Fake ID, கபட வேடதாரி இரண்டுக்கும் இடையில் இந்த நாவலுக்கு வேறு ஒரு பெயர் வைக்க எண்ணி நண்பர்களுடன் கலந்தாலோசித்ததைப்பற்றி பாரா முன்பொரு முறை எழுதி இருந்தார். என்னால் அப்போது இரண்டு பெயர்களை அனுமானிக்க முடிந்த போதிலும் அவற்றுள் ஒன்றை உறுதிப்படுத்த முடியவில்லை. ஒன்பது அத்தியாயங்கள் வாசிக்கும் வரை சூனியன் தான் கபட வேடதாரி ஆக இருக்குமோ என்றும் அவருக்கும் நான் யோசித்து வைத்திருந்தவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லையே என்றும் குழப்பமாக இருந்தது.
10 ஆம் அத்தியாயத்தின் மாசி என்கிற சொல்லை வாசிக்கும் வரை கூட முடிவாக தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் பௌர்ணமி என்பதைப் படித்ததும் உறுதியாக தெரிந்து விட்டது. ஆக 10ஆம் அத்தியாயத்தில் உத்தியோகபூர்வமாக கபட வேடதாரி கதைக்குள் வந்துவிட்டார். மற்றபடி அரசியை யூகிப்பது எல்லாம் பிரமாதமான காரியம் இல்லை தானே.
விநய பூர்வமாக ஒரு பெரும் வரலாற்று கதையை சொல்லி முடித்துவிட்டு அது முடிந்த அடுத்த வரியில், அதே விநயத்தைக் கிண்டலடிக்கும் இடம் தான் பாராவின் தனித்துவமான கதை சொல்லல் பாணி. கபட வேடதாரியிலும் அது பஞ்சமே இல்லாமல் நிறைந்திருக்கின்றது. நான் இப்படி சொன்னால் புரியாது, நீங்களே வாசித்துப் பார்த்தால் தான் புரியும்.. ஆமாம், அத்தியாயம் 10 க்கு மட்டும் ஏன் தனியே சிறப்பு பெயர்கள் எதுவும் இல்லை?