சிறு வயது முதல் கனவுகளைத் தின்றே உடல் பருத்துப் போனவன் நான். ஒப்பிட்டால், வயிற்றுக்குத் தின்றதெல்லாம் வெகு சொற்பம். இந்தக் கனவுகள்தாம் நெருக்கடிப் பொழுதுகளில் சோர்வடையாமல் செயலாற்ற வைக்கின்றன. தூக்கிச் சுமப்பது பெரும்பாடு என்றாலும் அந்தச் சுமை அத்தியாவசியமாகிப் போய்விட்டது. யாருக்கு இருக்காது? கனவற்ற ஒரு பிறவி அரிது. கனவுதான் ஒரு புத்தனை உருவாக்கியது. கனவுதான் ஒரு காந்தியைக் கொடுத்தது. கனவின் கர்ப்பம்தான் காலத்தின் அத்தனைப் பாய்ச்சல்களையும் பிரசவித்து வருகிறது.
இருக்கட்டும். நமது கனவுக்கு வருகிறேன். ஒன்றிரண்டல்ல. குறைந்தது நூறாவது தேறும். அனைத்தையும் எழுதக் காணாதென்றாலும் ஒன்றைச் சொல்கிறேன். பதினாறு வயதில் இந்தக் கனவைக் காணத் தொடங்கினேன் என்று நினைக்கிறேன். இன்று வரை இது அலுக்கவில்லை.
வெள்ளை வெளேரென்று ஒரு கட்டடம். அசப்பில் ஒரு புத்த விஹாரம் போன்ற தோற்றமும் முகப்பும் கொண்டது. விசாலமானது. வெண்மையைத் தவிர வேறு எந்த நிறமும் கிடையாது. கூரை, சுவர்கள், தரை அனைத்தும் வெண்மை. ஒரு சொட்டு அழுக்கும் படியாத பரிபூரண வெண்மை. அதன் சன்னல்கள் மிகவும் அகலமானவை. துல்லியமான கண்ணாடிச் சன்னல்கள். நடுவே சட்டகங்கள் கிடையாது. நீள் செவ்வகக் கண்ணாடிகள் மட்டுமே. நல்ல, கனத்த கருங்காலிக் கதவு. அது மட்டும் கரேலென்றிருக்கும். உள்ளே நுழைந்ததும் ஒரு பெரிய ஹால். அது வரவேற்பரை. நல்ல விலை உயர்ந்த ஆசனங்கள் போடப்பட்டிருக்கும். அங்கிருந்தே ஒரு வளைவு மாடிப்படி முளைத்து மேலே ஏறும். குறுகலான மரப்படிகள். கலை வேலைப்பாடுகள் செய்யப்பட்டது. அது சென்று சேரும் உயரத்தில் எனது நூலகம் இருக்கும். அது வீட்டின் சுற்றளவு முழுவதையும் நிரப்பும்படியாக வளைந்து நீண்டிருக்கும். தூசு தும்புகளற்ற சுத்தமான, அமைதியான நூலகம். பல்லாயிரக் கணக்கான புத்தகங்கள் அதில் இருக்கும். ஏறி எடுக்க வசதியாகப் பத்தடிக்கு ஒரு ஏணி பொருத்தப்பட்டிருக்கும். நான் உட்கார்ந்து படிப்பதற்கு ஒரு சாய்வு நாற்காலி. எதிரே ஒரு சிறிய முக்காலி. அதில் கூராகச் சீவிய பென்சில்கள் நான்கைந்து இருக்கும். அது அடிக்கோடு இடுவதற்கு.
நாலடி எழுந்து நடந்தால் அங்கே ஓர் அறை உண்டு. அது நான் எழுதும் அறை. ஒரு மேசையும் நாற்காலியும் இருக்கும். சீராக வெட்டி அடுக்கி வைத்த தூய வெள்ளைத் தாள்களும் ஃப்ளோரஸண்ட் நீலத்தில் வழுவழுவென எழுதக்கூடிய ஒரு மரப் பேனாவும் மட்டும் அதன்மீது இருக்கும். எழுதுமேசைக்கு வலப்புறம் சுருதி கூட்டப்பட்ட நிலையில் என் வீணை இருக்கும். வீணைக்குச் சற்றுத் தள்ளி ஒரு ஸ்டாண்டின்மீது ஒரு ஹார்மோனியம் வைக்கப்பட்டிருக்கும். எழுதும்போதுதான் எனக்கு வாசித்துப் பார்க்கும் வெறி ஏற்படும் என்பதால் இந்த ஏற்பாடு.
அந்த எழுதும் அறையின் தனிப்பெரும் சிறப்பு, அதன் கூரை முற்றிலும் கண்ணாடியால் ஆனது என்பது. இரவும் பகலும் வரும்போதும் போகும்போதும் என்னிடம் முதலில் சொல்லிக்கொண்டு செல்ல வேண்டும் என்பது நிபந்தனை. அது வானத்தின் என் பிரத்தியேகச் செவ்வகம். விமானங்கள் அங்கு பறக்க அனுமதி இல்லை.
அந்தக் கண்ணாடிக் கூரை வேய்ந்த அறையில் நான் எழுதிக்கொண்டிருக்கும்போது மழை பெய்வதாகக் கற்பனை செய்துகொள்வது எனக்குப் பிடிக்கும். அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் ஆகாயம் அப்போது எனக்காகப் பெய்யும். மழை நிற்கும் பொழுது காகங்களும் புறாக்களும் அங்கே வந்து அமர்ந்து என்னை வேடிக்கை பார்க்கும். நான் சலிப்புறாமல் எழுதிக்கொண்டே இருப்பேன். சலிக்கும்போது படிப்பேன். அதுவும் சலித்தால் கருவிகளை மீட்டுவேன்.
மாலைப் பொழுதுகளில் என் விஹாரத்தை விடுத்து வெளியே வருவேன். அங்கே என்னைச் சுற்றிப் பச்சைப் பசேலென்று ஒரு பரந்த புல்வெளி இருக்கும். சுற்றிலும் ஒரே சீரான அரையடி உயரத்துக்கு வளர்ந்த பசும்புல் வெளி. புல்வெளியில் சிறிது நடப்பேன். பிறகு மீண்டும் உள்ளே சென்றுவிடுவேன். இரவானால் இசை கேட்பேன். எனக்குப் பிடித்த படே குலாம் அலிகான். எனக்குப் பிடித்த சௌராசியா. எனக்குப் பிடித்த மாலி. எனக்குப் பிடித்த சூரிய நாராயணா.
இந்தக் கனவை இன்றும் விரும்பி, திரும்பத் திரும்ப நினைத்துக்கொள்கிறேன். இது ஒருவேளை நனவானால் சில மாறுதல்கள் இருக்கும். சீராக வெட்டிய வெள்ளைத் தாள்களின் இடத்தில் ஒரு மக்கிண்டாஷ் கம்ப்யூட்டர் இருக்கும். ஹார்மோனியத்தின் இடத்தில் ஒரு விலைகூடிய ரோலாண்ட் கீ போர்ட் இருக்கும். கேசட்டுகளுக்கும் டேப் ரெக்கார்டருக்கும் பதிலாக நல்ல ஸ்டீரியோ செட்டும் துல்லியமான ஸ்பீக்கர்களும் இருக்கும். வேறு பெரிய மாறுதல்கள் இராது.
பிரசாத் ஸ்டுடியோவில் தான் வசித்த அறையில் ஒரே ஒருநாள் இருந்து தியானம் செய்துவிட்டு வர இளையராஜா நீதி மன்றத்தின் மூலம் அனுமதி கேட்டிருப்பதாக ஒரு செய்தி கண்டேன். அவர் எண்ணினால் பிரசாத் ஸ்டுடியோவினும் பெரிதாக, சிறந்ததாக ஒரு ஸ்டுடியோவைக் கட்டிக்கொள்ள முடியாதா? ஆனால் வாடகைக்கு இருந்த இடத்தில் அவர் முப்பதாண்டுக் காலம் தனது கனவைப் பயிரிட்டிருக்கிறார். தனது விருப்பத்துக்கேற்ற இடமாக அதனை வடிவமைத்திருக்கிறார். உயிரையும் பயிரையும் இடம் மாற்றி நட்டு வளர்ப்பது எப்படி? சிக்கல். பெரும் சிக்கல்.
இதனால்தான் நான் என் வீட்டிலும் அலுவலகத்திலும் மாறி மாறி வசித்துக்கொண்டும், கனவு விஹாரத்தில் வாழ்ந்துகொண்டும் இருக்கிறேன். வசிப்பிடமும் வாழ்விடமும் வேறாக இருப்பதுதான் நல்லது. குறைந்தது எனக்கு.