோ, மகிழ்ச்சியோ. வெளிப்பாடு வீதியில்தான். அப்படித்தான் இருந்தது. ஆண்டாண்டு நூறாண்டுக் காலங்களாக. சட்டென்று எல்லாம் மாறிப் போய்விட்டது. ஒருநாள் அடையாள ஊரடங்கு. பிறகொரு நாள் அவகாசம். அதற்கும் மறுநாள் முதல், பதினைந்து நாள்களுக்குக் கட்டாய ஊரடங்கு. பிறகு அது ஒரு மாதமாக நீட்டிக்கப்படுகிறது. ஆனால் இது ஒரு கிருமிக்குப் பயந்து அவ்வளவு எளிதில் அடங்கிவிடக்கூடிய நகரமா? அடங்கிவிட்டது. சிறு முணுமுணுப்புகளுக்குக் கூட இடமின்றி அவரவர் வீடுகளில் புகுந்து கதவைத் தாழிட்டுக்கொண்டுவிட்டார்கள். ஊர் முக்கியம். உயிர் அனைத்திலும் முக்கியம்.

ஒரு புதிய கிருமி, சரித்திரத்தில் தனது மூதாதையர் தராத அச்சத்தையும் பீதியையும் மொத்தமாக அள்ளிக் கொண்டுவந்து நகரில் தெளித்துவிட்டது. நாடே தவிக்கும்போது ஒரு நகரம் வேறென்ன செய்யும் என்று கேட்காதீர்கள். இது அத்தனை எளிதில் அசைந்துகொடுக்கும் நகரமல்ல. கண்ணுக்குத் தெரியாத எருமைத்தோல் ஒன்றைக் காலம் இதன்மீது போர்த்தியிருக்கிறது. கலங்கும் அளவுக்கு எதையும் அனுமதிக்காத, அப்படி ஏதும் வந்துவிட்டால் எளிதில் கலங்கிவிடாத ஒரு தன்மை இதன் மண்ணில் உள்ளது. அது இங்கு வந்து குடியேறியவர்களுக்குத் தெரியாது. எந்த ஒரு சிக்கல் என்றாலும் அவர்கள் உடனே தமது உணர்வுத் திரைச்சீலைகளைச் சுருட்டிக்கொண்டு ஊருக்குப் போய்விடுவார்கள். கண்ணீர் உற்பத்திக் கிணறுகள் மூடப்பட்டுவிடும். சுட்டெரிக்கும் வெயிலை, சகிக்க முடியாத வெக்கையை, அதிர்ச்சிகளை, அபாயங்களை, உக்கிரங்களை, உண்மைகளை, பொய்களை, நிறைவை, வெறுமையை எருமைத்தோல் தாங்கி நிற்கும்.

நல்லது. இது என்னுடைய நகரம். இந்நகரின் உரிமையாளர்களுள் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்வதுதான் நியாயம். ஏனோ எனக்கு வேறு விதமாக இதனைச் சொல்லத் தோன்றுகிறது. இந்நகரின் பங்குதாரர்களுள் என்னிடம் உள்ள பங்குகள் அதிகம். பிறந்தது முதல் மிக அதிக தினங்கள் நகரத்தை விட்டு நீங்காதவர்களுக்கே அதிகப் பங்கு என்று வைத்துக்கொள்வோமானால் நான் மேலே இருப்பேன். அநேகமாக முதலிடத்தில். இன்னொருவர் உரிமை கோரி சண்டைக்கு வரும்வரை இது அப்படியே இருக்கட்டும். வரும்போது அவர்களைப் போரிட்டு வெல்ல எனக்கு வழி தெரியும். கழிந்த அரை நூற்றாண்டுக் காலமாக இந்நகரம் சந்தித்த இடர்க் காலங்கள் அனைத்துக்கும் நான் இங்கே சாட்சியாக இருந்திருக்கிறேன். கண்ணைக் கட்டிவிட்டுச் சாலையில் உருட்டிவிட்டாலும் நகரத்தின் அத்தனை இண்டு இடுக்குகளையும் சுற்றி வந்துவிட என்னால் முடியும்.

சென்னையில் பிறந்தவன் என்பது இதற்குக் காரணமல்ல. வாழ்வில் இதுகாறும் செய்ய நேர்ந்த அத்தனை நற்செயல்களையும் துர்ச்செயல்களையும் இந்நகரத்தில் வைத்தேதான் செய்திருக்கிறேன். எனவே என்னைக் குறித்து எனக்குத் தெரிந்த அனைத்தும் இந்நகரத்துக்குத் தெரியும். ஒரு பெரு நகரம், ஒரு தனி மனிதனின் மனச்சாட்சியாகுமா என்றால் ஆகும். இன்றுவரை நான் நகரத்துக்குள்ளே எங்கே பயணம் மேற்கொண்டாலும் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு சந்து அல்லது சாலை அல்லது கட்டடம் அல்லது ஒரு குட்டிச் சுவராவது என்னை நிறுத்தி எதையாவது நினைவுபடுத்தும். இந்நகரின் ஆதிவாசிகளுக்கு நகரமேதான் இல்லமாக இருந்து வந்திருக்கிறது. இல்லம் ஒரு ஒதுக்குப்புறம் மட்டுமே.

நான் சென்னையின் ஆதிவாசி. இந்த கான்கிரீட் கானகத்தின் இருளும் ஒளியும் நானறிந்தவை. இதன் நாற்றமும் நறுமணமுமே என் சுவாசமாக வெளி வருவது. இதன் கம்பீரம் என்னுடையது. இதன் விசாலம், இதன் அடர்த்தி, இந்நகரத்தின் சிக்கல்கள், தெளிவுகள், நேர்த்தி, ஒழுங்கின்மை, கனிவு, குரூரம் அனைத்தும் என்னுடையவை. நான் வேறு இது வேறல்ல. என் மண் என்று சொல்ல யோசனையாக இருக்கிறது. என் புழுதி என்று சொல்லலாம். உடலில் ஒட்டியதை உணர்ந்து எடுத்து எண்ணிப் பார்க்க இது ஒரு தருணம்.

நகரம் காலியாக இருக்கிறது. நகரத்தை அச்சம் போர்த்தியிருக்கிறது. போர்வைக்கு வெளியே என் கால்களை மட்டும் கழட்டி எடுத்து அலைய விடுகிறேன். ஒரு பிசாசைப் போலக் கண்ணுக்குத் தெரியாமல் அலைந்துகொண்டிருக்கும் கிருமிக்கு என் காலடித் தடம் தென்பட வாய்ப்பில்லை. அது ஒரு கிருமி என்றால் நான் பல கிருமி கண்ட சோழன்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி