நூறு சீன்

அரசாங்கம் அனுமதி கொடுத்துவிட்டது என்று செய்தித் தாளில் போட்டிருந்தார்கள். அவனுக்கு அது ஆறுதலாக இருந்தது. இனி சிறிது சிறிதாகப் பிரச்னைகளில் இருந்து மீண்டுவிடலாம் என்று தோன்றியது. ஒருவேளை பிரச்னைகளில் இருந்து மீளக் கால அவகாசம் தேவைப்படலாம். ஆனால் கவலைகளில் இருந்து விடுதலை கிடைத்துவிடும்.

இப்போதைக்கு வேலை இல்லை என்று தெரிந்ததும் முட்டி மோதிப் பேருந்தில் இடம் பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்திருந்தான். எல்லாம் முதலில் நன்றாகத்தான் இருந்தது. அவன் வந்ததில் வீடு மகிழ்ச்சி அடைந்தது. ஊர்க் கதைகள், கிருமிக் கதைகள், பேருந்தில் இடம் பிடித்த கதை, ஒரு தீவிரவாதியைப் போல துணியால் முகத்தைச் சுற்றி மூடிக்கொண்டு வந்து சேர்ந்த கதை வரை திரும்பத் திரும்ப, பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்லவேண்டியிருந்தது. இரண்டு நாளில் மேற்கொண்டு சொல்வதற்குக் கதையில்லாமல் போனது.

‘ஏண்டா ஒன்ன வெச்சி யாரோ பிராஜக்டு ஆரம்பிக்கப் போறதா சொன்னியே. அது எப்ப?’ என்று அம்மா கேட்டாள்.

‘ஆமாம்மா. எல்லாம் பேசியாச்சு. சேனல்லகூட ஓகே சொல்லிட்டாங்க. லாக் டவுன் முடிஞ்சதும் ஆரம்பிச்சிடுவாங்க.’

‘அண்ணே, சூட்டிங்க நம்ம ஊர்ல வைண்ணே. என் பிரெண்ட்ஸெல்லாம் பாத்தா சந்தோசப்படுவாங்க’ என்று தங்கை சொன்னாள்.

எம்புள்ள சீரியல் எடுக்கப் போறான் என்று அப்பா அதற்குள் கிராமம் முழுவதும் தெரிவித்து இருந்தார். இரண்டு மாதங்கள் இப்படியேதான் கழிந்தன. வீட்டை விட்டு வெளியே போகாவிட்டாலும் வீடு தேடி வந்து விசாரித்துவிட்டுப் போனார்கள். ‘அதா எல்லாம் தொறந்து விட்டுக்கிட்டிருக்காங்களே, சூட்டிங் ஆரம்பிச்சிருவல்ல?’

அவன் தயாரிப்பு நிறுவனத்துக்கு போன் செய்து பார்த்தான். யாரும் எடுக்கவில்லை. தயாரிப்பு நிர்வாகியின் செல்போன் எப்போதும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. தயாரிப்பாளருக்கே நேரடியாக இரண்டு முறை முயற்சி செய்து பார்த்தான். போன் அடித்துக்கொண்டே இருந்ததே தவிர அவர் எடுக்கவில்லை. கொஞ்சம் கவலையாக இருந்தது.

திடீரென்று ஒருநாள் கம்பெனியில் இருந்து அதுவரை பேசியிராத யாரோ அழைத்தார்கள். ‘எப்ப சார் வருவிங்க?’ என்று கேட்டார்.

‘சொல்லுங்கண்ணே. நீங்க சொன்னிங்கன்னா இப்பமே கெளம்பிருவேன்’ என்று ஆர்வமுடன் அவன் பதில் சொன்னான்.

‘ம்ம். சொல்லுறேன். ரெடியா இருங்க’ என்று சொல்லி அவர் போனை வைத்துவிட்டார். சென்னைக்குப் போக என்ன வழி என்று அப்போது முதல் யோசிக்கத் தொடங்கினான். பேருந்துகள் இல்லை என்று தெரிந்தது. ரயிலுக்கு வாய்ப்பில்லை என்று சொன்னார்கள். தனியார் டாக்சிகள் எதுவும் இயங்கத் தொடங்கியிருக்கவில்லை. இது மிகவும் கவலை அளித்தது. தொழிலை ஆரம்பிக்க அனுமதி கொடுத்துவிட்டு பயணத்துக்கு வழி இல்லாமல் இருந்தால் என்ன செய்வது?

‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்னை இல்லடா. என் பைக்க எடுத்துட்டுக் கிளம்பிடு. நைட்டு கெளம்பினா காலைல போய் சேந்துருவ. அவ்ளதான?’ என்று உடன் படித்த நண்பன் சொன்னது சிறிது ஆறுதலாக இருந்தது. ஆனால் மாவட்ட எல்லைகளைக் கடக்க அனுமதி வேண்டியிருக்கும். பயணத்துக்கான அனுமதி பெறுவது விசா பெறுவது போலவே சிக்கல்களை உள்ளடக்கியதாக இருப்பதாக அனுபவப்பட்டவர்கள் சொன்னார்கள்.

‘யாராவது செத்திருந்து, நீ ரத்த சொந்தமா இருந்தன்னா பர்மிசன் தருவாங்க. இல்லன்னா உனக்கு கல்யாணமா இருக்கணும். அதுவும் இல்லன்னா எமர்ஜென்சி கேசா ஆஸ்பத்திரில அட்மிட் ஆகவேண்டியதிருக்கணும்.’

இதெல்லாமே பிரச்னைதான். ஆனால் எதுவுமே ஒரு வாய்ப்புக் கிடைப்பதைவிடப் பெரிய விஷயமல்ல. கிளம்பி உடனே வா என்று கம்பெனியில் சொல்லிவிட்டால் நடந்தேகூடத் தன்னால் சென்னைக்குப் போய்விட முடியும் என்று நினைத்தான். முன்பு அழைத்திருந்த அந்தப் புதிய நபருக்கு நான்கு நாள் இடைவெளியில் அவனே மீண்டும் அழைத்துப் பேசியபோது, ‘சொல்லுங்க, யார் பேசுறிங்க?’ என்று கேட்டார்.

‘அண்ணே, சங்கர்ணே. நாலு நாள் முன்ன கூப்ட்டிருந்திங்களே.’

‘என்ன விசயம் சொல்லுங்க.’

‘இல்லண்ணே. நம்ம பிராஜக்டு எப்ப ஆரம்பிக்குதுன்னு..’

‘தெரியலப்பா. சேனல்ல க்ளியர் பிக்சர் எதும் தரல. ரன்னிங் ப்ராஜக்டுங்கள திரும்ப எழுப்பி நிக்க வெக்கறதுல கவனமா இருக்காங்க. புதுசெல்லாம் எப்ப வரும்னு சொல்ல மாட்றாங்க.’

‘என்னண்ணே இப்படி சொல்றிங்க?’ என்று பரிதாபமாகக் கேட்டான். ‘நீங்க அன்னிக்கு பேசினப்ப ரொம்ப நம்பிக்கையா இருந்திச்சிண்ணே.’

‘நம்பர் இருக்கற எல்லா டெக்னீசியனுக்கும் போன போட்டு பேசுன்னு ப்ரொட்யூசர் சொல்லியிருந்தாரு. அதுசரி, நீ சென்னைக்கு வந்துட்டியா?’

‘இல்லண்ணே. சொன்னிங்கன்னா இன்னிக்கே கெளம்பிடுவேன்.’

‘சொல்றேன். கூப்புடுறேன்..’ என்று சொல்லிவிட்டு கட் செய்தார். பிறகு கூப்பிடவில்லை. அவன் மீண்டும் தயாரிப்பாளருக்கு முயற்சி செய்தான். இப்போது போனை எடுத்துப் பேசியவர் அன்பாக அவனை நலம் விசாரித்தார். ஊரில் அவன் பத்திரமாக இருக்கிறானா, வீட்டில் எல்லாரும் நன்றாக இருக்கிறார்களா என்றெல்லாம் கேட்டது அவனுக்கு ஆறுதலாக இருந்தது.

‘சார் நம்ம ஆபீசுலேருந்து ஒருத்தர் பேசினாரு சார். எப்ப வருவிங்கன்னு கேட்டாரு. நீங்க சொன்னிங்கன்னா இன்னிக்கே கிளம்பிடுவேன் சார்.’

‘சொல்றேம்ப்பா.’ என்றுதான் அவரும் சொன்னார். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.

அதிகம் செலவு வைக்காத, எளிய குடும்பக் கதை ஒன்றை அவன் அந்தத் தயாரிப்பாளரிடம் சொல்லியிருந்தான். அந்த நிறுவனத்தின் முந்தைய சீரியலில் அவன் இரண்டாவது யூனிட் டைரக்டராகச் ஓரிரு மாதங்கள் பணியாற்றியிருந்ததால் அவனை அவருக்குத் தெரிந்திருந்தது. ஒரு கதை சொல்ல அனுமதி கேட்டபோது யோசிக்காமல் ஒப்புக்கொண்டு, கதை கேட்டார். பிடித்திருக்கிறது என்று சொல்லி, சேனலில் ஒரு முக்கியஸ்தரிடம் நேரம் வாங்கிக் கொடுத்து அவரேதான் அனுப்பி வைத்தார். சேனலுக்கும் கதை பிடித்திருந்தது.

‘இப்ப போற ப்ராஜக்ட் டிஆர்பி பெரிசா இல்ல. இத பண்ணலாம். நான் பேசறேன் உங்க ப்ரொட்யூசர்கிட்ட’ என்று அந்த அதிகாரி சொன்னது அவனுக்கு மகிழ்ச்சியளித்தது.

சொன்னபடி அவர் பேசவும் செய்தார். இதே போலத்தான். திடீரென்று ஒருநாள் கம்பெனியில் இருந்து யாரோ கூப்பிட்டு உடனே வரச் சொன்னார்கள். அவன் தயாரிப்பாளரைச் சென்று பார்த்தபோது, ‘நூறு சீன் உடனடியா ரெடி பண்ணிடுங்க. அடுத்த மாசம் பூஜை போட்றலாம்’ என்று சொன்னார். அவன் தனது நண்பரான திரைக்கதை ஆசிரியர் ஒருவரை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியபோது ‘கதை கேட்டுட்டிங்களா?’ என்று தயாரிப்பாளர் கேட்டார்.

‘சங்கர் சொன்னான் சார். நல்ல கதை அது.’

‘ஒரு பத்து நாள்ள நூறு சீன் ரெடி பண்ணிட்டிங்கன்னா நல்லாருக்கும்.’

‘பண்ணிடலாம் சார்.’

‘சீன் கைக்கு வந்தாத்தான் ஆர்ட்டிஸ்டு முடிவு பண்ண முடியும்.’

‘ஆமா சார். பண்ணிடுறேன்.’

‘ஹீரோயின் மட்டும் சேனல்ல யார் சொல்றாங்களோ அவங்கள போட்டுக்குவம். மத்தது பட்ஜெட்டுக்குள்ள பாத்துக்கலாம்’ என்று சொல்லிவிட்டு உடனே தயாரிப்பு நிர்வாகியை அழைத்தார். ‘சார்ட்ட பேசிடு தனபால். மெயின் ஆர்ட்டிஸ்டு ஒரு எட்ட பேர் வராங்க. ரோலுக்கு நாலு சாய்ஸ் ரெடி பண்ணிக்க.’

‘சரிங்க சார்.’

‘சார் நீங்க அடுத்த வெள்ளிக்கிழமை நூறு சீன் கொண்டு வந்துட்டிங்கன்னா மண்டே நாம சேனலுக்குப் போயிடலாம். நான் இப்பமே பேசி அபாயின்மெண்ட் வாங்கி வெச்சிடுறேன்.’

எல்லாம ஒரு மணி நேரத்துக்குள் நடந்தது. இதற்குள் அவன் புதிய சீரியலுக்கு ஒப்பந்தமாகப் போகிற விஷயம், ஏற்கெனவே போய்க்கொண்டிருந்த சீரியல் குழுவினருக்குப் போய்ச் சேர்ந்தது. அந்த இயக்குநர் போன் செய்து வாழ்த்து சொன்னார்.

‘இல்லண்ணே. புதுசு எப்ப வரும்னு ஒண்ணும் தெரியல. சும்மா கதை கேட்டிருக்காரு.’

‘உடனே வந்துரும் சங்கர். இது ரொம்ப நாளா ஓடிக்கிட்டிருக்கில்ல? ஆல்ரெடி எங்கள க்ளைமேக்ஸ் ரெடி பண்ண சொல்லிட்டாங்க.’

அதன்பின் திரைக்கதை ஆசிரியருடன் அமர்ந்து அவன் நூறு சீன்கள் தயார் செய்தான். பேசிப் பேசி, திருத்தம் செய்து, இறுதிப்படுத்தி டைப் செய்யக் கொடுத்தான். அது டைப் ஆனதும் ஸ்பைரல் பைண்ட் செய்து, புத்தகத்தை எடுத்துச் சென்று கம்பெனியிலும் கொடுத்தான்.

‘சொன்ன மாதிரி வெள்ளிக்கிழமை நூறு சீனோட வந்துட்டிங்க. என் பங்குக்கு நானும் ஒரு நல்ல செய்தி சொல்லிடுறேன். அடுத்த புதன்கிழமை பூஜை. நமக்கு எப்பவும் பொன்னியம்மன் கோயில்தான் ராசி. தெரியுமில்ல?’

‘தெரியும் சார்.’

‘டெக்னீசியன் லிஸ்ட் ரெடி பண்ணிடுங்க. கேமரா யாரு, டயலாக் யாரு. அவ்ளதான? நம்ம ஸ்டுடியோ இருக்குது. போஸ்ட் ப்ரொடக்சன் பிரச்னை இல்ல. அசிஸ்டெண்டு ரெண்டு பேருக்கு மேல வெச்சிக்காதிங்க. மார்னிங் ஸ்லாட்டு பாருங்க.’

‘சரிங்க சார்.’

‘பூஜை அன்னிக்கு அட்வான்ஸ் வாங்கிக்கிடுங்க’ என்று தயாரிப்பாளர் சொன்னார். ஸ்கிரிப்ட் புத்தகத்தை அருகே இருந்த கணக்காளர் மேசையின்மீது வைத்துவிட்டு அவனுக்குக் கை கொடுத்தார். பிறகு தன் அறைக்குப் போய்விட்டார்.

அந்த பூஜை நடக்கவில்லை. எப்போது இருக்கும் என்று சரியாகத் தெரியவில்லை என்று கம்பெனியில் சொன்னார்கள். எப்போது இருந்தாலும் முதல் நாள் வந்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டு அவன் ஊருக்குக் கிளம்பினான்.

காலம் யாருக்கும் சாதகமாக இல்லை. வரும் நாள்கள் எப்படி இருக்கும் என்று ஊகிக்கவும் சிரமமாக இருந்தது. யாரையும் குறை சொல்வதற்கில்லை. இதைக் கடந்துதான் தீரவேண்டும் என்று நினைத்துக்கொண்டான். ஆனால் எப்படியாவது சென்னைக்குப் போய்விடுவது நல்லது என்று தோன்றியது. வீட்டில் சொல்லிக்கொண்டு புறப்பட்டான். பொள்ளாச்சியில் இருந்து ஒரு நடிகர் படப்பிடிப்பு உறுதியாகி, சென்னைக்குக் கிளம்புகிறார் என்று கேள்விப்பட்டு அவரைத் தொடர்புகொண்டு பேசினான். கெஞ்சிக் கேட்டுக்கொண்டு அவரோடு காரில் செல்ல சம்மதம் வாங்கினான். பிழைத்துக்கிடந்து தனது பிராஜக்ட் ஆரம்பமானால் அவருக்கு ஒரு பாத்திரம் கொடுக்கலாம் என்று எண்ணிக்கொண்டான்.

பெரிய சிக்கல்கள் இல்லாமல் மறுநாள் காலை சென்னை வந்து சேர்ந்தான். கம்பெனிக்கு போன் செய்தபோது யாரோ எடுத்துப் பேசினார்கள். ‘சார் எப்ப வருவாருன்னு தெரியல’ என்று சொன்னார்கள். நேரில் போய்விடலாம் என்று முடிவு செய்து கிளம்பினான். போரூரில் அவனது அறையில் இருந்து கிளம்பி, மகாலிங்கபுரத்தில் உள்ள கம்பெனியை அடைவதற்கு இரண்டு மணி நேரம் ஆனது. வண்டி வசதிகள் இல்லாததால் நடந்தேதான் போகவேண்டியிருந்தது.

கம்பெனி அலுவலகத்தில் ஏழெட்டுப் பேர் இருந்தார்கள். ஆனால் அனைவரும் அக்கவுண்ட்ஸ் பிரிவு ஊழியர்களாக இருந்தார்கள். அவனுக்குத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. அவன் விவரம் சொல்லி விசாரித்தபோது, ‘ஒருவாரம் கழிச்சி வாங்க சார். இப்ப போயிட்டிருக்கற ப்ராஜக்ட கண்டின்யூ பண்ணத்தான் பேசிக்கிட்டிருக்காங்க’ என்று சொன்னார்கள்.

என்ன செய்வது என்று புரியவில்லை. போய்க்கொண்டிருக்கும் சீரியலின் இயக்குநருக்கு போன் செய்தான். அவர் ஊரில் இருப்பதாகவும் சென்னை வருவதற்கு வழி தேடிக்கொண்டிருப்பதாகவும் சொன்னார். ‘உங்க ப்ராஜக்ட் பத்தி எதும் சொன்னாங்களா சார்?’ என்று கேட்டார்.

‘ஒண்ணும் தெரியல சார்.’

அவர், ‘ஓ…’ என்றார். சிறிது நிம்மதி ஆகியிருப்பார் என்று தோன்றியது. பிறகு, ‘சென்னைக்கு போயிட்டிங்களா?’ என்று கேட்டார்.

‘கம்பெனிலதான் சார் இருக்கேன்.’

‘அப்படியா? ஆபீஸ் தொறந்துட்டாங்களா? எல்லாரும் வந்திருக்காங்களா? தனபால் அண்ணன் இருக்காரா?’

‘அக்கவுண்ட்ஸ்ல ஆள் இருக்காங்க சார். வேற யாரும் இல்ல.’

‘பிப்ரவரி, மார்ச் சம்பளமே வரல சார் எனக்கு. ரெண்டு மாசமா செத்துகிட்டிருக்கேன். மூர்த்தி சார் இருக்காரா கேளுங்க. இருந்தா போன குடுங்க, நான் பேசுறேன். நான் பண்ணா எடுக்க மாட்டிங்கறாரு.’

அவன் மூர்த்தி சாரின் டேபிளைப் பார்த்தான். அவர் இல்லை. கடைசியாக அவனுக்குக் கை குலுக்குவதற்காகத் தயாரிப்பாளர் மேசை மீது வைத்த ஸ்பைரல் பைண்ட் புத்தகம் இருந்தது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி