கொரோனா – அன்றாடங்களைப் புரட்டிப் போடுதல்

இதற்கு முன்பும் இத்தகைய வைரஸ்கள் சில அச்சமூட்டியிருக்கின்றன. அவற்றைக் குறித்தும் நாம் நிறையப் பேசி அஞ்சியிருக்கிறோம். ஆனால் இந்தளவு அல்ல. இவ்வளவு உக்கிரமாக அல்ல. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை, மதுச்சாலைகளுக்கு விடுமுறை, வழிபாட்டுத் தலங்கள், கூட்டம் சேரும் திருமணம் போன்ற சம்பவங்களின் நிகழிடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்ற அறிவிப்பு, தொடர் சுகாதாரப் பிரசாரங்கள், தொலைபேசி வழி எச்சரிக்கை – இம்முறை சந்தேகமின்றி அச்சமூட்டுவதாகவே உள்ளது. என் நண்பர் ஒருவர் அலுவலகத்துக்கு வரவெண்டாம் என்று சொல்லிவிட்டதாகச் சொன்னார். வீட்டில் இருந்தே அலுவல்களைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார். பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் இம்முடிவை ஏற்கெனவே எடுத்துவிட்டன. பணி நிமித்தம் துபாய்க்குச் சென்றிருந்த என் உறவுக்காரப் பெண் ஒருத்தி, வேலை முடிந்த பின்பும் திரும்ப வழியின்றி அங்கேயே இருக்கிறாள். காரணம், இந்த அச்சம். சென்ற மாதம் வரை வெளிநாட்டில் இருந்துவிட்டு அவளது கணவர் ஓரிரு வாரங்களுக்கு முன்னர்தான் (அப்போது கொரோனா பிறக்கவில்லை) ஊர் திரும்பியிருக்கிறார். அவருக்காக அந்தப் பெண் காத்திருந்த நாள்களைவிட இப்போது அவளுக்காக அவர் காத்திருக்கப் போகிற நாள்கள் அதிகமாகப் போகிறது.

ஒரு சமூகக் கஷ்டம் என்பது பல தனிமனிதக் கஷ்டங்களை விழுங்கித்தான் உருவாகிறது.

நேற்றுக் காலையே எங்கள் சின்னத்திரை அமைப்புகளில் இருந்து படப்பிடிப்புகள் ரத்தாகும் என்று செய்தி வரத் தொடங்கியது. சிறிது நேரத்தில் குஷ்பு ஒரு வாய்ஸ் நோட் அனுப்பினார். மாலை 3 மணிக்கு அதிகாரபூர்வ அறிவிப்பு ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் இருந்து வந்துவிடும் என்று. அறிவிப்பில் இரண்டு நாள்களுக்குப் படப்பிடிப்பு வைத்துக்கொள்ளலாம் என்றும் 19ம் தேதி தொடங்கி மறு அறிவிப்பு வரும்வரை எந்தப் படப்பிடிப்பும் கூடாது என்றும் சொல்லப்பட்டிருந்தது.

சின்னத்திரைத் துறை இன்று எப்படி இயங்குகிறது என்று தெரிந்தால் அதிர்ந்துவிடுவீர்கள். அந்தந்த வேளைக்கு உணவு உண்பது போலத்தான் அன்றன்றைக்குக் காட்சிகள் எழுதி, படம் பிடித்து, அலங்கார விசேடங்கள் சேர்த்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன. ஒரு வாரம் பிரச்னை இல்லை, பத்து நாள் பிரச்னை இல்லை; எபிசோட் இருக்கிறது என்ற பேச்சுக்கே இடமில்லை. யாரிடமாவது அடுத்த மூன்று நாள்களுக்கு எபிசோட் இருக்கிறது என்று தெரிந்தால் அவர்களை பிரமிப்போடு பார்ப்பதே வழக்கம். இந்த லட்சணத்தில் 31ம் தேதி வரை படப்பிடிப்புகள் இருக்காது என்றால் ஒளிபரப்பு தடைப்படும். சானல்கள் ஒப்புக்கொள்ளாது. என்ன செய்யலாம்? சரி, 48 மணி நேரம் இருக்கிறதல்லவா? போட்டு உருட்டி அடி. முடிந்தவரை எபிசோட் தேற்றிக்கொண்டு மற்ற பாரத்தை ஆண்டவன் மீது போடுவோம்.

சிரிக்காதீர்கள். இது ஊழிற்பெருவலி. உள்ளே இருந்து பார்த்தால் மட்டுமே விளங்கும். நேற்று மாலை 6 மணிக்கு நான் எழுத ஆரம்பித்தேன். ஓரளவு எழுதி முடித்தபோது மணி 2.50. நடுவே ஒரு நிமிடமும்  இடத்தை விட்டு எழவில்லை. ஐந்து நிமிடம் ஓய்வெடுக்கும் நேரத்தில் இரண்டு பக்கம் எழுதிவிட்டு வரலாம் என்று தோன்றிவிடுகிறது. ஐந்தைந்து நிமிடங்களாகச் சேமித்து மொத்தமாக ஒரு மணி நேரம் படுக்கலாம் என்று நினைத்துக்கொண்டு முழு இரவு எழுதிக்கொண்டே இருக்கும்படி ஆனது. என்னைப் போலத்தான் மற்றவர்களும் இருப்பார்கள். உறங்காத, உறக்கமில்லாத இந்த இரவுக்குள் உலகம் அழிந்துவிடப் போகிறதென்ற அச்சத்தை மூலப் பொருளாக்கித் தாள்களைச் சொற்களால் நிரப்பித் தள்ளிக்கொண்டிருக்கிறோம். விடிந்த கணத்தில் இருந்து ஷூட்டிங் போகும். இரவெல்லாம் நீளும். மறுநாளும் தொடரும். மறு இரவும் நடக்கும். அதற்குள் எவ்வளவு முடிக்கிறோம்? அதுதான் கணக்கு.

இத்தனை நெருக்கடியில், ‘சார் அந்த ஆர்டிஸ்ட் நாளைக்கு இல்ல சார்.. இந்தம்மா வர ரெடின்றாங்க. ஆனா ஃப்ளைட் ஏற விட மாட்றாங்களாம்.. அந்த ஆர்டிஸ்ட் மதியத்துக்கு மேலதான் சார் வருவாரு. மார்னிங் சீன்ஸ்ல அவர கட் பண்ணிக்கங்க. டே எஃபெக்ட் சீன்ஸையெல்லாம் மூணு மணிக்குள்ள அனுப்பிடுங்க சார். டே ஃபார் நைட் போட்டா ரொம்ப லேட்டாகுது.’

சிக்கல்கள் எதுவும் புதிதல்ல. ஆனால் சூழ்நிலையின் பதற்றம், எளிய பிரச்னைகளைக் கூடப் பூதக்கண்ணாடி வைத்தே காட்டுகிறது. விளைவாக வார்த்தைகள் தடித்துவிடுகின்றன. அர்த்தமற்றச் சண்டைகள் வருகின்றன. அது பற்றிய கவலைகள் வைரஸைவிட மோசமாக மனநிலையை பாதிக்கின்றன.

நேற்றுக் காலை ஓர் இயக்குநர் ஒரு வாய்ஸ் நோட் அனுப்பியிருந்தார். ‘உங்களுக்கு என்னய்யா? வீட்ல சொகுசா உக்காந்து எழுதிட்டிருப்பீரு. கஷ்டமெல்லாம் எங்களுக்குத்தான்.’

உண்மைதான். எழுதுவது என்னைப் பொறுத்தவரை சொகுசேதான். ஆனால் ஒழுங்கான திரைக்கதையும், கதை கேட்கும் ஆர்டிஸ்ட்களும் பிறவும் சரியாக இருந்துவிடும் பட்சத்தில் அந்தக் கூற்று உண்மை. ஆனால் அப்படியெல்லாம் இங்கே அமைந்துவிடாது. தினமும் யாராவது ஒருவர் சொதப்புவார். ஷெட்யூல் டைரக்டருக்கு காலை போன் செய்யும்போதே வணக்கத்துக்கு முன்னால் இன்னிக்கு யாரு பஞ்சாயத்து என்றுதான் ஆரம்பிப்பேன். காட்சிகள் சார்ந்து நான் போட்டு வைத்திருக்கும் திட்டங்களை நடிக நடிகையர் சார்ந்து சுமார் ஐம்பது சதவீதமாவது சமரசம் செய்துகொண்ட பின்புதான் எழுதவே ஆரம்பிக்க முடியும்.

விடுங்கள். நாளை இரவுவரை பிசாசு போல வேலை பார்த்தாக வேண்டும். எழுதியதைத் திரும்பிப் பார்க்கக்கூட அவகாசம் கிடைக்கப் போவதில்லை. அதன்பின் காலவரையறை அற்ற விடுமுறைக் காலம் வந்துவிடும். குறைந்தது ஒரு வாரம். அதிகபட்சம் இரண்டு வாரம். அதை நினைத்து மகிழ முடியுமா. ‘எபிசோட் இல்லை’ என்னும் ஓர் அறிவிப்பு எந்தக் கணம் வந்தாலும் அன்றாடங்கள் கலைத்துப் போடப்பட்டுவிடும்.

இத்தனைக்கும் நடுவே துறையில் யாருக்கும் எவ்விதமான அபாய சூழலும் வந்துவிடக்கூடாதே என்கிற தவிப்பும் அச்சமும் இருக்கத்தான் செய்கிறது. நான் மேனேஜர்களுக்காகவும் ஷெட்யூல் டைரக்டர்களுக்காகவும் பெரிதும் கவலைப்படுகிறேன். நாளெல்லாம் அவர்கள் நபர்களைச் சந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள். பயணம் செய்துகொண்டே இருக்கிறார்கள். ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது. தேதி தராத கலைஞர்களுடன் மோதி மோதி வெல்ல வேண்டிய பணியில் இருப்பவர்கள். எத்தனை சிரமம், எவ்வளவு அவஸ்தைகள்.

பத்து நாள் படப்பிடிப்பு இல்லை என்றால் கோடிக்கணக்கில் பணம் முடங்கும். வேலை முடங்கும். ஒளிபரப்பு சிக்கலாகும். விளம்பர வருமானம் இல்லாமல் போகும். ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாமல் ஆகும். இன்னும் என்னென்னவோ.

ஒரு சிறிய துறையில் இவ்வளவு என்றால் நாடெங்கும் உள்ள பெரு நிறுவனங்களை எண்ணிப் பார்க்கிறேன். அன்றாட வியாபாரிகளை நினைக்கிறேன். மூவுலகங்களிலும் நான் செய்ய வேண்டிய செயல் என்று ஒன்று கிடையாது என்று கீதையில் கிருஷ்ணன் சொல்வான். செயல் இல்லாதவனே சும்மா இருப்பதில்லை. செயலை முடக்கிவிட்டு நம்மால் எப்படி அப்படி இருக்க முடியும்?

தெரியவில்லை. அடுத்து வரும் தினங்களை முழுமையான சுய பரிசோதனைக்காக ஒதுக்கலாம் என்று தோன்றுகிறது. படப்பிடிப்புகள் உண்மையிலேயே இருக்கப் போவதில்லை என்றால் ஒரு நாளைக்கு ஐந்நூறு பக்கம் என்று கணக்கு வைத்துக்கொண்டு படிக்கலாம். அப்படிச் செய்துவிட முடிந்தால் நம்மையறியாமல் ஐம்பது பக்கங்கள் வரை எழுதிவிடவும் முடியும். வேலையும் பார்க்காமல், ஊர் சுற்றவும் போகாமல் இருக்கும்போது செய்யக்கூடிய ஆகச் சிறந்த பணி எனக்கு இதுதான்.

வைரஸில் இருந்து விடுதலை எப்போது என்று தெரியவில்லை. ஆனால் அச்சங்களில் இருந்து விடுதலை பெற்றேயாக வேண்டும். இல்லாவிட்டால் இது சிந்தையைச் செல்லரிக்கச் செய்துவிடும்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter