எப்படியும் வேலை போய்விடும் என்று எதிர்பார்த்தான். கொத்தாக இருபது இருபத்தைந்து பேரைத் தூக்கப் போகிறார்கள் என்று தகவல் பரவ ஆரம்பித்திருந்தது. நிர்வாகம் கூப்பிட்டுச் சொல்வதற்கு முன்னால் எழுதிக் கொடுத்துவிட்டு வந்துவிடலாம் என்று தோன்றியது. இன்னோர் இடத்துக்குப் போய் உட்காராமல் இருக்கப் போவதில்லை. ஆனாலும் இடைப்பட்ட நாள்கள் சிறிது சிரமமாகத்தான் இருக்கும். கையிருப்பு அதிகமில்லை. செலவே செய்ய முடியாது என்றில்லை. எதையும் யோசித்துச் செய்ய வேண்டியிருக்கும். வாழ்வில் இப்படியும் ஒரு அனுபவம் சேர்வது நல்லதுதான். கடினமான சூழ்நிலையின் வாசனையைத் துல்லியமாகத் தெரிந்து வைத்துக்கொள்வதும் அவசியமே.
நீண்ட நேரம் யோசித்து ராஜினாமா கடிதத்தை எழுதினான். எழுதியதைத் திரும்பத் திரும்பப் படித்து சரி பார்த்தான். மறுநாள் அலுவலகத்துக்குச் சென்றதும் எம்டியைப் பார்த்துக் கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு படுத்தான். கனவில் அவனுக்கு வேறொரு வேலை கிடைத்தது. புதிய சூழ்நிலை நன்றாகவே இருந்தது. எதிர்காலம் பற்றிய நம்பிக்கை அளிக்கும் விதமான அறிகுறிகள் தென்பட்டன. இப்படி முற்றிலும் நல்ல விதமான கனவு அதுவரை வந்ததில்லை. விழித்தபோது அதுவே பெரிய ஆறுதலாக இருந்தது.
அலுவலகத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்தபோது ஊரில் இருந்து அப்பா போனில் அழைத்தார். அவனுக்குப் பெண் பார்த்திருப்பதாகச் சொன்னார். ஜாதகம் பொருந்தியிருப்பதாகவும் அவன் சம்மதித்தால், ஊரடங்குக் காலம் முடிவடைந்ததும் மேற்கொண்டு பேசலாம் என்றும் சொன்னார். பெண்ணின் புகைப்படத்தை வாட்சப்பில் அனுப்பியிருந்தார். அவனுக்கு அந்தப் பெண்ணைப் பிடித்திருந்தது. பார்க்க நன்றாக இருந்தாள். தனக்கு இன்னொரு வேலை கிடைக்கும்வரை அவள் வேறொருவனைப் பார்த்து சம்மதிக்காமல் இருந்தால் நல்லது என்று தோன்றியது. பிரச்னையை அப்பாவிடம் சொல்லவில்லை. கிருமியின் கோரத்தாண்டவம் நிகழ்ந்துகொண்டிருக்கும் காலத்தில் மகன் தனியாகச் சென்னையில் மாட்டிக்கொண்டிருப்பது குறித்து ஏற்கெனவே கவலையில் இருப்பவர்.
எல்லாம் சரியாகும். எல்லாவற்றுக்கும் சிறிது அவகாசம் தேவைப்படுகிறது.
அவன் அலுவலகத்தினுள் நுழையும்போதே எம்டி அழைப்பதாகத் தகவல் வந்தது. பாக்கெட்டில் வைத்திருந்த கடிதத்தை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு அவரது அறைக்குள் நுழைந்தான். அவன் சொன்ன வணக்கத்துக்கு அவர் பதில் வணக்கம்கூடச் சொல்லவில்லை. ‘ஆபீஸ் நிலவரம் உங்களுக்குத் தெரியும். இவ்ளோ ஸ்டாஃபோட இனி கம்பெனிய நடத்த முடியாது. நிறையப் பேரை வேலைய விட்டு எடுக்க வேண்டிய சூழ்நிலை. ஒரு டீம் லீடரா எனக்கு சொல்லாம இவங்கள எடுத்தது தப்புன்னு நாளைக்கு நீங்க வருத்தப்படக்கூடாது. லிஸ்ட ஒரு தடவை பாத்துடுங்க’ என்று சொல்லி, பட்டியலை அவனிடம் நீட்டினார்.
அவன் ஒன்றும் சொல்லவில்லை. அதை வெறுமனே பார்த்துவிட்டுத் திருப்பிக் கொடுத்தான். தனது கடிதத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, ‘உங்க முடிவு சரியாத்தான் சார் இருக்கும்’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான்.
கேண்டீனில் ஒரு காப்பி வாங்கிக் குடித்துவிட்டுத் தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தான். வாட்சப்பில் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துப் பார்த்தான். அவளை அவனுக்குப் பிடித்திருந்தது. பார்க்க நன்றாக இருந்தாள். ஆனால் தன்னைப்போல் ஒரு கேவலமான மனிதனை மணந்துகொண்டு அவள் ஏன் கஷ்டப்பட வேண்டும் என்று தோன்றியது. அவளைப் பிடிக்கவில்லை என்று ஒரு மெசேஜ் மட்டும் போட்டுவிட்டு வேலையில் ஆழ்ந்தான்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.